வெள்ளி, 25 செப்டம்பர், 2020

பாடும் நிலா



இரவையே தாலாட்டும் அந்த நிலவு

இதயம் மலர்த்தும்
அந்த நிலவு

இணை பிரிந்த இரவுக்கு மருந்து அந்த நிலவு

தொலைதூர பயணத்தில் துணைஅந்த நிலவு


 
இசையால் உள்ளம் கரைக்கும்
அணையாவிளக்கு அந்த நிலவு!

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

புதன், 29 ஜூலை, 2020

காலத்தின் ஊஞ்சல்- வேள்பாரி

மனம் மயக்கும் ஏழிலைப்பாலை, மின்னி ஒளிரும் கார்த்திகை நட்சத்திரம், அசுமனா, ஆலா என நிகழ்வு உலகிற்கும், பறம்புலகிற்கும் இடையே சோமப்பூண்டு அருந்திய தாக்கத்தில் வாழ்ந்த, வாசித்த அந்த நாட்களின் நீட்சி வினையாய் இன்றும் பல நிகழ்வுகளின் வேள்பாரியை பொருத்திப் பார்க்கிறது மனம்.
அமெரிக்கா ஜார்ஜ் ஃபிளாயிட் என்ற கருப்பு நெருப்பால்  கனன்று கொண்டிருக்கும் இந்நேரம் கொற்றவைத்திருவிழாவை  வாசித்த அந்த இரவு நினைவுக்கு வருகிறது. அன்றெல்லாம் சீஃப் சியாட்டல் வேள்பாரியை சந்தித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? அவர் இனத்துக்கு எந்த கனியை தேவ வாக்கு விலங்கு எடுத்துக் கொடுத்திருக்கும் என்றெல்லாம் எண்ணங்கள் அலைக்கழித்தபடி இருந்தன.
யாரிந்த சீஃப் சியாட்டல்? மூவேந்தர்களால் சிதைந்து போன எண்ணற்ற இனக்குழுக்கள் பற்றி நாம் வாசித்தோம் அல்லவா, அதே போல அமெரிக்கா எனும் பெரும் கண்டத்தில் அதன் ஆதிகுடிகள் பலவற்றையும் அடித்து நொறுக்கி அடிமைப்படுத்தியது அதிகார பலம் படைத்த வெள்ளை இனம். அவர்கள் நிலத்தில் அவர்களை அடிமையாய் போன அவலம். 
சியாட்டல் தந்தை வழி ஸ்க்வாமிஸ் இனம், தாய் டுவாமிஸ் இனம். பாரியின் மூதாய்  கொடிக்குலமும்,  வேளிர் குலமும் போல. வெள்ளை இனத்தவர்கள் கறுப்பின பழங்குடிகளை நசுக்கி முன்னேறிக் கொண்டிருந்த கால கட்டத்தில் சியாட்டல் தனது வடகிழக்கு நிலப்பகுதியை ஒப்படைத்துவிடுமாறு மிரட்டிய அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் பியர்ஸ்க்கு எழுதிய திறந்த மடல் கொறறவைக்கூத்தில் திரையருக்குப்பின் வரும் இரவில் பாடத் தகுதியானது.
அந்த கடிதத்துக்கு இப்படித்தலைப்கிட்டிருப்பார் சியாட்டல் “ வானத்தை எப்படி வாங்கவோ, விற்கவோ முடியும்?” அந்த கடிதம் இப்படி நீளும். எங்களுக்கு பூமியை விற்பதும் அதுபோல விந்தையாகத் தான் இருக்கிறது. பூமியால் நாம் வாழ்கிறோம், பசியாறுகிறோம் அதற்கு நாம் தானே கடமைப்பட்டிருக்கிறோம்!  அது எப்படி நம் சொத்தாகும்? இரைந்தோடும் இந்த நதியில் என் தாத்தனின் குரல் கேட்கிறது. உயர்ந்து நிற்கும் இம்மலைகளில் என் தந்தையின் உரு காட்சிகொள்கிறது. இம்மலர்கள் என் சகோதர, சகோதரிகள். 
நீங்கள் விரட்டினீர்கள் நாங்கள் ஓடினோம். ஒழிந்தோம். இனி ஓட இடமில்லை . கடல் வந்துவிட்டது. இனி எங்கள் நிலங்களை உங்களிடம் ஒப்படைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்த மண்ணை மதிக்க எம் குழந்தைகளுக்கு கற்றுத்தந்திருக்கிறோம். உங்கள் குழந்தைகளையும் எம் நிலத்தை மதிக்கக் கற்றுக்கொடுங்கள். எம் நிலத்தில் எச்சில் துப்ப அனுமதிக்காதீர்கள் என அவரது கடைசி ஆசையிலும் மண்ணள்ளிப்போட்டு , சொந்த மண்ணில் கழுத்து நெறிபட்டு இறந்து போன ஜியார்ஜ் ஃபிளாட் இன்னொரு காலம்பன் தானே! தன் நகர் ஒன்றுக்கு சியாடல் என்ற பெயர் வைத்ததோடு முடித்துவிட்டது அமேரிக்கா. 
உலகெங்கும் ஈழம் தொடங்கி  இப்படித்தான் ஆதிகுடிகள் மேட்டுக்குடிகளால் நசுக்கப்படுகிறார்கள். ஆள்வோரும் இப்படித்தான் புத்தனை வணங்கிவிட்டு போதிமரங்களை தகர்க்கும் , பைபிளோடு காட்சி தரும் ட்ரம்பாய் இருக்கிறார்கள். அமேரிக்காவில் தான் இப்படி என்றால் பறம்பிற்கு அருகே இருந்த சேரநாட்டில் மற்றொரு அதிர்ச்சி செய்தி. அன்னாசிக்குள் குண்டை வைத்து கர்ப்பிணி யானையை கொன்றிருக்கிறது ஒரு மனிதமிருகம் என சொல்லமாட்டேன். கர்ப்பிணி மானைக் கொல்லாத புலி பற்றிய செய்தியை நான் வாசித்திருக்கிறேன். எது அஃறிணை என ஐயம் கிளை விடுகிறது.
வேள்பாரியில் மூன்று யானைகள் முக்கியப்பங்காற்றுகின்றன. மூலிகைக்கு வசப்பட்டு பறம்பு மகள் பின் சென்றது ஒரு யானை, பாண்டியநாட்டில் கொல்லப்பட்டு தங்கள் சுலநலனுக்காக எந்த கொலைபாதகத்துக்கும் அஞ்சாத சர்வாதிகாரத்தை படம் பிடிக்கிறது மற்றொரு யானை. களம் காணாமலே நெஞ்சை வெல்கிறது கடைசியாக பறம்பின் யானை. இப்படியாக வேள்பாரி நாவல் ஒரு ஊஞ்சலென என் நிகழ்கால உலகிற்கும், பாரியின் பறம்புக்கும் இடையே எனை ஆட்டிவிளையாடுகிறது.

பி,கு: பறம்பு வாசகர் வட்டம் நடத்தி கட்டுரைப்போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற கட்டுரை இது.

புதன், 24 ஜூன், 2020

கண்ணதாசன்- காலக்கணிதம்!

    ஒரு வார்த்தை அது யாரால் சொல்லப்பட்டது என்பதைப் பொருத்து  அர்த்தம் கொள்கிறது இல்லையா
    காலக்கணிதம் கவிதையை பதினோராம் வகுப்பில் நடத்தும் போது அது வரை நான் கடந்து வந்த அசை, சீர் பிரித்து நடத்தும் வழக்கமான 
    தமிழாசிரியர் போலன்றி, படைப்பாளியின் சூழல், கொள்கை என விளாவாரியாய் புதிய பக்கங்களைக் காட்டிய அண்ணா ரவி சார் வந்ததே ஒரு கவிதை தான்.
    அது மனப்பாடப்பகுதி என அறியுமுன்னே எனக்கு மனனமாகத்தொடங்கிய முதல் பாடம் காலக்கணிதம். அர்த்தமுள்ள இந்து மதத்தைப் படித்துவிட்டு இறைமறுப்பாளரானRavi Annaravi ரவி சாரிடம் கருத்து மோதுவேன். சற்றும் அலட்டாமல் வசந்தன் எழுதிய அர்த்தமற்ற இந்து மதம் வாசித்து விட்டாயா? என கேட்டுத் திகைக்க வைப்பார் அவர். என்ன மனுசன்டா இந்த கண்ணதாசன்? இவரை நம்பி இப்படி போருக்குக் கிளம்பினோமே என வெட்கிப்போன நாளில் அதற்கு "மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
    மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!" என நான்கே வரியில்  கண்ணதாசன் இதே பாடலில் விளக்கம் தருவார்.

    இதெல்லாம் ஒரு பிழைப்பா எனக் கேட்பீர்களா
    "கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
    உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;" என உங்களை மேலும் பதற வைப்பார்.

    "நானே தொடக்கம்; நானே முடிவு;
    நானுரப் பதுதான் நாட்டின் சட்டம்!" என அவர் அந்த கவிதையை முடிக்கையில் அந்த ஞானச் செருக்கு என்னை வியப்பின் உச்சியில் நிறுத்தியது. சரியாகச்சொல்வதென்றால் இந்த கவிதை ஒரு கதைவடிவெனில் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு பாடல் திரைக்கதை எனலாம். அந்த முழுப்பாடலையும் பின்னூட்டத்தில் தருகிறேன். விருப்பம் உள்ளோர் படித்துக்கொள்க! 
    உள்ளம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும்  என்ற வரிகள் இன்று வாசித்தாலும் கமழ்கிறதில்லை!

    நிறை கேட்பாள் "ஐந்து, எட்டு என்றெல்லாம் எப்படித்தான் அம்மா அந்த காலத்தில் இது போலச் சிறிய வீடுகளில் குழந்தைகள் இருந்தார்கள்? கண்ணதாசனிடம் கடன் வாங்கித் தான்  பதில் தருவேன் "மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம், வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்". எம்.எஸ்.வி மெட்டமைக்க கண்ணதாசன் காற்றின் தீராத பக்கங்களில் பிரமிளின் பறவையைப்போல் சிறகசைத்து இறகுதிர்த்துக்கொண்டேயிருக்கிறார். அந்த பாடல்கள் ஒரு வேளை P.B.ஸ்ரீநிவாஸால் பாடப்பட்டிருந்தால் இது கண்ணதாசன் பாஷையில் சொன்னால் சர்க்கரைப்பந்தலில் பொழிந்திட்ட தேன் மாரி.
    காலையில் நண்பர்Prakash Shankar இற்றை ஒன்றில்  அத்தியாவசிப்பணிஅநாவசியப்பணி என ஒரு ஆங்கிலப்பத்திரிக்கை ஐந்து பணிகளை முறையே பட்டியலிட்டதைப் பகிர்ந்து நாயமரே என்றிருந்தார். அதில் அநாவசியப்பணியில் முதலிடம் Artist. அதாவது கலைஞன்! கண்ணதாசனின் பிறந்த நாளில் இப்படியொரு செய்தியா என நொந்து வந்தது. வாழ்வின் விளிம்பு நிலை எப்படிக் கடந்தீர்கள் என்ற வினாவுக்கு, கைப்பற்றிக் கரையேற்றியதாக சொர்ணலதாவையோ, இளையராஜாவையோ, வடிவேலுவையோ காட்டுபவர்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன். என்வரையில் என் அம்மா தன் கடைசிக் காலங்களில் ஆஸ்துமாவால் அவதிப்பட்டு இரவெல்லாம் இருமிய படியிருப்பார். ரெயின் போ பண்பலையில் தேன்கிண்ணம் தொடங்கும். பதினோரு மணிக்கு உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது என சீர்காழி பாடத்தொடங்குகையில் நகைமுரணாய் பைய என் அம்மா தூங்கத்தொடங்குவார். இதோ மகிக்குக்கூட பிடித்துத்தான் இருக்கிறது கண்ணதாசனின் கடைசிப் பாடலான கண்ணே கலைமானே!

     உனக்கே உயிரானேன்... எந்நாளும் எனை நீ மறவாதே என்ற வரிகளை நான் பாடும் போதெல்லாம், 
    நெற்றியில் முத்தமிட்டு  அந்த பாடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறாள் மகி!  
    ஆம் கவியரசே நீங்கள் புவியில் புகழுடைத் தெய்வம் தான்!

    திங்கள், 8 ஜூன், 2020

    தேவையா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு?

    தேர்வு என்பது அந்த ஒரு ஆண்டில் மாணவர் என்ன கற்றார்? எவ்வளவு ஆழமாக கற்றிருக்கிறார்? ஆசிரியர் தன் கற்றல் விளைவுகளை (LEARNING OUTCOMES) எவ்வளவில் அடைந்திருக்கிறார் என்பதை அளவிடும் கருவி என ஆசிரியர்ப் பயிற்சியில் படித்துவிட்டு ரொம்ப கறாரான ஆபிசராக வேலைக்கு சேர்ந்த புதிதில் பல மாணவர்களை ஃபெயிலாக்கியிருக்கிறேன். "எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?" நூலைப்படிக்கும் வரை.

    அதன் பின் இந்த தேர்வு முறைகள், இதனை கையில் எடுத்து என்னால் மூன்று வருடம் தொடர்ந்து ஆறாவதில் பெயிலாக்கப்பட்ட அந்த மாணவன், இன்று கொத்தனாராக இருக்கும் அவர் என்னை கடக்கும் போதெல்லாம் வைக்கும் வணக்கம் என அந்த நூல் தந்த குற்ற உணர்வும், தரிசனமும் தான் ஆசிரியர் பணி கற்பித்தல் மட்டுமே சார்ந்ததன்று என செவுடில் அறைந்து ஆயிஷா நடராசன், மாடசாமி அய்யா, டோட்டோ சான் என சன்னல்களை திறந்து வைத்தது. கிடக்கட்டும்... எதுக்கு இப்போ அதெல்லாம்? சிம்பிள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை இந்த ஒரு ஆண்டு  ரத்து செய்யுங்கள் என்ற எனது பதிவைப்பார்த்துவிட்டு, படித்ததெல்லாம் மறந்துவிடாதா, இப்படி இழுத்தடிப்பதற்கு பதில் எழுதிட்டி தான் போகட்டுமே என்கிறார்கள் நட்புவட்டத்தில் சிலர். தேர்வு அத்தனை இன்றியமையாததில்லை என்பதற்கான விளக்கமாக தான் மேலே சொன்னது.
    இங்கு நோய் கிளைவிடத் தொடங்கியபோது தப்ளிக் மாநாட்டுக்கு சென்றுவந்தோர் என பீலா மேடம் தினமும் தன் புள்ளிவிபரத்தில் குறிப்பிட்டார்.  ஆனால் இன்று எங்கள் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பலர் குறிப்பிடத் தகுந்த அளவில் சென்னையில் இருந்து சொந்த ஊர் வந்தவர்கள். அதை ஏன் குறிப்பிடுவதில்லை. ஏன்னென்றால் தொற்று இப்படித்தான் பரவுகிறது என வெளிப்படையாக கூறிவிட்டு பத்தாம் வகுப்புத்தேர்வு நடத்த முடியாதே.
    ஒரு கிராமத்து உயர்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவர்கள் அதை சுற்றியிள்ள குறைந்தபட்சம் ஐந்து கிராமத்தில் இருந்து வருகிறார்கள். அரசு அனுப்பும் ஒரு வேன் இந்த ஐந்து கிராம மாணவர்களை அழைத்தவருகிறது என வைத்துக்கொள்வோம். அதில் ஒரு மாணவர் நல்ல ஆரோக்கியமானவர், ஆனால் கொரோனா கேரியர் என வைத்துக்கொள்வோம். அவர் வேனில் ஏறிவிடுவார். குறைந்தபட்சம் இருபதில் இருந்து நாற்பது பேரோடு பயணிப்பார். தேர்வறை வருவார். தெர்மல் ஸ்கேன் செய்யப்படுவார். பத்து பேர் உள்ள அறையில் தேர்வு எழுதுவார். அவர்கள் அவரோடு ஒரே பேருந்தில் பணியத்தவர்களாகவும் இருக்கலாம், அன்றியும் இருக்கலாம். மூன்றாம் பாடம் தேர்வெழுதும் போது அவருக்கு அறிகுறிகள் தெரியத் தொடங்கினால் மற்ற மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு?
    அந்த மாணவர் தன் பள்ளியையும், தன் ஆசிரியரையும் நம்பி மட்டுமே தேர்வெழுத வருகிறார். எல்லா மாணவர்களும் அப்படித்தான். ஏற்கனவே பதினோராம் வகுப்புப் பொதுத்தேர்வை எண்பதாயிரம் மாணவர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். அவர்கள் நிலை என்ன? இப்போது இவர்களில் பெரும்பாலானோர் புறக்கணித்தாலும் மீதி இருப்பவர்களுக்கு தேர்வு நடத்துவார்கள் எனில் புறக்கணித்தோரின் எதிர்காலம் என்ன? 
    ஒன்று மட்டும் புரிகிறது. கல்வி மனிதத்தையும், தெளிந்தாய்தலையும் வளர்க்க வேண்டும் இனிமேலாவது. இன்றேல் இப்படியான அறிவுஜீவிகளிடம் தான் நம் பிள்ளைகள் எதிர்காலம் ஊசலாடும்
    #Cancel_board_exams

    சனி, 6 ஜூன், 2020

    பொன் மகள் வந்தாள்-திரை அனுபவம்

    பாரதி கண்ட புதுமை பெண்!  அவரைத் தான் நம் சமூகம் உச்சி முகர்ந்து வாடி ராசாத்தி என சிவப்புக்கம்பளம்  வரவேற்கும் ஏதென்றால் நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையில் தயக்கம் எதும் இல்லை நமக்கு!


     நம் வேரடியை அசைத்துப் பார்ப்பது உண்மையில் பெரியார் கண்ட புதுமைப் பெண்கள் தான் இல்லையா! பின்னே எப்படி நடக்கணும், எப்படி பார்க்கணும் என்றெல்லாம் வகுப்பெடுக்காமல், இந்த கர்ப்பப்பை தான் உனக்கான தடை, வேண்டாம் னா தூக்கி எறி என்றெல்லாம் அவர் சொன்னால் நமக்கு பதறிடாது! 

    கோர்ட் சீனில் செருப்பை எறியும் காட்சியில் ஜோவின் எதிர்வினை பெரியாரின் நகல். இனி காட்சிக்கு காட்சி தீ பறக்கும், அனலடிக்கும் என்றெதிர் பார்த்தால், அந்த காட்சியில் இருந்த நிதானம் படம் முழுக்க பிரதானம். 

    டீக்கடைக்காரரையும், வாட்ச்மேனையும் தவிர ஸ்க்ரீன் தெரியும் தலை அனைத்தும் பெருந்தலை! ஆனால் கதாபாத்திரம் அவர்களுக்கு நியாயம் செய்ததா?  பார்த்திபனைத் தவிற பிற கதாபாத்திரங்களுக்கு இவ்வளவு ஸ்டார் காஸ்ட் இந்த திரைக்கதைக்கு தேவைப்படவில்லை. வினோதினி போல நல்ல துணை நடிகர்கள் படத்தை அடுத்த இடத்துக்கு கொண்டு போயிருப்பார்கள். இவர்களை டீசரில் பார்த்து ரசிகர் வேறு எதிர்பார்த்து ஏமாற வழிசெய்கிறது.  இந்த குறையை தவிர  திரைக்கதையில் குறையில்லை. 

    பல்வேறு வகையில் காதலையே சொல்லி கதறிவிட்ட தமிழ் சினிமா இது போலும் சமூகத்துக்குத் தேவையான மையக்கருத்தையும் விதவிதமாகத்தான் எடுக்கட்டுமே! இந்த படத்திலும் ஒரு காதல் இருக்கிறது. அது காட்டப்படவில்லை.  இரு நிகழ்வாக சொல்லிகடக்கப்டுகிறது.


    படத்தை இன்னும் நெருப்பாய் எதிர்பார்ப்பவர்களுக்கு ஒரு செய்தி அவரவர்க்கு நிகழும் கொடுமைகளை அவரவர் பாணியில் தானே கையாள முடியும்? 
    ஜோ வெண்பாவாக வருகிறார். ஆஷிஃபா, நந்தினிக்கு கண்ணீர் விடுகையில் வெண்பா, ஏஞ்சலுக்கும் சேர்த்தே அழுகிறார். பதறுகிறார். வினா எழுப்புகிறார். வாதாடுகிறார்.
    ஜோதிகாவின் பாத்திரத்திற்கு வலு சேர்க்கும் வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன . அதுவும் “முயற்சி பண்ணி தோத்துட்டேன்னு சொல்ல இது விளையாட்டில்ல, ஜஸ்டிஸ்” எனும் வசனம் படத்தின் ஹைலைட்! 
    பார்த்திபன் வழக்கம் போல தனது இடத்தை வித்தியாசமாக தக்கவைத்துக் கொள்கிறார். வினோதினியும். 
    இந்தியக்குழந்தைகள் நான்கில் ஒருவர் குடும்ப உறவுகளாலோ, நட்புகளாலோ பாலியல் ரீதியாக சீண்டப்படுகிறார் என்று ஒரு புள்ளிவிவரம் படித்த நினைவு. படத்தில் சில வசதிபடைத்த பெற்றோர் தங்களில் பிள்ளைகளை வளர்க்க துப்பில்லாமல் கௌரவத்தை மட்டும் காப்பாற்றிக்கொள்ள படும் பாட்டையும், பணத்தை வாரியிறைப்பதையும், பாதகங்கள் செய்வதையும் சுற்றிவருகிறது. தியாகராஜன் எப்போதும் இப்படித்தான் விளக்கெண்ணையில் வெண்டைக்காயை ஊறவைத்தது போல் நடிப்பாரா!! இவருக்கு பதில் ஜெயப்பிரகாஷ் நல்லாபண்ணிருப்பாரோ!
    பாலுமகேந்திராவுக்கு பின் ஊட்டியை வளைத்து வளைத்து காட்டியிருக்கிறார்கள்! அவ்ளோ பொழிவு, அவ்ளோ அழகு! இசை ஊட்டி போல குளுமையா இருக்கு. விவேக் வா செல்லம் பாடலில் ஸ்கோர் செய்கிறார். எல்லோர்க்கும் ஒரே குறைதான். சாட்சியங்கள் இல்லாமல் நீதிபதி எப்படி தீர்ப்பு வழங்கலாம் என்பது தான். சாட்சியைவிட மக்களின் உணர்வே முக்கியம் என்கிற அயோத்தி தீர்ப்பு மேற்கோளாக கொள்ளலாமே!  

    பெண் குழந்தை பெற்றோர், பெண்கள் விழிப்புணர்வுக்காக இந்த படத்தை பாருங்கள். ஆண் குழந்தைகளை பெற்றோர், ஆண்கள் படத்தின் இறுதி வரிவரை கட்டாயம் பாருங்கள்! ஆண் குழந்தைகளுக்கு  சக உயிரான பெண்ணை எப்படி நடத்த வேண்டும் என கற்பிக்க வேண்டிய காலமிது. இனி ஆண் தேவதைகளுக்கான காலம்! 
     

    ஞாயிறு, 17 மே, 2020

    வேள்பாரி - கற்றதும் பெற்றதும்

     எல்லோர்க்கும் பொதுவான மழை தான். ஆனால் நனைத்தல் அவரவர்கானது இல்லையா! வாசித்த எல்லோரும் உச்சி நுகர்ந்த வேள்பாரியை என் சிற்றறிவின் எல்லையில் நின்று வாசித்த அனுபவத்தை பகிர்த்தல் பொருட்டு என் இயல்பில் அல்லாத சற்றே நீளமான இந்த பதிவு. 

    வேள்பாரி பல துறையில் ஆய்வு மேற்கொள்ள வழிவகுக்கும் அறிவுக்களஞ்சியம்.  சங்கப்பாடல்கள் வாசிப்பால் அது வசப்பட்டதென முன்னுரையில் ஆசிரியர் தெளிவாகவே குறிப்பிடுகிறார். எதை சொல்கிறார் என்பதைவிட யார் சொல்கிறார் என்பதில் கூடுகிறது சொல்லின் பொருள்.
     ஆசிரியர் வழி நின்று நோக்குங்கால் மன்னராட்சிக்கு எதிரான கலக்காரனின் குரலாக, கம்யூனிச ரேகை நூலெல்லாம் பரந்து விரிகிறது. வேப்பம்பூ யாருக்கானது தெரியுமா என்ற வினவும் கபிலரிடம், அது சிற்றெறும்புக்கானது என விடை தந்து மூவேந்தரின் சக்கரத்தில் முதல் அச்சை அசைக்கிறான் நீலன். அதன் தொடர்ச்சியாக வேப்பம்பூவை வயல் நண்டின் கண்களோடு வரும் உவமை ஐங்குறுநூறு களவன் பத்து பாடலின் சாரம் என்பது ஒரு கூடுதல் தகவல்.

    நெருப்பில் சுடப்பட்ட உணவு ஆண் உணவென்றும், அவசரத்தின் குறியீடென்றும், நீரில் வெந்தவை பெண் உணவென்றும், பக்குப்பட்டதென்றும் ஓரிடத்தில் கபிலர் குறிப்பிடுகிறார். தோப்புகளில் காடைகறி சுட்ட சித்தப்பாக்கள் முதல் இன்று பார்பிக்யூ பார்ட்டி வரை ஆண்கள் சுட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். 

     நூல் ஆசிரியர் கல்வெட்டுகள் பற்றிய உரை ஒன்றில் இதுவரை தமிழகத்தில் கிடைத்ததிலேயே மிகப்பழமையான கல்வெட்டொன்றில் இடம் பெற்ற பெயர் அந்துவன் என குறிப்பிட்டார். வரலாற்றில் தமிழ் எழுத்துருவின் தொன்மையைக்குறிக்கும் அந்த பெயரை  அவர் தலைமை கனியனுக்கு சூட்டியது எத்தனை ஆழமான சிந்தனை இல்லையா!
    நீலமும் மஞ்சளும் கலந்த முயல் காது வடிவ முருகன் காட்டிய ஏழிலைப்பாலை ஈர்த்த அளவு ஏன் வள்ளி வியந்து அழைத்துக்காட்டிய  நரந்தம் புல் பலரை ஈர்க்கவில்லை! அதைபற்றிய விவரிப்புகள் சற்று குறைச்சல் என்பதாலோ! உண்மையில் நம்மில் பலரும் நரந்தம்புல்லை முகர்ந்திருக்கிறோம். அவை இப்போது லெமன் கிராஸ்(Lemon grass) என்ற பெயருடன் எழுமிச்சை சேர்ப்பதாக சொல்லப்படும் எல்லா நறுமணப்பொருட்களோடும் சேர்க்கப்படுகிறது. இங்கே சித்தன்னவாசல் அருகே கொஞ்சம் இருக்கிறது. கேரளாவில் நிறைய இடத்தில் காணக்கிணைக்கிறது.  புல்லைப்பறித்து கசக்கி முகர்ந்தால் எழுமிச்சை மணம் வரும். புத்துணர்ச்சியாக இருக்கும். இப்படி சின்ன சின்ன குறிப்புகளால் அசரவைக்கும் நூல் எங்கும் என் எண்ணம் நிலைகுத்தி நின்றது இரண்டு கருத்துகளில் தான். ஒன்று கற்றல் மற்றொன்று பெண்ணியம்.
     பொதுவாக மொழி கற்றவர்களுக்கு கணிதமும், கணிதம் கற்றவர்களுக்கு மொழியும் கைவருவதில்லை. அது ஏன் என்கிற நுட்பம் இந்த நூலில் அடிக்கோடிடப்பட்டிருக்கிறது. கபிலரின் அறிவின் ஆழம் பற்றி யாரும் விளக்கவே தேவையில்லை. ஆனால் அவருக்கு வானியல் கற்றுதர திசைவேழரால் முடியவில்லை. ஏனென்றால் அவரது கற்பித்தல் தெரிதலுக்கானதாய் இருக்கிறது. நிலப்பகுதியில் இரண்டு ஆசிரியர்கள் காட்டப்படுகிறார்கள். எந்த வயது மாணவனையும் கோல் கொண்டு தாக்கும், தனக்கு மற்றொருவர் இணையில்லை என கருதும், இதற்கு மேல் கற்றுக்கொள்ள எதுவும் இல்லை, முன்பு கற்றதையே பயிற்சி செய்தால் போதும் என நம்பும், மாணாக்கரின் வினாக்கள் இடையூறு எனக்கருதும் திசைவேழர். 
    வினா கேட்கும் மாணவியை ஊக்குவித்து ஆனால் இதுதான் தான் கற்றது என மலைக்கும் கபிலர். 
    அவரவர்க்கு தேவையான கல்வி மட்டுமே கற்றுக்கொடுக்கப்படுகிறது. 
    மாறாக பறம்பில் எல்லோர்க்கும் சமமான கல்வியும், பயிற்சி வாய்ப்பும் கிடைக்கிறது. அதுவும் நேரடிக்கற்றல் அனுபவம். தேக்கன் அலவனை கண் திறந்து வழிபட அனுமதிக்கிறார். மாணவன் கேள்வியை ஊக்குவிக்கிறார். நீங்கள் சொன்னதை நான் நம்பினேன் ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என சாடும் அலவனை அப்படித்தான் போ என விரட்டாமல், அவன் சொன்ன கருத்தை சோதிக்கிறார். 
    மற்றோரு ஆசானாக நாம் பாரியை பார்க்க முடிகிறது. எங்கள் கெமிஸ்ட்ரி வாத்தியார் + எண்ணையும், -எண்ணையும் கூட்டுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்வார் + என்பது பணக்கார குடும்பம், - என்பது ஏழைக்குடும்பம். இரண்டு + அல்லது இரண்டு- காதலித்தால் பிரச்சனை வருவதில்லை அது + ஆகிறது மாறினால் மைனஸ் தான் என நகைசுவையாய் கூறினார். பணம் பற்றிய சர்ச்சை விடுத்து அந்த காதல் பார்முலா எங்கள் வகுப்பில் யாருக்குமே மறக்கவில்லை. அதே போல் திசைவேழர் தலையால் தண்ணீர் குடித்தும் கபிலருக்கு விளங்கவைக்க முடியாத கார்த்திகை கூட்டத்தை ஒரு காதல் கதையால் மனதில் பதியவைப்பார் பாரி. அறுபதும் தமிழ் ஆண்டுகளா என்பதில் என் கருத்து முரண்பட்டாலும், ஆறு(நதி), நேரக்கணக்கு பலவற்றில் ஆறின் அச்சை உணர்ந்த நொடி நம் வாழ்வில் கடக்கும் ஒவ்வொரு ஆறையும் உற்று நோக்கவைக்கிறது. இன்னும் வேள்பாரியில் கற்றல் கற்பித்தலை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். பதிவின் நீளம் கருதி அடுத்து பெண்ணியம். 
    நாகரிகம் தழைத்த மூவேந்தர் குடியில் பெண் சந்தையில் விற்கப்படுகிறாள். செல்வாக்கு மிகுந்த குடும்பப்பெண்களும் திருமண ஒப்பந்தத்தில் பண்டமாக விற்கப்படுகிறார்கள். அவர்கள்  எந்த ஆணையும் நம்ப மறுக்கிறார்கள். தங்கள் குலப்பெண்களுக்கு அணக்கர்களை பல்லக்கு தூக்க அமர்த்தப்படுகிறார்கள். பெண்களில் கற்பு கற்கோட்டைக்குள் பாதுகாக்கப்படுகிறது. ஆணோ தன் மகள் திருமணக்கொண்டாட்டத்தில் இருமுகப்பறை நடனத்தை தனியே கண்டுகளிக்கிறார். பாண்டிய வேந்தனுக்கு பல கவலைக்களுக்கு நடுவே ஒரு கவலை அவன் விலை கொடுத்து வாங்கிய கிளாசரினா உண்மையில் யவண மங்கைதானா, அத்தனை தொலைவில் அமர்ந்திருக்கும் அவளது கவிழும் இமைகளை தன் எதிரே அமர்ந்திருந்ந சம்பந்தி எப்படி பார்த்திருக்க முடியும் என்பதெல்லாம் அதில் சில. 
    பறம்பு மலையிலோ பெண் மதிக்கப்படுகிறாள். ஏனென்றால் அவள் உண்மையாக அவளுக்காக நேசிக்கப்படுகிறாள். குலநாகினியாக போற்றப்படுகிறாள். சோமபானத்தில் இருந்து எல்லைப்பாதுகாப்பு வரை சகல விசயங்களிலும் சமமாக நடத்தப்படுகிறாள். திரு ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் வடிவேலு ஒரு வசனம் பேசுவார் “ எங்க இனத்தில் கற்பழிப்பு என்ற ஒன்றே இல்லையடா ” நாகரிகம் என்ற பெயரில் இயற்கைக்கும் நமக்குமான பந்தம் மட்டுமா அறுப்பட்டுக்கிடக்கிறது?  மனிதமும் தான் இல்லையா!
    எழுத ஊக்கிய நட்புக்களுக்கு நன்றியோடு தொடரும்.....(எப்போ?? எப்பயாவது)

    புதன், 29 ஏப்ரல், 2020

    வெள்ளுடை தேவதைகள்

    வெள்ளுடையில் இருந்ததால் அவர்கள் தேவதைகள் என்பதிலேதும் யார்க்கும்
    ஐயம் இல்லை

    சனி, 18 ஏப்ரல், 2020

    காணாமல் போன கவிதைகள்!

     கறுப்புநிறத்து
    இதயவடிவ பலூன் ஒன்றை
    மணிக்கட்டில் கட்டியபடி
    சென்று கொண்டிருந்தவனுக்கு  அதிகபட்சம் பதினாறு வயதிருக்கும்

    திங்கள், 30 மார்ச், 2020

    முகமற்ற குரல்கள்

    காலத்தின் சன்னல் இருக்கையில்
    அமர்ந்திருக்கிறது தேவதை

    அதன் முகத்தருகே நீட்டப்பட்ட கைக்குட்டையால்
    இடம்பிடித்து வைக்க

    முண்டியடித்து
    இருக்கைநாடி
    மூச்சு சீரான பின்
    பேசத்தொடங்கியது
    சாத்தான்

    வியாழன், 26 மார்ச், 2020

    கை கழுவுங்க

    கொஞ்சம் தண்ணீர்
    இருபத்தியிரண்டு நொடிகள்
    சிறு சோப்புக்கட்டி போதும்
    அவர் கைகழுவி விட்டார்
    நீங்களும் கைகழுவுங்கள்

    செவ்வாய், 24 மார்ச், 2020

    தட்றா கைய!!

    கவனம் கவர்வதற்காக
    கைதட்டுகின்றனவாம்
    சில வகை குரங்குகள்
    என்கிறது அறிவியல்