புதன், 17 செப்டம்பர், 2014

தந்தை போற்றுதும்!!

             அம்மா அன்பாக இருப்பார்கள். சரி அப்போ அப்பா அன்பாகவே இருக்கமாட்டாரா? அப்பா என்றால் கண்டிப்பாக இருப்பார். அதனால் பெரும்பாலான பாடல்கள், வாசகங்கள் தாய்ப்பாசம் பற்றியே இருக்கும். அதற்காக தந்தை பாசம் என்பது தாய் பாசத்திற்கு சற்றும் குறைந்ததல்ல. தாய் கருணையின் வடிவம் என்றால் தந்தை ஆசிரியரின் வடிவம் இல்லையா? சான்றோனாக்குதல் தந்தை கடனே எனும் பழந்தமிழ் பாடல் பொய்யா? ஆம் தந்தை என்று நான் இத்தனை நேரம் குறிப்பிட்டது எந்தை பெரியாரை(வழக்கமான எழுத்துப்பிழை என கருதிவிடாதீர்கள்) தான். அவர் நம் சமுதாயத்திற்கு கண்டிப்பான தந்தையாய் தான் இருந்தார். பின் ஏன் அன்னை தெரசாவை போல் தந்தை பெரியாரின் படங்கள் மற்றும் மேற்கோள்கள் பரவலாக பயன்படுத்தப்படுவதில்லை.  குஷ்பு என்றால் கற்பு பற்றிய கருத்து என எளிதாக நினைவு வைத்துக்கொள்ளும் தமிழ் மனங்கள் பெரியார் என்றால் கடவுள் இல்லை என்ற நாத்திகராக பார்க்கும் பிற்போக்கான மனங்கள் இன்னும் இருப்பதேன்?





         பெரியாரை பற்றி படித்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. முதன்முறையாக தண்ணீர் குழாய்கள் அவரது ஆட்சிபகுதியில் அமைக்கபடுகிறது. கீழ்சாதி தெரு(?!)வழியாக அந்த குழாய் வரக்கூடாது என்ற பல வறட்டு கூச்சல்களை எதிர்கொண்டு தண்ணீர் குழாய்கள் அமைத்துவிட்டு, பெண்கள் இடர்நீங்கி தண்ணீர் எடுப்பதை பார்க்கவருகிறார் பெரியார்.. ஒரு மேல்சாதி பெண் (!?) தண்ணீர் பிடிப்பதற்கு முன் யார்யார் தொட்ட குழாயோ எனும்நினைப்பில் அதனை சுற்றி நீர்தெளித்து மந்திரம் சொல்லி, வணங்கிவிட்டு நீர் எடுக்கிறாள். பின் வருவோர் எல்லோரும் அதையே செய்ய, அப்போது ஒரு கீழத்தெரு பெண்ணும் அதே போல நீர் பிடித்திருக்கிறார். நீ ஏன்மா இப்படி பண்ற என்று கேட்கிறார் பெரியார். அப்படி பண்ணிதான் தண்ணி புடிக்கனும்னு அவங்க சொன்னாங்க ங்க  என்கிறாள் அவள் அப்பாவியாய். பெரியார்  கண்ணீர் வர சிரிக்கிறார். அவர் அத்தனை துணிச்சலோடு அன்று குரல் கொடுத்திருக்கவில்லை என்றால் இன்று உலகே நம்மை பார்த்து சிரித்தபடி இருக்கும் பல பிற்போக்கான விஷயங்கள் நாம் தொடர்ந்தபடிதான் இருந்திருப்போம்.
         இன்று திராவிடக்கட்சிகள் செய்திருக்கும் ஆகப்பெரும் (நல்ல)சாதனைகள் பலவற்றுக்கும் மூலக்காரணம் பெரியார் தான்  அல்லவா? அவரை பெண்ணியவாதி என்று சொல்வோரும் உண்டு. feminist என்று சொல்லவதை விட அவரை humanist என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும்.

புதைத்து விட்டு, வழிபடும் மரபினர் நாம்
அதனால்தான் கொள்கைகளை புதைத்துவிட்டு
வகுத்தவர்களை வழிபடுகிறோம் !!

என்கிற என் குறும்பாவை இங்கு நினைவுகூர்கிறேன். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை அல்லவா? எனவேதான்  பெரியார் காட்டிய நெறியை பின்பற்ற முயன்றுகொண்டிருக்கிறேன். ஆனால் இன்றைய அரசியல்வாதிகளைவிட , இளைஞர்களிடம் பெரியாரை பற்றி சரியான புரிதல் இருப்பதாகவே தோன்றுகிறது. குழந்தைக்கு சேகுவேரா போல் ஒரு பெயர் வேண்டும் என்று கேட்ட நண்பனுக்கு ஈ.வெ.ரா என்று பதில் அளித்ததாக பகன்ற அந்த இற்றை இளைஞன் எனக்கு மகிழ்வை விதைத்திருகிறார்.  என் தம்பி கூட இப்போ சே மோகத்தில் இருந்து பெரியாருக்கு மாறி இருக்கிறான். வரலாறை மறந்த சமுதாயம் முன்னேறவே முடியாது என்பது உண்மையானால் தமிழகத்தின், தமிழர்களின் வரலாற்றில் மறக்கவே கூடாதா பெயர் ஈ.வெ.ரா. பெயருக்குபின்னால் சாதியை சுமந்து திரிந்த நம் தமிழ் சமுதாயத்தை  முதன்முதலாக தன் சாதியை தூக்கி எறிந்து, மனிதம் சுமக்கச்செய்த மாமனிதர். வடஇந்திய பெயர்கள் இன்னும் அகர்வாலையும், சாஸ்திரியையும் சுமந்துகொண்டு இருக்க அண்ணா அண்ணாவாக மட்டும், சகாயம் (ஐ.ஏ.எஸ்) சகாயமாக மட்டுமே, மைதிலி மைதிலியாக மட்டும் இருப்பது எவ்வளவு ஆறுதல்!! எவ்வளவு பெருமை!! எவ்வளவு மகிழ்ச்சி!!! எனவே தந்தை போற்றுதும்!!!!

55 கருத்துகள்:

  1. வணக்கம் அக்கா
    பெண்விடுதலைக்காகவும், சமூகத்தில் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை வேரறுக்கவும் பிறந்த அறிவுக்கடல் பெரியார். எல்லா தரப்பு மக்களுக்காவும் அவர்களின் உரிமைக்காவும் குரல் கொடுத்த உத்தமரின் புகழுக்கு மகுடம் சேர்க்கும் பதிவைத் தந்தமைக்கு தங்களுக்கு வந்தனம். தொடருங்கள் அக்கா. பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! சகோ ????!!!!!! எப்படி இப்படி புயல் வேகத்தில்!!!
      **புகழுக்கு மகுடம் சேர்க்கும் பதிவைத் **
      அது பகுத்தறிவு சூரியன். நம்ம சும்மா டார்ச் லைட் சகோ:))
      என்றாலும் தங்கள் அன்புக்கு நன்றி!!!

      நீக்கு
  2. அதனால் தானே அவர் பெரியார்.
    பெரியாரின் வாழ்வில் நடந்ததாக நீங்கள் கூறிய செய்திகளை உங்களின் மூலமாகத் தான் அறிந்தேன் நன்றி.
    சங்க இலக்கியத்தில் சான்றோன் என்ற சொல் வீரனையும் குறிக்கும்.
    ஈன்று புறந்தருத லெந் தலைக்கடனே!
    சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே!
    வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
    நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
    ஒளிறு வாளருஞ்சமம் முருக்கிக்
    களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!
    என்ற பொன்முடியாரின் போர்களத்திற்கு மகனைச் செலுத்துதல் குறித்த பாடலில் சான்றோன் எனக்குறிப்பிடப்படுபவன் வீரனே!
    நன்னடை நல்கல் என்பதற்கு தண்ணடை என்கிற பாடபேதமும் உண்டு.
    நீர்வளம் பொருந்திய வயல்கள் என்று அது பொருள்படும்.
    சிறப்பாகப் போரிட்டு வரும் வீரனுக்கு நீர்வளம் பொருந்திய வயல்களை அளித்துப் பெருமைப் படுத்துவது அரசின் கடமை என்பது அதன் பொருள்.( தண்ணடை நல்கல் வேந்தற்குக் கடனே)அதுவே இப்பாடலுக்குச் சரியானதாய் அமையும் என்பது என் கருத்து.
    ஆடவரே அன்றி பெண்டிற்கும் வீர உணர்வு உண்டு என்பதைச் சொல்லும் மூதின்முல்லை என்னும் துறையைச் சார்ந்த இந்தப் பாடலில் ஒருதாய் தன் போர்க்களம் புகுத்தும் தன் மகன் பற்றிக் கூறும் பார்வையில்,
    தந்தையின் கடன் கல்வி அறிவூட்ட வேண்டுமென்றும்
    அரசன் நல்ல நடத்தையை அளிக்க வேண்டுமென்றும்
    சொல்லப்படும் பொருள் அத்துணை பொருத்தமாய் இருக்குமா என்பதை முத்துநிலவன் அய்யா போன்றவர்கள் விளக்க வேண்டுகிறேன்.
    ( ஏதோ ஒரு வரியைப் பிடிச்சிட்டு வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லித் திரியிறானேன என்று சகோதரி தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.
    நாம நினைக்கிறது சரியா தப்பான்னு தெரிஞ்சிக்கலாமே என்கிற ஆசைதான் )
    பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா!
      முதலில் உடனடி வருகைக்கு மிக்க நன்றி அண்ணா! நான் பள்ளியில் படித்த பாடல்களிலேயே மனதில் பதிந்த பாடல்களில் இதுவும் ஒன்று. இவ்வாறான கருத்துகளை விரும்பி வரவேற்கிறேன்:))
      **தந்தையின் கடன் கல்வி அறிவூட்ட வேண்டுமென்றும்
      அரசன் நல்ல நடத்தையை அளிக்க வேண்டுமென்றும்
      சொல்லப்படும் பொருள் அத்துணை பொருத்தமாய் இருக்குமா என்பதை**
      தந்தை தன் மகவுக்கு ஒரு சிறந்த ஆசிரியரை கண்டுபிடித்து தருதல் மட்டுமல்லாது, தானே ஒரு ஆசியராகவும் இருக்கவேண்டும் என்றும், நடத்தையில் தம் மக்கள் தன்னை பின்பற்றும்படியான நெறிகளுடன் அரசன்(தலைவன்) இருக்கவேண்டும் என்பதே பொருள் என்று நான் புரிந்துகொண்டது சரியாக இருந்தால் இந்த பாடல் சரியான பொருளுடன் இருக்கிறது என்பதே என் கருத்து. நிலவன் அண்ணா என்ன சொல்கிறார் என பார்ப்போம்.:)) சற்றும் தயங்காது உரிமையோடு இது போன்ற பின்னூட்டங்களை தாங்கள் இந்த தங்கையின் தளத்தில் இடலாம். என்னை போல புல்லுக்கும் ஆங்கே பொசியட்டும் உங்கள் அறிவுப்பெருமழை(எதுவும் பிழை இருந்தால் பொறுத்தருள்க)

      நீக்கு
    2. அன்புத் தங்கை மைதிலி, நான் முன்னொருமுறை, “களவன், கள்வன்“ பற்றிய கருத்துப் பரிமாறுதலில் பெங்களுர் வலை-இலக்கியத்தங்கை “தேன்மதுரத்தமிழ்“ கிரேஸ் பிரபா அவர்களின் பதிவில் இவரை இழுத்துவிட்டேன் என்பதற்காகவோ என்னவோ, இப்போது என்னை உன் பதிவில் இழுத்திருக்கிறார். (அவர் அறியாத்து அல்ல, அவர் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் பழந்தமிழ் அறிவிலும் என்னிலும் அறிவு சான்றவர் என்பதைப் பலமுறை சொல்லியிருக்கிறேன்) என்றாலும், இதைச் சாக்கிட்டு, எனக்குத் தெரிந்த செய்தி சிலவற்றை நண்பர் விஜூவுக்காக மட்டுமல்லாமல் உனக்காகவும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியே... அவர்கள்,
      ‘தந்தையின் கடன் கல்வி அறிவூட்ட வேண்டுமென்றும்
      அரசன் நல்ல நடத்தையை அளிக்க வேண்டுமென்றும்
      சொல்லப்படும் பொருள் அத்துணை பொருத்தமாய் இருக்குமா என்பதை முத்துநிலவன் அய்யா போன்றவர்கள் விளக்க வேண்டுகிறேன்” என விஜூ அவரகள் கேட்டார்கள் “தந்தையின் கடன் கல்வி அறிவூட்ட வேண்டுமென்பதும்,
      அரசன் கடமை நல்ல நடத்தையை அளிக்க வேண்டுமென்பதும்“
      அன்றைய சமூகக் கருத்தே என்பதைக் திருக்குறள் வழியே அறியலாம்.
      “தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்“ – (குறள்-67) என்பதன் பொருளாக, “தந்தையின் கடமை, தன் மகனைக் கல்வி-கேள்விகளில் சிறந்தவனாக ஆக்குதல் என்பதையே பற்பலரும் சொல்லியிருக்கிறார்கள்! இதை, “பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற“ (61) எனும் குறள் கூறும் ஒரு தந்தையின் மனநிலையாலும் விளங்கிக் கொள்ளலாம்.
      அடுத்து, தந்தைதான் தன் மகனுக்குக் கல்வியறிவைத் தருவதைக் கடமையாகக் கொண்டிருந்தான் என்பதை, அவ்வையாரின் தனிப்பாடலான - “தாயோடு அறுசுவைபோம், தந்தையொடு கல்விபோம்” என்பதாலும் அறியலாம்.
      அடுத்து -
      நன்னடை என்பதைத் தண்ணடை எனப் பாடம் கொள்வதை நான் ஒப்பவில்லை. ஏனெனில், “அரசனின் கடமை நல்ல நடத்தையைத் தம் மக்களுக்குத் தருவது“ அதாவது “மக்களுக்கு முன்னோடியாகத் திகழ்வது“ என்பதே அன்றும் இன்றும் (அன்று அரசன், இன்று அரசுத் தலைவர்) பொருத்தமாகும். (அப்படி அன்றும் இன்றும் நம்நாட்டில் இல்லையே என்பதுதான் எதார்த்தம். அமெரிக்க அரசின் கொள்கையோடு நமக்கு எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அந்த அதிபர், மக்களைவிட ஒழுக்கமானவராக, தேசபக்தராக இருக்கவேண்டும் என அந்த மக்கள் விரும்புவதை, அதிபர் தேர்தல் பலவற்றின் வெற்றி தோல்விகளில் பார்த்தோமே?) அதனால், மக்களின் எதிர்பார்ப்பு, தன் தலைவனை முன்னோடியாகக் கொள்வது என்பதில் இன்றும் மாற்றமில்லையே? இதையே, “யதா ராஜா ததா ப்ரஜா“ (மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி) எனும் வடமொழி வாக்கோடும் பொருத்திக்கொள்ளலாம். இதை “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” எனும் புறநானூறுவழியும் அறியலாம்.
      இதையே, புறம் 186இல் மோசிகீரனார், “வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே“ எனும் பாடலாலும் அறியலாம். எனவே, “நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே” என்பதை “அரசன் –அல்லது இன்றைய அரசுத் தலைவனின்- கடமை, தன் நாட்டு மக்களுக்கு, தன்னைப்போலவெ நல்ல நடத்தையைக் கற்பிப்பது” என்பது மிகவும் உயரந்த கருத்தாகவே எனக்குப் படுகிறது. (நடைமுறையாகாவிட்டாலும் கூட!)
      பொதுவாகச் சங்க இலக்கியங்கள் “இப்படி இருந்திருக்க முடியுமா?” என்பதிலும், “இப்படி இருந்தால் நல்லது தானே?” எனும் கற்பனையும் எதார்த்தமும் கலந்த அரிய கலவை என்பதே என் கருத்து. கற்பனைதானே நடைமுறைக்கு முன்னோடியாகும்?
      எனவே, நன்னடை நல்கக் கூடிய முன்னோடித் தலைவர்களைத் தேடுவோம். தந்தையோடு தாயும் தம் மக்களுக்கு நல்ல கல்விதரும் சமூகத்தை அமைப்போம் அத்தூண்டலுக்கு இப் பாடல்கள் வழிகாட்டட்டும் என்பதே என் முடிவாகும்.
      மற்றபடி, “சான்றோன்“ எனும் சொல்லுக்கு, இப்போது வேண்டுமானால், “சிறந்த, அறிவு மற்றும் ஒழுக்கத்தில் முன்னோடியான“ என்று பொருள் வழங்கலாம். ஆனால் பழந்தமிழில் அதற்குப் பெரும்பாலும் “வீரன்“ என்றே பொருள் வழங்கப்பட்டுள்ளது. இதற்குப் புறம், குறள், நாலடியார், பதிற்றுப்பத்து, ஆசாரக்கோவை, சிலப்பதிகாரம், மற்றும் வில்லிபாரதத்திலும் சான்றுகள் பல உள. அதன் அடிப்படை கல்விகற்பித்தல் என்பதாலேயே அவ்வழக்கு வந்திருக்கலாம். (அன்றைய கல்வியே வில்,வாள் வீசக் கற்றல்தானே?) பின்னர் இதன் பொருள் பாட வாரியாக மாறியபோது பலதுறை அறிவு மற்றும் நடத்தை எனத் தற்போது வழங்குவதில் வியப்பில்லை அல்லவா?
      எப்படியோ... ஒரு விவாதத்தை மையப்படுத்தி என்னைச் சிந்திக்கவும் எழுதவும் வைத்த தங்கைக்கு என் மகிழ்வான நன்றியும், வாழ்த்துகளும். தந்தை பெரியார் தொடர்பான எதுவும் நல்ல சிந்தனையில்தான் கொண்டுவிடும் இல்லையாப்பா?

      நீக்கு
    3. அது சரீ. வலை-வடிவமைப்பு மாற்றம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் “மகிழ்நிறை“ என்னும் தலைப்பையே காணோம்? ஏன் பா? “எங்கும் மகிழ்ச்சி நிறைக“ என்பதில் அடங்கிவிட்டதா? நோ நோ இதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். மகிழ்நிறைதான் அழகு! (அதன் விளக்கம் தானே புரியுதில்ல? அப்பறம் ஏன்? விளக்கமா ஒரு வரி?)

      நீக்கு
    4. மேலோட்டமாக வாசித்துள்ளேன்..ஓரிரு மாதங்கள் கழித்துத் தூங்காமல் விழித்திருக்கப் போகும் ஒரு இரவில் மீண்டும் இங்கு வருவேன் தோழி :)

      நீக்கு
    5. அய்யா,
      வணக்கம். தங்களின் நீண்ட ஆய்ந்தளித்த பின்னூட்டம் கண்டு நெகிழ்கிறேன்.
      நிச்சயமாய்த் தங்களை மாட்டிவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஒரு கடித நடையில் அமைந்த உங்களின் இந்தப் பின்னூட்டம் “ முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே “ என்னும் தங்கள் புத்தகத்தை எனக்கு நினைவு படுத்தி விட்டது. தங்களை விடச் சங்க இலக்கியங்களில் எனக்கு அதிகப் பரிச்சயம் என்பது தங்களின் தன்னடக்கத்தைக் காட்டுகிறது. அதை அப்படியே ஏற்க இயலாமைக்கு வருந்துகிறேன்.
      சகோதரி கூறியதைப் போலவே இந்தப் பாடல் என்பள்ளிப் பருவப்பாடப்புத்தகத்திலும் இருந்தது. தாங்கள் கூறியவாறே என் தமிழாசிரியரும் உரை கூறினர். உ.வே.சா. அவர்களின் புறநானூற்றுப் பதிப்பும் “நன்னடையே“ கொண்டிருக்கிறது.
      உ,வே.சா. வின் புறநானூற்றுப் பதிப்புக்குப் பின்னான சங்கஇலக்கியத் தொகுப்புப் பதிப்பாக்கத்தில் ஈடுபட்ட வையாபுரிப்பிள்ளையவர்கள், “தண்ணடை“ என்பதைப் பாடமாய்க் கொண்டிருக்கிறார்.
      படிப்பு சாராத ரசனையான வாசிப்பு சித்தித்த நாளில் வையாபுரிப் பிள்ளையவர்களின் பாடம் எனக்கு அதிர்ச்சி ஊட்டியது. அது என் மனம் பதிந்து போன ஆசிரியர் கூற்றை மறுத்துரைத்தமையால் வந்த அதிர்ச்சி.
      பின்பு ஆசிரியர் கூற்றை மறுக்க நியாயங்கள் அதில் இருந்தமையால் மனம் பதிந்து போன பாடல் இது.
      இப்பாடத்தை நான் ஏற்றமைக்கு உரிய காரணங்கள் இவை.
      நன்னடை எனவரும் இடம் தவிர்ந்து நடை என்ற சொல் புறநானூற்றில் மட்டும் ஏழு பாடல்களில் வருகிறது
      ( 23-19, 43 – 6 , 240 – 1, 299 -2, 361 -7 , 361 -9 , 390 -19 ) இதில் எங்கும் நடை என்பது நடத்தையையோ, முன்னோடியாகத் திகழ்தல் என்னும் பொருளையோ குறித்து வர வில்லை. நடத்தல் என்ற தொழில் சார்ந்தே வருகிறது.அதுவும் அஃறிணையான பறவை , விலங்கு , தேர் முதலானவற்றின் தொழில்சார்ந்ததாகவே பெரிதும் கையாளப்படுகிறது.
      அடுத்து “தண்ணடை“ எனும் சொல் ஆறிடங்களில் ( 285-15, 287 -10, 297 -1, 297 -8, 299 -5,.) வருகிறது. இவற்றில் தண்ணடை என்பது வீரம் காட்டும் மறவர்க்கு வேந்தரால் தரப்படும் முற்றூட்டு என்னும் பொருளிலேயே பெரும்பான்மை காட்டப்பட்டுள்ளது.

      “பொலம்புனை யோடை யண்ணல் யானை
      யிலங்குவான் மருப்பி னுதிமடுத் தூன்றினு
      மோடல் செல்லாப் பீடுடை யாளர்
      நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
      நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளும்
      தண்ணடை பெறுதல் யாவது படினே “ ( புறம் – 287 -5..10 )

      எனும் பாடலில் மழைபோல் அம்புகள் தைத்தாலும், கெண்டை மீன்கள் துள்ளுவது போல் வேல்கள் வந்து பிளந்தாலும், யானையின் தந்தங்களால் குத்தப்பட்டு நிலத்தூன்றப்பட்ட நிலையிலும் ஓடாத மறத்தன்மை உடையவர்க்கு நெல்லுடைய தண்ணடை அரசனால் வழங்கப்படுகின்றமை பேசப்படுகிறது. வேல் பாய்ந்த மார்புடன் நிற்கும் மறவர்க்கு,
      தண்ணடை பெறுதலு முரித்து” (புறம் 297)
      என்னும் பாடலை மேற்கோள் காட்டி “இது தண்ணடை பெறுகின்றது சிறிது, சுவர்க்கம் பெறுதல் நன்று
      (பெரிது) என்று நெடுமொழி கூறியது” என்பர் நச்சினார்க்கினியர்(தொல். புறத். 8)
      . “பெருநீர் மேவல் தண்ணடை“ எனும் புறப்பாடலைப் (புறம்.297)வெறியறி சிறப்பின்” (தொல்.புறத். 5) என்ற சூத்திரத்து, “சீறூர் புரவாகக் கொள்ளேன் தண்ணடை கொள்வேன் எனத் தன்னுறு தொழில் கூறினா னென்றும் கூறுவர் அவர். வையாபுரிப்பிள்ளை எந்தப் பிரதியைப் பாடம் கொண்டு “தண்ணடை“ என்றார் எனத் தெரியவில்லை. ஆனால் “தண்ணடை“ என்பது போரில் பெருவீரம் காட்டும் மறவர்க்குச் சங்ககாலத்தில் அளிக்கப்பட்ட முற்றூட்டு என்பது நோக்க அந்தப் பாடத்தை நன்னடை என்பதிலும் பொருத்தமாகக் கருத இச்சான்றுகள் உதவின. தவறாய் இருக்கலாம்.
      “நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே “ (புறம். 186) எனத் தாங்கள் காட்டும் பாடல் மக்களின் உயிர் மன்னனென்றும் மன்னரின் உடல் மக்களென்றும் சொல்லுதல் உண்மையே!
      சங்ககாலத்திற்குப் பிற்பட்டதாகப் பலரும் கருதும் ( நானும் கருதிக் கொண்டிருக்கும்) திருக்குறளும் பின் வந்த இலக்கியங்களும் “பொற்றாலியோ டெல்லாம் போம்“ என்ற பிற்கால அவ்வை உட்பட “சான்றோர்“ என்னும் சொல்லிற்குக் கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள் என்றே பெரிதும் பொருள் காட்டின. மூதின் முல்லை என்னும் துறைக்கு சான்றோனை வீரனென்றும் நன்னடையைத் தண்ணடை என்றும் பொருள் கொண்டமைக்கான காரணங்களை விளக்கவே இதைப் பகிர்கிறேன் அவ்வளவே!
      பதிவு பற்றிய பார்வையை விடுத்து சம்பந்தமில்லாமல் ஏதேதோ எழுதி இடத்தை நிரப்பியமைக்கு மன்னியுங்கள் சகோதரி!
      நன்றி!

      நீக்கு
    6. அய்யா...நமது பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்துத் தந்தோர்க்கு நாம் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்பது உண்மையே. ஆனால் அவர்களின் பாடபேதங்களில் சரியானவற்றை எடுத்துக்கொள்வதில்தான் நமது தெளிவு தேவைப்படுகிறது. இல்லையெனில் சங்க இலக்கியம் எழுதப்பட்ட காலத்தில் இல்லாத கடவுள் வாழ்த்துகள் எங்கிருந்து வந்தன? அதுவும் எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,அகம், புறம் ஆகிய ஐந்நு நூல்களுக்கும் ஒருவர் மட்டுமே எழுதிய கடவுள்வாழ்த்து எப்படி வந்திருக்க முடியும்? அதைவிட, முருகாற்றுப் படைக்குப் பின்னும், சிலம்பின் ஒவ்வொரு காதைக்குப் பின்னும் வைக்கப்பட்டுள்ள வெண்பாக்களை -அவர்கள் தொகுத்து வைத்துவிட்டார்கள் என்பதாலேயே -ஏற்றுக்கொள்ள முடியுமா என்ன? அப்படித்தான் “எப்பொருள் எத்தன்மைத்தாயினும்..” தான். ஆய்வுகள் தொடரவேண்டும் என்பதுதான் என் அவா. அறிதோறும் அறியாமை கண்டு தெளிவோம். சரியானதை ஏற்போம். நன்றி.

      நீக்கு
    7. இரண்டு தமிழ் நதிகள் இங்கு சங்கமித்திருப்பாதே என் பெரும்பேறு!!!! இருவரும் என்னை மன்னியுங்கள் என்னால் உடனடியாக பின்னூட்டம் இடமுடியவில்லை. ஆனால் தோழி கிரேஸ் சொன்னது போல் மீண்டும் மீண்டும் படித்தால் தான் கரைசெரமுடியும் போல இந்த சிறுமிக்கு ஆழமாய் இருக்கிறது தங்கள் இருவரின் பின்னூட்டம். எத்தனை எத்தனை அதிசயிக்கத்தக்க குறிப்புகள்!!!! மிக்க நன்றி அண்ணன்களே:)))

      நீக்கு
    8. வணக்கம்.

      மாற்றுப்பணி ஒன்றில் இருப்பதால் இணையம் வரவும் பின்னூட்டங்கள் இடவும் வாய்க்கவில்லை. உங்களின் இந்தப் பதிவிற்கு வேறொரு காரணத்திற்காக வந்தேன் எனினும், “ சான்றோன் ” என்பதற்கு என் http://oomaikkanavugal.blogspot.com/2015/10/blog-post_30.html பதிவொன்றின் பின்னூட்டத்தில் இருந்து சில கருத்துகளை முந்தைய கருத்தின் தொடர்ச்சியாக இங்கும் பகிர்ந்து போகலாம் எனக் கருதினேன்.

      “““““““““““““““““சான்றோன் எனும் இடத்தில் வீரன் என்று பொருள் படுத்திக் கொள்வது எனக்கு உடன்பாடாய் இல்லை. சான்றோன் என்றால் அறிவாளி என்பதே சரி நம் விருப்பத்துக்கும் இடத்துக்கும் ஏதுவாகப்பொருள் படுத்துவது சரி அல்ல““““““
      என்பதில் நம் விருப்பத்துக்கும் இடத்துக்கும் ஏதுவாகப் பொருள்படுத்துவது சரியல்ல என்ற உங்களின் கருத்தோடு நானும் உடன்படுகிறேன்.
      “ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;
      சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
      வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
      நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,
      ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,
      களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.“
      என்ற பொன்முடியாரின் புறநானூற்றுப் பாடலுக்குப் பழைய உரை இல்லை. இப்போது சொல்லப்பட்டு, படிக்கப்பட்டுவரும் உரைகள் சுவடிகளில் இருந்து அச்சுவடிவம் பெற்றபின் வாழ்ந்த தமிழறிஞர்களால் உரைக்கப்பட்டதுதான். சற்றேறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழை அவர்கள் புரிந்து கொள்வதும் பொருளுரைப்பதும் மிகக்கடினமே. ஆனாலும் அதனை அவர்கள் தங்களால் இயன்றவரையில் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். சங்க இலக்கியம் குருபரம்பரையில் பயிற்சியிலும் தொடர்ந்திருக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது பெரும்பாலானோரின் பயிற்சியில் இருந்தே மறக்கடிக்கப்பட்டிருந்தது என்பது உ.வே.சா.வின் என் சரித்திரத்தால் தெரியவருகிறது. இதுபோன்ற சூழல்களில் இன்று பயன்பாட்டில் இருக்கும் ஒருசொல் சங்க இலக்கியத்தில் காணப்படும்போது, இன்றுநாம் வழங்கும் பொருளை அப்படியே எடுத்து அன்றைய இலக்கியத்திற்குப் பொருத்திப் பார்க்கும் சூழல் ஏற்பட்டுவிடுகிறது. இது இயல்பானதே! ஆனால் சரியானதன்று.
      இந்தப்பாடலுக்குத் திணை துறை குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை பழமையானவை. ஓலைச்சுவடியிலேயே இருந்தவை.
      இப்பாடலின் திணை வாகை. இது போர்க்களத்தின் வெற்றி பற்றிப் பேசக்கூடியது.
      மூதின் முல்லை என்பது, மறக்குடி மகள் ஒருத்தி, தன் குடியின் பெருமையை அது சார்ந்த வீரத்தைப் பேசுவது.
      சங்கப்பாடல்களின் திணை துறைகள் என்பன சங்கப்பாடல்களைப் பார்ப்பதற்குரிய சாளரங்கள் என்பதைப் பயின்றோர் அறிவர். அவ்வாறு நோக்குங்கால் இப்பாடலின் திணையும் துறையும் போர் வெற்றியும் குடிப்பெருமிதமும் கூறுவனவாகக் கொண்டுதான் இப்பாடலை அணுக வேண்டும். ஒரு வீரப்பெண்மகள் தன் குடிப்பெருமையை, தன் இல்லத்தில், தான் வாழும் சமூகத்தில் இருப்பவர்களின் ஒவ்வொருவரின் கடமையை கூறுவதன் வாயிலாகச் சொல்வதாகவே இந்தப்பாடல் அமைகிறது.
      ‘மகனைப்பெறுதல் எனது கடமை. அவனை வீரனாக்குதல் தந்தையின் கடமை. அவன் போர் செய்வதற்கு வேண்டிய தளவாடங்களை அமைத்துத்தருதல் கொல்லனின் கடமை. அவனது வீரத்தையும், ஆயுதங்களையும் நல்லவழியில் பயன்படுத்திக் கொள்ளுதல் அரசனின் கடமை. ( இங்கு நன்னடை என்பதற்குத் தண்ணடை என்கிற பாடவேறுபாடும் உண்டு. அதுவே இந்தப் பாடலுக்கு மிகப்பொருத்தமாக அமையும். வெற்றி ஈட்டும் வீரனுக்குக் குளிர்ந்த நீர் வளமிக்க வயல்களை அளித்துப் புரத்தல் வேந்தனின் கடன் என்பதாக அதற்குப் பொருள் அமையும். ) வாள்சுழற்றிச் சென்று பகையழித்து, யானையும் கொன்று திரும்புதல் என் மகனின் கடமை ஆகும்’ என்று அந்தத் தாய் சொல்கிறாள்.
      இங்குக் களிறெறிந்து பெயர்தலும் ஆயுதமேந்திப் பொருதலும் வீரர்க்குரியனவா அல்லது அறிவாளிக்குரியனவா?
      கல்விக்கூடம் பற்றியோ ஆசிரியர் பற்றியோ இந்தப் பாடலில் சொல்லப்பட்டுள்ளதா?
      போரும் வீரமும் வெற்றியும் சொல்லப்படும் பாடலில் வரும் சான்றோன் என்பதற்கு வீரன் என்பதாய்ப் பொருள் கொள்வது பொருத்தம் உடையது என நான் கூறியதற்கான பின்னூட்டத்தில், ““““சான்றோன் என்றால் அறிவாளி என்பதே சரி நம் விருப்பத்துக்கும் இடத்துக்கும் ஏதுவாகப்பொருள் படுத்துவது சரி அல்ல“““““““““ என்று நீங்கள் குறிப்பிட்டதற்கான சான்றுகள் ஏதுமிருப்பின் தர வேண்டுகிறேன்

      .......தொடர்கிறது.

      நீக்கு
    9. இனிச் ‘சான்றோன்’ என்பதற்கு நான் எனது விருப்பத்தின்படி ‘வீரன்’ எனப் பொருள் சொல்லவில்லை இதே பொருளிலேயே சங்க இலக்கியத்தில் இச்சொல் ஆளப்பட்டுள்ளது என்பதற்கான சில சான்றுகள் வருமாறு,

      “எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து
      நோன்புரித் தடக்கை சான்றோர் மெய்ம்மறை”

      என்னும் பதிற்றுப் பத்தின் இரண்டாம் பத்தில் சான்றோர் என்பதற்குப் போர்வீரர் எனப் பொருள் உரைக்கிறார் அதன் பழைய உரையாசிரியர்.

      இதன் ஏழாம் பத்தில்

      “ எஃகொடு ஊணங்கடுப்ப மெய்சிதைந்து
      சாந்தொழில் மறைந்த சான்றோர் பெருமகன்“

      என்னும் இடத்தில், தன் உடம்பில் பட்ட புண்களைச் சாந்தினைப் பூசி மறைத்த வீரனின் மகனிவன் என்று பொருளுரைக்கப்படுகிறது.

      பழந்தமிழில் சான்றோன் என்பவன் வீரன் எனப்பட்டான் என்பதற்கு இன்னும் சான்று காட்டமுடியும். சான்றோன் என்ற சொல்லே மற்றவர்க்குச் சான்றாய் வாழ்ந்தவன் என்ற பொருளில் இருந்து தோன்றியதாய் இருக்க வேண்டும். சங்க காலம் என்று சொல்லப்படுகின்ற வீர ஊழியின் போது பிறருக்குச் சான்றாய் வாழ்ந்திருப்பவன், கற்றவன் என்பததைக் காட்டிலும், களத்துப் பட்டவன் என்றலே பொருத்தமாக அமையும்.

      அடுத்து,

      “ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
      சான்றோன் எனகேட்ட தாய்“

      என்ற குறள்,

      இங்குப் புலவர்களால் பயில வழங்கும் பரிமேலழகர் உரையில் சான்றோன் என்பதற்குக் ‘கல்வி கேள்விகளால் நிறைந்த அறிவுடையவன்’ என்றே பொருள்கூறப்படுகிறது.

      ஓர் இலக்கியத்தை அதன் உரையைப் பார்க்கும்போது அது எழுந்த காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்னும் கருத்து இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
      ஏறக்குறைய பரிமேலழகரின் காலம் வீரயுக காலத்திற்கு மிகப்பிற்பட்டகாலம். வீரம் மதிக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து கல்வி கேள்வி அடைதலே பெருமை எனப்பட்ட காலம், அதிலும் இன்னார்க்கு இன்னது என்ற வருணாசிர தர்மமும், பெண்ணடிமைத்தனமும் காலூன்றி வலுவடைந்த காலம்.

      இக்குறள் இடம் பெற்ற அதிகாரம் “மக்கட்பேறு“ என்று பரிமேலழகருக்கு முன் வாழ்ந்த உரையாசிரியர்களால் எடுத்தாளப்பட்ட தலைப்பைப் பரிமேலகழர் , “புதல்வரைப் பெறுதல்“ என்று மாற்றுவதில் இருந்தே அவர் வாழ்ந்த காலத்தில் ஊடுருவிய வைதிகக் கலப்பை நாம் அவதானிக்கலாம். மக்கள் என்றால் என்ன புதல்வர் என்றால் என்ன சொல்வேறுபாடுதானே என்றால், புதல்வன் என்ற வடசொல்லுக்குள் இருக்கும், “பிள்ளை இல்லாதவர்கள் விழக் கூடிய ‘புத்’ என்னும் நரகில் இருந்து பெற்றோரைக் காப்பதால் புதல்வன் ஆகிறான்“ என்கிற புராண அடிப்படையில் அமைந்த சொல்விளக்கத்தை மக்கள் என்னும் தமிழ்ச்சொல் தருவதில்லை. எனவேதான் அது மாற்றப்பட்டுள்ளது.

      இங்குக் கேட்ட தாய் என்பதற்கும், ( தன் மகன் கல்வி கேள்விகளில் சிறந்த அறிவாளி என்பதைப் ) பெண் இயல்பால் தானாக அறியாமையால் ‘கேட்ட தாய்’ என்று வள்ளுவர் கூறினார் என்று பரிமேலழகர் கூறுவதும் அவர் காலத்திய பெண்ணடிமைத்தனம் நிறைந்த சமூகத்தின் புலமைக்கூச்சலே!


      ...............தொடர்கிறது.

      நீக்கு
    10. இவ்வதிகாரத்தில் உள்ள எட்டுப் பாடல்களும் ஆண் பிள்ளைக்கும் பெண் பிள்ளைக்கும் பொதுவானவை. இந்தக் குறள் உட்படக் கடைசி இரு குறள்கள் ஆண் மகனுக்கு மட்டுமே சொல்லட்டப்பட்டவை.
      தன் மகன் அறிவாளி என்று பிறர் கூறித்தான் ஒருதாய் கேட்க வேண்டும் என்பதில்லை. அதைப் அறியும் வாய்ப்பு அவளுக்கு நேரடியாகவே பலதருணங்களில் வாய்க்கும்.
      ஆனால், தன் மகன் வீரன் என்று பார்த்தறியும் வாய்ப்பு அவளுக்குக் கிட்டுவதில்லை.
      ஏனென்றால் போர் நடைபெறும்போது பெண்கள் அங்கு அனுமதிக்கப்பட்டதில்லை என்பது பண்டைப்போர் ஒழுங்கு.
      எனவே அவன் போர்க்களத்தில் ஆற்றிய பெருந்திறத்தைப் பிறர் கூறக் கேட்க மட்டுமே அவளால் முடியும்.
      ‘தன் மகனை ஈன்ற பொழுதைவிட எப்போது பெரிதுவப்பாள்?’ என்பதற்குப் பூங்கண் உத்திரையர் பாடிய.
      “ மீன் உண் கொக்கின் தூவி அன்ன
      வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
      களிறு எறிந்து பட்டனன்' என்னும் உவகை
      ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்
      நோன் கழை துயல்வரும் வெதிரத்து
      வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே “ (277)
      மற்றும்,
      காக்கைப்பாடினி நச்செள்ளையின் மிகப் பிரபலமான,
      “ நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள்,
      முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
      படை அழிந்து, மாறினன்' என்று பலர் கூற,
      'மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்ட என்
      முலை அறுத்திடுவென், யான்' எனச் சினைஇ,
      கொண்ட வாளொடு படு பிணம் பெயரா,
      செங்களம் துழவுவோள், சிதைந்து வேறு ஆகிய
      படு மகன் கிடக்கை காணூஉ,
      ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே! ”(278)
      என்னும் இரண்டு புறநானூற்றுப் பாடல்களையும் சான்றுகாட்டுகிறேன். இவ்விரு இடங்களிலும் தாய், தன் மகன் அறிவாளி என்பதைக் கேட்டன்று; வீரன் என்றே ஈன்ற பொழுதில் பெரிதும் மகிழ்கிறாள்.
      ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் இடமாக நானறிந்தவரை மகன் வீரமரணம் அடைந்தான் எனக் கேட்பதுதான் சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கால ஆய்வில், புறநானூறு திருக்குறளுக்கு முற்பட்டது என்பது தெளிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னோர் மொழி பொருளை பொன்னே போல் போற்றுவது என்பது நூல் யாக்கும் தமிழ் உத்திகளில் ஒன்று. எனவே புறநானூறில் சொல்லப்படும் பொருள் கொண்டு திருக்குறளை அணுகுதல் என்வரை சரியெனப்பட்டது,
      எனவே மீண்டும்,
      “சான்றோன் என்றால் அறிவாளி என்பதே சரி நம் விருப்பத்துக்கும் இடத்துக்கும் ஏதுவாகப்பொருள் படுத்துவது சரி அல்ல“ என்ற உங்களின் கருத்தின் பிற்பாதியை ஏற்று முற்பாதியை ஏற்க இயலாமல் இருக்கிறேன் . இவ்விடங்களில் தாங்கள் சான்றோன் என்பதற்கு அறிவாளி என்பதே சரியான பொருள் என்று சொல்வதற்கான சான்றுகள் இருப்பின் அறியத்தருக. அறிந்திட ஆவலாய் இருக்கிறேன்.“““““““““““““““““““““


      நன்றி.

      நீக்கு
  3. அருமை மைதிலி. அழகோ அழகு! உன் எழுத்துப் பாணியில் பெரியாரின் பெருமைகளைப் படிக்கப் படிக்கக் கண்கள் பனித்தன. என் பதிவை (உன் பதிவுக்கு முன்னால் எழுதியதை) மீண்டும் திருத்தி உன் பதிவு பற்றியும் எழுதிவிட்டேன். இப்போதுதான் எனக்கு ரெட்டை நிம்மதி. பெங்களுர்த் தங்கை கிரேசின் பதிவில் விஜூவை இழுத்துவிட்டேன் என்று புதுக்கோட்டைத் தங்கையின் பதிவில் அவர் என்னை இழுத்திருக்கிறார். பெரும்பாலும் நீ சொன்னதுதான் பதில். இருந்தாலும் இரு நானும் வர்ரேன்...வாழ்த்துகள் டா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைத்தள உறவுகளின் அன்பும் நட்பும் தெரிகிறது , இல்லையா அண்ணா? மகிழ்ச்சி! :)

      நீக்கு
    2. ஆம் தங்கையே! நீயும், மைதிலியும், நண்பர் விஜூவும் ஆங்கிலத்தையே --அல்லது ஆங்கில வழியில்-- படித்தும், இந்தளவுக்குத் தமிழ்மீது ஆர்வம் காட்டுவது எனக்குப் பெரிய மகிழ்வைத் தருகிறது. (என்போலும் தமிழாசிரியர்களே கடனுக்குப் படித்திருக்கும்போது) அதனால்தான் இப்படி... நன்றிம்மா உனக்கும் இந்தப் பதிவின்வழி நம்மை எழுத வைத்த தங்கை மைதிலிக்கும் மட்டுமல்ல, நண்பர் விஜூவுக்கும் என் வேண்டுகோள் தமிழ்க்கடலின் ஆழ-அகலத்தை உலகிற்குப் புரியவைக்க உங்கள் தமிழார்வம் உதவ வேண்டும். என்பதே!

      நீக்கு
    3. அண்ணா!
      தாங்கள் வழிகாட்டியாக இருக்க எங்களுக்கு என்ன கவலை!! வாருங்கள் அண்ணா சேர்ந்தே பயணிப்போம்!

      நீக்கு
  4. தமிழன் இருக்குவரை பெரியாரின் பெயர் நிலைத்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான ஆக்கமும் படத் தேர்வும் அருமை ! வாழ்த்துக்கள் தோழி !

    பதிலளிநீக்கு
  6. பெரியார் பிறந்தநாளில் பெரியார் பற்றிய சிந்தனைக் கட்டுரை. நன்றி! வாழ்த்துக்கள்!
    Tha.ma.3

    பதிலளிநீக்கு
  7. பெரியாரைப் பற்றி நான் பதிவுலகில் தான் அதிகம் தெரிந்து கொள்கிறேன். இன்று தங்களின் இந்த பதிவின் மூலம் அவரைப் பற்றி மேலும் ஒரு செய்தியை தெரிந்து கொள்ள முடிந்தது.

    கடைசி வரிகள் - அற்புதம்.
    வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  8. /புதைத்து விட்டு, வழிபடும் மரபினர் நாம்
    அதனால்தான் கொள்கைகளை புதைத்துவிட்டு
    வகுத்தவர்களை வழிபடுகிறோம் !!//
    அருமையான குறும்பா .இன்றைய நிலையை இதைவிட சிறப்பாக சொல்லமுடியாது.
    பெரியாரின் சாதனை அளவிடற்கரியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா!
      நெடு நாளுக்குப்பின் வந்திருகிறீர்கள்!!! நலம் தானே அண்ணா!
      அருமையான குறும்பா .இன்றைய நிலையை இதைவிட சிறப்பாக சொல்லமுடியாது.** நன்றி அண்ணா!

      நீக்கு
  9. இனிய வணக்கம் சகோதரி...
    சரியான நேரத்தில் பகுத்தறிவு அண்ணல் பற்றிய பதிவு.
    இந்து மத மூடநம்பிக்கைகள் எதிர்ப்பு... கடவுள் மறுப்பு...
    இவைகளையும் தாண்டி அவர் செய்த பணிகள் ஏராளம்...
    பெண்களின் கையில் இருக்கும் கரண்டியைப் பிடுங்கி
    புத்தகத்தைக் கொடுங்கள்...
    நாளைய நாடு முன்னேற்றம் பெரும் என முழங்கியவர்...
    எக்ஸ்ட்ரா பிட்டிங் போல ஜாதியை சுமப்பதை
    நமக்கெல்லாம் தவிர்த்துத் தந்தவர்..
    அருமையான ஆக்கம் சகோதரி...

    பதிலளிநீக்கு

  10. புதைத்து விட்டு, வழிபடும் மரபினர் நாம்
    அதனால்தான் கொள்கைகளை புதைத்துவிட்டு
    வகுத்தவர்களை வழிபடுகிறோம் !!

    குறும்பா மிக மிக அருமை! அதிலேயே நச் சென்று சொல்லிவிட்டீர்கள் சகோதரி! பெரியார் இல்லையெனில் இன்றைய ஓரளவேனும் சாதி பாரா தமிழகம் இருந்திருக்காது....அவரது பிறந்த நாளுக்குத் தங்கள் பதிவு ஒரு மைல் கல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியார் இல்லையெனில் இன்றைய ஓரளவேனும் சாதி பாரா தமிழகம் இருந்திருக்காது....உண்மை தான் சகாஸ்!
      அவரது பிறந்த நாளுக்குத் தங்கள் பதிவு ஒரு மைல் கல்.** பாண்டியன் சகோவிற்கு சொன்னதையே சொல்கிறேன் சகாஸ் !

      நீக்கு
  11. //அண்ணா அண்ணாவாக மட்டும், சகாயம் (ஐ.ஏ.எஸ்) சகாயமாக மட்டுமே, மைதிலி மைதிலியாக மட்டும் இருப்பது எவ்வளவு ஆறுதல்!! எவ்வளவு பெருமை!! எவ்வளவு மகிழ்ச்சி!!! எனவே தந்தை போற்றுதும்!!!!// உண்மை டியர். ஆனால் உங்களுக்கு சர்நேம் இல்லையா என்று கேட்பார்கள் பாருங்கள்....இந்த விசயத்தில் தமிழர் தான் (சிலர் இன்னும் விடவில்லை என்றாலும்) முன்னோடியாய் இருக்கிறார்கள் என்று சொல்லலாம்..
    வாழ்க பெரியார்!

    பதிலளிநீக்கு
  12. "" feminist என்று சொல்லவதை விட அவரை humanist என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும்.""

    அருமையாகச் சொன்னீர்கள் சகோ.

    பெரியாரைப்பற்றி பேசுவதும் எழுதுவதும் தவிர இந்த திராவிடக்கட்சிகள் வேறு என்ன செய்திருக்கின்றன அவருக்காக.நல்ல பதிவு.


    பெரியார் என்றதும் எல்லோர் நினைவுக்கும் வருவது கடவுள் மறுப்புதான் என்பதும் மாற வேண்டும். அவரிப் போல பெண்ணியம் பேசியவர்கள் குறைவானவர்களே. ஆனால் நம் சமூகத்திற்கு இன்னும் சில பெரியார்கள் தேவைப்படுகிறார்களே என்ன செய்வது...???/

    பதிவு சூப்பர் சகோ..

    பதிலளிநீக்கு
  13. mythily: I am a BIG FAN of "thanthai periyaar". So, I am very happy to see you could appreciate him for what he was and what he did for us! These days, many people try to frame him as a "villain" as they lack open mind! He was a REAL HERO!

    பதிலளிநீக்கு
  14. அன்புள்ள மகிழ்நிறை,
    வணக்கம்.
    பெரியாரின் ‘ தந்தை போற்றறுதும்!’ பெரியாரைப் பற்றி எழுதியிருப்பது- போற்றியிருப்பது... அருமை! அவரை‘ humanist| சொல்லி இருப்பதும் பெருமை.

    ’அவன் சொன்னான், இவன் சொன்னான்ன நம்பாதே! உனக்கு எது சரின்னு படுதோ அதன் படி யோசி! ! நட! - என்று பெரியாரின் எண்ணப்படி யோசிக்க வைத்த உங்கள் படைப்பு அருமை.

    தங்கள் படைப்பின் நின்று ...எது சரியென்று பெரியாரின் சிந்தனையின் படி யோசித்த...யோசிக்க வைத்த சங்க இலக்கியங்களிலிருந்து - ஊமைகனவுகளின் உரத்த சிந்தனையும், வளரும் கவிதைகளின் வளமிகுந்த மேற்கோள்களும் நமக்கு கிடைத்தன என்பதில் பெருமிதம் கொள்வோம்.
    அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும்.

    நன்றி நம்மவர்கள் அனைவருக்கும்.
    -மாறாத அன்புடன்,

    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    பதிலளிநீக்கு
  15. பகுத்து அறிந்தெழுதிய அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள் தோழி.

    பதிலளிநீக்கு
  16. மூட நம்பிக்கைகளை வேரறுக்கச் சொன்ன பெரியாரைப் பற்றி மிகச் சிறப்பான பகிர்வு சகோதரி...

    பதிலளிநீக்கு
  17. உண்மையில் பெரியாரின் சிந்தனைகள் கேட்ட பின்தான் யார் சொன்னார் எவர் சொன்னார் என்னும் சொக்ரட்டீஸ் தத்தோத்தையே நான் உணர்ந்தேன். பெரியார் பற்றி உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும் அவர் தூய சிந்தனை. உங்கள் மதிவு மனதுக்கு மகிழ்வைத் தந்தது. உங்கள் வலையின் பெயர் போல். தொடர்வேன்.....
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. பெரியார் போற்றுவோம்
    பெரியார் என்று ஒருவர் இல்லையேல் இன்று நாம் ஏது

    பதிலளிநீக்கு
  19. அன்புள்ள சகோதரி திருமதி.மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களுக்கு,
    வணக்கம்.

    திரு.அண்ணா ரவி அவர்கள் எனக்கு நெருங்கிய நண்பர். நீங்கள் மணப்பாறை அய்யாவைத்தான் குறிப்பிடுகிறீர்களா? தங்களுக்கு எந்த ஊர் என்பது எனக்குத் தெரியாது அல்லவா? இவராகத்தான் இருக்கும் என்ற அய்யப்பாட்டில்தான் கேட்டேன். தாங்கள் கருத்துரை கண்டபிறகுதான் அவரிடம் பேசினேன். அப்பொழுது விவரங்கள் சொன்னார். நீங்கள் அவரைப்பற்றி எழுதி உள்ளதையும் கூறினேன். நீங்கள் மறைந்த எம்.எல்.ஏ. திருமிகு.சோலைராஜ் அவர்களின் புதல்வி என்றார்.. மிகுந்த மகிழ்ச்சி. தங்களின் அப்பா எளிமையானவர், (எம்.எல்.ஏ. வாக இருந்த பொழுது வாடகை சைக்களை எடுத்துக் கொண்டு எடத்தெரு வருவதை பார்த்திருக்கிறேன்) நிறைய நமது ஊர் மக்களுக்கு வேலை வாங்கிக்கொடுத்து வாழவைத்த பெருமை உண்டு.
    அண்ணன் மணவை பொன் மாணிக்கம் அப்பாவின் நண்பர் என்பது தங்களுக்கு தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். அண்ணன் மாணிக்கம் எனக்கு நெருங்கிய நண்பர்.
    நான் மணப்பாறைக்கு அருகிலுள்ள பொத்தமேட்டுப்பட்டி நேருசிலைக்கருகில் வசித்து வருகிறேன். திருச்சி, ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருகின்றேன்.
    தாங்கள் மணவைக்காரர் என்பதால் மகிழ்ச்சி.

    எனக்கு blogger பற்றி அதிகமாக தெரியாது. Setting -சென்றால்
    Word Verification தேடிப் பார்த்தேன், தென்படவில்லை.

    -மாறாத அன்புடன்,

    மணவை ஜேம்ஸ்.

    பதிலளிநீக்கு
  20. //புதைத்து விட்டு, வழிபடும் மரபினர் நாம்
    அதனால்தான் கொள்கைகளை புதைத்துவிட்டு
    வகுத்தவர்களை வழிபடுகிறோம்!!// - தூள்!!

    பெரியார் பற்றிய உங்களுடைய இந்தப் பதிவு இன்றைய தமிழ் உலகிற்குத் தேவையான ஒன்று! "இன்றைய அரசியலாளர்களை விட, இளைஞர்களிடம் பெரியாரைப் பற்றிச் சரியான புரிதல் இருப்பதாகத் தோன்றுகிறது" என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் இதை முற்றிலும் மறுக்கிறேன். சமூக வலைத்தளங்களில் இன்று 'பெரியார்' எனும் சொல்லைக் கூட வெளியிட முடிவதில்லை. உடனே கூட்டம் கூட்டமாக வந்து கீழ்த்தரமான வார்த்தைகளால் அவரை விமரிசிக்கிறார்கள். அவர் தமிழர் இல்லை என்கிறார்கள், தமிழையும் தமிழர்களையும் வெறுத்தார் என்கிறார்கள், தமிழர்களை அழிப்பதற்காகத்தான் அவர் திராவிடம் எனும் கோட்பாட்டையே உருவாக்கினார் என்கிறார்கள், இன்னும் என்னென்னவோ...

    கடவுளையே விமர்சித்தவர் பெரியார். அவரும் விமரிசனத்துக்கு உட்பட்டவரே என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், பெரியார் பற்றிய தமிழ் உலகின் இன்றைய விமரிசனங்கள் உண்மையில் விமரிசனங்களாக இல்லை; தவறான தகவல்களின் அடிப்படையில் எழுந்த தவறான கருத்தாக்கத்தின் விளைவுகளே அவை. எனவேதான், இன்றைய சூழ்நிலையில் பெரியார் பற்றிய இந்தப் பதிவு தேவையானது என்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனங்கள் தர்க்கரீதியாக இருக்கும் போது வரவேற்கவேண்டும் தான், ஆனால் அநாகரீகமான விமர்சனங்களை நாம் புறந்தள்ளதான் வேண்டும் சகோ! கணினி பழுது நீங்கியவுடன் வாக்கு தந்தபடி வந்தமைக்கு மிக்க நன்றி சகோ:))

      நீக்கு
    2. அப்படி நாகரிகமின்றி விமரிசிப்பவர்கள் சிலராக இருந்தால் புறந்தள்ளலாம். ஆனால், நாட்டில் பெரும்பான்மையானோர் இன்று பெரியாரைப் பற்றித் தவறாகத்தான் புரிந்து கொண்டுள்ளனர்; விமரிசிக்கின்றனர். நாகரிகமோ இல்லையோ, ஆக மொத்தத்தில், அரைகுறையாகத் தெரிந்து கொண்டு முன்வைக்கப்படுபவை என்பதால் அவற்றைப் படிக்கும்பொழுதெல்லாம் சீற்றம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

      நீக்கு
    3. //கணினி பழுது நீங்கியவுடன் வாக்கு தந்தபடி வந்தமைக்கு மிக்க நன்றி சகோ// - :-))

      நீக்கு
  21. இன்று மாலைதான் என் கணினிக் கோளாறு சரியானது. நான் கூறியபடியே, இதோ உடனே உங்கள் தளத்துக்கு வந்துவிட்டேன். மகிழ்ச்சிதானே?!

    என்றும் அன்புடன் உங்கள்:
    ~~இ.பு.ஞானப்பிரகாசன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு ஆர்வத்தில் கேட்கிறேன் சகோ. 126 பதிவுகளில் இந்த பதிவை எப்படி கண்டுபிடித்தீர்கள்!!! ஒரு வேளை பல பதிவுகள் கடந்து இதுதான் கொஞ்சம் நல்ல இருந்ததா??

      நீக்கு
    2. ஐயோ! அப்படியெல்லாம் இல்லை அம்மணி! தொடக்கத்திலேயே இருப்பதைப் படிப்பதை விட, நல்ல தலைப்பாகத் தேர்ந்தெடுத்துப் படிக்க விரும்பினேன். முகப்புப் பக்கத்தில் உங்கள் கவிதை படித்தபொழுது அதன் முடிவில், லிங்க்வித்-இன்னின் பரிந்துரையில் இந்தத் தலைப்பைப் பார்த்தேன். நீங்கள் பெரியாரியலாளர் என்பதை ஏற்கெனவே அறிந்திருந்ததால், பெரியார் பற்றி நீங்கள் என்ன எழுதியிருப்பீர்கள் எனப் பார்க்கும் ஆர்வத்தில் இதைப் படித்தேன், வேறொன்றுமில்லை.

      நீக்கு
  22. வணக்கம்
    இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ
    http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_18.html?showComment=1426634644356#c423202049139672746

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  23. மனநிலை பாதிக்க பட்ட ஒரு பெரியவரை தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்வதென்பது மிகப் பெரிய விஷயம்...௨ங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்....
    ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு கஷ்டமே இருக்காது.
    - "தந்தை பெரியாரின் அறிவுரை 100' என்ற நூலிலிருந்து.
    மரியாதைக்குறிய அடிவருடிகளே! பெரியாரின் புகழ் பாடுவதற்கு முன், இந்த அறிவுரையை பின்பற்றும் பெரியாரின் அடிவருடிகளா நீங்கள்? என்பதை தெளிவுபடுத்தவும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "என் தலையை அடகு வைத்தாவது உன் கடனைத் திருப்பித் தருவேன்" என்று சொன்னதற்கு, எந்த அடகுக்கடையில் மனிதத்தலையை வாங்கிக் கொள்வார்கள் என்று கேட்டானாம் அறிவாளி ஒருவன். நீயும் அப்படிப்பட்ட ஒரு மேதாவிதான் போல. ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்கிறார்களே அதற்கு ஏட்டிக்குப் போட்டியாகப் பெண்களும் நடந்து கொள்ளத் தொடங்கினால் ஆண்களால் தாங்க முடியுமா என்று சிந்திக்கத் தூண்டுவதுதான் பெரியாரின் மேற்படி கருத்துடைய பொருள். அதைப் புரிந்து கொள்ளாமல் பெரியாரைப் போற்றும் அனைவரையும் இழிவுபடுத்த வேண்டும் எனும் ஒரே நோக்கில் கருத்துரைக்கும் ஈனப்பிறவியே, முதலில் படிக்கிற வார்த்தைகளுக்குப் பொருள் புரிந்து படிக்கக் கற்றுக் கொள்! அதன் பிறகு அடுத்தவர்களைக் கேள்வி கேட்கவும் கருத்துரைக்கவும் கிளம்பு! புரிகிறதா?

      நீக்கு
  24. சரி விடு மைதிலி, மனநிலை “பாதிக்கப்பட்ட” ஒரு பெரியவர் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றுதான் அந்தப் பெரியவரே சொல்லிவி்ட்டாரே! ஆமா..நான்தான் கேக்குறேன், “ஆண்கள் இரண்டு வைப்பாட்டி வைத்துக்கொண்டால் பெண்கள் மூன்று ஆசைநாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும்” என்று பெரியார் சரியாகத்தானே சொல்கிறார்? இதில் என்ன கருத்து வேறுபாடு வந்தது. பெண்ணின் பார்வையிலிருந்து வெளியான ஓர்எச்சரிக்கைக்கே இந்தக் குதி குதிப்பவர்கள், அப்படி வைத்திருக்கும் ஆண்களை இதுவரை என்னதான் செய்தார்களாம் ?

    பதிலளிநீக்கு