மனம் மயக்கும் ஏழிலைப்பாலை, மின்னி ஒளிரும் கார்த்திகை நட்சத்திரம், அசுமனா, ஆலா என நிகழ்வு உலகிற்கும், பறம்புலகிற்கும் இடையே சோமப்பூண்டு அருந்திய தாக்கத்தில் வாழ்ந்த, வாசித்த அந்த நாட்களின் நீட்சி வினையாய் இன்றும் பல நிகழ்வுகளின் வேள்பாரியை பொருத்திப் பார்க்கிறது மனம்.
அமெரிக்கா ஜார்ஜ் ஃபிளாயிட் என்ற கருப்பு நெருப்பால் கனன்று கொண்டிருக்கும் இந்நேரம் கொற்றவைத்திருவிழாவை வாசித்த அந்த இரவு நினைவுக்கு வருகிறது. அன்றெல்லாம் சீஃப் சியாட்டல் வேள்பாரியை சந்தித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? அவர் இனத்துக்கு எந்த கனியை தேவ வாக்கு விலங்கு எடுத்துக் கொடுத்திருக்கும் என்றெல்லாம் எண்ணங்கள் அலைக்கழித்தபடி இருந்தன.
யாரிந்த சீஃப் சியாட்டல்? மூவேந்தர்களால் சிதைந்து போன எண்ணற்ற இனக்குழுக்கள் பற்றி நாம் வாசித்தோம் அல்லவா, அதே போல அமெரிக்கா எனும் பெரும் கண்டத்தில் அதன் ஆதிகுடிகள் பலவற்றையும் அடித்து நொறுக்கி அடிமைப்படுத்தியது அதிகார பலம் படைத்த வெள்ளை இனம். அவர்கள் நிலத்தில் அவர்களை அடிமையாய் போன அவலம்.
சியாட்டல் தந்தை வழி ஸ்க்வாமிஸ் இனம், தாய் டுவாமிஸ் இனம். பாரியின் மூதாய் கொடிக்குலமும், வேளிர் குலமும் போல. வெள்ளை இனத்தவர்கள் கறுப்பின பழங்குடிகளை நசுக்கி முன்னேறிக் கொண்டிருந்த கால கட்டத்தில் சியாட்டல் தனது வடகிழக்கு நிலப்பகுதியை ஒப்படைத்துவிடுமாறு மிரட்டிய அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் பியர்ஸ்க்கு எழுதிய திறந்த மடல் கொறறவைக்கூத்தில் திரையருக்குப்பின் வரும் இரவில் பாடத் தகுதியானது.
அந்த கடிதத்துக்கு இப்படித்தலைப்கிட்டிருப்பார் சியாட்டல் “ வானத்தை எப்படி வாங்கவோ, விற்கவோ முடியும்?” அந்த கடிதம் இப்படி நீளும். எங்களுக்கு பூமியை விற்பதும் அதுபோல விந்தையாகத் தான் இருக்கிறது. பூமியால் நாம் வாழ்கிறோம், பசியாறுகிறோம் அதற்கு நாம் தானே கடமைப்பட்டிருக்கிறோம்! அது எப்படி நம் சொத்தாகும்? இரைந்தோடும் இந்த நதியில் என் தாத்தனின் குரல் கேட்கிறது. உயர்ந்து நிற்கும் இம்மலைகளில் என் தந்தையின் உரு காட்சிகொள்கிறது. இம்மலர்கள் என் சகோதர, சகோதரிகள்.
நீங்கள் விரட்டினீர்கள் நாங்கள் ஓடினோம். ஒழிந்தோம். இனி ஓட இடமில்லை . கடல் வந்துவிட்டது. இனி எங்கள் நிலங்களை உங்களிடம் ஒப்படைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்த மண்ணை மதிக்க எம் குழந்தைகளுக்கு கற்றுத்தந்திருக்கிறோம். உங்கள் குழந்தைகளையும் எம் நிலத்தை மதிக்கக் கற்றுக்கொடுங்கள். எம் நிலத்தில் எச்சில் துப்ப அனுமதிக்காதீர்கள் என அவரது கடைசி ஆசையிலும் மண்ணள்ளிப்போட்டு , சொந்த மண்ணில் கழுத்து நெறிபட்டு இறந்து போன ஜியார்ஜ் ஃபிளாட் இன்னொரு காலம்பன் தானே! தன் நகர் ஒன்றுக்கு சியாடல் என்ற பெயர் வைத்ததோடு முடித்துவிட்டது அமேரிக்கா.
உலகெங்கும் ஈழம் தொடங்கி இப்படித்தான் ஆதிகுடிகள் மேட்டுக்குடிகளால் நசுக்கப்படுகிறார்கள். ஆள்வோரும் இப்படித்தான் புத்தனை வணங்கிவிட்டு போதிமரங்களை தகர்க்கும் , பைபிளோடு காட்சி தரும் ட்ரம்பாய் இருக்கிறார்கள். அமேரிக்காவில் தான் இப்படி என்றால் பறம்பிற்கு அருகே இருந்த சேரநாட்டில் மற்றொரு அதிர்ச்சி செய்தி. அன்னாசிக்குள் குண்டை வைத்து கர்ப்பிணி யானையை கொன்றிருக்கிறது ஒரு மனிதமிருகம் என சொல்லமாட்டேன். கர்ப்பிணி மானைக் கொல்லாத புலி பற்றிய செய்தியை நான் வாசித்திருக்கிறேன். எது அஃறிணை என ஐயம் கிளை விடுகிறது.
வேள்பாரியில் மூன்று யானைகள் முக்கியப்பங்காற்றுகின்றன. மூலிகைக்கு வசப்பட்டு பறம்பு மகள் பின் சென்றது ஒரு யானை, பாண்டியநாட்டில் கொல்லப்பட்டு தங்கள் சுலநலனுக்காக எந்த கொலைபாதகத்துக்கும் அஞ்சாத சர்வாதிகாரத்தை படம் பிடிக்கிறது மற்றொரு யானை. களம் காணாமலே நெஞ்சை வெல்கிறது கடைசியாக பறம்பின் யானை. இப்படியாக வேள்பாரி நாவல் ஒரு ஊஞ்சலென என் நிகழ்கால உலகிற்கும், பாரியின் பறம்புக்கும் இடையே எனை ஆட்டிவிளையாடுகிறது.
பி,கு: பறம்பு வாசகர் வட்டம் நடத்தி கட்டுரைப்போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற கட்டுரை இது.