புதன், 31 ஜூலை, 2013

------------------------------------------------




தந்தை போன துக்கத்தில் தனயன்
சொத்தை பிரித்து விட்ட திருப்தியில்
சொட்டு கண்ணீரோடு மருமகள்

தோள் கொடுக்க இருந்த ஒரே சொந்தத்தை
தொலைத்துவிட்ட துயரில் தங்கை

அழைக்க ஒரு மாற்றில்லாத குறையில்
அழுது புலம்பும் மனைவி -இவர்களுக்கிடையே

தப்பிசைக்கு தனை மறந்து
தாளத்தில் லயித்தாடும்
கொட்டுக்கார ச்சிறுவனை
நீங்கள் கவனித்திருக்கிறீர்களா ?  
                                                  -கஸ்தூரி
.

ஞாயிறு, 28 ஜூலை, 2013

மற்றுமொரு செல் கவிதை


உன் கையணைப்பில் கிடந்து
உன் காது மடல் உரசி
உன் கன்னம் தொட்டு
அழைத்தவுடன் உன்னை
படபடக்கச்செய்யும் உன் கைப்பேசி
அக்றிணை என்று என்னால்
ஏற்க முடியாது  என்னவளே
                                                 -கஸ்தூரி

புதன், 24 ஜூலை, 2013

தன்னை தொலைத்தல்


கைபேசி தொலைத்தல்
என்பது நாட்குறிப்பை
தொலைத்தல் போல் தான்


தொலைத்த நொடியில்
நண்பர்கள் யாவரும்
தொடர்பு எல்லைக்கு வெளியே


பெருநகரின் தனிமைகளில்
பெருந்துயரில் வருகின்ற
மெல்லிசையை தொலைத்தல்


தாய்மையடைந்ததாய்
பகன்ற தோழியின்
குறுஞ்செய்திப்புன்னகையை தொலைத்தல்


குழந்தைகளின் ,குடும்பத்தின்
குறுநகை உறைந்த
குறும்புகளை 'குதுகலத்தை தொலைத்தல்

எண்களை மட்டுமல்ல பலவேளைகளில்
தன்னையும் தொலைதல் போல் தான்
கைபேசி தொலைத்தலும்
                                             -கஸ்தூரி           -








  

வெள்ளி, 19 ஜூலை, 2013

ஒப்பனை மனிதனின் தெய்வம்


ஒரு தேர் திருவிழா நாளில்
ஒரு துரோகத்தின் ,வஞ்சகத்தின்
சூழ்ச்சியின்  ஊதியத்தில்
ஒரு பங்காய் வந்த வைர கிரிடம் சூடி
வெட்கி முகம் சிவந்த அம்மனுக்கு
ஒப்பனை செய்தாயிற்று
சந்தனக்காப்பென்ற பெயரில்     -கஸ்தூரி

ஞாயிறு, 7 ஜூலை, 2013

தாயும் ,சேயுமானவள்

குக்கர் சத்தமோ
கூரியர் பையனோ
எங்கள் கண்ணாம்பூச்சி
விளையாட்டைதடைசெய்யும்போது
ஏக்கத்தோடு சொல்வாள் மகள்
நீயும் குட்டிபெண்ணா இருந்திருக்கலாம் அம்மா !












கஸ்தூரி  

வியாழன், 4 ஜூலை, 2013

முகமெனும் முகமூடி

முகமூடி அணிந்து முயலாகிறது குழந்தை
முகமே முகமூடியாக
நாம்
                       -கஸ்தூரி