ஞாயிறு, 17 மார்ச், 2019

குலக்கல்வி சிறகா? சிலுவையா?

அன்பு நிஷாந்தி அக்கா,
           நலம். நாடுவதும் அதுவே. நீண்ட நெடிய என் சோம்பலை முறித்து ப்போட்டிருக்கிறது உங்களது இன்றைய குலக்கல்வி பற்றி ஒரு முகநூல் பகிர்வு. அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.              
       


மிக நீண்ட காலம் உங்களை பின்தொடர்ந்திருக்கிறேன். உங்கள் சமூக அக்கறை நம் நட்புவட்டத்தில் அனைவரும் அறிந்ததே. எனவே உங்களது இன்றைய பதிவு உங்களது சூழல் சார்ந்த ஒன்று என்பதை என்னால் தெளிவாக உணரமுடிந்தது. அதாவது அரை நேரப் பள்ளி கூடத்தில் நீங்க படித்த காலத்தில் உங்கள் நண்பர்கள் மீதி அரைநாள் அவர்கள் குலத்தொழில் செய்ததாகவும் , ஆனால் இன்று அவர்கள் டாக்டர்களாகவும் , இஞ்சிநீயர்களாக இருப்பதாகவும் எனவே ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்துக்கு அவ்வளவு எதிர்ப்பு அன்று எழுந்தது தேவையா என்பது போல கேட்டிருந்தீர்கள். என் புரிதலில் ஏதேனும் பிழை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். 
   அதேபோல் உங்கள் பதிவில் எனக்கு சில ஐயங்கள் எழுந்தன. பலரிடமும் நான் விவாதிப்பதை நிறுத்திவிட்டேன். அவர்கள் முன் முடிவோடு இருப்பவர்கள் என்று பக்குவம் கை வரப்பெற்றதால். ஆனால் உங்களிடம் கேட்கலாம் என நினைக்கிறேன். அந்த நாளில் உங்க தாய் அல்லது தந்தை வழி குலத்தொழில் ஏதும் நீங்கள் அது போல் செய்ததாக குறிப்புகள்  தரவில்லை. எனில் அந்த குலத்தொழிலில் இருந்து விடுதலை பெற்றுவிட்ட சூழலில் உங்கள் குடும்பம் இருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. அதே போல் உங்கள் சக வகுப்பு மாணவர்கள்  படித்து வேலைக்கு சென்றுவிட்டபின் அந்த குலதொழில்கள் பல அழிந்தே போய்விட்டது. அவர்கள் கல்வி அந்த விடுதலையை இயல்பாக தந்தது என்பதாக பொருள் கொள்ளும் படி எழுதியிருக்கிறீர்கள். அந்த விடுதலையை அவனே ஈட்டிகொள்ளும் முன் அவன் முன்மொழிந்த தலைவன் பெற்றுத் தந்தும் தவறில்லையே என்பது என் கேள்வி. இது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். 

         ஆனால் நான் வளர்ந்த சூழல் அவ்வாறு இல்லை. என்னோடு படித்த தோழிகள் என் வீட்டுக்கு வரும்போதெல்லாம் என் தாத்தாவோ, அப்பத்தாவோ,  என் அத்தையோ முதலில் அவள் தெருவை கேட்பார்கள் பின் அவளது தாத்தா பெயரை கேட்பார்கள். நல்லவேளை என் அப்பாவின் ஆளுமையால் என் வீட்டில் அந்த இரட்டை டம்ளர் இடம் பெறவில்லை. அந்த காலகட்டத்தில் என் சகவகுப்புத் தோழிகளில் பலரது தந்தை குலத்தொழிலை மேற்கொள்வில்லை என்றாலும் கூட அவர்களை எளிதில் மேற்சொன்ன வினாக்களின் மூலமே இனம் பிரிக்கும் வழக்கம் இருந்தது. என்னை போல் தொன்னூறுகளில் படித்த பல தமிழ்நாட்டவர்க்கு அந்த அனுபவம்  இருக்கவே செய்யும்.

இருபது ஆண்டுகளுக்கு முந்தைய கதை எதற்கு. இப்போதைய நிலையை களத்தில் பார்க்கும் அனுபவத்தில் சொல்கிறேன். என்னிடம் படிக்கும் ஒரு மாணவன் , மழலை மாறாத முகமும், பழக்கவழக்கமும் கொண்ட திறமையான மாணவன். என் தாத்தா அவன் தெருவை கேட்காவிட்டால் அவனிடம் விபூதி வாங்கிவிடுவார். அவன் குடும்பம், வீடு எல்லாமே மிகவும் நாகரிகமாக இருக்கும். (வசதியாக அல்ல, தூய்மையாக). அவனது வகுப்புத் தோழர்கள் சிலரது வீடோ சொல்லத்தக்கதாய் இருக்காது. ஆனால் அவனோ அந்த சில மாணவர்கள் அவனை விடுமுறை நாட்களில் அவனது சாதிப் பெயர் சொல்லி_____பய என  அழைக்கிறார்கள் என முறையிட்டு அழுகிறான். அத்தனை அழகான தமிழ் பெயர் வைத்தும், அருமையாய் அவனை அவன் பெற்றோர் பராமரித்தும், அவன் மிக நன்றாய் படித்தும் அவன் தாத்தாவை கொண்டு அவன் சாதியை இனம் கண்டு நகைக்கும் ஒரு கூட்டம் இன்னும் இங்கு இருக்கிறது. சாதித்த பெருமை ஏதும் அற்றோர் இன்றும் சாதி பெருமை பேசித்தான் சிலிர்த்துக் கொள்கிறார்கள். அவனது குலத்தொழிலை அவன் மதிய வேளைக்கு பிறகு பயிற்சி எடுப்பதாய் என்னால் கற்பனைகூடச் செய்ய முடியவில்லை. அது கிடக்கட்டும் இந்த ஆண்ட பரம்பரைகள் எல்லாம் அந்த மதிய வேளையில் என்ன செய்வார்கள்?? என்பதெல்லாம் கிளைக்கேள்விகளாய் என்னுள் சுழன்றபடியே இருக்கிறது. பெயருக்குபின் சாதியை துடைத்து எறிந்த தமிழன் கால்களில் சங்கிலி அணுவிக்கும் கொடுமை தான் குலக்கல்வி. தொழில்பயிற்சி வேறு, அது வாழ்க்கை கல்வி. ஆனால் குலத்தொழில் பயிற்சி என்பது நீ இந்த இனத்தில் பிறந்தவன் என்பதை நிலைநிறுத்தி அவனை பிரித்து வைக்கும் முயற்சியே. முகநூலில் இத்தனை பெரிய பின்னோட்டம் இடமுடியாத காரணத்தால் இதை இங்கு பதிவாக வெளியிட்டுவிட்டேன். இந்த வாய்ப்பை அளித்தமைக்கு மீண்டும் ஒரு முறை என் நன்றிகள்.
                                                                
                                                                                                                       இப்படிக்கு
                                     உங்கள் அன்புதங்கை,
                                                                                                                       மைதிலி 
                    

47 கருத்துகள்:

  1. பெயருக்குபின் சாதியை துடைத்து எதிர்ந்த தமிழன் கால்களில் சங்கிலி அணுவிக்கும் கொடுமை தான் குலக்கல்வி. தொழில்பயிற்சி வேறு, அது வாழ்க்கை கல்வி. ஆனால் குலத்தொழில் பயிற்சி என்பது நீ இந்த இனத்தில் பிறந்தவன் என்பதை நிலைநிறுத்தி அவனை பிரித்து வைக்கும் முயற்சியே.

    உண்மை உண்மை
    தொடர்ந்து வலைக்கு வாருங்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா வணக்கம். உங்களை புதுகை புத்தகத் திருவிழாவில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அண்ணா. மிக்க நன்றி

      நீக்கு
  2. நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் தன் விசைப்பலகைக்கு உயிர் ஊட்டிய சகா மைதிலி அவர்களுக்கு என் உள்ளம் நிறைந்த வரவேற்பைப் பேருவகையோடு முதலில் தெரிவித்து மகிழ்கிறேன்!

    நிஷாந்தி அவர்களைப் போல் பலர், படித்துப் பட்டம் பெற்றாலே கூட வேலைவாய்ப்புக் கிடைக்காத இந்நாட்டில் குலக்கல்வி முறை குறைந்தளவிலான ஊதிய உத்தரவாதத்தையாவது அளிக்கிறதே என்கிற ஆதங்கத்தில் அதை ஆதரிக்கிறார்கள். இது வரலாறு - சமூகம் - சாதிய அரசியல் - உலக நடப்பு போன்ற எதையுமே கணக்கிலெடுத்துக் கொள்ளாத மிகவும் மட்டமான - பச்சையாகச் சொன்னால் - சோற்றுக்குச் சாகிறவனின் பார்வை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நாட்டில் குலக்கல்வி முறைதான் இருந்தது. இந்த சமூகம் என்ன முன்னேறிக் கிழித்தது? சிந்திக்க வேண்டாவா?

    பள்ளிப் பருவத்தில் குலக்கல்வியையும் சேர்த்துப் பயின்று கொண்டு, பின்னாளில் விருப்பம் போல் மருத்துவராகவோ பொறியாளராகவோ ஆகிக் கொள்ளலாம் என்பதெல்லாம் கட்டுரையில் சகா குறிப்பிட்டிருப்பது போல் குறிப்பிட்ட சாதியினரின் குலத்தொழில் சார்ந்த வாழ்க்கை முறை எப்படிப்பட்டது என்பதைக் கண்ணால் கூடப் பார்த்திராதவர்களின் வெற்று உளறல்தான். படிக்கும் காலம் வரை மரத்தடியில் உட்கார்ந்து செருப்புத் தைத்துக் கொடுத்த பையன் சில நாட்களில் அதே தெருவில் மருத்துவமனை (clinic) வைத்துக் கொண்டு அமர்ந்தால் அவனிடம் வருபவன் யாரும் உடம்பைக் காட்ட மாட்டான், சரி செய்து தரச் சொல்லி மீண்டும் செருப்பைத்தான் காட்டுவான்.

    ஊரக மக்களின் வாழ்க்கை முறை என்ன, அவர்கள் எதிர்கொள்ளும் அறைகூவல்கள் என்ன, அவர்கள் வளரும் சூழல் எப்படிப்பட்டது என எதையுமே கண்ணாலும் பாராமல் காதாலும் கேளாமல், வெறுமே விட்டத்தைப் பார்த்து உட்கார்ந்தபடி மனதிலேயே எல்லாவற்றையும் கணக்குப் போட்டுப் பார்த்து விட்டு, "கூட்டிக் கழிச்சிப் பாரு. எல்லாம் சரியாதான் வரும்" என்கிற இவர்களிடம் நாம் கூறுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

    "நீங்கள் சொல்கிறபடி நாங்கள் மீண்டும் எங்கள் குலத்தொழில்களுக்கே போகிறோம்; நீங்களும் உங்கள் மருத்துவர், பொறியாளர், தொழில்நுட்பர், அரசதிகாரி பணிகளையெல்லாம் விட்டு விட்டுப் பழையபடி உஞ்சவிருத்தி எடுக்கப் போவதாயிருந்தால்" என்பதுதான் அது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகா!!! மிக்க நன்றி. கல்வி அறிவின் சதவீதம் குறைவதற்கு மாணவர்கள் தங்கள் பெற்றோர்க்கு குலத் தொழில் செய்ய உதவ போய்விடுவது ஒரு காரணம் என நிஷா அக்கா நினைக்கிறார். மாணவன் பணி நாடி செல்வது நடக்கத்தான் செய்கிறது என்றாலும் அவர்கள் குலதொழிலை விட்டொழித்து வெகு நாள் ஆகிவிட்டது. அவன் மதிப்பெண் கல்விமுறை க்கு பயந்து ,"இப்போ என்ன படிச்சு ,வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிக்க வேண்டும்.அவ்ளோ தான் இப்போதே சம்பாதிக்கிறேன்" என பெற்றோரை ஆற்றுப்படுத்தும் பொருட்டு வேலைக்கு செல்கிறான். கற்றல் அறிதல் என்பதாய் இருக்கவேண்டும் சகா. டீச்சரை விட மாணவன் தொழில்நுட்பத்தில் ஒரு படி முன்னே இருக்கிற காலகட்டத்தில் கற்றல் அனுபவம் இன்னும் குருகுல முறையில் இருப்பது தான் பிரச்சினை

      நீக்கு
    2. கல்வி அறிவின் சதவீதம் குறைவதற்கு மாணவர்கள் தங்கள் பெற்றோர்க்கு குலத் தொழில் செய்ய உதவ போய்விடுவது ஒரு காரணம் என நிஷா அக்கா நினைக்கிறார்./////////////////என்னுடைய பதிவினை தெளிவாகப்படித்தீர்களா மைதிலி? நான் எங்கே இப்படி சொல்லி இருக்கேன்மா? தெளிவாக புரிந்து படியுங்கள். சொல்ல வரும் கருத்தை நான் சரியாக சொல்லவில்லை எனில்// தமிழ் நாட்டில் ஓடுக்கபப்ட்டிருக்கும் மகக்ளும், அதவது அனைவரும் கல்வியை பெற வேண்டும் எனும் நோக்கத்தில் அக்கால யாதர்த்தம் உணர்ந்து கொண்டு வர முயன்ற ஒரு கல்வித்திட்டம், எங்கள் கிராமங்களில் அப்படி ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டதை அறியாமலே ஜாதிகளை இல்லாதொழித்திர்க்கின்றது என்கின்றேன் நான். நீங்கள் குலத்தொழில் செய்வதனால் தான் கல்வி வீதம் குறைந்துள்ளதெனும் புரிதல் தரும் படி எங்கே எழுதி இருக்கின்றேன்மா? கொஞ்சம் சொல்லுங்கள்

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. நிஷாந்தி அவர்களைப் போல் பலர், படித்துப் பட்டம் பெற்றாலே கூட வேலைவாய்ப்புக் கிடைக்காத இந்நாட்டில் குலக்கல்வி முறை குறைந்தளவிலான ஊதிய உத்தரவாதத்தையாவது அளிக்கிறதே என்கிற ஆதங்கத்தில் அதை ஆதரிக்கிறார்கள். ////////////// என் பதிவை படிக்காமல் உங்கள் கருத்தை இட்டிருப்பதை நான் புரிந்து கொண்டேன். உங்கள் வயதுக்கும் நாங்கள் கொள்ளும் மதிப்புக்கும் தக்கபடி நிதானம் பேணுங்கள். நன்றி

      நீக்கு
    5. ன்ற எதையுமே கணக்கிலெடுத்துக் கொள்ளாத மிகவும் மட்டமான - பச்சையாகச் சொன்னால் - சோற்றுக்குச் சாகிறவனின் பார்வை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நாட்டில் குலக்கல்வி முறைதான் இருந்தது. இந்த சமூகம் என்ன முன்னேறிக் கிழித்தது? சிந்திக்க வேண்டாவா?/////////////////இப்போது மட்டும் எவ்வகையில் முன்னேறி இர்க்கின்றீர்கள்? சந்தித்து நாலு ஜாதிகட்சியும் ஊருக்கொரு ஜாதி தலைவனுமாய், இன்றைய நிலையில் மட்டும் எதை தான் சாதனை என்பீர்கள். ஆனால் நாங்கள் சாதித்து இருக்கின்றோம். ஒடு மொத்த ஜாதியையும் இல்லாதொழித்து மனிதர்களாக நிமிர்ந்து நிற்கின்றோம். என் ம்களுக்கும் , மகனுக்கும் ஜாதி என்றால் என்னவென்றே தேரியாது. என் மகணுக்கு என்ன, என் தம்பி,தங்கைகளுக்கே என் அனுபவம் கூட கிடைக்கவில்லை. அப்படி வேகமான மாற்றத்தை இந்த பகுதி நேரம் கல்வி உருவாக்கி தந்தது.

      நீக்கு
    6. என் ம்களுக்கும் , மகனுக்கும் ஜாதி என்றால் என்னவென்றே தேரியாது. என் மகணுக்கு என்ன////அது உங்கள் வளர்ப்பினால் வந்திருக்கிறது அக்கா ,வாழ்த்துகள். அதை தான் நானும் சொல்ல வருகிறேன், பிறக்கும் போதே சோறோடு சாதியையும் இங்கு ஊட்டிவிடுகிற பெற்றோர்கள் பலரும் படித்த நல்ல அரசு வேளையில் இருப்போர் தான். நேத்து மாடு மேச்ச பய, எங்க கிட்ட திருவிழாவுக்கும், தீவாளிக்கும் தானம் வாங்கின பய எங்களுக்கு சமமா உட்காருகிறானே என வயிரெரிய கூவும் படித்த மேதைகளை பற்றி உங்கள் கருத்து என்ன அக்கா

      நீக்கு
    7. மதிப்புக்குரிய நிஷா அவர்களுக்கு நேச வணக்கம்!

      உங்கள் பதிவைப் படிக்காமலே நான் கருத்துரைத்திருக்கிறேன் என்கிற உங்கள் சீற்றம் புரிகிறது. ஆனால் இதை நான் மட்டும் செய்யவில்லை, ஏறக்குறைய இங்கு கருத்திட்டுள்ள அனைவருமே அதைத்தான் செய்திருக்கிறார்கள் என்பது நீங்கள் இங்கு ஒவ்வொருவருக்கும் தனித் தனியே இட்டுள்ள மறுமொழிகளைப் படிக்கும்பொழுதே தெரிகிறது.

      முதலில் உங்களுக்குப் பணிவன்புடன் நான் தெரிவிக்க விரும்புவது யாதெனில், நானும் இங்குள்ள பிறரும் எழுதியுள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்கள் பதிவு பற்றி மைதிலி அவர்கள் எழுதியுள்ள பதிவு மூலம் எங்களுக்கு என்ன புரிதல் ஏற்படுகிறதோ அதையொட்டியவைதாம். அதாவது மொழிமாற்றுத் திரைப்படத்தைப் பற்றித் திறனாய்வு எழுதுவது போன்றது இது. மொழிமாற்றுப் படம் என்ன சொல்கிறதோ அதை ஒட்டித்தான் திறனாய்வும் அமையும். இதற்காக மூலமொழியில் அமைந்த படத்தை இயக்கியவர் சீற்றம் கொண்டால் என்ன செய்வது? வேண்டுமானால் நீங்கள் விளக்குங்கள்! புரிந்து கொள்ள அணியமாகவே இருக்கிறோம். மாறாக, என் மூலப் பதிப்பைப் படிக்காமலே நீ எப்படி இவ்வாறு சொல்லலாம் எனச் சண்டைக்கு வந்தால் எப்படி? :-D

      மேலும் மீண்டும் மீண்டும் என் வயது பற்றி வேறு குறிப்பிடுகிறீர்கள்! தமிழைத் தவறுதலாகவும் கொச்சையாகவும் வேற்று மொழிச் சொற்கள் கலந்தும் எழுதினால் அவர்கள் வயதில் இளையவர்கள் என்றும், சரியாகவும் தூய தமிழிலும் எழுதினால் அவர்கள் வயதானவர்கள் எனவும் நினைப்பது இப்பொழுது வழக்கமாகி விட்டது. இது காலத்தின் கோலம்! உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. (உடனே அப்படியானால் என் தமிழ் அப்படியா இருக்கிறது எனக் கேட்டு விடாதீர்கள்! நான் பொதுவாகத்தான் சொல்கிறேன்).

      உங்கள் கருத்துக்களின் ஆழமான பகுதிகளுக்கான என் மறுமொழி தனியாக.

      நீக்கு
    8. // ஜாதிகளை அழிப்பதாக் சொல்லி ஜாதிகளை வளர்த்து , ஆளுக்கு ஒருஜாதிக்கட்சியையும் வெறியையும் உருவாக்கி இருக்கும் தமிழ் நாட்டு சூழலுக்கும், இலங்கையில் ராஜாஜியின் அதே கல்வி திட்டம்,/ அப்படி ஒரு திட்டம் கொண்டுவர முயன்றது தெரியாமலே/ காலை படிப்பு, மாலை அம்மா அப்பாவுக்கு உதவி என ஆரம்பித்து இன்று ஜாதி ரிதியான தொழிலே ஒரு வீதம் கூட இல்லை// - இலங்கைத் தமிழ் சமுதாயத்தில் சாதியின் இடம் என்ன? செல்வாக்கு எப்படி? தனிப்பட்ட வாழ்க்கை முறையில் அதன் தாக்கம் எந்தளவு? - இவை பற்றியெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. ஒருவேளை நீங்கள் கூறுவது போல் அங்கே சாதி ஒழிந்திருந்தால், தனி ஈழ விடுதலைக்கு அடுத்தபடியாக மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விதயம் அதுவாகத்தான் இருக்க முடியும். அதே நேரம், இந்த மாற்றம் நீங்கள் குறிப்பிடும் கல்விமுறையால்தான் வந்தது என நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. குலத்தொழிலை ஒழிக்க வேண்டுமானால் அதை முழு நேரப் பணியாகச் செய்யாமல் பகுதி நேரமாக - கல்வி நேரத்தின் ஒரு பகுதியாக - செய்தால் போதும் என நீங்கள் சொல்வது நஞ்சே நஞ்சுக்கு மருந்தாகும் என்பது போல் இருக்கிறது. கிண்டலடிப்பாக நினைக்க வேண்டா! உண்மையாக என் மனதில் படுவதைத்தான் சொல்கிறேன்.

      ஒருவேளை இது குறித்த உங்கள் பதிவையே படித்துப் பார்த்தால் புரியுமோ என்னவோ! ஆனால் அதைப் படிக்கவில்லை எனக் குறை மட்டும் பட்டுக் கொள்ளும் நீங்கள் அதன் இணைப்பைத் தரவேயில்லை. தந்திருந்தால் பயனுள்ளதாயிருந்திருக்கும்.

      அப்படியே நீங்கள் கூறுவது போல் இந்தக் கல்வி முறையால்தான் இலங்கையில் சாதி ஒழிந்தது எனவே வைத்துக் கொண்டாலும் அது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் என நீங்கள் எப்படி முடிவு கட்டுகிறீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. இரண்டுமே தமிழ் சமுதாயம்தான் என்றாலும் நிறைய வேறுபாடுகள் உண்டு. தமிழ்நாட்டில் சாதியின் நிலைமை, செல்வாக்கு போன்றவை குறித்து உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியாது. இங்கே சாதி தனி மனிதரின் உடல், உள்ளம், அறிவு, வாழ்க்கை என அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது, தீர்மானிக்கிறது. அப்பேர்ப்பட்ட ஒன்றை வெறும் ஒரு பகுதி நேரக் கல்விமுறையால் மாற்றி விட முடியும் என நீங்கள் கூறுவது - மீண்டும் அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறேன் - இங்குள்ள சாதிய அமைப்பின் வீரியம் பற்றி உங்களுக்குப் போதுமான புரிதல் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

      சாதி ஒழிப்பில் இங்கு பழம் தின்று கொட்டை போட்டவர்களெல்லாரும் இருந்தார்கள், இருக்கிறார்கள். பெரியார், அண்ணா, அம்பேத்கர், நல்லகண்ணு தொடங்கி இன்றைய திருமுருகன் காந்தி வரை யாருமே வேரோடி விழுது விட்டு சமுதாயம் முழுவதும் பற்றிப் படர்ந்திருக்கும் சாதியை இப்படி வெறுமே கல்வி முறையில் சிறு மாற்றம் ஒன்றைச் செய்து ஒழித்து விடலாம் எனச் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. சாதி ஒழிப்புக்காகப் போராடிய அல்லது போராடுகிற இப்படிப்பட்டவர்களில் யாராவது அப்படிச் சொல்லியிருந்தால் காட்டுங்கள்!

      நீக்கு
    9. //இப்போது மட்டும் எவ்வகையில் முன்னேறி இர்க்கின்றீர்கள்? சந்தித்து நாலு ஜாதிகட்சியும் ஊருக்கொரு ஜாதி தலைவனுமாய், இன்றைய நிலையில் மட்டும் எதை தான் சாதனை என்பீர்கள்//

      - நிறையவே உண்டு!

      ஐயர் வீடு, செட்டியார் வீடு, அம்பட்டன் வீடு என்றிருந்ததை ஆசிரியர் வீடு, பொறியாளர் வீடு, மருத்துவர் வீடு என மாற்றியிருக்கிறோமே அஃது எங்கள் சாதனை!

      நாட்டிலேயே 100% கல்வியறிவுள்ள மாநிலமான கேரளம் உட்பட எல்லா மாநிலங்களிலும் மக்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதியை வைத்துக் கொண்டு திரிகையில், இங்கே சாதி நல்லது என்பவன் கூட அதைத் தன் பெயருக்குப் பின்னால் வைத்துக் கொள்ள வெட்கப்படும் சூழலை, விழிப்புணர்வை உண்டாக்கியிருக்கிறோமே அஃது எங்கள் சாதனை!

      எல்லா சாதி மக்களும் தெருவில் செருப்பு அணிந்து நடக்கிறார்கள், ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசுகிறார்கள், ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள், ஒரே மாதிரியான கல்வி, வேலைவாய்ப்பு, ஊதியம் பெறுகிறார்கள், கோயிலுக்குள் சென்று வழிபடுகிறார்கள்; இவையெல்லாம் கிடைக்கக் காரணம் பெரியாரும் அவர் வழி வந்த அரசியலும்தான் என்பதை உணராமல் பெரியாரைத் திட்டவும் செய்கிறார்கள்! :-D

      இவை அத்தனையும் இப்பட்டியலில் விடுபட்ட மேலும் பலவும் பல நூற்றாண்டுகளாக இங்கு கிடைக்காமலிருந்தவை. வெறும் அரை நூற்றாண்டில் இந்தப் பல நூற்றாண்டுக் காலமாக மறுக்கப்பட்டு வந்த உரிமைகள் அத்தனையையும் மீட்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிய வேண்டும்.

      அதே நேரம், சாதிக் கட்சிகள் உருவானதையும் அவற்றின் காரணமாய் மீண்டும் இங்கே சாதியம் பேருருக் கொண்டு வருவதையும் நான் மறுக்கவில்லை. உண்மையில் அவையும் எங்கள் சாதிய ஒழிப்புக் காரணமாக ஏற்பட்டவையே. முன்பு போல் எல்லா சாதியினரும் அவரவர் குலத்தொழிலை மட்டுமே செய்யும்படி விட்டிருந்தால் இங்கு யாரும் படித்திருக்க மாட்டார்கள். என்ன படித்தாலும் வேலை இதேதான் என்றால் அதற்கெதற்குப் படிப்பு என்றுதான் நினைத்து வாளாவிருந்திருப்பார்கள். ஆகவே அவர்களுக்கு சமூகவியல் அறிவும் இருந்திருக்காது. மாறாக சாதியும் குலத்தொழிலும் இங்கே ஓரளவாவது ஒழிக்கப்பட்டு, கல்வி புகட்டப்பட்டு விட்டதால் எல்லாச் சாதியினருக்கும் அறிவு வந்து விட்டது. எனவே அவரவருக்குண்டான அரசியலை அவர்கள் அடையத் துடித்து எல்லாச் சாதியினரும் ஆளாளுக்குக் கட்சி தொடங்கி விட்டார்கள். ஆக இதுவும் எங்கள் சாதி ஒழிப்பின் விளைவே! சாதி ஒழிந்திருப்பதன் அறிகுறியே! அதற்காக இது சரி என நான் சொல்லவில்லை; தவறுதான்! மிகப் பெரிய தவறுதான்! ஆனால் இதற்குக் காரணம் இராசாசியின் பேச்சைக் கேட்காதது இல்லை. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

      ஒரு சமூகம் அதை வழிநடத்துபவர்கள் அல்லது தங்களை வழிநடத்துபவர்களாக அந்த சமூக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் காட்டும் வழியில்தான் செல்ல முடியும். அவ்வகையில் சாதி ஒழிப்பு தொடர்பாக இங்கே எங்களை வழிநடத்த வந்தவர்கள் பெரியாரும் அவரிடமிருந்து வந்த பின்னாளைய தலைவர்களும்தாம். அவர்கள் காட்டிய வழியில்தான் நாங்கள் சென்றோம். அதில் அவர்கள் மேலே கூறியபடி எவ்வளவோ மாற்றங்களை, சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். பக்க விளைவாக சாதிக் கட்சிகளின் ஆதிக்கம் போன்ற தவறுகளும் நடந்திருக்கின்றன. எப்படியோ, ஒரு சமூகம் தங்கள் வழிநடத்துநர்களின் வழியில்தான் பயணிக்க இயலும். அதுதான் இயல்பானது. மாறாக சாதி ஒழிப்பு தொடர்பானவராக அறியப்படாத ஒருவர், அதுவும் ஆதிக்க மனப்பன்மை கொண்டவராகவே வரலாற்றிலும் பதிவாகியிருக்கிற ஒருவரை நாங்கள் பின்பற்றாமல் போனதுதான் சாதி இங்கே ஒழியாமல் போனதற்குக் காரணம் என நீங்கள் குறிப்பிடுவது அடிப்படையிலேயே முரணானது. சுருங்கச் சொன்னால், சாதியை ஒழிக்க நினைக்கும் ஒரு சமூகம் அதை ஒழிக்கத் திட்டமிட்டுச் செயல்படுபவர்களைத்தான் பின்பற்றுமே தவிர, அது குறித்த முறையான திட்டமோ செயல்பாடோ அக்கறையோ இல்லாதவர்களைப் பின்பற்றாது. அப்படிப் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதே இயல்புக்கு மாறானது.

      அப்படிப்பட்ட இராசாசி போன்ற ஒருவர் கொண்டு வர முயன்ற ஒரே ஓர் ஒற்றைத் திட்டத்தைச் சுட்டிக்காட்டி மேற்படி பெரியவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையையே காணிக்கையாக்கிச் சாதித்திருக்கும் மாற்றங்கள் அத்தனையையும் நீங்கள் ஒரே மொத்தமாக எட்டி உதைத்தால் அதைப் பார்க்கும்பொழுது உண்மை நிலவரம் அறிந்த எனக்கும் மைதிலி போன்றவர்களுக்கும் கடுஞ்சீற்றம் எழத்தான் செய்யும். எனவே சொற்களும் கொஞ்சம் காட்டமாகத்தான் இருக்கும். பொறுத்தருளுங்கள்!

      நீக்கு
    10. மன்னியுங்கள் சகா!! கருத்து மோதலில் இந்த வயது பிரச்சனையை கவனிக்கவில்லை@சகா
      அக்கா!! நானும் சகாவும் சற்றேறக்குறைய ஒரே வயதுக்காரர்கள்,#Eighty's kids 😃

      நீக்கு
    11. http://alpsnisha.blogspot.com/2019/03/blog-post_19.html?m=1அந்த பதிவின் மேல் விவரம் சகா

      நீக்கு
    12. //கருத்து மோதலில் இந்த வயது பிரச்சனையை கவனிக்கவில்லை@சகா
      அக்கா!!// - :-D தேவலாம்!

      நீக்கு
  3. /நானும் என்கருத்துகளை எழுதுவதில்பயனில்லை என்று தெரிகிறது வாசிப்பவர்கள் பலரும்.சிந்திக்க மாட்டார்க்சள் ன. பலரிடமும் நான் விவாதிப்பதை நிறுத்திவிட்டேன். அவர்கள் முன் முடிவோடு இருப்பவர்கள் என்று பக்குவம் கை வரப்பெற்றதால். இதுதான் அக்மார்க் உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடி இது புரிய உங்களுக்கு இத்தனை வயது ஆகியிருக்கிறதே

      நீக்கு
    2. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா

      நீக்கு
  4. என்கருத்து குலக்கல்வி பயின்றவர்கள் ஊர்க்குருவிகளாக மட்டுமே இருக்க முடியும்

    பதிலளிநீக்கு
  5. இந்த தளத்தை யாரவது ஹேக் பண்ணிட்டாங்களா என்ன?

    பதிலளிநீக்கு
  6. தளத்தில் பதிவை நேரடியாக படிக்க முடியவில்லகி. வடிவமைப்பு மாறி இருக்கின்றதா? அல்லது இதுவே தளவடிவமைப்பாஅம்ம?

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு
    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. எனக்கென்னவோ, குலக்கல்வியில் உள்ள குறபாடுகள் எல்லாம் சொல்லி ஒருவருக்குப் புரிய வைக்கனும்னு அவசியம் இல்லை.

    ராஜாஜி கொண்டு வர முயன்றதால் பார்ப்ப்னர்கள் பலருக்கு இதில் உள்ள அநீதி புரிவதில்லை. அவர்களூக்கு எப்போவுமே பகுத்தறீயத் தெரியாது என்அது வேற விசயம்.

    கிழக்கே போகும் ரயில்னு ஒரு பழைய படம் இருக்கு. பாரதிராஜா இயக்கியது. அதில் சுதாகர் அப்பா - (ஜி ஶ்ரீனிவாசன்? ) ஒரு பார்பர். சுதாகருக்குத் தான் பார்பராகத் தொடரப் பிடிக்காது. படித்தவர். இளஞன். ஆனால் ஊரில் உள்ள பெரிய மனிதர்கள் (சின்னப் புத்தி உள்ளவர்கள்) அப்பாவுக்கு அப்புறம் அவர்தான் அந்தத் தொழிலை (பார்பர்) செய்ய்னும்னு ஃபோர்ஸ் பண்ணூவாங்க. You can not force someone else son (even your own son) to do what you think as "correct" .
    குலக்கல்வி எத்தனை கொடுமையானது புரிய இந்த ஒரு சின்ன சீன் போதும். ஆனால் எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை. பார்ப்பனர்கள் அடிமுட்டாள்கள். தன்னை உயர்சாதினு பீத்தும் திராவிடர்களூக்கும் அறீவு கெடையாது. It is very simple, you just have to put yourself in their shoes and see how it feels.

    Let us look at the reality today. Everyone is a barber to himself/herself today. Are we NOT? There is no need for such a profession or forcing anybody to do what THEY DONT WANT to do. Our ancestors could not put themselves in those people shoes. Even now most of us could not do it. It is not that simple if you can not think or rationalize!

    What are we going to do with them? Here is the challenge! 2+2 =4 is very simple only for "educated" people. It is complicated for "uneducated people". One could not see "venom" in the kulak kalavi are just "uneducated brutes", it is as simple as that. They are with us, around us and living everywhere. I am not going to waste my time teaching them 2+2=4 because I know they lack brain! I will just move on just fixing myself. That's the best I can do.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் தெளிவு பல நேரம் என்னை வியப்பில் ஆழ்த்தும் . இந்த முறையும் உச்சந்தலையில் நச்சென குட்டி அதை தான் எனக்கு புரிய வைத்திருக்கிறீர்கள். The problem is some newly educated(!?) Young Readers now a days use these stereotype explanations to enrich their view and argument to support their caste refinement thesis. Don't know whether we are going forth or back through our education. One thing is clear. Those youngsters jus learnt to write and read but not to think and analyse. Again it's the result of education focused on marks ane marks only.I'm happy and satisfied to be a middle sxhool teacher as i can focus on building character in contradiction to a high school teacher. Thnx varun for your sincere comment😊

      நீக்கு
    2. நீங்கள் என் பதிவை படித்தீர்களா வருண்? பல நேரம் நாம் இருவரும் பல கருத்துக்களின் ஒன்று பட்டும், எதிர் நின்றும் வாதித்திருக்கின்றோம். நான் சொல்ல வந்த பதிவின் கருத்தை புரிந்து கொள்ள என் பேஸ்புக் பக்கம் இந்த பதிவின் பின்னூட்டம் பாருங்கள். என்னால் நான் சொல்ல வந்த கருத்தை சரியாக எழுத முடியவில்லையா? எனவும் சிந்தனை வந்தது. ஆனால் தில்லையகத்து கீதா என் பதிவில் இட்டிருக்கும் பின்னூட்டம் நாண் சரியாக தான் எழுதி இருப்பதாக தோன்ற வைக்கின்றது. இங்கே புரிதலில் தான் குழப்பம். என் கருத்தில் இல்லை.///


      தில்லையகத்து கீதாக்கா பின்னூட்டம் இது.

      நல்ல பதிவு நிஷா...எந்த ஒரு நல்ல கருத்தும், திட்டமும் அதனை யார் கொண்டு வந்தாலும் நன்றாகச்சிந்தித்துப் பார்த்து சமுதாயம் சார்ந்த நோக்கில் பார்க்கப்பட்டால் நல்ல மாற்றங்கள் விளையும். அரசியலாக்கப்பட்டால், சுய வெறுப்புகளைத் திணித்தால் எதுவும் சொல்வதற்கில்லை...இலங்கையில் உங்கள் பகுதியில் நல்லது நடந்திருப்பதும் நடப்பதும் மிகவும் மகிழ்வான விஷயம், பாராட்டப்பட வேண்டியதும் ஆகும். கீதா

      நீக்கு
  9. வாவ்! இது நினைவே தானா...ஓ? நினைவே தானா? :))
    மீண்டும் வருகை தந்தது மகிழ்ச்சி மைதிலி..தொடரவும்.

    பின் குறிப்பு: நானும் வரத்தான் நினைக்கிறேன் :)))

    பதிலளிநீக்கு
  10. பகுதிநேர வேலை செய்வது தவறில்லை..ஆனால் பிடித்ததாக, படிப்பிற்கு ஊறு விளைவிக்காமல் செய்யலாம். குலத்தொழில் என்று முத்திரையில் எனக்கு விருப்பமில்லை., அது சரியும் இல்லை.

    பதிலளிநீக்கு
  11. பரவாயில்லை எனக்கும் ஒரு துணை கிடைத்திருக்கிறது சகோ. நான் மட்டும் தான் வலையுலகில் இருந்து அறுபட்டுட்டேனோ என்று நினைத்திருந்தேன். நீங்களும் கொஞ்ச காலம் என்னை மாதிரி ஒதுங்கி இருந்திருக்கிறீர்களே . துணைக்கு ஒரு ஆள் கிடைச்சிருக்குன்னு சின்ன சந்தோசம்.

    பதிலளிநீக்கு
  12. நிறைய பேர் மிஸ்ஸிங். நம் டீம்ல பலரும் நம்மை போல Rest எடுக்கிறாங்க போல (ஆமா ,அப்டி என்ன மைதிலி வெட்டி முறிச்ச Mind voice)welcome அண்ணா

    பதிலளிநீக்கு
  13. என்னோட பதிவின் மறைந்திருக்கும் ஆதங்கம், உட்பொருளையே சரியாக புரிந்து கொள்ளாத சூழலில் நீங்கள் இருப்பதை நான் உணர முடிகின்றது. ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

    வரலாற்றின் படி...இச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது இதன் பெயர் குலக்கல்வி அல்ல. இதன் பெயர் குலக்கல்வி என பெயரிட்டு அரசியலாக்கியதும், அதன் மூலம் இன்று நீங்கள் அடைந்திருப்ப்பதாக சொல்லும் வெற்றியும் வெற்றியே அல்ல.

    தமிழர் நாகரிகங்களையும், உலகின் தமிழருக்காக மதிப்பு, பண்பாட்டு கலாச்சாரங்களுகான முக்கியத்துவத்தையும் சரியாக உணர்ந்திருந்தீர்களானால் இன்றைக்கு நீங்கள் அடைந்திருக்கும் எதுவே வெற்றியாக தோன்றாது.

    ஜாதியில், கல்வியில், பெண்கல்வியில், பெண் விடுதலை, பொருளாதாரம் என எதிலுமே நீங்கள் அடைந்திருப்பது வெற்றியும் அல்ல. அப்படி ஒரு மாயை உங்களுக்குள் புகுத்தப்பட்டிருக்கின்றது.

    சுதந்திர பெண்களை அடிமை என்பதும் அறிவின் மேலோங்கி உலகினையே தன் கைக்குள் வைத்திருந்த தமிழ் அரசங்களின் ஆளுமையையும், கட்டடக்கலைகளின் மேன்மையையும், இன்னமும் நமக்கு சாட்சிகளாக சங்கப்பாடல்கள், தொன்மை மிகு புராணங்கள், வரலாறுகள், கோயில்கள், கட்டுமானங்கள் என நிருபிக்கும் போது தமிழர் என்னமோ அறிவீலிகளாக் வாழ்ந்தார்கள் என்பதே தவறானகருத்து.

    அறிவில் சிறந்தவனை, ஆற்றல் மிகுந்தவனை, அடக்கி, தொழில் ரிதியில் பேதங்களை உருவாக்கியதும், அதனூடான் பிழைப்பே முதலில் முன் நிலைப்படுத்தபப்ட்டதனால் மகக்ள் கல்வியில் பின் தங்கியதும், அதை வைத்தே அடிமைப்படுத்தப்பட்டதும் தான் வரலாறு.

    உலகப்பெண்களிலேயே தமிழ் பெண்களுக்கிருந்த சுதந்திரமும் உரிமையும் வேறெந்த இன பெண்களிடமும் இருந்ததில்லை. எம்மிடம் இருந்ததை இல்லை இல்லை என சொல்லி நெகடிவ் அலைகளை உருவாக்கி, யானையை பூனையாகவும், புலியை எலியாகவும், மாற்றி இருப்பது தான் இன்றைக்கு நீங்கள் அடைந்திருக்கும் வெற்றி.

    அதை தான் நான் உணர சொல்கின்றேன். அகக்கண்களை திறந்து ஆறிவு சார்ந்து ஆராய்ந்து சிந்தித்து பாருங்கள். என் பதிவில் சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்தபப்ட்டார்களா? என எழுதி இருக்கும் பதிவை பாருங்கள். நீங்கள் அடைந்திருக்கும் வெற்றி எதுவென புரியும்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போது அடக்கி ஆள ஆசைப்பட்டார்கள் என்பது தான் என் கேள்வி.விடை வருணாசிரமம் வந்த பின்பு.எளிய எடுத்துக்காட்டு அதற்குப்பின் பெண்பால் புலவர்களே இல்லை, வெள்ளக்காரன் வந்த பின் தான் ஒன்றிரண்டு பரம்பரை பணக்காரப் பெண்கள் படித்தனர். சாவித்திரி பூலே விற்குப் பின், காமராசருக்குப்பின் தான் இங்கு அனைத்து பெண்களும் படிக்கவே முடிந்தது, வரலாறு எல்லாவற்றுக்கும் ஆதாரம் வைத்திருக்கிறது அக்கா

      நீக்கு
  14. என் பேஸ்புக் பதிவின் பின்னூட்டங்களை தெளிவாக படித்திருந்தால் நாங்கள் உரையாடி இருக்கும் பல் விடயம் உங்களுக்குள் சிந்தனையை தந்திருக்க வேண்டும், ஆனால் நீங்களே இது தான் முடிவென எடுத்து கொண்டு நான் இந்த முடிவில் பதிவிட்டேன் என நினைத்தால் நான் என்ன செய்ய முடியும்,? என் பதிவுகள் யாரையும் குற்றம் சாட்டுவதும் ஆதரிப்பதும் இல்லை. சமூகம் சார்ந்து நல்லதை தேடுவது. நான் என்னை சிறு குறிகிய வட்டத்தில்; அடைக்க விரும்பாமல் என் உலகை பரந்ததாக்கி தேடலை தொடர்கின்றேன். விவாதங்களை ஆரம்பிக்கின்றேன். அதில் கிடைக்கும் நன்மையை, நலல்தை புரிந்து கொள்ள முயற்சிகின்றேன். இலங்கையில் ஜாதிகள் ஒழிந்தது கல்வியால் தான். அந்த கல்வியை பெற்றது எப்படி என சொல்வதே என் பதிவின் நோக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் நீச பாசை பேசிய வியாசர் பாரதம் எழுதியதை சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள், அதே பாரத்தில் தான் கற்றுக் கொண்ட வித்தைக்காக விரலை கொடுத்தவனும், குலம் மறைத்து கற்றுக் கொண்டதற்காக சமயத்தில் வித்தை மறக்கும் சாபம் பொற்றவனும் இருக்கிறார்கள் என்பது உங்கள் கவனத்துக்கு

      நீக்கு
  15. நீங்கள் பதிவில் நான் என்னை குறித்து எழுத வில்லை என சொல்லி இருந்தீர்கள். அதை தனிப்பதிவாக எழுதுகின்றேன்மா

    பதிலளிநீக்கு
  16. எழுதுங்க அக்கா, ஆவலா காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. நிஷா: நான் உங்கள எங்கே விமர்சித்தேன்? ஒரிஜினல் பதிவை நான் பார்க்கவில்லை.

    அதனால் நான் பொதுவாக குலக்கல்வியை நியாயப் படுத்துபவர்கள் அதன் கொடுமை தெரியாமல் இருக்காங்கனு எழுதினேன். நீங்கள் நியாயப் படுத்தவில்லை என்றால், நீங்கள் தவறாக புரிந்து கொள்ளப் பட்டால் தயவுசெய்து என் விமர்சனம் உங்கள நோக்கி எறீந்ததுனு நினைக்காதீங்க. எனக்கு ஒரிஜினல் பதிவு ஆல்ஃப்ஸ் நிஷா அவர்களதுனு தெரியாதுங்க. இருந்தாலும் நான் பொதுவாக என் அனுபவத்தை சொன்னேன்.

    எனக்குத் தெரிய என் ப்ராமின் ஃப்ரென்ட் ராதா, ராஜாஜி இதை நல்லெண்ணத்தில் கொண்டு வந்தார் நியாயப்படுத்தி இருக்கிறான். அதேபோல் ஏகப்பட்ட ஃப்ராமின்ஸ் நியாயப்படுத்திப் பார்த்து இருக்கிறேன். You need to look at his carefully, தன் தந்தை பார்பராகவோ, தோட்டியாகவோ, வெட்டியானாகவோ இல்லை என்பதை பொதுவாக பலர் உணராமலே நியாயப் படுத்துவார்கள். நம்மில் பலர் நம்மை அவர்கள் நிலையில் நிறூத்தி பார்ப்பதில்லை. வேற எங்கேயும் போக வேண்டாம் என் ரிலடிவ்ஸ்ல கூட இதுபோல் பலர் இருக்காங்க. நான் அவர்களயும் மனதில் கொண்டுதான் எழுதினேன்.

    இப்போவும் பாருங்க, பிராமணர் யாருமே ராஜாஜி செய்தது தப்புனு சொல்ல மாட்டார்கள். நாம ராஜாஜியைத் தவறாகப் புரிந்து கொண்டதாகவே நியாப்படுத்துவார்கள். பதிவை வாசித்துவிட்டு வாசிக்காதது போலவும் நமக்கென்ன? என்பதுபோல் போய்விடுவார்கள். That's the attitude I HATE MOST!

    நிஷா; நான் பொதுவாகத்தான் என் அனுபவத்தில் நான் பார்த்ததை வைத்து என் கருத்தை வைத்தேன். என் பின்னூட்டத்தை வாசித்தால் உங்களூக்குப் புரியும்.

    We have always been a good friends- no matter whether we agree with each other or not, in several issues-, we will continue be the same. Take it easy, please.

    BTW, Everybody's experience is different. I have seen how some people are abused ruthlessly- just because they were poor and born in such and such community- with my own eyes. I tried to put mys sisters in the shoes of innocent girls who have been abused by "high class trashes"! My blood will boil if I imagine my sister in place of the other girl. Trust me, NOT MANY would do that. Only some "fools" like me try understand others feelings by putting myself in their shoes.

    பதிலளிநீக்கு
  18. நிஷா: உங்க பதிவில் நகைத் தொழில் பண்றவங்க, மீன் பிடிப்பவர்கள் பத்தி சொல்லி இருக்கீங்க..

    ***மற்றவர்கள் எப்படி ஒதுக்கப் பட்டார்கள் ஒடுக்கப் பட்டார்கள் என்றூ எனக்குத் தெரியாது***னு சொல்லி இருக்கீங்க. இதை வெட்டி ஒட்ட முடியவில்லை.

    இங்கேதான் பிரச்சினையே. அப்பா பார்பராக இருந்தால், சலவைத் தொழிலாளீயாக இருந்தால், தோட்டியாக இருந்தால்? அவர்கள் பசங்க, குலக் கல்வியை எப்படிப் போற்றூவார்கள் என்பதே கேள்வி.

    நம்ம பாதிக்கப் படவில்லை. மற்றவர்கள் பத்தி எனக்குத் தெரியாது என்பது வரை சரி. மற்றவர்கள் பாதிக்கப் படுவதை பார்த்து, அவர்கள் நிலையில் தன்னை நிறூத்திப் பார்ப்பவர்களூம் இருக்காங்க. அவர்கள் குலக்கல்வி தவறானதுனு சொல்றாங்க.

    நம்ம எப்போவுமே சமுதாயத்தில் பாதிக்கப் படும் மக்கள கவனிப்பதே இல்லை. நமக்கு அந்த் அனுபவம் இல்லை, நாம் பாதிக்கவில்லைனு நம் கருத்தை (நமக்குத் தெரிந்ததை வைத்து சொல்லிவிட்டுப் போய்விடுகிறோம்.

    கீதாவோ, நீங்களோ குலக்கல்வியால் பாதிக்கப் படவில்லைங்க. பாதிக்கப் பட்டவங்க அதை சொல்ல வெட்கப்பட்டு கூணீ குறூகி அமைதியாக பதிவை வாசித்துக் கொண்டு இருக்காங்க. அவர்கள, உங்களாலும், கீதாவாலும் பார்க்க இயலவில்லை. ஒரு சிலருக்கு பாதிக்கப்படும் அவர்கள் படும் அவதி மனக்கண்ணீல் தெரிகிறது. அவ்வளவே.

    Nisha: BTW, I am not judging you. You just shared some parts of it. I am just analyzing the less than 1% people (they are our brothers and sisters, TAMILS) who have been OVERLOOKED by you. That's all.

    பதிலளிநீக்கு