வெள்ளி, 18 மார்ச், 2016

நம்பிக்கை நட்சத்திரம்.

ஆயிஷா- என் முக்காடு இட்ட பூக்காடே!!
ஒற்றை தூறலுக்குப் பின்
ஒட்டுமொத்தமாய் துளிர்க்கும்
பட்டமரம் போல துளிர்க்கிறது
சிறகுதிர்ந்த என் நம்பிக்கை
சின்னவள் உன் குரல் கேட்டு!

படித்த பெண்கள் இன்று பலருண்டு
உன் போல் படிக்கும் பெண்கள்
தான் சொற்பம்!!

அழகுக்குறிப்பு,ஐந்தாறுவகை கூட்டு
ரங்கோலி மற்றும் ராசிபலன் என
அடுக்கிய பெண்ணிதழ்கள் கண்டு
அயர்ந்திருந்த வேளையிலே
இலக்கியம் பேசும் உன் இனிய குரல் கேட்டு
கண்நிறைய பார்க்கின்றேன்- என்
கரும்பலகையில் விரிந்திருக்கும் வெண்மலர்களை!!

கண்ணுக்கு மைபூசி
கருங்கூந்தல் நெய்பூசி
பெண்ணுக்கு அணிசெய்யும்
பெற்றோர்கள் வரிசையிலே ..

கைகளிலே நூட்கள் தந்து
கருத்தினிலே நுட்பம் விதைத்து
மாறுபட்டு நிற்கும் உன் பெற்றோருக்கு
கூறும் என் நன்றிகள் !!

வெகு சிறியது தான் உன் நூல் அறிமுகம்
ஆனால் அதன் தாக்கம் பாதித்திருக்கிறது
என் வேர் வரை !

நிலோபர், தஸ்லிம்
ஆஷா பானு என
என் செல்லங்கள் அத்தனையும்
கண்டுவிட்டேன் உன் வடிவில் !!

ஒரு சின்ன விடியலை
எனக்குமட்டும் நிகழ்த்திக் காட்டிய
நட்சத்திரமே!! உன்னால்
இனி பெண்கல்வி பேசுவேன்
புதிய தெம்போடு !!

 கூலாங்கற்கள் நூலைஅறிமுகம் செய்யும் ஆயிஷாவின் லிங்க்

பி.கு
அந்த விடியோ வை கேட்ட நொடியே என்னை மலர்த்திய, என் பேனாவை பேசவைத்த ஆயிசாவுக்கு என் அன்புப்பரிசு:)










வெள்ளி, 11 மார்ச், 2016

இதுவும் கடந்து போகட்டும்.

                 கடந்த வெகு சில நாட்களில் மூன்று துயரநிகழ்வுகள். மரணம் நிகழாத வீட்டில் தானியம் வாங்க அனுப்பப்பட்ட அந்த தாய் புத்தனுக்கு முன்னால் நின்ற கணங்களை கண்ணெதிரே நிகழ்த்திக்காட்டுகிறது காலம்.

கவிதை போன்ற படத்தொகுப்புக்களோடு தான் முன்முதலில் எனக்கு அறிமுகமானார் மணிராஜ் தளத்தின் ராஜராஜேஸ்வரி அம்மா. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு பாடல்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த தருணம் "கண்ணுக்குள் பொத்திவைப்பேன் என் செல்லக்கண்ணனை" என்கிற திருமணம் எனும் நிகாஹ் படப்பாடலை g+ சில் பகிர்ந்திருந்தார் ராஜராஜேஸ்வரி மேடம். அந்த ஆண்டுவிழாவில் கோபியர் சூழ ஆடிய சின்ன கண்ணன் சார்பாக அவர்க்கு நன்றி தெரிவித்து செய்தி அனுப்பினேன். இதனை விரைவில் அவர் மறைவார் என நம்பவே முடியவில்லை.

அந்த ஈரம் கூட காயவில்லை அதற்குள் மற்றொரு செய்தி. தோழி இளமதி அவர்களது கணவர் இயற்கை எய்தி விட்டாரென. நாளாயினி, சாவித்திரி என்றெல்லாம் என் அப்பத்தா ஏதேதோ கதை சொல்வார். அதெல்லாம் மொத்தமாய் பெண்ணடிமைத்தனம் என புறந்தள்ளியிருக்கிறேன். ஆனால் தமிழுக்காய் தொண்டு செய்த, ஆத்மார்த்த தம்பதிகளின் வாழ்கையை சமகாலத்தில் அறிந்துகொள்ள முடிந்த போது, இத்தனை ஆண்டுகாலம் கண்துஞ்சாமல், கனமும் சோராமல், காதலும் மாறாமல் தோழி இளமதி அவர்கள் கோமா நிலையில் இருந்த தன் கணவருக்கு செய்த பணிவிடைகள் இன்னும் சில தலைமுறை தம்பதிகள் தெரிந்து கொள்ளவேண்டிய, கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்றே சொல்வேன். அய்யா வரை இது ஒரு இளைப்பாறல் என்றாலும் கூட, அவரை இழந்த தோழியின் துயர், துணையை நேசிக்கும் நெஞ்சங்களுக்கு மட்டுமே புரியும். வார்த்தைகளே வரவில்லை தோழி. முன்பு உங்களுக்கு சொன்னதையே மீண்டும் சொல்கிறேன் தோழி இளமதி "மீண்டு(ம்)  வருக" எமக்காக இல்லாவிட்டாலும்  உம் தமிழுக்காக.

   
பத்து நாட்களுக்கு முன்பு ஒரு குடும்ப நிகழ்வு. கடந்து சென்ற என் கைகளை பற்றி "மைதிலி எப்படி இருக்க? மதி வந்திருக்கிறாளா என தொடங்கி ஒட்டு மொத்தமாய் என் பிறந்த வீடு நலம் விசாரிக்கத் தொடங்கினார் பெரியம்மா. அவர் கஸ்தூரியின் அத்தை. என் அம்மாவை தவிர அந்த காலத்தில் கைக்கடிகாரம் அணிந்து நான் பார்த்த உறவினர் அவர் மட்டும் தான். என் அம்மாவை போலவே படித்தவர். அரசுப் பணியாற்றியவர். ஆசிரியர். என் புகுந்த வீட்டுக்கும் பிறந்த வீட்டுக்கும் இடையான தொலைவுகள் குறைத்த  பாலங்களில் ஒருவர். திடீரென சென்ற வியாழக்கிழமை இயற்கை எய்திவிட்டார். நம்பவே முடியவில்லை.


எத்தனை தற்காலிகமான வாழ்கையை எத்தனை ஆர்ப்பரிப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது. இதுவும் கடந்து போய்விடும். இதுவும் கடந்து போகட்டும்.


ஞாயிறு, 31 ஜனவரி, 2016

கொஞ்சம் selfie English!!!!- part xii

            உங்களில் எத்தனை பேர் selfie எடுப்பீங்க? நம்ம ஆட்களில் பலர் பாஸ்போர்ட் போட்டோ மாதிரி தான் selfie எடுக்கிறோம்.  பொண்ணுங்க உதட்டை குவித்தோ, ஆண்கள் முறைத்தபடியோ இந்த சமுதாயத்துக்கு ஏதோ சொல்ல நினைத்த செல்பி க்களை  கடந்த ஆண்டில் ஒருமுறை கூட பார்த்ததில்லைனா நீங்க போன வருடம் முழுக்க பக்திமலரோ, பங்குச்சந்தையோ மட்டுமே படித்திருக்கிறீர்கள். ஓகே ஓகே. மேட்டர் இது தான் இந்த கொஞ்சம் English முழுக்க selfie terms அப்புறம் கொஞ்சம் selfie tips.

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

வீதியில் சந்தித்த பயணச்சித்தர் !!

                சில நாட்களுக்கு முன் தொடர்பதிவு ஒன்றை தொடங்கி இருந்தேன். பயணம் பற்றிய அந்த பதிவுச் சங்கிலியில் கோர்க்கப்பட்ட வெங்கட் நாகராஜ் அண்ணா, தான் நீண்ட விடுப்பில் செல்லபோவதால் வெளியிடுகிறேன் என உடனே பயணங்கள் முடிவதில்லை பதிவை வெளியிட்டார். பயணம் நன்கு அமைய வாழ்த்துக்கள் என வாழ்த்துச் சொன்ன போது நான் துளியும் நினைத்துப் பார்க்கவில்லை இந்த பயணத்தில் அவரை சந்திப்பேன் என்று!! புதுகை கணினித் தமிழ் சங்கத்தில் தான் முதன் முதலில் வலைசித்தரை சந்தித்தேன். நிலவன் அண்ணா புத்தக வெளியீட்டு விழாவில் புகைபடச்சித்தரின் தரிசனம் கிடைத்தது. இன்று இருபத்திமூன்றாம் வீதி கூட்டத்தில் நம் பயணச்சித்தர் வெங்கட் நாகராஜ் அண்ணாவை பார்க்க முடிந்தது அத்தனை சந்தோசம்.

திங்கள், 18 ஜனவரி, 2016

நமக்கு அணு உலை அவசியமா காம்ரேட்ஸ்?

                        எரிமலை எப்படி பொறுக்கும்........... அந்த நெருப்புக்கு இன்னுமா உறக்கம் ......என அந்த பாடல்வரிகளை கேட்ட நொடி ஒரு சிலிர்ப்பு ஓடி அடங்கும். இது என்ன பாட்டு அப்பத்தா? என்பேன். மில்லுல ஏதோ கம்யுனிஸ்ட் கட்சி கூட்டம் போல என்பார் அப்பத்தா. எங்கள் தெரு ஆண்கள் கொஞ்சம் கேலியாய் கடந்துவிடும் அந்த பாடல் என்னுள் சில தேடல்களை விதைத்தது. 

வியாழன், 7 ஜனவரி, 2016

பயணங்கள் முடிவதில்லை.

               பயணம் ஒரு வாசிப்பு. அல்லது பயணம் ஒரு வாழ்க்கை. பயணம் ஒரு தோழன். அல்லது ஒரு குரு. இப்படி என்ன வேணா சொல்லலாம். ஆனால் பயணம் பிடிக்காது என சொல்பவர்கள் ரொம்ப, ரொம்ப குறைவு. வயதானாலோ, உடல் நிலை சரியில்லாமல் போனாலோ பயணிக்க முடியவில்லையே என்றும் தான் பலருக்கும் இருக்குமே தவிர பயணம் பிடிக்கவில்லை என கருதுவது குறைவு தானே. இவ்வளவு ரசிக்கும் பயணத்தைப் பற்றி ஒரு பேட்டி (என்னைய மதிச்சு யாரு கேட்கப் போறா? so நானே கேட்டுகிட்டேன்:)