வியாழன், 12 டிசம்பர், 2013

நிலோ காத்திருக்கிறாள்

                    { இந்த கதை ஆனந்தஜோதி சென்ற ஆண்டு நடத்திய சிறுகதை போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசு வாங்கித்தந்தது .}
                                                                                                                                                                                                                               
                                                                                                                                                                        சுற்றம் மறந்து பார்வை மாநாடு நடத்திக் கொண்டிருந்த கிரேக்க காதலர்களின் கோர்த்த விரல்களுக்கிடையே இருந்த இதய வடிவ கடிகாரத்தில் இரண்டு அம்புகளும், ஒன்றையொன்று முத்தமிட்டு மணி 12 என்றது. நிலோபர் செல்போனை எடுத்து மணி பார்த்தாள். அதுவும் மேசையில் இருந்த கிரேக்க கடிகாரம் சொன்னதைத்தான் வழிமொழிந்தது. நிலோ அந்தக் கடிகாரத்தில் ஒருபோதும் மணி பார்ப்பதில்லை. ரகு அதை பரிசளித்த நாளாய் அந்தக் காதலர்களை ரகுவும் நிலோவுமாக மாற்றும் கற்பனையிலேயே ஆழ்ந்துவிடுகிறாள்.


                              டிசம்பர் மாதத்து டெல்லி அந்த மதிய வேளையில் கூட சிறிது பனியோடுதான் இருந்தது. முதல் முறையாக காத்திருந்தாள், அதுவும் இரண்டு மணி நேரமாய். ஆனால் சிறிது கூட கோபம் வரவில்லை ரகுமீது. அவள் எத்தனையோ முறை அவனை காக்க வைத்திருக்கிறாள். அது மட்டும் அல்ல, ரகு மீது யாருக்கும் கோபம் வராது. அப்படி வந்தாலும் அவன் பேசத்துவங்கிய நொடியில், வந்த கோபத்துக்காக எதிரே இருப்பவர் வெட்கப்பட்டுப் போவார்கள்.

                             அன்பாய் அக்கறையாய், சிரிக்கக்சிரிக்க பேசுவான். அவன் சிரிப்பில் மயங்காதவர் கூட அவன் அன்பில் உருகிப்போவர். அந்த அன்பில் உண்மை இருக்கும் நேர்மை இருக்கும். பலன் எதிர்பாராமல் உதவுவதில் ரகுவை மிஞ்ச ஆளே இல்லை. இப்போது கூட முகம் தெரியாத யாருக்கோ உதவப் போனதில்தான் தாமதம். அந்த உதவி மனப்பான்மையில் தானே ரகுவின் முதல் சந்திப்பும் நிகழ்ந்தது.
                           மூன்று ஆண்டுகளுக்கு முன் கல்லூரி இறுதியாண்டில் ஒரு நாள் இரவு ஆக்ரா சென்று திரும்பிய டூரிஸ்ட் பஸ் மரத்தில் மோதி சாய்ந்திருக்க, சற்று நேரத்திற்கு பின் அவ்வழியே வந்த காரில் இருந்தவர்கள் மாற்று பேருந்துக்கு ஏற்பாடு செய்வதும் மீட்பதும்மாய் இருந்தனர். இருக்கையில் வசமாய் சிக்கியிருந்த நிலோவை ரகுதான் மீட்டு முதல் உதவி செய்தான்.

                             பரிவைத்தாண்டி எதுவும் இல்லை அவன் கண்களில். கைத்தாங்கலாய் அழைத்து ,மாற்றுப் பேருந்தில்அமர்த்தி, தண்ணீர் கொடுத்தான். அவள் சொன்ன நன்றி இருளில் கரைய அடுத்த நபரை மீட்டுக் கொண்டிருந்தான். அயர்ந்து போனாள் நிலோ.

                         அடுத்த சந்திப்பு தயாள் சிங் நூலகத்தில் வயதான ஒரு தாத்தாவிற்கு ஒரு நூலை வாசித்துக் கொண்டிருந்த ரகுவை நெருங்கி தன்னை நினைவிருக்கிறதா? என்றாள்  நிலோ. நெற்றி சுருக்கி பின்னர்'"சாரி" என்றான். அவன் முதல் உதவி செய்த மணிக்கட்டை காட்டி, அவள் இடம் சுட்டி பொருள் விளக்கிய பின், புன்னகையோடு உடல் நலம் விசாரித்தான். அவனது பக்குவமான பேச்சில் மற்றும் ஒரு முறை அயர்ந்து போனாள். அவன் அகன்ற பின்தான் அவன்  பெயரை கேட்க  மறந்ததையும் தன் பெயரையும் அவன் கேட்கவில்லை என்பதையும் உணர்ந்தாள். அவன் புன்னகை மட்டும் அங்கேயே படிந்து விட்டதாகவும்  உணர்ந்தாள்.

                           இருமுறை மட்டுமே சந்தித்த ஒருவனை, இந்த இரண்டு மாதங்களில் நாளுக்கு  ஒருமுறையேனும் நினைத்துவிடுகிறாள் நிலோ. டெல்லியில் தமிழ் பேசும் இன்னொருவன் என்பது மட்டுமா  காரணம்? . அவளுக்கு அங்கே நிறைய தமிழ் நண்பர்கள் இருக்கிறார்களே!

                         ஏதோ ஒரு நிகழ்தகவில் நடந்தது அடுத்த சந்திப்பு. அவள் கல்லூரியில் நடந்த ரத்ததான முகாமிற்கு வளரும் தொழில் முனைவோர் மற்றும் தன்னார்வலர் என்ற முறையில் விழாவை ரத்த தானம் செய்து தொடங்கிவைக்க வந்த போதுதான் அவன் ரகமது பாரூக் என்று கல்லூரி முழுமைக்கும் அறிமுகம் ஆனான்.

                             மதிய உணவு இடைவேளையின் முதல் நொடியில் நிலோவை அவன் முன் நிறுத்தியது அது. அவர்கள் பழகத் தொடங்கிய இரண்டு மாதங்களில் அது அவனையும் ஆட்டி வைக்க தொடங்கிய பொழுது" நிலோ இனி நாம பழகுவது நல்லதில்லை" என்றான். புரியாமல் அவள் விழிக்க "இனியும் நீ என்  தோழி என்று கூறி நட்பை களங்கப் படுத்தக் கூடாது. என் குடும்பத்தில் உன்னை எனக்காக ஏத்துப்பாங்க. ஆன உங்கப்பா தீவிர கிருஷ்ண பக்தர் என்னை ஏத்துப்பாரா ?" என்றான்.

                            " எனக்கு உன்னை பிடிச்சிருக்கான்னு கேட்கமாட்டாயா ரகு? "என்றாள் இதயமும், இமைகளும் படபடக்க. "இல்லை நிலோ உன் சூழ்நிலை புரியாமல், உன்னையும் உன் குடும்பத்தையும் குழப்பத்தில் ஆழ்த்த, எனக்கு மனசு வரலை"என்றான்  கண்ணியம் குறையாமல்.

                            கைகளை நீட்டி விளக்கமளித்த போது நிலோ சட்டென்று அவன் கைகளை பற்றி விரல்வழியே தன்  மனதை வெளிபடுத்த முனைந்து பின் வார்த்தைகளை துணைக்கு அழைத்தாள். "உனக்கு என்னை விட நல்ல பெண் கிடைப்பாள். ஆனால் நீ யாருமே தவறவிட முடியாதவன் ரகு" "ஐ கான்ட் மிஸ் யூ" என்றாள்.

                                      மூன்று ஆண்டுகளாக ஒரு கோப்பை தேநீரில் ஒவ்வொரு மிடறாக, சுவையாக நகர்ந்த நேசத்தை அப்பாவிடம் கூறியபோது "கூட்டிவா" என்றார். அவன் தன்னை ரகமத் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதும், கைகுலுக்கி டின்னர் முடித்து, வழியனுப்பியபின் மகளிடம் யோசிக்க சிறிது அவகாசம் கேட்டார்.

                                         விபத்தில் தொடங்கிய காதலுக்கு மீண்டும் ஒரு விபத்தே உதவிசெய்தது என்பதா? அல்லது ரகுவின் மேன்மையை நிலோவிற்கு உணர்த்தியதை போல, அவள்  அப்பாவிற்கு உணர்த்த நடந்ததா? இன்னமும் புரியவில்லை. ஒரு வணிக வளாகத்தில் செயலிழந்த லிப்டில் இருந்த ஐவரை உயிரை பணயம் வைத்து ரகமத் காப்பாற்ற அந்த ஐவரில் ஒருவாராக இருந்தார் நிலோவின் அப்பா. உண்மையில் அவர்களின் திருமணமும் அந்த செயலிழந்த லிப்டில் நிச்சயிக்கப் பட்டிருந்தது. இப்போது திருமண ஆடை வாங்க அழைத்துப் போவதாய் அவன் சொன்னதால் நிலோ காத்திருக்கிறாள்.                   
                                   போனில் வந்த ரகு கெஞ்சினான். "நிலோ டியர், கொஞ்சம் பொறு, வந்துட்டே இருக்கேன்." எப்போ வருவாய் ரகு என்று கேட்டதற்கு வழியிலே கோர்டுக்கு அருகே ஒரு பைல் கிடந்ததுடா. எக்கச்சக்க பேப்பர்ஸ் கூடவே இன்று கோர்டில் ஆஜராகும் படி ஒரு நோட்டீஸ் வேறு. பாவம் யாருக்கு என்ன பிரச்சனையோ? இப்போ நான் 5ஆம் நம்பர் கேட்டுக்கு பக்கத்தில்தான் இருக்கேன் டியர். யாராவது பொறுப்பான நபர்கிட்டே ஒப்படைச்சுட்டு வந்துடறேன். ப்ளீஸ் வெயிட் புன்னகையோடு போனை கட் பண்ணிவிட்டு வெகுநேரம் காத்திருக்கும் நிலோ கண்ணெதிரே இருக்கும் டீ.வியை உயிர்ப்பித்தால்தான் தெரியும் கோர்டில் வெடித்த குண்டில் ரகு என்கிற ரகமத் உருத்தெரியாமல் சிதறி ஒரு மணி நேரம் கடந்த சேதி.


பி .கு ;      டெல்லி யில் உச்சநீதிமன்றத்தின் 5 ஆம் நம்பர் கேட்டில் நடந்த குண்டுவெடிப்பின் பின்விளைவு (!)            
                                                                     -கஸ்தூரி 

25 கருத்துகள்:

  1. அன்பு சகோதரிக்கு வணக்கம்
    நல்ல உயிரோட்டமான கதை. எடுப்பும் முடிப்பும் மிக அருமை. கதையின் வரிகள் நகர்ந்த விட்டது காட்சி கண்களை விட்டு நகர மறுக்கிறது. அப்படியொரு கதையோட்டம். கவிதையில் கலக்குவீர்கள் என்று எனக்கு தெரியும் சிறுகதையிலும் அசத்தி விட்டீர்கள் சகோதரி.
    50 ஆவது பதிவிற்கு எனது அன்பான வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
    தொடர்ந்து இது போன்ற சிறப்பான இலக்கியங்களைத் தாருங்கள். நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை போன்றோரின் ஊக்கத்தால் சாத்தியாமாகட்டும் .
      தொடர்ந்து வருக சகோதரரே
      வாழ்த்துக்கு நன்றி!

      நீக்கு
  2. இனிய வணக்கம் சகோதரி...
    ஐம்பதாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    மென்மேலும் பல்லாயிரமாக வளர்ந்து மிளிரட்டும்
    உங்கள் படைப்புகள்.
    ===
    மெலிதான காதல் இழையோடி வந்த கதை
    முடிவில் நெஞ்சம் பதைபதைக்க வைத்துவிட்டது சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா முஸ்லீம் சகோதரர்களையும் தீவிரவாதியாக
      பார்க்கும் நம் பார்வை மாறவேண்டும் என்றே
      இதை எழுதினேன் .நோக்கம் வெற்றி பெற்றால்
      நல்லதுதானே?வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி
      சகோதரரே!

      நீக்கு
  3. ஐம்பதாவது பதிவை சிறப்பாக்கியமைக்கு வாழ்த்துக்கள்... அசத்துறீங்க...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தனபாலன் சார்.
      தங்களது தொடர் வருகை
      எனக்கு ஊக்கமாக இருக்கும் !

      நீக்கு
  4. டி. டி. அவர்கள் வலை வழியே
    இங்கு ஐந்தாம் எண் கேட்டுக்கு கேட்காமல் வந்தேன்.

    நிலோ இன்னும் எத்தனை நாள் காத்திருப்பாள் ?

    தயவு செய்து அவளிடம் நடந்ததைச் சொல்லி,
    வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்.


    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com
    www.movieraghas.blospot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ,வாங்க
      காத்திருத்தல் கற்பனைகளில் மட்டுமே சாத்தியம்.
      நம் மனங்களில் உண்மையான சோசியலிசம் வர
      காத்திருக்கும் இந்தியாத்தாயாகவும் உருவகிக்கலாமே ?
      அப்புறம் ruby ring என்னாச்சு மாமிக்கு
      தீபாவளி பரிசு கிடைத்ததா?

      நீக்கு
  5. உயிரோட்டமான காதல் கதை
    முடிவில் உயிரும் கொஞ்சம் ஆடிப்போனது உண்மை......
    நல்லவர்கள் வாழ்வதில்லை அவர்களுக்கு விதி இட்ட கட்டளை போல..!

    ஆயிரம் காதல் அவனியில் கண்டேன்
    பாயிரம் பாடும் பண்டைய சங்கத்தின்
    ஐந்திணைக் காதலும் அழகாய் கண்டேன் ..!

    விந்தை கொண்ட விதியின் உயிர்ப்பில்
    இந்தக் காதலில் இதயம் மெலிந்தேன்
    இனியும் வேண்டாம் இப்படி வலிகள் ..!

    ஐம்பதாம் பதிவென்ன ஐம்பதாயிரம் பதிவாக உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் முதல் வருகை அல்லவா ?
      தமிழ் தலைவனுக்காக
      தனி கவிதைகள் படைக்கும்
      உங்கள் வருகை எனக்கு உவகை
      ரசித்து படித்து ,பொறுமையாய்
      கவிதையாய் கருத்திட்டமை
      எனக்கான கைதட்டல்!!
      மகிழ்வோடு நன்றிகள் பல !

      நீக்கு
    2. காந்தள் மலரும் காலத்தில்
      கனிவாய் உயிர்க்கும் காவலர்க்காய்
      சிந்தை அழுது முகிழ்கின்ற
      சித்திரக்கவிதைகள் கண்டீரோ..!

      தங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்

      நீக்கு

  6. ரொம்ப ரொம்ப நல்ல கதைப்பா. அண்ணனின் அன்பு வாழ்த்துகள்.
    கடைசியில் வெடித்த வெடிகுண்டில் நானும் சிதறிவிட்டதுபோல ஒரு அதிர்ச்சி... ஆனால்... இதுதான் நடக்கப் போகிறது என்பதை முன்னால் வந்த கதைக்குறிப்பு சொல்லிவிட்டதே! (மேலே கதைத் தலைப்புக் கீழ், பரிசுபெற்ற விவரத்தை மட்டும் போட்டு, கதை எழுதப்பட்ட சூழலைக் கதைக்குக் கீழே விட்டிருந்தால் அதிர்ச்சியின் அலைகள் சற்றுக் கூடியிருக்கும் வாய்ப்பை நீயே குலைத்துவிட்டது நியாயமா?)
    அந்த ஒரு விபத்தை மட்டும் கதையில் வைத்து, ரகு-நிலோ சந்திப்பிற்கு வேறு ஏதும் காரணங்களைப் பிடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்ல...? அப்படி யோசித்திருந்தால், கதையில் தொடரும் விபத்துகள் அர்ஜூன்-மீனா படம் ஒன்றையும், எங்கேயும்-எப்போதும் படத்தையும், சூர்யா(இருவேடத்தில் நடித்த மற்றொரு) படம் ஒன்றையும் டைட்டானிக்கையும் கூட நினைவூட்டுவதைத் தவிர்த்து, கதையின் ஒரிஜினாலிடியைக் காப்பாற்றியிருக்கலாம்... சூர்யா-ஜோதிகா நடித்த ஒரு படக்கதையின் காதல் இப்படித்தானே மலரும் (இந்தப் படங்களின் பெயர்கள் எனக்கு நினைவில்லை)
    மற்றபடி உனக்குக் கதையும் எழுத நல்லா வருது. தயவுசெய்து தொடர்ந்து எழுதிக்கொண்டே இரு...
    நான் எழுதிய முதல் கதைக்கு கல்கி இரண்டாம் பரிசு கிடைத்தபோது, முதல்பரிசு பெற்ற மேலாண்மை இப்போது சாகித்திய அகாதெமி விருதும் பெற்றுவிட்டார் என்பதைச் சொல்லி நான் தொடர்ந்து எழுதாதது பற்றி கவிஞர் பாலா என்னைக் கடிந்துகொண்டார். என்னைப் போல நீ பேனாவைக் காணாமைல் போட்டுவிடாதே! அப்பறம் சாகித்திய அகாதெமி வருத்தப்படும்ல? அப்புறம்... இந்த உன் சிறுகதை பார்த்து என் வலைப்பக்கத்தில் உனக்கொரு பரிசு தந்திருக்கிறேன் பார்.(12-12-2013) அன்புடன் – அண்ணன். http://valarumkavithai.blogspot.in/2013/12/blog-post_12.html
    -பி.கு. வெகு விரைவில் 100ஆவது படைப்பைக் கொடு அப்ப வாழ்த்துறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா you are great.எனக்கு ரிதம் (அர்ஜுன் ,மீனா )படம் ரொம்ப பிடிக்கும்.அந்த தாக்கத்தில் தான் இதை எழுதியிருப்பேனோ ?எனக்கே
      ஷாக் .பரிசு அருமை அண்ணா ,படித்துவிட்டேன் .தங்கள் நம்பிக்கையை காப்பாற்ற முயற்சிக்கிறேன் அண்ணா-
      அன்பு தங்கை மைதிலி

      நீக்கு
    2. உண்மைதான் மைதிலி. நாம் சில நேரம் ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொண்டிருப்போம் அந்தப் பாடல் எங்காவது நம் காதில் விழுந்திருக்கும் என்பது அப்போது மூளைக்கு உறைக்காதாம்! இன்னொன்று டெலிபதின்னும் சொல்றாங்க இதுபத்தி கஸ்தூரிகிட்டதான் கேக்கணும். படைப்பாளிகளுக்கு இந்த டெலிபதி இருக்குமாம். தொடர்ந்து நேரம் ஒதுக்கி எழுதிக்கிட்டே இரு பேனா (கீ போர்டு?) கூர்மையாகட்டும்.

      நீக்கு
  7. நெகிழவைக்கும் கதைக்கரு. எழுதியவிதமும் சிறப்பு. காதலால் இணைந்த உள்ளங்களை மனிதர்களின் சுயநலம் பிரித்துவிடுவது கொடுமை.

    பரிசுப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள் மைதிலி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது தளத்தை பார்த்தவுடன்
      மிகுந்த பொறுப்புணர்வு வருகிறது
      சகோதரி .என்னமா எழுதுறிங்க
      நீங்க வாழ்த்தினது ரொம்ப மகிழ்ச்சி !

      நீக்கு
  8. உங்களுடைய ஐம்பதாவது பதிவில் தான் முதல் முதல் வருகிறேன். வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு
  9. ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள். அழகிய சொல்லாடலுடன் அமைந்த இக்கதையை மிகவும் ரசித்தேன். கதையைத் தாண்டி கதை சொல்லும் பாங்கே எனக்குப் பிடித்திருந்தது. கதைக்காகவன்றி உங்கள் தமிழுக்காக உங்கள் பக்கம் விருந்துண்ண விழைகின்றேன். இறுதியில் மனிதரைப் பதம் பார்க்கும் ஈவு இரக்கமற்ற மனித மிருகங்களின் வேட்டை இதயத்தைப் பிழிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பன்முக திறன் கொண்ட உங்களை போன்றோர் வருகையும்
      வாழ்த்தும் எனக்கு மிகுந்த உற்சாகம் தருகின்றது .
      உங்கள் வருகை ஆவலுடன் எதிர்பார்க்க படுகிறது .
      நன்றி சகோதரி

      நீக்கு
  10. மனதைப் பிசைந்த கதை. என்னால் அதிர்வு - அதிர்ச்சிக் கதைகளைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. மீள வெகுநேரமாயிற்று. அருமையான கதை நடை.

    உங்களின் ஐம்பதாவது பதிவிற்கும், போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றமைக்கும்
    உளமார்ந்த இனிய நல் வாழ்த்துக்கள்!

    மேலும் பல படைப்புகள் பெருக்கி பரிசுகளையும் பெற்று மகிழவும் வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழி !நலம் தானே .வெகு நாள் ஆயிற்று
      தங்களை பார்த்து (வலைப்பூவில் தான் )
      இது தான் என் முதல் நீளமான பதிவு
      பொறுமையுடன் படித்து கருத்திட்டமைக்கு
      நன்றி நன்றி !புதிய க்வேளிங்கை
      விரைவில் எதிர்பார்க்கிறேன் !

      நீக்கு
  11. ஒரு கதையோ , பாடலோ பிடித்திருந்தால் வாசித்து / கேட்டு முடித்த பின் திரும்ப திரும்ப , படிப்போம் & கேட்போம்

    But , ரெம்ப ரெம்ப பிடித்திருந்தால் முழுமையாக முடிப்பதற்கு முன்பே திரும்ப திரும்ப கேட்க ஆரம்பித்துவிடுவோம் .

    அதைப்போல இந்தக்கதையை முழுமையாக படிப்பதற்கு முன்பே முதல் பத்தியை மட்டுமே நான்கைந்து முறை வாசித்தேன் ... Simply Superb ... Awesome ...


    Rest of the story கூட நல்லாருக்கு .. But Sentiment தூக்கல் :(
    விக்கிரமன் பட ஹீரோக்கள் கோரஸ் ஒலிக்க கண் முன்னே வந்துபோனார்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப தேங்க்ஸ் bro ,
      இனி செண்டிமெண்டை குறைத்துக்கொள்கிறேன்

      நீக்கு
  12. பதில்கள்
    1. நன்றி தங்கள் முதல் வருகைக்கும் ,கருத்துக்கும்

      நீக்கு