வியாழன், 27 ஏப்ரல், 2023

கசியும் மணல்!! விழியனின் 36 புத்தகத்தில என்ன இருக்கு? குழந்தைகளை கொண்டாடும், குழந்தைகள் கொண்டாடும் அன்புச் சகோ விழியனின் 35வது சிறார் நூலான 'கசியும் மணல்' - சிறார் கதைகள் புத்தகத்தின் முகப்பு அட்டையை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி. கோடையில் குழந்தைகள் நிறைய விளையாட வேண்டும். ஓய்வில் நிறைய வாசிக்கலாம். அவர்களுக்கு இந்த நூல் நல்ல பரிசாக இது அமையும். 


நூல் விவரம்:


"கசியும் மணல்"

ஆசிரியர் : விழியன்

வகை : சிறார் சிறுகதைகள் (10+ வயதினருக்கு)

ஓவியம் : கி.சொக்கலிங்கம்

வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்

விலை : ரூபாய் 70/-


பின்னட்டையில் - "கதைகள் வாசிப்பு என்பது புதிய நிலப்பரப்புகள், புதிய கதை மாந்தர்கள், புதிய சிக்கல்கள், புதிய தீர்வுகளை அறிந்துகொள்வது மட்டுமல்ல,  கதைகள் வாசிப்பது ஒரு நிறைவான அனுபவம். ஒரே சம்பவத்தை வேறு பார்வையிலிருந்து பார்க்கக் கற்றுக்கொடுக்கும் கருவியும்கூட. அது தினசரிகளில் மனிதர்களை இன்னும் நெருக்கமாக அணுக வைக்க உதவும். 'கசியும் மண;' நிச்சயம் புதிய அனுபவங்களைப் பரிசளிக்கும்."


இன்னும் சில தினங்களில் புத்தகம் அச்சில் இருந்து வெளிவந்துவிடும்

வியாழன், 13 அக்டோபர், 2022

மாநிலக்கல்விக்கொள்கைக்கான எனது பரிந்துரை!

 மதிப்பிற்குரிய மேனாள் தலைமை நீதியரசர் மாண்புமிகு திரு.த.முருகேசன் அவர்களுக்கு வணக்கம்!


 ஒரு நீதியரசர் கல்வித்துறையில் கருத்துக் கேட்பது மட்டற்ற மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் அளிக்கிறது. நான் ஒரு ஆசிரியர், வருடத்துக்கு நூறு பிள்ளைகளுக்குத் தாயாக உணர்பவள் எனும் அடிப்படையில் இந்தப் புதிய கல்விக்கொள்கை வடிவமைப்பில்  ஒரு முக்கியமான கருத்தை உங்கள் முன்வைப்பது என் கடமையாகிறது.


 இதுவரை இயற்றப்பட்ட கல்விக்கொள்கைக்கும், இப்போது இயற்றப்படவிருக்கும் கல்விக்கொள்கைக்கும் மிகப் பெரிய வேறுபாடு ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.


 இது வரை 5-10 வயது வரை, 11-15 வயது வரை, 15-17 வயது வரை என வயதை அடிப்படையாகக் கொண்டே வரைவுகள், திட்டங்கள் இயற்றப்பட்டன. ஆனால் இரண்டு ஆண்டுகள் கொரோனா விடுமுறைக்குப் பின் பள்ளி வந்திருக்கும் மாணவன், எங்களிடமிருந்து விடுமுறையில் சென்றவன் அல்ல.


 இப்போதைய சூழலில் மாணவர்கள் மனவயதும் உடல்வயதும் ஒன்றே அல்ல. அந்த நீண்ட விடுமுறை நாட்களில் பெற்றோர் வேலைக்குச் சென்ற பின் பலரும் தன்னை விட வயதில் அதிகமுள்ள அண்ணன் அக்காக்களோடு நேரத்தைச் செலவிட்டிருக்கிறார்கள் என்பது களத்தில் நாங்கள் கண்டுகொண்டது. குழந்தை உடலுக்கு சம்பந்தமில்லாத மன முதிர்ச்சியான பல விசயங்கள் அவர்களுக்கு அறிமுகமாகியுள்ளன. அவர்கள் வகுப்பில் பொருந்த மிகவும் சிரமப்படுகின்றனர்.


 அவர்களை எதிர்கொள்வதில் ஆசிரியர்களுக்கு மூன்று முக்கிய சிக்கல்கள் உள்ளன:


             1. மாணவனது உடல் வயதைக் கொண்டே அவனை அணுகுதல்.


             2. அவனது மனநெருக்கடியை, இந்தச் சூழலை ஏற்கெனவே கையாண்டதில்லை, அனுபவமின்மையால் ஏற்படும் பதற்றம்.


             3. மாணவர்களை வகுப்போடு பொருத்த மகிழ்ச்சியான சூழலை உருவாக்க முடியாமல் மதிப்பெண் மற்றும் பதிவேடுகளுக்காக மாணவர்களது இடர்களுக்கு எந்த பதிலும் தராமல் அவர்களை ஒரு பந்தயத்துக்குத் தயாரிக்க வேண்டிய கட்டாயம்.


 இவை எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு, இதற்கு ஒரு தீர்வை நல்குவதாக இந்தப் புதிய மாநிலக்கல்விக்கொள்கை வர வேண்டும்.


 எனவே மாணவர்களுக்குப் பள்ளிக்கு வர ஆர்வம் ஏற்படும் சூழலை உருவாக்க வேண்டிய நிலையில் உடற்கல்வி வகுப்புகளை முறைப்படுத்துதல், கலை-இலக்கியப் போட்டிகள் நடத்துதல் மட்டுமின்றி மொழிப்பாட வகுப்புகளும் வெறும் ஏட்டுக்கல்வியாக இல்லாமல் மாணவர்களது திறன்களுக்கு வாய்ப்பளிக்கும் இடமாக அமைய வேண்டும். மாதம் ஒருமுறையாவது பல்வேறு மன்றச் செயல்பாடுகள் பாடத்திட்டத்தின் துணையோடு செயல்பட வழிவகை செய்ய வேண்டும்


 இதை மட்டும் என் கோரிக்கையாக வைத்துத் தாய்மை உணர்வோடு அல்லது உளவியல் நோக்கோடு இதைப் பரிசீலிக்குமாறு வேண்டுகிறேன்!


நன்றி!


இப்படியாக என் கருத்தை தெரிவித்துவிட்டேன். இன்னும் இரண்டு நாட்களே உள்ளன (15.10.22). நீங்க அனுப்பீட்டிங்களா??

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

லாரி பேக்கர்- மேஜிக் மேக்ர்

 இரண்டு லட்சத்துக்குள் பட்ஜெட் வீடு, ஏழு லட்சத்தில் மாடி வீடு என்பது தான் லாரிபெக்கர் பற்றி நான் அறிந்தது. கொஞ்சம் வாசிப்புக்குப்பின் உள்ளூர் வளங்களை வைத்து பாரம்பரிய அடிப்படையிலான அவரது கட்டிடங்கள் மனத்தை கட்டி இழுக்க லாரியின் மேஜிக் எங்கே எப்படி தொடங்கியிருக்கும் என்று அறியும் ஆவலில் தான் இந்த புத்தகத்தை எடுத்தேன்.

  லாரியின் காதல் மனைவியின் வாய்மொழியாக விரிகிற அவரது வரலாற்றை வாசிக்கயில், அவரை எத்தனை சிறிய சட்டத்துக்குள் இருத்திப் பார்த்திருக்கிறேன் என வெட்கப்பட்டுப்போனேன். 

   பேக்கர் என இரண்டாம் பெயர் சொல்லி அழைப்பது தான் ஆங்கிலேயர் பாணி. ஆனால் அவரது வரலாறு லாரி என அழைக்கும் மனதுக்கு நெருக்கமான நண்பராகவே புத்தகம் எங்கும் பயணிக்கிறார். 

      இன்றைய நுழைவுத்தேர்வு முறைகள் அன்று இருந்திருந்தால் முதல் முறையே வீட்டுக்கு அனுப்பப் பட்டிருப்பார். இப்படித்தான் தொடங்குகிறது இவரது கதை. ஆனால் அதற்குப்பின் விரியும் அவரது சாகசங்கள், சேவைகள், காதல், பயணம் என அத்தனை சுவையாக நகர்கிறது புத்தகம். அடிப்படையில் மூன்று விசயங்கள் இந்த நூலில் கவனம் கொள்வதாக இருக்கிறது.

 1. முதல் உலகப்போருக்கு முன் தொடங்கும் அவரது வாழ்வில் இரண்டு உலகப்போர்,  சீனா இந்தியா போர் அதற்குப்பின்னான கேரளாவில் அச்சுதன் நாயரின் ஆட்சி வரை பின்னணியில் ஓடிக்கொண்டேயிருக்கிறது.

2. தன் வாழ் நாளின் பாதி பகுதியை ஒரு மதராஸி டாக்டரின் வெள்ளைக்கார கணவராக அவருக்கு உதவியாளராக குன்றா காதலுடன் பணி செய்கிறார். 

3. எனினும் அவரது தொழில் திறமையும், பரந்த மனப்பாண்மையும் அவரைக்கொண்டே அவரது டாக்டர் மனைவியை நினைவுபடுத்துகிறது காலம்.

  ஒரு பொறியாளழக மட்டுமின்றி, மயக்கவியல் நிபுணராக, போர் நடக்கும் இடங்களில் ட்ராக் ஓட்டியாக இன்னும் என்னென்ன சாகசங்களை எல்லாம் அறிய "பறவைக்கு கூடுண்டு, அனைவர்க்கும் வீடு" என்ற நூலை வாசியுங்கள். தமிழில் ஈரோடு வெ.ஜீவானந்தம் 


செவ்வாய், 10 மே, 2022

T.C கொடுப்பார்களா ஆசிரியர்கள்??

 கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பை    பார்த்ததில் இருந்து ஆசிரியர்களுக்கு ஆதரவான, மாணவர்களுக்கு ஆதரவான என்கிற  இரு வேறு வகையான மனநிலைகளை பார்க்க முடிகிறது. இதுவே எத்தனை பெரிய அபத்தம்.

 ஒரு குடும்பத்தகராறில் அப்பா அல்லது கணவருக்கு ஒருசாராரும், மகன் அல்லது மனைவிக்கு ஒரு சாராரும் பேசுகிற நிலை வந்தால் அதற்கு பின் அங்கு ஒட்டுப்போட்ட உறவே சாத்தியம். அதை நிலை தானே இங்கே பள்ளிக்கும். 

                ஒரு சிறுவன் அல்லது சிறுமி தன் வயதுக்கு மீறிய செயல்களை செய்கிறார்கள் எனில் அதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கும். தன் வயதுக்கு மீறிய நட்பு வட்டத்தில் அவர்கள் இருப்பர். அவர்களது நடத்தை மாற்றத்தை உடனடியாக கணித்து மடைமாற்றும் வழிகாட்டி இல்லாதிருப்பர். இன்றைக்கு தேதியில் சிறிதோ, பெரியோ உடல் எடையில் தொடங்கி, தூக்கக்குறைபாடு மாதிரியான மாற்றம் ஏற்படாத பள்ளி வயது பிள்ளைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். கிருமிநாசினி விளம்பர்களில் வருவதைப் போல் 99.9% பிள்ளைகள் பாதிக்கப்பட்டேயிருக்கிறார்கள். 

                 நம் வீட்டு பிள்ளைகளை சரி செய்ய நாம் எடுக்கும் பொறுமையான மெனக்கெடலை ஏன் பள்ளிகளில் எடுக்க முடிவதில்லை. ஒன்று  புரிதல் குறைபாடு அடுத்தது பாடம் முடித்து பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்த வேண்டிய அவசர நிலை. ஐயா எட்வின் அவர்கள் தன் பதிவில் குறிப்பிட்டதைப் போல மகிழ்வோடு பள்ளிக்கு வரும் சூழலே ஆசிரியர் மாணவர் உறவுக்கு  புத்துயிர் அளிக்கும் மற்றபடி இந்த டீ.சி கொடுக்கிறத பற்றி எல்லாம் பதற வேண்டாம் சகோதரர்களே! அதுவும் 99.9% சும்மா மிரட்ட மட்டுமே பயன்படும். அப்படி மிரட்டக்கூட வேண்டாத பள்ளிச்சூழலை உருவாக்க என்ன செய்யலாம் என்று சிந்திப்போம், பேசுவோம், செயல்படுவோம்.