ஞாயிறு, 6 ஜூன், 2021

சொல்லேர்_ பழைய சொல், புதிய தேடல்


மீம், ட்ரோல் MCக்கள் காலம் இது. இதற்கு எல்லாம் பல ஆண்டுகள் முன்பே  அமுல் நிறுவனம் ஆங்கில  செய்தித்தாள்களில் அன்றைய சென்சஷன் செய்தியை அமுல் பாப்பாவை வைத்து  பட்டர் விளம்பரத்துக்கு ஏற்றவாறு கார்ட்டூன்கள் வெளியிடும். அதைப் போல  கடந்த இரண்டு ஆண்டுகள் பரபரப்பாக பேசப்பட்ட செய்திகள் சிலவற்றில் இடம்பெற்ற முக்கிய சொற்களின் வேர்ச்சொல் தேடும் ஆராய்ச்சி தான் சொல்லேர். தீக்கதிர் வண்ணக்கதிரில் தொடராக வந்த சொற்களில் ஐம்பது சொற்களை எடுத்து தொகுக்கப்பட்டது இந்நூல். வழக்கமாக ஆங்கிலச் சொல்லின் பொருளையும் வேர்ச்சொல்லையும் மட்டுமே தேடிப் பழகிய எனக்கு இந்த நூலில் ஆர்வம் வர காரணம் ....
         வானம்பாடிகள் காலம் தொட்டு எழுத்துலகில் புதுகை படைப்பாளர்களின் பங்கு தனித்துவமானது.  புதுகையின் எத்தனை எத்தனையோ சூப்பர்ஸ்டார் படைப்பாளர்கள் மத்தியில் இவர் ரா.பார்த்திபன் பாணி  புதிய பாதை படைப்பாளி அண்டனூர் சுரா அவர்கள். அவர் புனைவுகள் எழுதினால் கூட அது ஒரு உண்மை நிகழ்வின் இருவர் திரைப்பட பாணி மேக்கிங் ஆகவே அது இருக்கும். அப்பல்லோ, எண்வலி சாலை என ஆழமான அழுத்தமான இவரது வேறு படைப்புகள் தந்த அனுபவத்தை நம்பி வாசிக்கத்தொடங்கிய என் ஆர்வம் சொல்லேரிலும் வீண்போகவில்லை.
         ஐயன் திருவள்ளுவர் என சனதான கோட்டையில் தமிழ் ஈட்டி எரிந்து தான் தொடங்குகிறது புத்தகத்தின் முதல் வேர்ச்சொல் தேடல். பின் தொடரும் ஒவ்வொரு பக்கமும் இந்தச் சொல்லை ஏன் இத்தனை நாள் நாம் பயன்படுத்தவில்லை! இதை ஏன் பயன்படுத்தினோம் என்றெல்லாம் மலைக்க வைக்கிறது. பாராளுமன்றம் ஏன் நாடாளுமன்றமானது? பத்தரை மாற்று தங்கம் என்கிறோமே அப்டின என்ன? Surfexcel க்கும் Tide க்கும் என்ன வித்தியாசம்? இன்னும் தர்பார், GST, மோடி என பல தெறிப்பான தேடல்கள். அட! மாட்டுத்தாவணி னா இது தானா? பிலாக்கணம் னு எவ்ளோ ஈஸியா சொன்னோமே அப்டின்னா இது தானா? என வருந்தவும் வைக்கிறது. நல்ல தமிழ் பேரா சொல்லுங்க என கேட்கும் இளவல்களுக்காக ஆர்கலி, வயமா என ரெண்டு பெயர்களும் கிடைத்தது.  தலித், துவரி, குதலை, தீனபந்து என பல  தலைப்புகள் நுணுக்கமாக நோட்ஸ் எடுத்துகொள்ள சொல்கின்றன. ஐ, கொந்தல் என்ற ரெண்டே தலைப்புகள்  மட்டும் முன்பு அள்ளி அள்ளி வழங்கபட்டிருக்கும் பிற தலைப்புக்கான தகவலை, உழைப்பை கேட்கின்றன. மற்றபடி நூற்றைம்பது ருபாய் விலையில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் இந்நூல் தேநீரோ அரசியலோ இல்லாமல் ஒரு நாளையும் கழிக்க முடியாத எவர்க்கும் சுவையான அனுபவமாக இருக்கும். வாங்கி பாதுகாக்க வேண்டிய நூல் "சொல்லேர்"