ஞாயிறு, 29 டிசம்பர், 2013

கில்லி students !!!

                       வெட்டியாய் பொழுது போகும் நேரங்களில் you tubeபில் கழிவில் இருந்து கலைப்பொருட்கள் செய்யும் படங்களை பார்ப்பதுண்டு .பள்ளியில் பாட இணை செயல்பாடுகளில் நான்கற்றுகொடுத்ததை plastic bottle,paper cup ,egg carton ,jute மற்றும் வாட்டர் கலர்  வைத்து art and craft தேர்வில் என் வகுப்பு மாணவர்கள் அடித்த கில்லி இதோ

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

திங்கள், 16 டிசம்பர், 2013

கோலங்கள்! கோலங்கள் !


              இதோ மார்கழியும் வந்துவிட்டது. கோலங்கள் பற்றி எழுதாமல் இருக்கமுடியுமா? மனம் பின்னோக்கி பறக்கத்தொடங்கிவிட்டது. ஹல்லோ
என்ன மேல பாக்குறிங்க. பிளாஷ்பேக்னா மேலதான் பார்க்கணுமா? இது மார்கழி சோ, கீழ.

வியாழன், 12 டிசம்பர், 2013

நிலோ காத்திருக்கிறாள்

                    { இந்த கதை ஆனந்தஜோதி சென்ற ஆண்டு நடத்திய சிறுகதை போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசு வாங்கித்தந்தது .}
                                                                                                                                                                                                                               
                                                                                                                                                                        சுற்றம் மறந்து பார்வை மாநாடு நடத்திக் கொண்டிருந்த கிரேக்க காதலர்களின் கோர்த்த விரல்களுக்கிடையே இருந்த இதய வடிவ கடிகாரத்தில் இரண்டு அம்புகளும், ஒன்றையொன்று முத்தமிட்டு மணி 12 என்றது. நிலோபர் செல்போனை எடுத்து மணி பார்த்தாள். அதுவும் மேசையில் இருந்த கிரேக்க கடிகாரம் சொன்னதைத்தான் வழிமொழிந்தது. நிலோ அந்தக் கடிகாரத்தில் ஒருபோதும் மணி பார்ப்பதில்லை. ரகு அதை பரிசளித்த நாளாய் அந்தக் காதலர்களை ரகுவும் நிலோவுமாக மாற்றும் கற்பனையிலேயே ஆழ்ந்துவிடுகிறாள்.


புதன், 4 டிசம்பர், 2013

கொஞ்சம் English part ii


                   நம் பேச்சில் சுவை சேர்க்க பழமொழிகளையும் ,சில மரபுத்தொடர்களையும்  தொன்று தொட்டு பயன் படுத்துகிறோம்."மாற்றான் தோட்டத்து மல்லிகை" என அண்ணா முதல் "அடுத்தவன் ஆட்டோ க்கு ஆயுதபூஜை பண்ணனும்னு நினைக்கிறது தப்பு ப்ரோ" என சந்தானம் வரை தமிழில் நமக்கு நிறைய அறிமுகம் இருக்கு .இங்க கொஞ்சம் ஆங்கில  மரபுத்தொடர்கள் .வாங்க சுவாரசியமா ஆங்கிலம் பேசலாமா?

வெள்ளி, 22 நவம்பர், 2013

தென்றலே!!இரு கைகள் நீட்டி அழைக்கின்ற தென்றலே!
இதயத்தை மெல்ல கலைக்கின்ற தென்றலே!

மழை வரும் முன்னே கட்டியம் கூறுவாய் !
மார்கழி மாதத்தில் கட்டியே போடுவாய்!

வியாழன், 14 நவம்பர், 2013

மழை

மதில் ஏறி கன்னம் வைக்கும் கள்வனாய்
மழைச்சரம் பிடித்துவிண்ணைத் தொட ஆசை

திங்கள், 28 அக்டோபர், 2013

வள்ளுவர் கையில் காலக்ஸி (மாற்றுடைப் போட்டி )


மீசை விழுந்துவிடுமோ மேடையை விட்டு இறங்கும் வரை
அச்சமாய் இருந்தது பாரதிக்கு

முன்னிருக்கை சண்டையில்
மூழ்கியிருந்தனர் காந்தியும், புத்தனும்

திங்கள், 21 அக்டோபர், 2013

என் செல்ல டைனமைட் (part i)

ஆல்பிரெட் நோபல்
 உங்கள் கவனத்திற்கு . டைனமைட் என்பது ஒரு வெடிபொருள் .என்ன ஒரு வெடிமருந்தை கொஞ்சிக்கொண்டிருக்கிறேன் என்று பார்த்தீர்களா? பின்னே கட்டுரையை படியுங்கள் உங்களுக்கும் பிடிக்கும். டைனமைடை கண்டுபிடித்தவர் ஆல்பிரெட் நோபல் .இவர் பல வெடிமருந்துகளை கண்டுபிடித்திருந்தாலும் பொருளையும் ,புகழையும் தேடிதந்ததென்னவோ டைனமைட் தான் .இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில் இவரது கண்டுபிடிப்புக்கு ஏக கிராக்கி .அப்புறம் என்ன காசு ,பணம்,துட்டு,மணி மணி தான்.

திங்கள், 14 அக்டோபர், 2013

குறும்பா

மழை

அழுக்கான மனங்களுக்காய் அலுத்துப்போய்
பூமியை மட்டுமாவது சுத்தம் செய்ய
பொழிகிறது மழை.
ஆசை

குளத்து நீரில் பாசியாய் 
வாழ்வின் வசந்தங்களில்  
படர்ந்து கிடக்கிறது ஆசை


செவ்வாய், 8 அக்டோபர், 2013

ஒரு சிவப்பு பலூன்


  இந்த இரண்டாம் பருவம் தொடங்கும் போது வழக்கமான குறுஞ்செய்தியில் கூடுதலாக ஒரு தகவலை அனுப்பியிருந்தன பல ஆசிரியர் சங்கங்கள் .அது 'joy of giving week' கொண்டாட வேண்டும் என்பதே.அறிக்கை சமர்ப்பிக்க கோரப்படததால் பலரும் அதனை கவனித்தார்களா என தெரியவில்லை.

புதன், 18 செப்டம்பர், 2013

கூடுகளின்றி அலையும் சிட்டுக்குருவிகள்


        ஒரே தலைப்பில் ரெண்டு கவிதைகள்.

1.கூடு தொலைத்த குருவியொன்று
   கொத்திக்கொண்டிருந்தது என்
   சன்னல் விளிம்பை

வியாழன், 5 செப்டம்பர், 2013

கொஞ்சம் ENGLISH !!!!!!!!!!!!


ஆங்கிலத்தில் எனக்கு பிடித்த விஷயம் இதில் நாம் தான் நமக்கு முதல் நபர்      .-I -FIRST PERSON


ANGRY ,HUNGRY        'GRY'  முடியும் இரண்டே சொற்கள் .


என் கோப்பை நிரப்பும் உன் கோபங்கள் !


கோபமெனும் பனித்துண்டுகளால்
என் கோப்பை நிரப்புகிறாய்

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

எங்கள் விடுமுறை நாட்கள் !


நான்கு ரெட்டைகிளி, ஒரு விமானம் தீப்பெட்டி
கொடுத்தால் கிடைக்கும் ரஜினி பிலிம் 
அண்ணன்களோடு ஓடும் சனி,ஞாயிறு 

புதன், 28 ஆகஸ்ட், 2013

ஜெயாம்மாவும்,கண்ணன் கதையும்.


           இது ஒரு நட்புக்கு, நட்பான இதயத்துக்கு சமர்ப்பணம். ஒப்பனை மனிதனின் தெய்வம் எழுதியவள் கண்ணன் கதை எழுவது விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி போல் ஸ்டான்ட் என்று தோன்றலாம். ஆனால் அதற்கு முன் ஜெயாம்மா.
 

சனி, 24 ஆகஸ்ட், 2013

வெளயாட்டா கொஞ்சம் தெரிஞ்சுக்குவோம்!

அமீர் கான் ,சாருக்கான் ,ஹிருத்திக் இவங்களுக்கெல்லாம் ஏன்மீசையில்லை? காத்தாடி விட்டே காசு சம்பாரிக்க முடியுமா? 
நீங்க கால் பந்தாட்ட ரசிகரா?அப்போ நீங்க சைவமா இருந்தும் பயன் இல்லை ?
ஒலிம்பிக்ல தங்க பதக்கம் தராங்களே அது நெஜமாவே தங்கமா? 

ஒ.கே .ஒண்ணுன சொல்றேன்.
               1.சீட்டுக்கட்டில் ஹார்டின் ராஜாவுக்கு மட்டும் மீசை இருக்காது.
             
                2.காத்தாடி விடுதல் தாய்லாந்த் நாட்டில் ஒரு தொழில் முறை விளையாட்டு.
             
     
                  3.கால் பந்து தயாரிப்பதற்கு N .F .L .அதாவது நேஷனல் கால்பந்து லீக் மட்டுமே ஆண்டு தோறும் 3000 பசுவின் தோல் தேவைபடுகிறது.
                  4.உலகின் பெரும்பான்மையான பேர் கலந்து கொள்ளும் மற்றும் விரும்பி பார்க்கும் விளையாட்டாக கால் பந்து உள்ளது.
                  5.ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படும் தங்கப்பதக்கங்கள் பெரும் பகுதி வெள்ளி தான் கலந்திருக்கும்.
                     ஒலிம்பிக் பற்றி வேற்றொரு தகவல் தெரியுமா?ஆப்ரிக்கா,தென் அமெரிக்கா ,அண்டார்டிகா ஆகிய மூன்று கண்டங்களிலும் நடத்தப்பட்டதில்லை .
                    6.உலகம் முழுக்க 100 மில்லியன் மக்கள் வேட்டையாடும் உரிமம் பெற்றுள்ளனர்.
                    7.மேலும் ஒன்னே ஒன்னு தான் .இடது கைக்காரர்கள் விரைவாக முடிவெடுக்க வேண்டிய விளையாட்டுகளில் வலது கை காரர்களை விட கலக்குவார்களாம் .
                                            கஸ்தூரி

                         

புதன், 21 ஆகஸ்ட், 2013

ஞாபகம் வருதே !ஞாபகம் வருதே !


                                                 இன்று என் பழையவீட்டை பார்த்து வர விருப்பம் மேலெழும்பியது.கருக்கலில் புறப்பட்டு விட்டேன் .முன்பிருந்த இடம் நகர நெரிசலின்றி அமைதி பூசியிருக்கும் .ஆனால் அங்கும் நெருக்கடி மிகுந்த போது அமைதிவேண்டிதான் இவ்விடம் விட்டு நகர்ந்தேன்.முதுமை பிராயத்தில் இயல்பாய்  எழும் பெரு விருப்பாய்  என் இளமை காலத்தில் வாழ்ந்த இடத்தை பார்க்க வேண்டும் என சிலநாட்களாய் ஏனோ வெகு விருப்பம்.
                  வானம் வெளுப்பதற்கு முன்பே கிளம்பிவிட்டேன் .வழக்கமான சந்தில் வளைகயில் நகரின் அசுர வளர்ச்சி பயத்தை கிளப்பியது.அதோ தெரிகிறதே அந்த இடம் தானா?குழம்பியவாரேதான் உள் நுழைந்தேன் .அதோ வேப்பமரம்!!.என் மண் வீடு இருந்த இடத்தில் இன்று பெரிய காரை வீடு!!.ஏதேதோ சிந்தனையில் உலன்றவாறு நின்றுகொண்டிருக்கும்போதே என் தலையில் பலமாய் ஒரு அடி.யாரோ கட்டையால் தாக்கிஇருந்தனர் .நான்  மயங்க தொடங்கினேன்.என் காதுகளில் அவர்கள் கூக்குரல் தேய்ந்து ஒலித்தது ''பாம்பு  ,பாம்பு "          
                                                   -கஸ்தூரி      
பி.கு
        இது காமெடி போல இருக்கலாம்.ஆனா உண்மையாவே நாம் மற்ற உயிர்களிடமிருந்து இப்படி தான் வாழ்விடங்களை பறிக்கிறோம்.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

மாணவர்களுக்கு ஒரு சுதந்திரம்                             எனது பள்ளி நாட்களில் வருகைப்பதிவை தவிர என் பெயர் வேறு எப்போதும் அழைக்கப்படாத நாட்களை கடந்திருக்கிறேன்.முதல் மூன்று ரேங்க் எடுப்பவர்கள் தான் கட்டுரை ,பேச்சு மற்றும் கவிதை போட்டியில் கலந்து கொள்ள முடியும் .நல்ல நிறமாய் இருந்தால் பள்ளி விழாக்களில் ஆடவும் ,நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.அண்ணா ரவி சார்(தமிழ் ஆசிரியர் )என் பள்ளிக்கு வரும் வரை பேக் ஸ்க்ரீன் போஸ்ட் தான் எனக்கு.
             ஆனால் இன்று அரசுப்பள்ளிகளில் அந்த நிலை மாறியுள்ளது  c .c .e 
என்கிற முறையில் மாணவர் திறன்களை மதிப்பிடு செய்கிறோம் .60 மதிப்பெண்கள் பருவத்தேர்வுக்கு  20 மதிப்பெண் வகுப்பறையில் நடக்கும்சிறுதேர்வுக்கு மற்றும் 20 மதிப்பெண்கள் மாணவர் தனித்திறமைகளை பாடப்பகுதியில் வெளிப்படுத்துவதற்கு .மாணவர்கள் அசத்துகிறார்கள் .எல்லோரும் பாராட்டப்படுகிறார்கள்.(தனியார் பள்ளிகளை பற்றி எனக்கு விரிவாகத்தெரியது .தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாம் )
                                         எனது வகுப்பில்  சிவாஜி பழக்கூடையில் தப்பித்த நிகழ்வை நாடகமாக நடத்தினார்கள் எட்டாம் வகுப்பு மாணவர்கள் (எட்டாம் வகுப்பிற்கு மட்டும் வரலாறும் நடத்துகிறேன்).அவர்களிடம் இருந்தகுளிர்பான கிரேடில் அமரக்கூடிய அளவில் ஒரே ஒரு குட்டி மாணவன் தான் இருந்தான் .அவனோ சராசரி மதிப்பெண்கள் வாங்கும் சற்று கூச்சசுபாவம் உள்ளவன் .எனக்கு சற்று தயக்கமாகவே இருந்தது .மாணவர்களோ தங்கள் குழுவில் வெகு தீவிர ஒத்திகையில் இருந்தனர் .
                                                 அவர்கள் நாடகம் நடத்திய நாளில் அந்த குட்டி சிவாஜி ஒவரங்கசிபின் அரண்மனையை விட்டு கோபத்துடன் வெளியேறி ராம்சிங்கிடம்"ஒவ்ரங்கசிப் வழங்கிய இந்த கிலாத்தை (மொகலாய அங்கி)கிளித்தெறிவேன்  .ஆக்ரா வீதிகளில் திரியும் பிச்சைக்காரர்களுக்கு பரிசளிப்பேன் "என்று முழங்கியபோது எனக்கு சிலிர்த்து விட்டது.f .a (a ) வாழ்க!வகுப்பறை படிப்பதற்கும் எழுதுவதற்கும் மட்டுமே என்ற நிலை மாறி கற்பதற்கும் ,செயல் படுத்துவதற்கும் என்ற நிலை உருவாகி வருகிறது.நாளைய தமிழகம் கல்வியால் ,கலைகளால்   நல்லதாய் மலரும் என்னும் நம்பிக்கையோடு                                                                                                                                                                   -கஸ்தூரி 

சனி, 10 ஆகஸ்ட், 2013

மற்றுமொரு கனவுத்தொழிற்சாலை

விதுன் பார்த்த பேய்கனவு
விடாது துரத்துகிறதென்று
தேம்பிய பெப்பிக்குட்டியை
தேற்றினேன் ஒரு முத்தமிட்டு


அன்றிலிருந்து தொடங்கியது
ஒரு மாயவிளையாட்டு
கனவுகள் சமைத்து
கண்களுக்குள் ஊட்டும்படி
வேண்டிய மகளுக்காய்


விளையாட்டு ப்பூங்காவாய்
விளைந்தது முதல் கனவு
விதவிதமாய் மலர்களோடு
சுகந்தமாய் மறு கனவு


வெள்ளுடையும் விரித்த சிறகுகளுமாய்
நீலதேவதையோன்று பாடத்தொடங்குகையில்
தூங்கிப்போனோம் நானும்,பெப்பியும்இரவெல்லாம் பாடிக்கொண்டிருந்தது
சிறகு முளைத்த சின்ன தேவதை
மற்றுமொரு கனவுத்தொழிற்சாலையாய்
எங்கள் படுக்கையறை -
                                                  -கஸ்தூரி 

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

தேர்தல் நவராத்திரி !

படிக்கு படி ஏறியிறங்கும்
கொலு பொம்மைகள்
சிப்பாய் ,தளபதி,செயல்வீரன்,சீமாட்டி

எல்லாம் தலையாட்டும்
புன்னகைத்தபடி இருக்கும்

வீற்றிருக்கும் பொம்மைகள் முன்
வில்லுப்பாட்டும் நடக்கும்

பண்டிகை நாட்களில்
பவனி வரும் -பின்
வசதியாய் உறங்கிவிடும்

நாம் சுண்டல் கொறித்தபடி
வேடிக்கை பார்க்கவும்-பின்
சொந்த அலுவலில் மூழ்கிபோகவும்

வந்து விடுகிறது நமக்கும்
 ஐந்தாண்டுக்கு ஒருமுறை
தேர்தல் நவராத்திரி !  -கஸ்தூரி

புதன், 31 ஜூலை, 2013

------------------------------------------------
தந்தை போன துக்கத்தில் தனயன்
சொத்தை பிரித்து விட்ட திருப்தியில்
சொட்டு கண்ணீரோடு மருமகள்

தோள் கொடுக்க இருந்த ஒரே சொந்தத்தை
தொலைத்துவிட்ட துயரில் தங்கை

அழைக்க ஒரு மாற்றில்லாத குறையில்
அழுது புலம்பும் மனைவி -இவர்களுக்கிடையே

தப்பிசைக்கு தனை மறந்து
தாளத்தில் லயித்தாடும்
கொட்டுக்கார ச்சிறுவனை
நீங்கள் கவனித்திருக்கிறீர்களா ?  
                                                  -கஸ்தூரி
.

ஞாயிறு, 28 ஜூலை, 2013

மற்றுமொரு செல் கவிதை


உன் கையணைப்பில் கிடந்து
உன் காது மடல் உரசி
உன் கன்னம் தொட்டு
அழைத்தவுடன் உன்னை
படபடக்கச்செய்யும் உன் கைப்பேசி
அக்றிணை என்று என்னால்
ஏற்க முடியாது  என்னவளே
                                                 -கஸ்தூரி

புதன், 24 ஜூலை, 2013

தன்னை தொலைத்தல்


கைபேசி தொலைத்தல்
என்பது நாட்குறிப்பை
தொலைத்தல் போல் தான்


தொலைத்த நொடியில்
நண்பர்கள் யாவரும்
தொடர்பு எல்லைக்கு வெளியே


பெருநகரின் தனிமைகளில்
பெருந்துயரில் வருகின்ற
மெல்லிசையை தொலைத்தல்


தாய்மையடைந்ததாய்
பகன்ற தோழியின்
குறுஞ்செய்திப்புன்னகையை தொலைத்தல்


குழந்தைகளின் ,குடும்பத்தின்
குறுநகை உறைந்த
குறும்புகளை 'குதுகலத்தை தொலைத்தல்

எண்களை மட்டுமல்ல பலவேளைகளில்
தன்னையும் தொலைதல் போல் தான்
கைபேசி தொலைத்தலும்
                                             -கஸ்தூரி           -
  

வெள்ளி, 19 ஜூலை, 2013

ஒப்பனை மனிதனின் தெய்வம்


ஒரு தேர் திருவிழா நாளில்
ஒரு துரோகத்தின் ,வஞ்சகத்தின்
சூழ்ச்சியின்  ஊதியத்தில்
ஒரு பங்காய் வந்த வைர கிரிடம் சூடி
வெட்கி முகம் சிவந்த அம்மனுக்கு
ஒப்பனை செய்தாயிற்று
சந்தனக்காப்பென்ற பெயரில்     -கஸ்தூரி

ஞாயிறு, 7 ஜூலை, 2013

தாயும் ,சேயுமானவள்

குக்கர் சத்தமோ
கூரியர் பையனோ
எங்கள் கண்ணாம்பூச்சி
விளையாட்டைதடைசெய்யும்போது
ஏக்கத்தோடு சொல்வாள் மகள்
நீயும் குட்டிபெண்ணா இருந்திருக்கலாம் அம்மா !
கஸ்தூரி  

வியாழன், 4 ஜூலை, 2013

முகமெனும் முகமூடி

முகமூடி அணிந்து முயலாகிறது குழந்தை
முகமே முகமூடியாக
நாம்
                       -கஸ்தூரி 

ஞாயிறு, 2 ஜூன், 2013

பலூன்மனது

பத்து ருபாய் சொர்க்கம்  வாங்கி
என் தேவதைகளுக்கு தந்தேன்
பதிலுக்கு அவர்கள் தந்த முத்ததிற்குபின்
பறக்கத்தொடங்கிவிட்டது பலூன்மனது !!!!!
                                                            கஸ்தூரி


செவ்வாய், 21 மே, 2013

மகி குட்டியின் பேரங்கள் !


ஒரு மிட்டாய்க்கு
ஒரு எச்சில் முத்தம்
உயரே கிடக்கும் பொம்மையை எடுக்க
எப்போதேனும் ஒரு செல்ல கடி -என
அவள் சின்ன பேரங்களில்
லாலிபாப்பை விட்டுத்தரும்
பெரும் லாபங்கள் -கேட்காமலே வாய்க்கும்
என் விழியோரம் நீர் நிறையும் கணங்களில் !
                                                                    கஸ்தூரி 

வெள்ளி, 17 மே, 2013

தா (மன் )மத வருகைகள்


கண்ணுக்கு மையெழுதி
உதட்டுக்கு சாயமிட்டும்
பூர்த்தியடையாத உன்னழகு
மூக்கு நுனியில் சிறிது
கோபம் தீட்டியபின்
முழுமை அடைவதால்
திட்டமிட்டே நிகழ்கிறது
என் தாமத வருகைகள் !!!!
                                    கஸ்தூரி 

வியாழன், 16 மே, 2013

மறதி


மழை தூறத் தொடங்கியதும்
நினைவுக்கு வரும்
மொட்டை மாடி வடகம்
கொடியில் காயும் துணிகள்
சாத்தபடாத சாளரங்கள்
துண்டிக்க வேண்டிய
கேபிள் வயர் !
மறந்து போனது ஒன்றைத்தான்
கற்பனை ஊற்றெடுக்க
கவிதை புனையும் கலை !
                      கஸ்தூரி 

பின்விழைவு

என் நேற்றைய தினம்போல்
எறும்பின் வரிசையில்
உன் வரவை போல்
யார் விரல் வைத்தது !!!!!கஸ்தூரி

வெள்ளி, 10 மே, 2013

நீ

நீ மட்டுமே நீ
என்று தெரிந்த பொழுது
நீயாகியிருந்தேன் நான் !!!-கஸ்தூரி


திங்கள், 6 மே, 2013

வாதிகள் (வியாதிகள் )

அடி வாங்கும் இனத்தில்
பிறந்தவள் நான்
வலிக்கிறது என்றேன்
வாய் திறந்து
நான் பெண்ணியவாதியாம் !
வலித்திருக்கும் என்ற
என்  அண்ணன்
தீவிரவாதியாம் !
நான் அடி வாங்குகையில்
அண்டை வீட்டாருடன்
அயலான் போல் வேடிக்கை
பார்த்துக்கொண்டிருந்த என்
பங்காளிகள் தன்
தேசியவாதிகளாம் !!!!!
                                கஸ்தூரி


கல்

நீயும் ,நானும் கல் தான்
என் குளத்தில் விழுந்த
கல்லாய் நீ !
உன் சோற்றில் சிக்கிய
கல்லாய் நான் !

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

கண்ணீர்

       
         கண்டுகொண்ட நொடியில்

        பாயசத்தோடு தொடங்கும் 
        தாயின் கவனிப்பு 
        
        பதினாறு நாட்களும் 
        பதார்த்தமும் ,மலர்ச்சரமுமாய் 
        உறவினர் வருகை 
       
        நல்லெண்ணெய் ,நாட்டுக்கோழி முட்டை 
        நாற்றம் பொறுத்து விழுங்காவிட்டால் 
        நடுக்கம் தரும் அப்பத்தாவின் மிரட்டல் 
     
        நிறைவாய் பந்தியும் ,பந்தலுமாய் 
        நிகழ்ந்தேறிய கணங்களை 
        நினைக்கையில் 

        நனைகிறது கண்ணீரால் 
        பதுங்குகுழியில் பூப்பெய்திய 
        என் ஈழச்சகோதரிகளின் 
         சோகம் தாங்கிய கட்டுரை -கஸ்தூரி  
        


பந்தயக்குதிரைகள் (MALL)


சட்டையின் முகப்பு சித்திரமாய் மட்டும்
சேகுவேரா
மற்றுமொரு நிறமாக மட்டும்
சிவப்பு
தமிழில் ஒரு சொல்லாய்
சிக்கனம்
இது போன்ற புரிதல்களால்
பந்தயத்தில் முந்துகின்றன
பெருவணிக வளாகங்கள்
-கஸ்தூரி 

வியாழன், 25 ஏப்ரல், 2013

சவ்வுமிட்டாய்

உள்ளங்கையில் ஒட்டிய
சவ்வு மிட்டாய் போல்
உரிக்கவே முடியவில்லை
உன்  நினைவுகளை !
நாவடியில் சக்கரையாய்
கரைந்தபடி உன் பெயர் !
தொண்டையை அடைக்கும்
உன்  நினைவுகளை
விழுங்குகிறேன்
காதல் குடித்து !
                               கஸ்தூரி
Add caption

புதன், 24 ஏப்ரல், 2013

தகவமைப்பு (Camouflage)


தவளைக்கு விரலிடைச்சவ்வு 
தாமரை இலையில் காற்றறைகள் 
மெத்தை போன்ற பாதத்தோடு ஒட்டகம் 
மெல்லிய ரோஜாவிற்கு முட்கள் 
நிறம்மாறும் பச்சோந்தி 
புறமுதுக்கில் ஓட்டுடன் ஆமை 
பட்டியல் போட்ட அறிவியல் வாத்தியாரை 
பத்தாம் வகுப்பில் கேட்டேன் 
மனிதனுக்கு தகவமைப்பு 
சுருள் முடியில் விரல்கொதியபடி 
பத்து நொடிக்குபின் சொன்னார் -நாக்கு.

சோ. மைதிலி