கடந்த வெகு சில நாட்களில் மூன்று துயரநிகழ்வுகள். மரணம் நிகழாத வீட்டில் தானியம் வாங்க அனுப்பப்பட்ட அந்த தாய் புத்தனுக்கு முன்னால் நின்ற கணங்களை கண்ணெதிரே நிகழ்த்திக்காட்டுகிறது காலம்.
கவிதை போன்ற படத்தொகுப்புக்களோடு தான் முன்முதலில் எனக்கு அறிமுகமானார் மணிராஜ் தளத்தின் ராஜராஜேஸ்வரி அம்மா. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு பாடல்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த தருணம் "கண்ணுக்குள் பொத்திவைப்பேன் என் செல்லக்கண்ணனை" என்கிற திருமணம் எனும் நிகாஹ் படப்பாடலை g+ சில் பகிர்ந்திருந்தார் ராஜராஜேஸ்வரி மேடம். அந்த ஆண்டுவிழாவில் கோபியர் சூழ ஆடிய சின்ன கண்ணன் சார்பாக அவர்க்கு நன்றி தெரிவித்து செய்தி அனுப்பினேன். இதனை விரைவில் அவர் மறைவார் என நம்பவே முடியவில்லை.
அந்த ஈரம் கூட காயவில்லை அதற்குள் மற்றொரு செய்தி. தோழி இளமதி அவர்களது கணவர் இயற்கை எய்தி விட்டாரென. நாளாயினி, சாவித்திரி என்றெல்லாம் என் அப்பத்தா ஏதேதோ கதை சொல்வார். அதெல்லாம் மொத்தமாய் பெண்ணடிமைத்தனம் என புறந்தள்ளியிருக்கிறேன். ஆனால் தமிழுக்காய் தொண்டு செய்த, ஆத்மார்த்த தம்பதிகளின் வாழ்கையை சமகாலத்தில் அறிந்துகொள்ள முடிந்த போது, இத்தனை ஆண்டுகாலம் கண்துஞ்சாமல், கனமும் சோராமல், காதலும் மாறாமல் தோழி இளமதி அவர்கள் கோமா நிலையில் இருந்த தன் கணவருக்கு செய்த பணிவிடைகள் இன்னும் சில தலைமுறை தம்பதிகள் தெரிந்து கொள்ளவேண்டிய, கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்றே சொல்வேன். அய்யா வரை இது ஒரு இளைப்பாறல் என்றாலும் கூட, அவரை இழந்த தோழியின் துயர், துணையை நேசிக்கும் நெஞ்சங்களுக்கு மட்டுமே புரியும். வார்த்தைகளே வரவில்லை தோழி. முன்பு உங்களுக்கு சொன்னதையே மீண்டும் சொல்கிறேன் தோழி இளமதி "மீண்டு(ம்) வருக" எமக்காக இல்லாவிட்டாலும் உம் தமிழுக்காக.
பத்து நாட்களுக்கு முன்பு ஒரு குடும்ப நிகழ்வு. கடந்து சென்ற என் கைகளை பற்றி "மைதிலி எப்படி இருக்க? மதி வந்திருக்கிறாளா என தொடங்கி ஒட்டு மொத்தமாய் என் பிறந்த வீடு நலம் விசாரிக்கத் தொடங்கினார் பெரியம்மா. அவர் கஸ்தூரியின் அத்தை. என் அம்மாவை தவிர அந்த காலத்தில் கைக்கடிகாரம் அணிந்து நான் பார்த்த உறவினர் அவர் மட்டும் தான். என் அம்மாவை போலவே படித்தவர். அரசுப் பணியாற்றியவர். ஆசிரியர். என் புகுந்த வீட்டுக்கும் பிறந்த வீட்டுக்கும் இடையான தொலைவுகள் குறைத்த பாலங்களில் ஒருவர். திடீரென சென்ற வியாழக்கிழமை இயற்கை எய்திவிட்டார். நம்பவே முடியவில்லை.
எத்தனை தற்காலிகமான வாழ்கையை எத்தனை ஆர்ப்பரிப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது. இதுவும் கடந்து போய்விடும். இதுவும் கடந்து போகட்டும்.


