திங்கள், 9 ஆகஸ்ட், 2021

கற்பிதங்கள் களைவோம்



 ஐந்தாம் வகுப்போ என்னவோ அப்போது அப்பா எனக்கு அக்பர் பீர்பால் கதைகள் ஆயிரம் என்ற புத்தகத்தை கோடை விடுமுறையில் வாங்கித் தந்தார். ஆர்வமாய் அந்த விடுமுறை முழுவதும் அதை வாசித்துத் தீர்த்தேன். 
அதன் பின் பாடத்தில், சிறுவர்மலர், பாப்பாமலரில் தெனாலிராமன், மரியாதைராமனும் கிருஷ்ண தேவராயரும் என எல்லா கதையும் அந்த ஆயிரம் அக்பர் பீர்பால் கதையில் படித்ததாகவே இருக்கக் கண்டேன்.  அதைவிட வியப்பூட்டிய விசயம் ஒன்று. மொகலாயர்கள் ஆட்சி என்கிற பாடம் எனது உயர்நிலைப் பள்ளியில் வந்த போதும் அக்பர் அவையை அலங்கரித்த நவரத்தினங்கள் என அழைக்கப்பட்ட ஒன்பது மந்திரிகளில் தோடர்மாலைத் தான் வரலாறு கொண்டாடுகிறது. பீர்பால் ஒரு சொல்லோடு முடிகிறார். தீபிகா ராகத்தைப் பாடி தீபத்தோடு தீபமாக இணைந்ததாக தொலைக்காட்சித் தொடர் புல்லரிக்க, பாடப்புத்தகத்தில் “தான்சேன் என்ற இசை மேதை அக்பர் அவையை அலங்கரித்தார்” என்று ஒரு வரியில் முடிகிறது தான்சேன் கதை. இப்படியான கற்பிதங்கள் அல்லது அதீதங்கள் எப்படி துளிர்த்தன பலமுறை என எண்ணியதுண்டு. 

        இப்போது கண்ணெதிரே வரலாற்றுத் திரிபுகளை பார்க்க முடிகிறது. அதிலும் கலாம் ஐயா மேல் என்ன தீராத காதலோ! இரண்டு பகிர்வுகள். இரண்டு ஆண்டுக்கு முன் என நினைவு. யாரோ ஒரு அப்பிராணி முகநூல் நட்பு  சின்னஞ்சிறு வயது கலாமும் அவரது தாயாரும் இருக்கும் அரிய புகைப்படம் என ஒன்றை Reshare பண்ண “என்ன சகோ கலாம் அம்மா பொட்டு வச்சிருக்காங்க? “ என நான் கேட்க, அவர் அந்த பதிவை அழித்ததாக நினைவு. போன வருடம் அதே படம் கலாமை வளர்த்த இந்து தாயுடன் என வேறு இடத்தில் பார்த்தேன். இரண்டு ரூபாய் Group. தொலையட்டும் என விட்டுவிட்டேன். அதே படம் சில காலத்துக்கு முன் மோடியும், அவரது ஏழைத்தாயும் என பகிரப்பட்டது.

இப்போ லேடஸ்டா அரிய பழைய புகைப்படங்களின் தொகுப்பு ஒன்று வலம் வருகிறது. அதில் ஊடுபாவாக இரண்டு போலிக்கருத்துகள் கலக்கப் பட்டிருக்கிறது. அறியாமல் தான் நம் நண்பர்கள் பலரும் பகிர்கிறார்கள். பேப்பர் போடும் பையனாக இளவயது கலாம் எனும் ஒரு படம். அந்த பேப்பர் போடும் பையன் நவீன சைக்கிள் வைத்திருக்க Google reverse image search செய்தால் அது Fake என ஆதாரத்தோடு வருகிறது. ஏன் இந்த வேலை!  எதற்காக இப்படியான திரிபுகள்!! மற்றொரு போலித்தகவல் என்னவென கேட்கவில்லையே! ஜெயலலிதா அவர்களுடன் எழுத்தாளர் சிவசங்கரி இருக்கும் படத்தை சிறுவயது நிர்மலா சீதாராமன் என்கிறார்கள்! இது இட்லினா சட்னியே நம்பாது மொமண்ட்!

         இப்போ என்னதான் சொல்லவர? என இங்க வரை கேட்குது. அதாச்சும் "அவசரப்பட்டு பகிர்ந்து வரலாற்றுத் திரிபுக்கு நம்மை அறியாத துணை போகாதிருப்போம்!" டாட்