திங்கள், 2 பிப்ரவரி, 2015

வயலின் - என் நிறைவேறாத காதல்.

                      உடலும் , மனமும் சோர்ந்து போயிருந்த ஒரு மாலையின் முடிவில், இரவின் தொடக்கத்தில் எப்போதடா இரவு உணவை முடித்து, படுக்கையில் சாயலாம் என சமையல் முடித்து,இரவு உணவை எடுத்து வைத்துக்கொண்டிருந்தேன். ஹாலுக்கு போனவளை, அங்கேயே நிறுத்தி வைத்தது அந்த இசை. செல்பேசிக்கு அந்த பாடலை தரவிறக்கி பாட கத்துகொடுத்தேன். அன்று தூங்க வெகு நேரமானது.

                 

                ஒரு ஆளற்ற சப்வே உள்ளே செல்லும் அந்த இளைஞன் தன் வயலினை எடுக்கிறான். மீட்டத்தொடங்குகிறான். விழி மூடிக்கொண்டேன். முன் மழையின் அறிகுறியாய் மென் சாரலாய் தொடங்கி, பின்மதிய குளமொன்றில் கல்லெறிந்த சலன அலைகளில் பட்டுத்தெறிக்கிற ஒளியாய் விரிந்து, இருள் குடித்து ஒளி உமிழும் மெழுகாய் கரைந்தது, நினைவெங்கும் நிறக்குழம்பு பூசி, பைய என் நரம்பெல்லாம் மீட்டி, கண் கசிய, கேட்டுகொண்டே இருந்தேன். நோட் எழுதிய, இசைத்த, ரசனையை அதை தன் படத்தில் பயன்படுத்திய அந்த ஜீவன்கள் பயணிக்க நல்ல பாதையும், ஓய்வெடுக்க குளிர் நிழலும் என்றும் கிடைக்கட்டும். அந்த இசையை கேட்ட அந்த நொடிக்கு பின் உலகமே மெல்ல சுற்றியது. அன்பு மயமாய் இருந்தது. காணும் பொருளெல்லாம் எளிமையின் அழகு  பூசி நின்றது. மெல்ல காற்றில் பறந்துகொண்டிருந்த என் மன இறகு என் கைசேர வெகு நேரமானது. பிசாசு படத்தின் அந்த வயலின் நோட்டை நீங்களும் கேட்டுபருங்களேன்.

                  வயலினோடு எனக்கான காதல் ஏற்பட்டது என் பதினெட்டு வயதில். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து, மதியங்களை தள்ளமுடியாத ஒரு கோடையில் பொதிகை தொலைகாட்சியில் கற்பூர முல்லை என்றொரு பசில் படம் பார்த்துகொண்டிருந்தேன். ஒரு பாடல்  காட்சியில் அமலா இருளும், ஒளியும் விளையாடும் ஓர் அறையில் அமர்ந்து, வயலினை வாசிக்கத்தொடங்குவார். அந்த இசையும், காட்சியும் இன்றுவரை நினைவுக்குள் தித்திக்கிறது. அப்போது தொடங்கியது வயலின் இசை மீதான காதல். இப்போதுவரை நான் ரசிகை மட்டுமே. வயலின் கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆசைக்கு முன்பு வாய்ப்பில்லை, இன்றோ பொழுதில்லை. மெல்ல என் சோம்பல் அந்த ஆசையில் மண் மூடினாலும், சிறுகுழந்தையாய் சிணுங்கும் என் மனதிற்கு அவ்வவ்வபோது மிட்டாய் போல சில வயலின் இசை தந்து சமாதானம் செய்து கொள்கிறேன்.

        என் பால்யங்களில் நினைவில் தங்கிவிட்ட மற்றொரு வயலின் இசை, இன்றுவரை வயலின் என்றாலே எல்லோராலும் முன்மொழியப்படும் கமல் நடனமாடிய படியே ரேவதியிடம் காதலை சொல்லும் புன்னகை மன்னன் இசை தான். துயரின் முடிவில், காதலின் உச்சில், அன்பின் ஆழத்தில் பெருங்கருனையில், நீண்ட பிரிவுக்கு பின்னான சந்திப்பில், கசிகிற விழி நீர்போல நம்மை சுகவலி கொள்ள செய்யும் இந்த how to name it நான் விரும்பும் மற்றொரு தேவகானம். எனக்கு இசை பற்றித் தெரியாது. ராகங்கள், தாளங்கள் அறிந்தவள் இல்லை. ஆனால் இசையின் மொழியை புரிந்து கொள்ள, ஆன்மாவை கூர்தீட்டி, அறிவை தாலாட்டி, அறையின் மற்றொரு பொருளை மாறி, கசிந்துருகும் என் போலும் ரசிகர்கள் தான், அந்த இசையின் காதலர்கள் தான் அதன் செல்ல முத்தத்தை பெற்றபடி இருப்போம். நிறைவேறாத காதல் மிக அழகானது என்பார்கள். என் வரையில் என் நிறைவேறாத வயலின் காதல் மிக மிக அழகானதே.


     

என்னிடம் இருந்த ஆகச்சிறந்த பரிசை உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன். இந்த வாரம் மிக இனிமையாக அமையட்டும். நன்றிநண்பர்களே!

32 கருத்துகள்:

 1. ஆம் ஆகச் சிறந்த பரிசுதான்
  தங்கள் வயலின் இசை மீதான ஆழமான
  விருப்பத்தை அற்புதமாகப் பதிவு செய்தத்ம்
  அற்புதமான காணொளிகளை இணைத்துக் கொடுத்ததும்
  மனம் கவர்ந்தது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. தங்களது பதிவு எங்களை புதியதொரு உலகிற்கு அழைத்துச்சென்றுவிட்டது.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  சகோதரி

  இசையால் வசமாகத இதயம் எது... என்றபாடல்தான் நினைவுக்கு வந்தது... ..வீடியோவையும் இரசித்தேன் மிக அருமையான கருத்தை சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 1

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. ஆஹா !அமைதியான அழகான இசைக்கோப்புகள் . தங்களுக்கு எப்படி வயலின்மீது தனி ஈடுபாடோ , அதேபோல் புல்லாங்குழல் , பியானோ , ஐரிஷ் இசையின்மீது எனக்கு தனி ஈடுபாடு உண்டு . பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா .

  பதிலளிநீக்கு
 5. கற்பூரமுல்லை!..
  இனிய பாடலைக் கேட்டதும் மகிழ்ச்சி..
  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 6. மேடம் மைதிலி,

  ரசனை கூடிய எழுத்து. கவிதை போன்ற சொற்கள். நீங்கள் கேட்ட பாடல்களைவிட அந்த இசை அனுபவம் படிக்க இன்பமயமாக இருக்கிறது.

  ----அந்த இசையை கேட்ட அந்த நொடிக்கு பின் உலகமே மெல்ல சுற்றியது. அன்பு மயமாய் இருந்தது. காணும் பொருளெல்லாம் எளிமையின் அழகு பூசி நின்றது.-----


  இசை ஒன்றிற்கே இந்த மகா வலிமை உண்டு. அதுவும் பிசாசு படத்தின் அந்தப் பாடலும் நெஞ்சத்தை கரைக்கும் வயலின் இசையும் என்னையும் வீழ்த்தியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் மிகவும் ரசித்துக் கேட்ட தமிழ்ப் பாடல் இது. எப்படி காக்கை சிறகினிலே நந்தலாலா பாடல் ஒரு ஏகாந்தமோ அதேபோல இந்தப் பாடலும் ஒரு வாரத்தைகள் மீறிய சுகம். பாராட்டுக்கள் . இளையராஜாவின் இசையிலும் வயலின் சில சமயங்களில் போதை தரும். உண்மைதான். மறுப்பதற்கில்லை.

  ஒரு தகவல். vivaldi என்றொரு மேற்கத்திய செவ்வியல் இசைஞர் இருக்கிறார். (இப்போது இல்லை.) அவரது வயலின் இசையைக் கேட்டால் நீங்கள் புன்னகை மன்னன் how to name it பற்றிய முடிவுகளை மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. எனக்கு அதுதான் நடந்தது.

  ----நிறைவேறாத காதல் மிக அழகானது என்பார்கள். என் வரையில் என் நிறைவேறாத வயலின் காதல் மிக மிக அழகானதே.----

  வார்த்தைகளால் விவரிக்க முடியாத இசையும் அதே போல அழகானதுதான்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. //விழி மூடிக்கொண்டேன். முன் மழையின் அறிகுறியாய் மென் சாரலாய் தொடங்கி, பின்மதிய குளமொன்றில் கல்லெறிந்த சலன அலைகளில் பட்டுத்தெறிக்கிற ஒளியாய் விரிந்து, இருள் குடித்து ஒளி உமிழும் மெழுகாய் கரைந்தது, நினைவெங்கும் நிறக்குழம்பு பூசி, பைய என் நரம்பெல்லாம் மீட்டி, கண் கசிய, கேட்டுகொண்டே இருந்தேன்//
  உங்கள் வர்ணனையை படிக்கும் போதே இசையை நீங்கள் எந்தளவு ரசித்து இருக்கிறீர்கள் என்பது புரிகிறது

  பதிலளிநீக்கு
 8. உங்களுக்கு மட்டுமா !!
  எனக்கும் தான்
  அந்த நிறைவேறாத காதல்
  வயலின் மீது.

  க கா ரி ரி என்று மோகன வர்ணம் பாட துவங்கும்போது என் வயலின் வாத்யாரம்மா ( அந்தக் காலத்திலே மிஸ் என்று சொல்ல மாட்டோம்) அவர்கள் கணவர் வேறு ஊருக்கு டிரன்ஸ்பர் .ஆனதால்,

  1958 ல் எனது வயலின் வாசிப்பும் நின்று போயிற்று.
  அம்மாவுக்கு வயலின் நன்றாக தெரியும் என்றாலும் எட்டு பிள்ளைகளை சமாலிப்பபதே கஷ்டம்.

  பதிலளிநீக்கு
 9. மிக இனிமையான பதிவு தோழி. இவ்வாசை எனக்கும் நிறைவேறாமல் போய்விட்டதொன்று. முதல் பாடல் நானும் கேட்டேன். இன்னமும் கேட்டுக்கொண்டிருக்கேன். நல்லதொரு இசை.நன்றி.

  பதிலளிநீக்கு
 10. அருமையான பதிவு சகோதரி! பிசாசு படம் பார்த்தோம் இந்த இசையை ரசித்தோம்....உங்களைப் போலவே.....படத்தையும் ரசித்தொம்...இசையை ரசிக்க ராகம், தாளம், மொழி, நாடு எதுவுமே வேண்டாம். எல்லை கடந்த ஒன்று. இந்த உலகையே இணைக்கும் ஒன்று. ரசிக்கும் மனம் இருந்தால் போதும்...

  கீதா: கை கொடுங்கப்பா ...சேம் பிஞ்ச்....ஸ்வீட் பார்சல்....அட என்னைப் போலவா நீங்களும்!!! ம்ம் எனக்கும் அந்த ஏக்கம் உண்டு....பிசாசு படத்தில் வரும் இந்த இசை அருமை..மனதை அப்படியே கிடக்கச் செய்த ஒன்று....எங்கேயோ பயணிக்கச் செய்த ஒன்று....அது ஏதோ ஒரு பழைய பாடலை நினைவூட்டினாலும்....அந்த ஆராய்ச்சி முக்கியம் இல்லை எனத் தோன்றியது.... நல்ல இசையை ரசிப்போமே என்று .....ஹொவ் ரு நேம் இட் அதுவும், அயோ புன்னகை மன்னன் அந்த வயலின் இசை மிகவும் பிடித்த ஒன்று....அந்தப் பீரியடில் பைத்தியமாய் இருந்தென் என்று சொல்லலாம்...ஆனால் அப்போது கேட்க வழி கிடையாது.....இப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கின்றேன்....முடிந்தால் லால் குடி ஜெயராமின் தில்லானா கேட்டுப் பாருங்கள் கர்னாடக இசை பிடிக்கும் என்றால்....அதன் பின் வீணை சிட்டிபாபுவின் வெட்டிங்க் பெல்ஸ் எனும் ஆல்பம் கேட்டுப் பாருங்கள்....அது வீணையில் வெஸ்டர்ன் வாசித்துக் கலக்கி இருப்பார் ..ரசிப்பீர்கள்.....

  பதிலளிநீக்கு
 11. பிசாசு படத்தின் வயலின் இசைப் பாடலை அனுபவித்த விதத்தை எழுதியிருக்கற விதம் எக்ஸலண்ட் தங்கச்சி. அந்த வயலினை எவ்வளவு தூரம் ரசிச்சிருக்கேன்றத 3 டைமன்ஷன்ல எங்களுக்கு உணர்த்திட்ட... கைகுடு முதல்ல... கீழ நான் தந்திருக்கற வயலின் இசையக் கேட்டுப்பாரு... என் மாணவப் பிராயத்துல என்னை மயக்கி, ஸ்தம்பிக்க வெச்ச இசை இது.
  https://www.youtube.com/watch?v=y9oIYXmHQIc

  பதிலளிநீக்கு
 12. ஆமாம் உங்களின் வயலின் காதல்மிக அழகானதே நானும் த்ரிஸ்டிப்பொட்டு வைக்கிறேன், அதில் மற்றொரு ஏக்கமும்
  மறைந்துள்ளது கண்டு மனது கனமானது(அம்மா..)

  பதிலளிநீக்கு
 13. முதலும்,மூன்றும் - வீடியோ கானம் சுகமாய் என்னுள்ளத்தை முத்தமிட்டது. 2 வது வீடியோ திறக்கவில்லை. யூடியூபில் காண்கிறேன். முன்பு படம் வந்தபோது பார்த்தது. செல்கிறேன் காண்க.

  உங்கள் இசையின் சுவாசம் அழகாய் ஒலிக்கக் கேட்டேன்.

  இசை ரசிகையின் பதிவு இனிக்கக் கண்டேன்.

  தம 4

  பதிலளிநீக்கு
 14. இசைக்கு மயங்காதோர் உண்டோ பூமியிலே... இசை மொழி பேதமற்றது சகோ,,,,, அருமை.

  பதிலளிநீக்கு
 15. உங்கள் எழுத்தில் நான் விரும்பும் பரிச்சயப்பட்ட நடையொன்றின் பாதிப்புத் தெரிகிறது பிரம்மையோ உண்மையோ தெரியவில்லை.
  காணொளி திறக்கவில்லை.
  பிசாசு பார்க்க வில்லை.
  எழுத்தில் விரிந்த படங்களைக் கண்டேன்.
  நன்றி.
  த ம 5

  பதிலளிநீக்கு
 16. வயலின் நாயகனாய் காதுக்கு வரும் இன்னொரு அருமையான பாடல் ..பாடும் நிலா பாலுவின் ,வான் நிலா நிலா ,அல்ல உன் வாலிபம் நிலா :)
  த ம 6

  பதிலளிநீக்கு
 17. எனக்குச் சின்ன வயதிலிருந்தே வயலின், புல்லாங்குழல் என ஏதாவது ஒரு இசைவழியும் கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்ள நினைத்த ஆசை இன்று வரை நிறைவேறவெ இல்லை. (ச்சும்மா “வயலின்“ என்று தாளில் எழுதி வாசித்துக்கொள்வதோடு சரி!) ஆனால், நீ சொன்னதுபோல “துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்த்த“ பாடல்களில் மயங்கி என் வேலைகளை மறந்தது உண்டு. இன்று வரை அந்த மயக்கம் தெளியவும் இல்லை. எனவே தான் திட்டிக்கொண்டேயானாலும் சூப்பர் சிங்கர் இசைத் தொடரை இயன்ற வரை பார்க்கத் தவறுவதில்லை. இன்று கூட யார்யாருக்கு என்ன விருது கிடைக்கும் என்று நான் சொன்னவர்க்கே விருது அறிவிக்கப் பட்டதை என் மனைவி வியப்பாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார். நிற்க.
  இசையின் இனிய தாக்கத்தை நீ வர்ணித்த விதமும் இசையாக இருந்தது. சும்மாவா சொன்னார்கள் “நுண்கலைகள்“ என்று! நன்றிம்மா அப்படியே ஒரு த.ம.1

  பதிலளிநீக்கு
 18. டியர், என்ன ஒரு எழுத்தாக்கம்!! ஆகச் சிறந்த பரிசுதான்..இசையில் மூழ்கியதை விட உங்கள் எழுத்தில் மூழ்கிவிட்டேன்..வாழ்த்துக்கள் அன்புத்தோழி! :)
  த.ம.8

  பதிலளிநீக்கு
 19. ம்ம் எனக்கும் இந்த ஏக்கம் இருக்கு ..எங்க குடும்பத்தில் அனைவரும் வயலின் கிட்டார் கீ போர்ட் ..நான் மட்டும் இவற்றின் பக்கம் போகல ...பிசாசு பாடல் எனக்கு ரொம்ப விருப்பம் ..வான் நிலா பாட்டில் துவக்கத்தில் வருமே வயலின் இசை அதும் பிடிக்கும் .

  பதிலளிநீக்கு
 20. நீங்க பெரிய வயலின் violin இசை ரசிகைனு மட்டும் விளங்குது. காரிகன், விஜு போன்றவர்கள் உங்க அலைவரிசையில் இருப்பாங்கனு நினைக்கிறேன்.

  இசை பத்தி பேசும்போது அவர்களும் எங்கேயோ போய்விடுவார்கள்.

  அலை வரிசைனு பார்த்தால் நீங்கள் மூவரும் ரேடியோ வேவ் னா நான் காஸ்மிக் ரே என்பது மட்டும் விளங்குது. :)

  பதிலளிநீக்கு
 21. ரசித்தேன். என்ன ரசனை! எனக்கு அப்படி நிறைவேறாத ஆசை கிடார் வாசிப்பது!

  நான் சொல்ல நினைத்த லால்குடி தில்லானாவை கீதா அவர்கள் சொல்லி விட்டார்கள்.

  வயலின் இசை என்றதும் எனக்கு இன்னொரு வயலின் பிட் நினைவுக்கு வருகிறது. அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்கும், ராதாவும் காதல் சொல்லிக்கொள்ளும் இடம்.

  பதிலளிநீக்கு
 22. மூன்று காணொளிகளுமே மனதை மயக்கும் இசையை விருந்தாக்கி படைத்தன சகோதரியாரே
  நன்றி

  பதிலளிநீக்கு
 23. ஆகா....! ஆகா...!

  அவ்வப்போது பரிசை வழங்குங்கள்...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 24. ஆஹா வயலின் இசை ரசிகையா ம்.ம்.ம் நானும் கண்ணை மூடி ரசித் தேனா காற்றில் மிதப்பது போலவே உணர்ந்தேன் மிக்க நன்றிடா. ஆனாலும் இன்னும் not too லேட் ஆசையை நிறைவேற்றலாம் காலம் இன்னும் நிறையவே இருக்கிறதே கற்றுக் கொள்ள அம்மு வாசிக்க கேட்க ஆசை தான்.ம்..ம்.. அதை விட ரசித்தது அதற்கு தந்த வர்ணனை அப்பப்பா என்ன வார்த்தை ஜாலம் வரிசையாக அசந்து விட்டேன் அவ்வளவு அழகு அனைத்தும். தொடர வாழ்த்துக்கள் அம்மு !

  பதிலளிநீக்கு
 25. காலையில் நான் போட்ட கமெண்ட் காணோமே... ஆனால் பின்னூட்டங்கள் என் மெயில் பாக்ஸுக்கு சரியாக வருகின்றன!

  அப்புறம் ஒரு விஷயம்.

  நான் படிக்கும் தளங்களில் அனைத்திலும் தமிழ்மண வாக்கு தவறாது அளித்து விடுவேன்.

  :)))

  பதிலளிநீக்கு
 26. இசைபோல் இனிமை.ஒவ்வொருவருக்குள்ளும் இது போன்ற காதல் கனன்று கொண்டே இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 27. ரொம்பவும் ரசனையோடு ஒரு கவிதை போல உங்கள் உணர்வுகளை எழுதியிருக்கிறீர்கள்! எனக்கும் இது நிறைவேறாத காதல் தான்! கால்வாசிப்பயிற்சியைத்தாண்டிய நிலையில் வலது கையில் வலி வர பயிற்சியையும் விட வேண்டியதாயிற்று! இருந்தாலும் மனசின் ஏக்கம் அவ்வப்போது உங்களை மாதிரி வந்து மறையும்!!

  பதிலளிநீக்கு
 28. ஆஹா என்னவொரு ரசனை உங்களுக்கு.....

  இசையில் மூழ்கி நானும் இன்புற்றேன்....

  நன்றி.

  பதிலளிநீக்கு
 29. ஆஹா... இசையின் வசமாகா இதயம் எது? இளையராஜாவின் how to name it மற்றும் nothing but wind இரண்டும் மனமுருக்கும் மாயம். பகிர்வுக்கு நன்றிப்பா மைதிலி.

  பதிலளிநீக்கு
 30. மைதிலி அவர்களே

  உங்களின் ரசனையான நடை படிப்பதற்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இளையராஜாவின் இசையையா ரசித்து புளகாங்கிதம் அடைந்தீர்கள் !? இணையத்தில் இளையராஜாவைப் பற்றி எழுதினாலோ அவர் இசையை ரசித்தாலோ பாவமான காரியமாக நினைக்கும் பலரை நீங்கள் சந்திக்கவில்லைபோல் தெரிகிறது. இளையராஜாவின் வயலின் இசை கேட்டால் ' மதியீனம், மடத்தனம், கேடுகெட்ட தனம் ' என்று கூவ ஒரு கூட்டம் இருக்கிறதே! அவர்களில் சிலர் வந்திருக்கிறார்கள் . கருத்துரையும் இட்டிருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 31. மூன்றையும் சேமித்துக் கொண்டேன். நன்றி மைதிலி. இனிய சிந்தனை.

  பதிலளிநீக்கு