திங்கள், 20 அக்டோபர், 2014

நிறையத்துடிக்கும் தேநீர் கோப்பை!




விரலிடுக்கில் வழிந்துவிடப்போகும்
கடைசித்துளியை பத்திரப்படுத்தும்
எத்தெனங்களோடு சொன்னாய்
கீப்-இன்-டச்!!

சிறுதூறலோடு தொடங்குகிறது
எதிரெதிர் திசைகளில்
நம் பயணம்!

 நிச்சயமற்ற நமது அடுத்த சந்திப்பை
அறிந்துகொண்ட அந்த நொடியை
நாட்குறிப்பில் மயிலிறகாய்
பத்திரப்படுத்த விளையும்
என் முயற்சிகள் ஆயாசப்படுகின்றன
பெருமழையை தேநீர்கோப்பைக்குள்
தேக்கிவிடத்துடிக்கும் பிள்ளைமனம்!

ஆளற்ற வனங்களில்
அரவமற்ற இரவுகளில்
பாலைகளில், சோலைகளில்
தொடர்கிறது மழை நனைத்தபடி
எதிரெதிர் திசைகளில்
நம் பயணம்

எனினும் வாழ்ந்துகெட்ட
பெரியமனிதரை போல்
புறக்கணிக்கப்படும்
நகரத்தில் பொழியும்
நம் மழைக்காக
நனைகிற என் விழி நீரால்
நிரப்பிவிட முயல்கிறேன்
அந்த தேநீர் கோப்பையை !!!!


பி.கு
கீப் இன் டச் சொல்லி பிரிந்தவர்கள் தான் அதிகம் எனும் (விகடன்-வலைபாயுதே)  குட்டி இற்றையின் தாக்கத்தால் இதை எழுத உதவிய அந்த முகம் அறியா நண்பனுக்கு நன்றி

40 கருத்துகள்:

  1. உண்மை தான் தோழி. Keep In Touch ! - I think its just a word of formality. பிரியும் போது இதை சொல்லிவிட்டு, பின்னாளில் சந்திக்காமல் போன / சந்திக்க இயலாமல் போன நட்புகள் பல உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஒரு கசப்பான உண்மை தான் தோழி:( வருகைக்கு நன்றி!

      நீக்கு
  2. ஊர்ல மழை பெஞ்சுற கூடாது பள்ளிக்கு விடுமுறையும் விட்டுடக் கூடாது. உடனே கவிதை எழுத ஆரம்பிச்சுருவீங்களே இந்த கவிதைக்கு பயந்துதான் வருண பகாவானும் வராமல் போய்விடுகிறான். இதுக்காக நீங்க கவலைப்படாதீங்க.. நாங்க எதுக்கு இருக்கோம்... வந்த உங்க கவிதையை படிச்சு கருத்து சொல்ல மாட்டோமா என்ன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி ஆளாளுக்கு கலாய்க்கிறது பத்தாதுன்னு இந்த மழை வேற கலாய்ச்சுதுச்சே:(( நீங்கல்லாம் வந்தா சரி:))

      நீக்கு
  3. கீப் இன் டச் என்று சொல்லி அவுட்டாப் டச்சுல போனவங்க அதிகம் போல இருக்கு...ஹும் நீங்களும் அவங்களை போல இல்லாமல் கீப் இன் டச்ல இருங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏனோ இந்த வரியை எழுதும்போது ராஜி அக்கா நினைவுக்கு வந்தாங்க:(( அவங்கள பத்தி தெரிஞ்சதா பாஸ்??

      நீக்கு
  4. #கீப்-இன்-டச்#
    நான்தான் தப்பாய் எடுத்து கிட்டேன் போலிருக்கு :)
    த ம 2

    பதிலளிநீக்கு

  5. தமிழன் கவிதை எழுத இலக்கணம் இலக்கியம் படிக்க வேண்டுமென்று அவசியமில்லை தமிழகத்தில் மழை பெய்தாலே போதும் அவர்கள் கவிஞர் ஆகி விடுவார்கள் # என்ன நான் சொல்லுறது

    பதிலளிநீக்கு
  6. பள்ளிக்கூடத்து பிள்ளைப் பிராயத்தில் புத்தகத்தில் புதைத்து வைத்த மயிலிறகு நினைவலைகள்! ஒரு கோப்பைத் தேநீரை உறிஞ்சியது தெரியாமல் கடைசித் துளிக்காக ஏங்கும் நெஞ்சம்! சகோதரிக்கு வாழ்த்துக்கள்!
    த.ம.3.

    பதிலளிநீக்கு
  7. அன்புச் சகோதரி,

    கீப் இன் டச்... கவிதை அருமையாக இருக்கிறது.

    புறக்கணிக்கப்படும்
    நகரத்தில் பொழியும்
    நம் மழைக்காக
    நனைகிற என் விழி நீரால்
    நிரப்பிவிட முயல்கிறேன்
    அந்த தேநீர் கோப்பையை !!!!

    ஆமாம். நகரத்தில் தண்ணீர் வேண்டும் என்று நினைப்பார்களே தவிர மழையையோ மழையில் நனைவதையோ விரும்பமாட்டார்கள். மழையின் அருமை கிராமத்து மக்களுக்கு... விவசாயிகளுக்குத்தானே தெரியும் அதன் முக்கியத்துவம்.

    கீப் இட் அப்... வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. கீப் இன் டச் சொல்லி பிரிந்தவர்கள் தான் அதிகம் எனும்.....அதைவிட அதைக் கூடச் சொல்ல முடியாமல், காட்சிப் பிழையால் பிரிந்தவர்கள் இன்னும் அதிகம் சகோதரி!

    அருமையான கவிதை! மழைநேரத்து இதமானாலும்....அந்த மழைத் துளிகளில் சிறிது சோகம் ??!! நீர்க்குமிழையை உடைப்பது போல்!!!??

    பதிலளிநீக்கு
  9. என்னன்னு தெரியலை..
    மனம் கனக்கின்றது...
    தேநீர்க் கோப்பை காரணமோ!..

    பதிலளிநீக்கு
  10. விழிநீரை ஏந்தி விரல்வரைந்த பாடல்!
    அழியா நினைவே அது!

    எத்தனை அற்புதக் கற்பனை ஆற்றல் உங்களிடம்!
    திகைத்து நிற்கின்றேன்!
    வாழ்த்துக்கள் அன்புத் தோழியே!..

    பதிலளிநீக்கு
  11. ஹ்ம்ம் இப்படியும் நடந்திருக்கிறது..சில 'கீப் இன் டச்' கள் தொடரவும் செய்கின்றன.

    இப்பொழுது நான் சொல்லிக்கொண்டிருக்கும் வார்த்தைகள் இவை..நம்பிக்கையுடன் :)

    பெருமழையும் விழிநீரும் தேநீர்க் கோப்பையில்...மிக அருமை டியர்!

    பதிலளிநீக்கு
  12. அருமையான கவிதை! ஒரு சிறு பொறியும் கவிதைக்கான கருவாக உருவெடுத்து அழகிய கவிதை பிறக்கும் என்பது உண்மையாகி விட்டது உங்கள் கவிதையில் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. //பெருமழையை தேநீர்கோப்பைக்குள்
    \\தேக்கிவிடத்துடிக்கும் பிள்ளைமனம்!//

    மிக அழகிய வரிகள்!!

    பதிலளிநீக்கு
  14. எந்த வரிகளை எடுத்துச்சொல்வது என்ற மலைப்பிலேயே பலமுறை வந்தும் பின்னூட்டமிட இயலாமல் திரும்புகிறேன்.
    உங்கள் பாணியில் சொல்ல வேண்டுமானால்,
    “பெருமழையை தேநீர்கோப்பைக்குள்
    தேக்கிவிடத்துடிக்கும் பிள்ளைமனம்“
    சேர்க்கின்றதை விட இழக்கின்றமை அதிகமாகும் போது தோன்றும் ஆயாசத்திலிருந்து மீண்டுவரும் முன் அடுத்த கவிதை வந்து விடுகிறது.
    எல்லாரும் மிகச் சாதாரணமாய்க் கடந்து போகின்ற கணங்களின் கனத்தை எளிதில் கடந்து போவதில்லை படைப்பாளி.
    அவனுக்கான செய்தி... அவனுக்கான தகவல்... அவனை மறித்து அவன்வழியாக தன்னை மீட்டெடுக்கும் அற்புதத்தில் நிகழ்கின்றன படைப்புகள்.
    ( அவன் என்பது அவளுக்குமானதுதான் )
    இதுவரை நீங்கள் கடந்த தருணங்களின் ஏற்புடைய துகள்கள் திரட்டி வடித்து இறக்கிய தேநீரில் கண்ணீரும் இனிப்பாய்த்தான் இருக்கிறது.
    ( உங்கள் கவிதைகளில் தேநீரின் தாக்கம் சற்று அதிகமாய் இருக்கிறதே!!!)

    பதிலளிநீக்கு
  15. அருமையான கவிதை. பல முறை இப்படிச் சொல்லி பிரிந்திருக்கிறோம். ஆனாலும் தொடர்பில் இல்லாதவர்கள் தான் நிறைய...... :(

    பதிலளிநீக்கு
  16. த ம 6
    என் முதல் ஓட்டு உங்களுக்குத்தான்.

    பதிலளிநீக்கு
  17. மழையை கடுமையாக விமர்சிச்சு கவிதை எழுதுவது என்னவோ என்னை (வருண் பகவானை) கடிந்துகொள்வது போல இருக்கு! (இப்படியும் குதற்கமாக யோசிக்க முடியுமா?!! னு ஆச்சர்யப்படுறீங்களா? :))) )

    ********************

    ***எனினும் வாழ்ந்துகெட்ட
    பெரியமனிதரை போல்
    புறக்கணிக்கப்படும்
    நகரத்தில் பொழியும்
    நம் மழைக்காக
    நனைகிற என் விழி நீரால்
    நிரப்பிவிட முயல்கிறேன்***

    ஊரில் இருந்த ரெண்டு நல்லவர்கள், மதுரைத்தமிழன், அப்புறம் இந்த வருண் எல்லாம் அமெரிக்கா போனதும் மேகங்களும அவர்களைத் தொடர்ந்து போய்விட்டதாம்! :(

    *******************
    ***சிறுதூறலோடு தொடங்குகிறது
    எதிரெதிர் திசைகளில்
    நம் பயணம்!***

    உலகம் உருண்டைதானே? இருவரும் நிச்சயம் விரைவில் சந்திப்பீர்கள்! :)

    ****************************

    ***நனைகிற என் விழி நீரால்
    நிரப்பிவிட முயல்கிறேன்
    அந்த தேநீர் கோப்பையை***

    தேனீர் கோப்பையில் உள்ள கண்ணீரால் பூமிமாதாவின் தாகத்தைத்தீர்தால், அவர் கருணையால் அதே நீர், நீராவியாகி, மழைத்துளியாக வந்து பொழியும் நீங்கள் சந்திக்கும் தருணத்தில்! :) அப்போவாவது சிரிங்க! :)))


    பதிலளிநீக்கு
  18. அருமையான " ஜென் " தலைப்புடன் அற்புதமான கவிதை சகோதரி !

    எனினும் வாழ்ந்துகெட்ட
    பெரியமனிதரை போல்
    புறக்கணிக்கப்படும்
    நகரத்தில் பொழியும்...

    ...Hats up !

    நம் விழிநீரை நிறைக்கவென நாம் ஒவ்வொருவரும் ஒரு தேனீர்கோப்பையை அந்தரங்கமாய் வைத்திருக்கிறோம் தானே ?!

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  19. ஆமாம் அம்மு கீப் இன் டச்
    பிரமிக்கும் வகையில் வார்த்தையாடல்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறதடா. ஒவ்வொரு படைப்பாளிக்கும் கவனிப்பு எவ்வளவு முக்கியம் என்பது தங்கள் ஒவ்வொரு கவிதையும் உணரவைக்கிறது அம்மு அபாரம்
    /பெருமழையை தேநீர்கோப்பைக்குள்
    \\தேக்கிவிடத்துடிக்கும் பிள்ளைமனம்!// அளவு கடந்த அன்பில் ....பிரிவின் ஏக்கமும்.....ம்..ம்.. உண்மையில் குழந்தை மனம் தான்.
    ஒரு தேநீரே நட்பை வலுப்படுத்தவும், வகைப்படுதவும். உடைக்கவும் வல்லது தான் இல்லையா... நன்றி தொடர வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  20. தங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. கருத்து சொல்ல வரவில்லை
    கற்கண்டு தரும் சுவைமிகு வாழ்த்து
    சொல்லவே யாம் வந்தோம் யாதவன் நம்பியாக!

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
    அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  22. ஆகா உங்க அசிஸ்டென்ட் இதை டைப் பண்ணி ஏதோ பத்திரிக்கைக்கு அனுப்பினாரே...
    நல்லாத்தான் கீது ...

    பதிலளிநீக்கு
  23. சூப்பர் ....தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  25. அம்மு தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  26. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

  27. உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  28. கீப் இன் டச்--அற்புதம். ஒரு moodshift--ஐ இவ்வளவு மென்மையாக சொல்லமுடிகிறதே உன்னால் பாராட்டுகள்டா

    பதிலளிநீக்கு
  29. அன்புத் தங்கைக்கு,வணக்கங்களும் வாழ்த்துகளும்.!
    பொருட்காட்சிக்கு செல்லும் குழந்தை,அதைப் பார்ப்பதா,இதைப் பார்ப்பதா என தடுமாறுவதைப் போல ,கவிதைவரிகளிலிதைச் சொல்வதா ..அதைச் சொல்வதா ..அப்பப்பா...தடுமாறிப்போனேன்.! எவ்வளவு அடர்த்தி..எவ்வளவு நேர்த்தி..!
    "நாட்குறிப்பில் மயிலிறகாய்
    பத்திரப்படுத்த விழையும்
    என் முயற்சிகள் ஆயாசப்படுகின்றன "
    ...எவ்வளவு ஆழமான சொற்கள்..!...ஒரு சந்தேகம். விளையும் ..சரியா?..அல்லது நான் எழுதியுள்ளதைப்போல 'விழையும் '..சரியா?

    பதிலளிநீக்கு
  30. வணக்கம்
    ஆகா..ஆகா இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  31. "Absence makes heart grow fonder - and familiarity brings contempt" என்று பெரியவர்கள் விஷயத்தோடு தானே சொன்னார்கள். என்னை பொறுத்தவரை "கீப் இன் டச்" என்று சொல்லி பிரிந்தவர்களை, பிரிந்து விட்டு இருப்பதே நல்லது. என்றாவது ஒரு நாள், (புது கவிதையில், ரஜினி சொன்னது போல) "நீயாவது நல்லா இருக்கியா" என்று கேட்க ஒரு வாய்ப்பு தானே...
    அருமையான பதிவு, ரசித்து படித்தேன்.

    பதிலளிநீக்கு
  32. பசுமை நிறைந்த நினைவுகளே! - பொதுவாகச் சொல்லும்போது அது தனக்காகச் சொல்லப்பட்டதாக உணரவைப்பதுதான் நல்ல கவிதையின் நிலைத்தன்மை! இதில் நான் என் நண்பர்களை நினைத்துக்கொள்கிறேன் “எந்த ஊரில் எந்தநாட்டில் எங்கு காண்போமோ?” வார்த்தைகளின் அடர்த்தி வரவர அதிகமாகிறது (நல்லது தான்). கவிதையைப் படித்து முடித்து வெளியேறி மீண்டும் வந்து படித்து.. 4ஆவது முறையாக வந்து இப்போதுதான் எழுதறேன். உன் கவிதைகளின் “வள்ளுவன் கையில் கேலக்ஸி“க்கு அடுத்த அழகு இது! “பழகிய காதல் எண்ணிப் பள்ளியில் விழுந்து நித்தம் அழுவதே சுகம் என்பேன்“ என்னும் கண்ணதாசன் நட்புக்கும் சேர்த்தே சொல்லியிருக்கிறான். கவியரசு! அதை உன் வரிகளால் வசப்படுத்தியிருக்கிறாய். யாரங்கே! அந்த சாகித்ய அகாதெமிக் காரர்களை அழைத்து இந்தக் கவிதைக்குப் பரிசளிக்கச் சொல்! நான் சொன்னதாகச் சொல்! (நா வேற என்ன பண்ண முடியும்?)

    பதிலளிநீக்கு
  33. உங்கள் கவிதை ஒரு சில முகங்களை நினைவூட்டியது தோழி.நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  34. கழிவிரக்கத்தைத் தூண்டும்... நிதர்சனத்தை முன்வைக்கும்... நெகிழ்விக்கும் அழகிய கவி வரிகள். பாராட்டுகள் மைதிலி.

    பதிலளிநீக்கு