வியாழன், 13 அக்டோபர், 2022

மாநிலக்கல்விக்கொள்கைக்கான எனது பரிந்துரை!

 மதிப்பிற்குரிய மேனாள் தலைமை நீதியரசர் மாண்புமிகு திரு.த.முருகேசன் அவர்களுக்கு வணக்கம்!


 ஒரு நீதியரசர் கல்வித்துறையில் கருத்துக் கேட்பது மட்டற்ற மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் அளிக்கிறது. நான் ஒரு ஆசிரியர், வருடத்துக்கு நூறு பிள்ளைகளுக்குத் தாயாக உணர்பவள் எனும் அடிப்படையில் இந்தப் புதிய கல்விக்கொள்கை வடிவமைப்பில்  ஒரு முக்கியமான கருத்தை உங்கள் முன்வைப்பது என் கடமையாகிறது.


 இதுவரை இயற்றப்பட்ட கல்விக்கொள்கைக்கும், இப்போது இயற்றப்படவிருக்கும் கல்விக்கொள்கைக்கும் மிகப் பெரிய வேறுபாடு ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.


 இது வரை 5-10 வயது வரை, 11-15 வயது வரை, 15-17 வயது வரை என வயதை அடிப்படையாகக் கொண்டே வரைவுகள், திட்டங்கள் இயற்றப்பட்டன. ஆனால் இரண்டு ஆண்டுகள் கொரோனா விடுமுறைக்குப் பின் பள்ளி வந்திருக்கும் மாணவன், எங்களிடமிருந்து விடுமுறையில் சென்றவன் அல்ல.


 இப்போதைய சூழலில் மாணவர்கள் மனவயதும் உடல்வயதும் ஒன்றே அல்ல. அந்த நீண்ட விடுமுறை நாட்களில் பெற்றோர் வேலைக்குச் சென்ற பின் பலரும் தன்னை விட வயதில் அதிகமுள்ள அண்ணன் அக்காக்களோடு நேரத்தைச் செலவிட்டிருக்கிறார்கள் என்பது களத்தில் நாங்கள் கண்டுகொண்டது. குழந்தை உடலுக்கு சம்பந்தமில்லாத மன முதிர்ச்சியான பல விசயங்கள் அவர்களுக்கு அறிமுகமாகியுள்ளன. அவர்கள் வகுப்பில் பொருந்த மிகவும் சிரமப்படுகின்றனர்.


 அவர்களை எதிர்கொள்வதில் ஆசிரியர்களுக்கு மூன்று முக்கிய சிக்கல்கள் உள்ளன:


             1. மாணவனது உடல் வயதைக் கொண்டே அவனை அணுகுதல்.


             2. அவனது மனநெருக்கடியை, இந்தச் சூழலை ஏற்கெனவே கையாண்டதில்லை, அனுபவமின்மையால் ஏற்படும் பதற்றம்.


             3. மாணவர்களை வகுப்போடு பொருத்த மகிழ்ச்சியான சூழலை உருவாக்க முடியாமல் மதிப்பெண் மற்றும் பதிவேடுகளுக்காக மாணவர்களது இடர்களுக்கு எந்த பதிலும் தராமல் அவர்களை ஒரு பந்தயத்துக்குத் தயாரிக்க வேண்டிய கட்டாயம்.


 இவை எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு, இதற்கு ஒரு தீர்வை நல்குவதாக இந்தப் புதிய மாநிலக்கல்விக்கொள்கை வர வேண்டும்.


 எனவே மாணவர்களுக்குப் பள்ளிக்கு வர ஆர்வம் ஏற்படும் சூழலை உருவாக்க வேண்டிய நிலையில் உடற்கல்வி வகுப்புகளை முறைப்படுத்துதல், கலை-இலக்கியப் போட்டிகள் நடத்துதல் மட்டுமின்றி மொழிப்பாட வகுப்புகளும் வெறும் ஏட்டுக்கல்வியாக இல்லாமல் மாணவர்களது திறன்களுக்கு வாய்ப்பளிக்கும் இடமாக அமைய வேண்டும். மாதம் ஒருமுறையாவது பல்வேறு மன்றச் செயல்பாடுகள் பாடத்திட்டத்தின் துணையோடு செயல்பட வழிவகை செய்ய வேண்டும்


 இதை மட்டும் என் கோரிக்கையாக வைத்துத் தாய்மை உணர்வோடு அல்லது உளவியல் நோக்கோடு இதைப் பரிசீலிக்குமாறு வேண்டுகிறேன்!


நன்றி!


இப்படியாக என் கருத்தை தெரிவித்துவிட்டேன். இன்னும் இரண்டு நாட்களே உள்ளன (15.10.22). நீங்க அனுப்பீட்டிங்களா??