செவ்வாய், 3 டிசம்பர், 2019

சாதிச் சுவரா? வர்க்கச் சுவரா?
இப்படி கேட்கப்பட்டால் உடனே சில திடீர் சமுகசிந்தனையாளர்கள் தோன்றி தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாதியே இல்லை. அப்படி இருந்தாலும் அதனால் துயரே இல்லை என்ற ரீதியில் முட்டுக்கொடுக்கிறார்கள்.
   
         அது தீண்டாமை சுவர் இல்லை என்றே வைத்துக்கொள்வோம், அது ஒரு வர்க்கச் சுவர் என்பதில் ஐயம் இல்லையே? என்னிடம் பணம் இருக்கு. ஏழை உலகம் அசிங்கமா இருக்கு. நான் 20 அடி உயரத்தில் 3அடி அகலத்தில் பீம் எனப்படும் கம்பிகள், தூண்கள் இல்லாத பலமற்ற பிரமாண்டமா சுவரை எழுப்பி என் வீட்டின் எழில் மிகு தோற்றத்தை பாதுகாப்பேன். அந்த சுவர் நாள்பட்டு சிதிலமடைந்து நிற்கிறது. அதை நான் ஏன் சரி செய்ய வேண்டும்? சுவர் உடைந்துவிடக்கூடிய நிலையில் இருப்பது தெரிந்து ஏன் அருகே குடியிருக்கிறீர்கள்?? என்றெல்லாம் பணம் படைத்தவன் கேள்வி எழுப்பலாம்.

          அது கேட்டட் கம்யூனிட்டி என சொல்லபடுகிற மற்ற ஏரியா ஆட்கள் புழங்க தடை செய்யப்பட்ட, அரசு அனுமதித்த பகுதியா? என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. அது பணம் படைத்த வர்க்கத்தை மனம் நோகச் செய்துவிடும். அது சனநாயக மாண்பில்லை. அந்த பதினேழு பேரும் எனக்கு உறவில்லை. என் சாதி இல்லை. என் வர்க்கமில்லை. அந்த நெருப்பு கக்கும் வீடியோவை பார்த்துவிட்டு என்னால் நிம்மதியாக தூங்கமுடியும் என்றால் நான் மனித இனம் தான் என்றால் மிருகங்கள் என்னை விட உயர்ந்தவை. நான் நான் எனும் நாணை அந்த நெருப்பு பொசுக்கட்டும்.