ஞாயிறு, 17 மே, 2020

வேள்பாரி - கற்றதும் பெற்றதும்

 எல்லோர்க்கும் பொதுவான மழை தான். ஆனால் நனைத்தல் அவரவர்கானது இல்லையா! வாசித்த எல்லோரும் உச்சி நுகர்ந்த வேள்பாரியை என் சிற்றறிவின் எல்லையில் நின்று வாசித்த அனுபவத்தை பகிர்த்தல் பொருட்டு என் இயல்பில் அல்லாத சற்றே நீளமான இந்த பதிவு. 

வேள்பாரி பல துறையில் ஆய்வு மேற்கொள்ள வழிவகுக்கும் அறிவுக்களஞ்சியம்.  சங்கப்பாடல்கள் வாசிப்பால் அது வசப்பட்டதென முன்னுரையில் ஆசிரியர் தெளிவாகவே குறிப்பிடுகிறார். எதை சொல்கிறார் என்பதைவிட யார் சொல்கிறார் என்பதில் கூடுகிறது சொல்லின் பொருள்.
 ஆசிரியர் வழி நின்று நோக்குங்கால் மன்னராட்சிக்கு எதிரான கலக்காரனின் குரலாக, கம்யூனிச ரேகை நூலெல்லாம் பரந்து விரிகிறது. வேப்பம்பூ யாருக்கானது தெரியுமா என்ற வினவும் கபிலரிடம், அது சிற்றெறும்புக்கானது என விடை தந்து மூவேந்தரின் சக்கரத்தில் முதல் அச்சை அசைக்கிறான் நீலன். அதன் தொடர்ச்சியாக வேப்பம்பூவை வயல் நண்டின் கண்களோடு வரும் உவமை ஐங்குறுநூறு களவன் பத்து பாடலின் சாரம் என்பது ஒரு கூடுதல் தகவல்.

நெருப்பில் சுடப்பட்ட உணவு ஆண் உணவென்றும், அவசரத்தின் குறியீடென்றும், நீரில் வெந்தவை பெண் உணவென்றும், பக்குப்பட்டதென்றும் ஓரிடத்தில் கபிலர் குறிப்பிடுகிறார். தோப்புகளில் காடைகறி சுட்ட சித்தப்பாக்கள் முதல் இன்று பார்பிக்யூ பார்ட்டி வரை ஆண்கள் சுட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். 

 நூல் ஆசிரியர் கல்வெட்டுகள் பற்றிய உரை ஒன்றில் இதுவரை தமிழகத்தில் கிடைத்ததிலேயே மிகப்பழமையான கல்வெட்டொன்றில் இடம் பெற்ற பெயர் அந்துவன் என குறிப்பிட்டார். வரலாற்றில் தமிழ் எழுத்துருவின் தொன்மையைக்குறிக்கும் அந்த பெயரை  அவர் தலைமை கனியனுக்கு சூட்டியது எத்தனை ஆழமான சிந்தனை இல்லையா!
நீலமும் மஞ்சளும் கலந்த முயல் காது வடிவ முருகன் காட்டிய ஏழிலைப்பாலை ஈர்த்த அளவு ஏன் வள்ளி வியந்து அழைத்துக்காட்டிய  நரந்தம் புல் பலரை ஈர்க்கவில்லை! அதைபற்றிய விவரிப்புகள் சற்று குறைச்சல் என்பதாலோ! உண்மையில் நம்மில் பலரும் நரந்தம்புல்லை முகர்ந்திருக்கிறோம். அவை இப்போது லெமன் கிராஸ்(Lemon grass) என்ற பெயருடன் எழுமிச்சை சேர்ப்பதாக சொல்லப்படும் எல்லா நறுமணப்பொருட்களோடும் சேர்க்கப்படுகிறது. இங்கே சித்தன்னவாசல் அருகே கொஞ்சம் இருக்கிறது. கேரளாவில் நிறைய இடத்தில் காணக்கிணைக்கிறது.  புல்லைப்பறித்து கசக்கி முகர்ந்தால் எழுமிச்சை மணம் வரும். புத்துணர்ச்சியாக இருக்கும். இப்படி சின்ன சின்ன குறிப்புகளால் அசரவைக்கும் நூல் எங்கும் என் எண்ணம் நிலைகுத்தி நின்றது இரண்டு கருத்துகளில் தான். ஒன்று கற்றல் மற்றொன்று பெண்ணியம்.
 பொதுவாக மொழி கற்றவர்களுக்கு கணிதமும், கணிதம் கற்றவர்களுக்கு மொழியும் கைவருவதில்லை. அது ஏன் என்கிற நுட்பம் இந்த நூலில் அடிக்கோடிடப்பட்டிருக்கிறது. கபிலரின் அறிவின் ஆழம் பற்றி யாரும் விளக்கவே தேவையில்லை. ஆனால் அவருக்கு வானியல் கற்றுதர திசைவேழரால் முடியவில்லை. ஏனென்றால் அவரது கற்பித்தல் தெரிதலுக்கானதாய் இருக்கிறது. நிலப்பகுதியில் இரண்டு ஆசிரியர்கள் காட்டப்படுகிறார்கள். எந்த வயது மாணவனையும் கோல் கொண்டு தாக்கும், தனக்கு மற்றொருவர் இணையில்லை என கருதும், இதற்கு மேல் கற்றுக்கொள்ள எதுவும் இல்லை, முன்பு கற்றதையே பயிற்சி செய்தால் போதும் என நம்பும், மாணாக்கரின் வினாக்கள் இடையூறு எனக்கருதும் திசைவேழர். 
வினா கேட்கும் மாணவியை ஊக்குவித்து ஆனால் இதுதான் தான் கற்றது என மலைக்கும் கபிலர். 
அவரவர்க்கு தேவையான கல்வி மட்டுமே கற்றுக்கொடுக்கப்படுகிறது. 
மாறாக பறம்பில் எல்லோர்க்கும் சமமான கல்வியும், பயிற்சி வாய்ப்பும் கிடைக்கிறது. அதுவும் நேரடிக்கற்றல் அனுபவம். தேக்கன் அலவனை கண் திறந்து வழிபட அனுமதிக்கிறார். மாணவன் கேள்வியை ஊக்குவிக்கிறார். நீங்கள் சொன்னதை நான் நம்பினேன் ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என சாடும் அலவனை அப்படித்தான் போ என விரட்டாமல், அவன் சொன்ன கருத்தை சோதிக்கிறார். 
மற்றோரு ஆசானாக நாம் பாரியை பார்க்க முடிகிறது. எங்கள் கெமிஸ்ட்ரி வாத்தியார் + எண்ணையும், -எண்ணையும் கூட்டுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்வார் + என்பது பணக்கார குடும்பம், - என்பது ஏழைக்குடும்பம். இரண்டு + அல்லது இரண்டு- காதலித்தால் பிரச்சனை வருவதில்லை அது + ஆகிறது மாறினால் மைனஸ் தான் என நகைசுவையாய் கூறினார். பணம் பற்றிய சர்ச்சை விடுத்து அந்த காதல் பார்முலா எங்கள் வகுப்பில் யாருக்குமே மறக்கவில்லை. அதே போல் திசைவேழர் தலையால் தண்ணீர் குடித்தும் கபிலருக்கு விளங்கவைக்க முடியாத கார்த்திகை கூட்டத்தை ஒரு காதல் கதையால் மனதில் பதியவைப்பார் பாரி. அறுபதும் தமிழ் ஆண்டுகளா என்பதில் என் கருத்து முரண்பட்டாலும், ஆறு(நதி), நேரக்கணக்கு பலவற்றில் ஆறின் அச்சை உணர்ந்த நொடி நம் வாழ்வில் கடக்கும் ஒவ்வொரு ஆறையும் உற்று நோக்கவைக்கிறது. இன்னும் வேள்பாரியில் கற்றல் கற்பித்தலை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். பதிவின் நீளம் கருதி அடுத்து பெண்ணியம். 
நாகரிகம் தழைத்த மூவேந்தர் குடியில் பெண் சந்தையில் விற்கப்படுகிறாள். செல்வாக்கு மிகுந்த குடும்பப்பெண்களும் திருமண ஒப்பந்தத்தில் பண்டமாக விற்கப்படுகிறார்கள். அவர்கள்  எந்த ஆணையும் நம்ப மறுக்கிறார்கள். தங்கள் குலப்பெண்களுக்கு அணக்கர்களை பல்லக்கு தூக்க அமர்த்தப்படுகிறார்கள். பெண்களில் கற்பு கற்கோட்டைக்குள் பாதுகாக்கப்படுகிறது. ஆணோ தன் மகள் திருமணக்கொண்டாட்டத்தில் இருமுகப்பறை நடனத்தை தனியே கண்டுகளிக்கிறார். பாண்டிய வேந்தனுக்கு பல கவலைக்களுக்கு நடுவே ஒரு கவலை அவன் விலை கொடுத்து வாங்கிய கிளாசரினா உண்மையில் யவண மங்கைதானா, அத்தனை தொலைவில் அமர்ந்திருக்கும் அவளது கவிழும் இமைகளை தன் எதிரே அமர்ந்திருந்ந சம்பந்தி எப்படி பார்த்திருக்க முடியும் என்பதெல்லாம் அதில் சில. 
பறம்பு மலையிலோ பெண் மதிக்கப்படுகிறாள். ஏனென்றால் அவள் உண்மையாக அவளுக்காக நேசிக்கப்படுகிறாள். குலநாகினியாக போற்றப்படுகிறாள். சோமபானத்தில் இருந்து எல்லைப்பாதுகாப்பு வரை சகல விசயங்களிலும் சமமாக நடத்தப்படுகிறாள். திரு ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் வடிவேலு ஒரு வசனம் பேசுவார் “ எங்க இனத்தில் கற்பழிப்பு என்ற ஒன்றே இல்லையடா ” நாகரிகம் என்ற பெயரில் இயற்கைக்கும் நமக்குமான பந்தம் மட்டுமா அறுப்பட்டுக்கிடக்கிறது?  மனிதமும் தான் இல்லையா!
எழுத ஊக்கிய நட்புக்களுக்கு நன்றியோடு தொடரும்.....(எப்போ?? எப்பயாவது)