புதன், 10 ஆகஸ்ட், 2022

கமண்டலத்தில் ஆர்ப்பரிக்கும் கடல்

 முற்றும் துறந்த

முனிவரின் கமண்டலத்தில்

மீன்களில் நதி



           வாசித்த நொடியில் சுரீர் என நெஞ்சில் ஓர் வலி. இந்த ஹைக்கூ வை வாசிக்க நேர்ந்தால் அத்தனை முனிவர்களும் தன் கமண்டலத்தை கொட்டிக் கவிழ்த்திருப்பார்கள்.


தொட்டி மீன்கள்

என்றென்றும் நீந்துகின்றன

கடலைச் சேர


இனி ஒரு மீனை தொட்டியில் வளர்க்கும் மனத்துணிவு எனக்கு இல்லவே இல்லை.


மரத்தடிக் கூழாங்கற்களை

முட்டைகளென பாவித்து

கூட்டில் வைக்கும் தன்னந்தனிப் பறவை


ஒரு தனிமைத் துயரை அது தனிமையின் துயர் தான் என்றே புரிந்துகொள்ள முடியாத சில ஆன்மாக்களை கடந்த என்னால் உந்த கவிதையை ஒரு துளி கண்ணீர் சிந்தியும் கடக்க முடியவில்லை.


போர்க்களத்திற்கு மத்தியில்

தூரத்தில் தெரியும் காட்டைப் பார்த்தபடி

நிற்கிறது தந்தை யானை


ஒரு போர்களத்தை இப்படி ஒரு கோணத்தில் யாரேனும் பார்த்திருக்கிறார்களா என்பது என் சிற்றறிவுக்கு புலப்படவில்லை.


தினமும் ரசிக்கிறீர்கள் பிம்பத்தை

இதுவரை நேரில் பார்த்திராத

உங்கள் முகம்


இந்த ஹைக்கூ விற்கு பின் எத்தனை அந்நியமானது என் முகம் என்று வியந்தபடியே இருக்கிறேன். இவற்றை எழுதியது ஒரு எட்டாம் வகுப்பு மாணவி என்பதை நினைக்கயில் எழுந்த மலைப்பு அடங்கவேயில்லை. அய்யோ பாவம். ஒரு குட்டி பெண் எழுதிய புத்தகத்தில் இத்தனை கவிதைகளையா சுட்டுவாய் என்று பதறவே வேண்டாம். பக்கங்களுக்கு இடையே முதலில் விரல்களை வைத்தபடி வாசித்தேன். பின்பு மகியிடம் கேட்டு வாங்கி, புத்தகத்தை கீழேயே வைக்காமல்  துண்டுத்தாள்களை வைத்த படி இருந்தேன். பின்போ பக்கத்துக்கு பக்கம் சீட்டு வைக்கும் வெட்டி வேலையை விட்டுவிட்டு அவர் கவிதைகளோடே கரைந்து போனேன். புத்தகத்திருவிழாவில் நான் வாங்கிய மிகச்சிறிய அளவிலான இந்த நூலில் தொடங்கலாம் என எண்ணியது தான் எத்தனை மடத்தனம். ஒவ்வொரு ஹைக்கூ வும் கடக்க முடியாத கானகம், தாண்ட முடியாத மலை, கரை தொடமுடியாத கடல். தனிஷ்கா இந்த கண்ணீரும்,  வலியும், புன்னகையும் உன்னால் கிடைத்தவை. எனக்கு என்ன சொல்லதென்றே தெரியவில்லை. அன்பு முத்தங்கள் மகளே!!!


புத்தகம்: புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள்

விலை:70

பதிப்பு: பொள்ளாச்சி இலக்கிய வட்டம்


5 கருத்துகள்:

  1. சிறப்பான அறிமுகம் வாழ்த்துகள் ஆசிரியருக்கு...

    பதிலளிநீக்கு
  2. வாவ்! நிஜமாகவே ஹைக்கூக்கள் என்னென்னவோ சொல்கின்றன. ஹைக்கூக்களில் உலகின் வேறு பக்கங்களைக் காட்டிவிட்டால் எட்டம் வகுப்பு குட்டிப் பெண்! அவள் திறமை மிகவும் வியக்க வைக்கிறது. பிரமித்துப் போய்விட்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. //இவற்றை எழுதியது ஒரு எட்டாம் வகுப்பு மாணவி// - சிலிர்த்துக் கொள்கிறது மேனி! வைரமுத்து அவர்களின் ‘வைகறை மேகங்கள்’ கவிதைத் தொகுப்பைப் படித்தபொழுது 17 வயதுக்குள் ஒருவன் எழுதக்கூடிய கவிதைகளா இவை என நான் அடைந்த மலைப்பை இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இதோ இந்தக் கவிதைகளைப் படிக்கும்பொழுது மீண்டும் அடைகிறேன்!

    யாரங்கே, அடுத்த அரியணையை வடிவமைக்கத் தொடங்குங்கள்! இந்த முறை கவிப்பேரர‘சி’!

    பதிலளிநீக்கு
  4. //தொட்டி மீன்கள்

    என்றென்றும் நீந்துகின்றன

    கடலைச் சேர...//

    படித்தவுடன் பாதிப்பை ஏற்படுத்திய கவிதை... அதை படித்ததால் எனக்குள் விழுந்தது இன்று ஒரு விதை... . நன்றியுடன் நாஞ்சில் சிவா

    பதிலளிநீக்கு