சனி, 27 ஏப்ரல், 2019

என்ன சொல்கிறார் தங்கமங்கை கோமதி??

          விளையாட்டில் வெல்வதை நாம் விளையாட்டாய் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு நாட்டின் ராணுவ பலத்தை அதன் விளையாட்டுச் சாதனைகளை கொண்டே உலகம் கணக்கிடுகிறது. அதனால் தான் ஒலிம்பிக் போட்டிகளை அத்தனை தீவிரமாய் நினைக்கின்றன வளர்ந்த நாடுகள். இதில் நாம் எப்படி?

   தமிழ்க்குடும்பங்களை பொருளாதார ரீதியாக செல்வந்தர், தன்னை செல்வந்தராக கருதிக்கொள்ளும் க்ரீமி லேயர் மத்திய வர்க்கம், கீழிறங்கவும் பயந்து, முன்னேறவும் தயங்கும் நடுத்தர வர்க்கம் மற்றும் எல்லா தொழில்நுட்ப வசதிகளையும் சல்லிசாகவும், கல்வி, குடிநீர், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்காக போராடியும் வாழும் அடித்தட்டு மக்கள். இவர்களையும் கூட நகர கூலி, கிராமக்கூலி என இரண்டாக பிரிக்க முடியும். உண்மையில் இந்த கிராமத்துக்கூலித்தொழிலாளர்கள் நகரநடுத்தர வர்க்கத்தைவிட வசதியானவர்கள்.
                      ஒவ்வொரு வருடமும் என் பள்ளியைச் சுற்றி உள்ள அறுநூறு குடும்பங்களை கிட்டவும், தள்ளியும் அணுகும் என் பன்னிரண்டு வருட அனுபவமும், பள்ளி அனுபவமுமாக இந்த விளையாட்டுப் பதிவு.
             விளையாட்டுப் பதிவில் ஏன் பொருளாதாரப் பாடம்?? ஏனென்றால் இங்கு பொருளில்லாமல் எதுவும் இல்லை. அதாவது கைப்பொருள். விளையாடுகிற மாணவர்களுக்கு அதாவது விளையாட்டு வீரர்களுக்கு பொதுவாக படிப்பில் ஆர்வம் இருப்பதில்லை. அப்படியான ஒரு மாணவன் பெரும் செல்வந்தன் என்றால் எப்படியோ என் பிள்ளை பேரெடுத்தால் சரி என செலவு அதிகம் பிடிக்கும் துப்பாக்கி சுடுதல், வில்வித்தை ஸ்க்வாஸ், போன்ற உள்ளரங்க மற்றும் ஓடியாடாத வெளியரங்க விளையாட்டுக்களை  பெற்றோர் தேர்வு செய்வர். ஒரு முறை ஒற்றைச் சுவர் மட்டுமே கொண்ட வீட்டில் பிறந்த என் மாணவி கல்லூரி அளவில் நடந்த துப்பாக்கி சுடுதலில்  NCC யின் புண்ணியதால் தேர்வு பெற்று ஸோனல் அளவில் பங்கெடுத்து மூன்று முறையும் குறிதவறாது இலக்கில் அடித்துவிட்டு மாலையில் முடிவு அறிவிப்பார்களாம் என படபடத்த இதயத்தோடு அலைபேசியில் மகிழ்வும், நம்பிக்கையுமாய் பேசினாள். ஆனால் மாலைக்குள் என்னென்ன பித்தாலாட்டமோ இரண்டு முறை இலக்கு தவறிய ஒரு பெரிய சுயநிதிக்கல்லூரி மாணவி வெற்றியாளராக தேர்தெடுக்கப்பட்டிருந்தார். அது பணக்காரங்க விளையாட்டு மிஸ். நீங்க வருத்தப்படாதிங்க என்றாள் என் நிலா. சென்ற முறை காமன் வெல்த்தில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா தன் வேலைக்காரர்கள் தலையில் பாட்டில் வைத்து குறி தவறாமல்(?!)சுட்டதாக ஒரு செய்தி படித்தது நினைவில் அலைமோதியது.
                   க்ரீமி லேயர் மக்கள் தம் செல்வங்களை நீச்சல், ஷட்டில், டெனிஸ் போன்ற விளையாட்டுக்களில் பங்கெடுக்கச் செய்கின்றனர்.
                 நடுத்தர வர்க்கத்தில் விளையாட்டு ஒரு பாவச்செயல், விளையாட்டு ஒரு பெருங்குற்றம், விளையாட்டு மனித நேயமற்ற சொல். ஒன்லி படிப்பு, அப்புறம் படிப்பு, அப்புறமும் படிப்பு. படித்து மட்டுமே பணக்காரர் ஆகிவிட முடியும் என்கிற மூடநம்பிக்கைகாரர்கள் இவர்கள்.
               மீதமிருக்கிற உண்மையான ஏழைத்தாயின் பிள்ளைகள் வெயிலை குடித்து, வெயிலை உடுத்தி, வெயிலையே வெளுத்துவிட கூடிய எம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கில்லிகள். இவர்கள் தான் ஓடுவார்கள், தாண்டுவார்கள் வட்டெரிவார்கள். ஹாக்கி, கபடி என புழுதி பூசி கம்பு சுற்றுவார்கள். பாட ஆசிரியர்கள் பலரது வசவுகளை தட்டிவிட்டுவிட்டு பீ.டீ வாத்தியாரே கதி என கிடப்பார்கள். அந்த விளையாட்டு ஆசிரியர் அர்ப்பணிப்போடு கிடைத்துவிடுவதெல்லாம் மாணவர்களின் பெற்றோர் செய்த போன சென்ம புண்ணியம் தான்(!!). கந்து வட்டி, மீட்டர் வட்டிக்கெல்லாம் கடன் வாங்கி அந்த பெற்றோர் காலணியும், சுற்றுப்பயணசெலவும் செய்வார்கள், எப்படியாவது காசு கொடுக்காமல் தன் பிள்ளை கவர்மெண்ட் வேலையில் சேர்ந்துவிடமானா/ளா என்கிற சின்ன ஏக்கத்தோடு. பெற்றோரைப் போல் கோச் (பயிற்சியாளர்) பலரும் தன் மாணவர்களை நடத்துவர். அத்தனையையும் கடப்பதை விட தேர்வுக்குழு அரசியல், பண பலத்தை தாண்டி அந்த அரங்கு வர முடிவதில் தான்  இருக்கிறது இன்னும் மனிதமும், அறமும் சாகாமல் இருப்பதற்கான சாட்சியங்கள்.
     இவை இருக்கட்டும். கோமதி ஓடி வென்ற வீடியோ பதிவை பார்த்தீர்களா? இரண்டு நொடிக்குள் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிற தமிழ் நிறம். நான்காம் இடத்தில் இருந்து புயலென முன்னேறுகிறாள் தங்கை. சுற்றி ஓடுபவர்களின் உடல் வலிமை அவளுக்கு இல்லை. வறுமையும், வேதனையும் அவநம்பிக்கைகளும் தன்னை துரத்துவதைப் போன்ற வெறியோடு கிழிந்து போன. வெவ்வேறு நிறக்காலணிகளோடு ஓடுகிறாள். வாயை திறந்த வண்ணம் ஓடுகிறாள். அவள் ஸ்டாமினா என்னும் உடல் தாங்குதிறன் வடியவடிய ஓடிக் கடக்கயில் அவளை மடியில் கிடத்தி ஒரு வாய் எலுமிச்சை சாரை பருகக் கொடுத்துவிடமுடியாதா என பெண்ணைப் பெற்ற வயறு பற்றிக் கொள்கிறது. தலைகீழாய் பெற்ற தேசியக்கொடியை நேர் செய்து தலைக்கு மேலே இரு கைகளால் தூக்கி முதல் முறையாய் தங்கம் வென்ற  கோமதி பறக்கவிடுகிறாள், வாடி ராசாத்தி என மனம் பாடத் தொடங்குகிறது.


10 கருத்துகள்:

  1. தங்கம் வென்ற கோமதியின் அந்த தங்கத் தருணங்களை வீடியோவில் பார்த்து ரசித்தேன்.இந்த செய்தியை நம் மீடியாக்கள் இருட்டடிப்பு செய்து கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளித்து பக்கம் பக்கமாய் செய்தி வெளியிடுவதையும் பார்த்து வெதும்பினேன். கோமதி போன்றவர்களுக்கு கிடைக்கும் சிறு பாராட்டும் பெறும் ஊக்கம் தரும்.கோமதி இன்னும் தடை தாண்டவேண்டிய தூரங்கள் நிறைய உள்ளது. தாண்டி சாதிக்க வாழ்த்துக்கள்!. அருமையான பதிவு. நன்றி!

    பதிலளிநீக்கு
  2. அந்த வாட்சாப் வீடியோ நேற்றுதான் பார்த்தேன். உங்கள் வர்ணனை அபாரம். விளையாட்டிலும் அரசியல் இருக்கும் நாட்டில் பாவம் தகுதி உள்ள விளையாட்டு வீரர்கள்...

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு. எனக்கு வீடியோ பார்க்க முடியவில்லை. மொபைலில் தான் பார்க்க வேண்டும். செய்தி படித்தேன். எங்கும் அரசியல்தான். தங்கமான தருணங்கள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  4. மைது எங்க வீட்டுல டிவி, செய்தித்தாள் எதுவும் கிடையாது. நான் இப்பத்தான் பார்த்தேன் உங்க பதிவு மூலம்.

    வீடியோ பார்த்ததும் என்னை அறியாமல் கண்ணில் நீர். புல்லரிப்பு.

    உங்க பதிவில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு வரியும் உண்மை செம. நல்ல எழுதியிருக்கீங்க.குறிப்பா கோமதி பற்றி.

    நம்மூர்ல கோமதி மாதிரி இன்னும் நிறைய்ப்பேர் இருக்காங்கப்பா.

    கோமதி கறுப்பு வைரம்!!!! ஒளிரும் மின்னும் வைரம். இதில் இன்னொன்று இருக்கிறது அடுத்த கருத்தில் சொல்லுகிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நான் என் பள்ளியில் விளையாட்டு டீமில் இருந்தேன். நீங்கள் சொல்லியிருக்கும் அதே காரணம் தான். விளையாட்டு என்பது பாவம்...குற்றம்....புத்தகம் மட்டுமே...புத்தகம் புத்தகம் புத்தகம். சரி அது இருக்கட்டும்..

    பேஸ்கட் பால், நெட் பால், த்ரோ பால், பேஸ் பால், ஓட்டம் எல்லாவற்றிலும் நான் டீமில் உண்டு.

    குறிப்பாக பால் மூன்றிலும் (அப்போது பேஸ் பால் மாவட்ட அளவில் எல்லாம் கிடையாது) மற்றும் ஓட்டத்திலும் ரிலேயிலும் உண்டு. அதுவும் ஸ்டார் பள்ளி அளவில். வீட்டுக்குத் தெரியாமல் விளையாடியது. மாவட்ட போட்டிகளுக்கு அனுமதி கிடையாது வீட்டில்.

    பள்ளியில் பயிற்சியில் ஓட்டத்தில் சொல்லிக் கொடுத்தது. ஆரம்பத்திலேயே நமது ஃபுல் எனர்ஜியும் செலவழித்துவிடக் கூடாது. குறிப்பாக 400 மீட்ட போன்ற கூடுதல் தூர ஓட்டத்திற்கு. சிறிய தூரம் என்றால் வேறு டெக்னிக். முதலில் நம் முன்னால் ஓடட்டும் அவர்களைக் ஓடுபவர்களைக் கணிக்க வேண்டும். அப்புறம் படிப்படியாக முன்னேற வேண்டும். முதலில் மூன்று பேர் என்றால் இரண்டு பேராக்கி பின்னற் அந்த மணி அடிக்கறாங்க பார்த்தீங்களா அதுக்கப்புறம் தன இருக்கு டெக்னிக். அதற்குள் நமக்கு ஓடுபவர்களின் திறன் தெரிந்து விடும். இலக்கு நெருங்கும் சமயம் நம் முழு எனர்ஜியும் அங்குதான் திரட்டிக் கொண்டு வந்து 2, 1 என்று கடைசியாகப் பாய்ச்சல்தான்...முந்த வேண்டும். கோமதி ஓடுவதைக் கவனித்தால் தெரியும். நான் திரும்ப திரும்ப வீடியோவைப் போட்டுப் பார்த்தேன்...அழகாகச் செய்திருக்கிறார். இதில் முக்கியம் கான்சென்ட்றேஷன்...மனம் நம் முன்னால் ஓடுபவர்களைக் கவனித்தலில் அதே சமய பின்னால் வருபவர்க்ளைக் கணித்தலிலும் ...

    மணியடித்துத் தாண்டியதும் கவனித்தேன் அவர் முன்னால் வருவதை./...அப்புறம் நெருங்கும் சமயத்தில் வேகம் கூடி டக்கென்று பாய்கிறார்...தட்ஸ் இட்!! தெர் ஷி இஸ்!

    பாராட்டுகள் கோமதி. உணர்ச்சிகள் மேலிட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அவரது ஷூஸ் பார்த்தீங்கதானே!!! பாவம் !!! ஒவ்வொன்றும் ஒரு கலர்....வெரி ப்ரௌட் ஆஃப் ஹர்!!

    மைத்து மிக்க நன்றி பதிவுக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ***இவை இருக்கட்டும். கோமதி ஓடி வென்ற வீடியோ பதிவை பார்த்தீர்களா?***

    Last fraction of second, she brings all the energy and finishes good. :)

    ***வாயை திறந்த வண்ணம் ஓடுகிறாள். அவள் ஸ்டாமினா என்னும் உடல் தாங்குதிறன் வடியவடிய ஓடிக் கடக்கயில் அவளை மடியில் கிடத்தி ஒரு வாய் எலுமிச்சை சாரை பருகக் கொடுத்துவிடமுடியாதா என பெண்ணைப் பெற்ற வயறு பற்றிக் கொள்கிறது. தலைகீழாய் பெற்ற தேசியக்கொடியை நேர் செய்து தலைக்கு மேலே இரு கைகளால் தூக்கி முதல் முறையாய் தங்கம் வென்ற கோமதி பறக்கவிடுகிறாள், வாடி ராசாத்தி என மனம் பாடத் தொடங்குகிறது.***

    மது சொன்னதுபோல் உணர்வுகள கொட்டி பாராட்டு மழையில் கோமதியை நனைத்து விட்டீர்கள்.

    இந்தக்காலத்தில் வெறூம் திறமை மட்டும் போதாதுங்க. ட்ரைனிங், நல்ல கோச் அது இதுனு தேவைப் படுகிறது. ஏழைகளீடம் உள்ள திறமை வெளீக்கொண்டு வராமல் அழிந்துவிடுகிறது.

    படிப்பில்கூட அப்படித்தான் நீட் ட்ரைனிங் க்ளாஸ், பாங்க் எக்சாம் ட்ரைனிங்க் கிளாஸ், ஜெ ஈ ஈ ட்ரைனிங் க்ளாஸ்ணு பணக்காரங்களால் பெற முடிவது ஏழைகள் பெற முடிவதில்லை. அதனால் அவர்கள் மேலே வர முடிவதில்லை.



    பதிலளிநீக்கு
  8. எல்லாச் செய்திகளையும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடுபவன் நான். கோமதி தங்கம் வென்றதும் எனக்கு அப்படித்தான் இருந்தது. ஆனால் உங்கள் கட்டுரையின் கடைசி வரிகள்... உண்மையிலேயே சொல்கிறேன் சகா, புல்லரித்து விட்டது! ஏனெனத் தெரியவில்லை!!

    வெறுமே கோமதி அவர்களின் வெற்றி பற்றிய பதிவு என்றுதான் நினைத்து வந்தேன். ஆனால் ’தமிழ்க் குடும்பங்களில் விளையாட்டு’ எனும் தலைப்பில் ஒரு குட்டி ஆய்வே பதிவிட்டிருக்கிறீர்கள் என்றால் அது மிகையில்லை. எந்தெந்த வகைக் குடும்பத்தினர் எந்தெந்த விளையாட்டுக்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்கிற இந்தக் கோணமெல்லாம் இதுவரை நுனிப்புல்லளவில் கூட அறியாதவை. உங்கள் மாணவி நிலாவுக்கு நேர்ந்த கொடுமை நெஞ்சைக் கனக்கச் செய்தது.

    இப்படியொரு பதிவுக்காக மிக்க நன்றி சகா!

    பதிலளிநீக்கு