சனி, 13 ஜூலை, 2019

வசந்தமாளிகை - திரைவிமர்சனம்

கொஞ்சம் நாட்களுக்கு முன் சகஆசிரியத்தோழி ஒருவர் வித்யாசமாய் ட்ரீட் கொடுக்க எண்ணி வசந்தமாளிகை படத்துக்கு எங்கள் குழுவை அழைத்துச் சென்றார். அந்த டீமிலேயே நான் மட்டும் தான் ஜூனியர். கே டிவியில், பின் மதியங்களை அப்பத்தா, தாத்தாவோடு கழித்த நினைவில் நானும் கிளம்பினேன். நான் சிவாஜியை கதாநாயகனாக பெரியதிரையில் பார்த்த முதல் அனுபவம். ரொம்ப யோசித்தும் அவரை அப்பா, தாத்தாவாகக்கூட பெரியதிரையில் பார்த்த நினைவில்லை. படம் தொடங்கிய சில நிமிடங்கள் அஞ்சு ரூபாய் வாங்கிட்டு ஐம்பது ரூபாய்க்கு நடிக்கிறாரே என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நேரம் செல்லச்செல்ல அதிலும் குறிப்பாக காதல் வசப்பட்டபின், என்ன ஒரு நடிப்பு. இதயம் இருக்கிறதே அத ஒருதர்க்கு கொடுகிறவரை ரொம்ப விசாலமா இருக்கும், ஆனா கொடுத்த பின்னாடி ரொம்ப சுருங்கிப் போயிடும் என காதல் பேசும் போதும் சரி, பெரியவங்க சம்பாதிச்சதெல்லாம் பாவப் பணம்ன அதை குடிச்சுத்தான் அழிக்கனும் என காலை வாரும்போதும் சரி அப்படி ஒரு துள்ளல். லத்தா எனும் சிவாஜியின் அந்த அழைப்பு காதல் காட்டும் கண்ணாடி. அதற்கு முன் அந்த கண்ணாடி அறையெல்லாம் டம்மி தான். ரப்னே பனாதி ஜோடி என்றொரு ஷாருக் படம் ஷாருக்கும் அனுஷ்கா ஷர்மாவும் துஜ்மே ரப் திக்தாகே என்றொரு பாடல் பெரியவள் ரிப்பீட் மோடில் கேட்பாள். என்னை பார்க்க சொல்லி அவள் நச்சரிக்க, அவள் ஷாருக்கையும் அனுஸையும் பார்த்துக் கொண்டிருக்க, நான் சுற்றி நின்று ஆடிய குட்டீஸில் ஒன்று ஸ்டெப்ஸ் மாற்றிவிட்ட அருகே இருக்கும் சுட்டி அவளை அவசரமாய் திருத்துவதை சுட்டிக்காட்டி ரசித்தேன். சிவகார்த்திகேயன் உன்னவிட்டா யாரும் எனக்கில்ல என உருகும் பாடலில் சமந்தா தோளில் கைவைக்கயில் டைமிங் மிஸ் ஆகும். இப்படி தான் அம்மாவிடம் சூழுரைத்தபடி சிவாஜி ரிவர்சிலேயே வரும் சீனில் பின்னால் இருக்கும் ஸ்டூலில் தட்டி விழப்போகும் நிமிடத்திற்காக காத்திருந்தேன். குறைந்தபட்சம் அதை தடுமாற்றமாக அவர் சமாளிப்பாரோ என யோதித்தபடி இருக்க, அவரோ மிக இயல்பாய் நகர்த்து செம பல்பு கொடுத்தார். எத்தனை டேக்கில் எடுத்திருந்தாலும், சிறு தன்னுணர்வையும் வெளிப்படுத்தாது அவர் நகர்ந்த இடத்தில் நிஐமாவே நிறுவியிருக்கிறார் நடிகர்திலகமென்று. கணவனே கண்கண்ட தெய்வம் காலத்தில் காதலில் தன்மானம் பேசும் வாணிஸ்ரீ பாத்திரம் புதுமை. என் வரையில் வாணி அந்த காலத்து லேடி சூப்பர் ஸ்டார். இருளும் ஒளியும், வாணிராணி படங்களில் அவரது போல்டான நடிப்பை ரொம்ப பிடிக்கும். உங்க அக்காவுக்கு ரொம்ப அகம்பாவம் என சிவாஜி குறைபட்டுக்கொள்ளும் போது குஷி படத்தில் விஜய் விஜயகுமாரிடம் அவ அகம்பிடிச்சவ என புலம்புவது நினைவுக்கு வருது. பிடிக்கலன்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது எனும் வசனத்தை அந்த காலத்திலேயே வைத்த இயக்குனருக்கு ஒரு பூச்செண்டு. வசனங்கள் கூகிலிட வைத்தன. பாலமுருகனின் வசனங்கள் படத்தில் ஒரு முக்கியத்தூண். ஏன் ஏன் ஏன் பாடல் பலரையும் தனைமறந்து தாளமிட வைத்தது, எங்கள் குழுவில் சற்று இறுக்கமான அந்த சீனியர் உட்பட. ஆடை பலவும் இன்றும் ட்ரென்டாகும் ரசனையோடு இருந்தன. அப்புறம் சொல்ல மறந்துட்டேனே எங்க காலத்திலே எல்லாம் இப்படி இல்ல. நகைச்சுவைன சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும்னு வசனம் பேசிய அந்த பெருசுகளை தேடிக்கிட்டிருக்கேன். வி.கே.ராமசாமியும், நாகேஷும் இணைந்து வரும் காட்சிகள் எல்லாம் கஞ்சா கருப்பு ரகம். எங்க பட்டாளத்தை தாண்டி ஒரு மூத்த தமிழ்குடிமகன் நான் மனக்குரலில் கொடுக்க நினைத்த கமெண்டுகளையும் சேர்த்து குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். என்ன அந்த காமெடி சீசின்ல் அவர் ரவுசு தாங்க முடியல. மொத்ததில் மாரல் ஆப் தி ஸ்டோரி இஸ் "என்னை மன்னிச்சுக்கோங்க பாஸூ, திமிங்கலத்தை டீவில பார்த்து இம்புட்டுத்தான்னு நினைச்சு என் தப்பு தான்" என சிவாஜியிடம் மானசீகமாய் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

10 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் மைதிலி!

  அட! உங்களிடமிருந்து விமர்சனம்!

  இந்தப் படம் நான் அப்போதும் பார்த்ததில்லை. ஆனால் வேறு சில சிவாஜி படங்கள் பார்த்திருக்கிறேன். பேர் எதுவும் எனக்கு டக்கென்று நினைவுக்கு வராது. ஹிஹிஹி

  சிவாஜியின் நடிப்பு எனக்குப் பிடிக்கும். ஓவர் ஆக்டிங்க் என்று சொல்லப்பட்டாலும் பல இடங்களில் அவரது எக்ஸ்பெர்ஷன்ஸ் மிகவும் நன்றாக இருக்கும். அந்தக் காலத்தில் இந்த ஒவர் ஆக்டிங்க் என்பது சகஜம்.

  டெடிக்கேட்டட் கலைஞர் அவர்.

  நல்ல விமர்சனம் .

  கீதா

  பதிலளிநீக்கு
 2. ஆஹா.... மீண்டும் ஒரு பதிவு உங்களிடமிருந்து... மகிழ்ச்சி.

  பொதுவாகவே சினிமா படங்கள் பார்ப்பது குறைவு. அதிலும் தமிழகம் விட்டு வந்த பிறகு தியேட்டரில் சென்று படம் பார்க்கக் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு.

  சிவாஜியின் நடிப்பு பற்றி என்ன சொல்ல. பல இடங்களில் ஓவர் ஆக்டிங் என்று சொல்ல வைக்கும் நடிப்பு அவருடையது. ஆனால் பல இடங்களில் பார்ப்பவர்கள் ரசிக்கும்படி இருக்கும்.

  வசந்த மாளிகை இது வரை பார்த்ததில்லை! பாடல் காட்சிகள் பார்த்ததுண்டு.

  பதிலளிநீக்கு
 3. மிகவும் பிடித்த படம். எத்தனை முறை ஆனாலும் சலிக்காமல் பார்ப்பேன். விமர்சனம் அருமை சகோதரி.

  பதிலளிநீக்கு
 4. நிச்சயம் மிஸ் பண்ணக் கூடாத படம். இது ரீ ரிலீஸ்ன்பதால் பார்த்தீர்கள். வாய்ப்புக் கிடைத்தால் நீதி படம் பாருங்கள். இந்தப் படத்தின் பல வசனங்கள் இன்னும் என் மனதில். இந்தப் படத்தின் நகிச்சுவை மட்டும் மட்டமான முறையில் இருக்கும். பாடல்கள் அருமையாய் இருக்கும். "லதா... ஏன்அப்படி செஞ்சே?" புகழ் பெற்ற வசனம்.. அதே போல "அதைத்தான் அவங்க பாசம்ங்கறாங்க" வசனமும்..

  பதிலளிநீக்கு
 5. லதா... ஏன் அப்படி செஞ்சே?

  இந்த வசனம் (சந்தேகம்) தான் படத்தில் முக்கியமான திருப்புமுனை...! அதன் பின்... ஞாபகம் வந்து சிலவற்றை இங்கே சொல்கிறேன் :-

  (1) அக்கா வரலையா...? அவ வர மாட்டா... அவளுக்கு அகம்பாவம் ஜாஸ்தி... ஆனா எனக்கு அவள்கிட்டே பிடிச்சதே அந்த அகம்பாவம் தான்...!

  (2) பைத்தியக்காரி, நீ வேண்ணான விட்டுறதுக்கும் குடின்னா குடிக்கிறத்தும், நானென்ன அவ்வளவு பலகீனமானவனா...?

  இதற்கும் குறள் உண்டு... ஆனா... இப்போதைக்கு அதே படத்தில் வரும் முதல் பாடலில் சில வரிகள் என்றாலும், சிந்திக்க வேண்டிய வரிகள் :-

  உலகத்தின் வயதுகள் பலகோடி...
  அதில் உருண்டவர் - புரண்டவர் பலகோடி...
  உங்களின் இருப்பிடமோ ஒரு கோடி...
  உயிர் ஓடிவிட்டால் பின்னர் வருமோடி...? வருமோடி…?

  எனது கருத்துரை @ எங்க(ள்) blog வலைத்தளம்...!

  பதிலளிநீக்கு
 6. நீங்க ரிவேர்ஸ் க்ரோனாலைஜிகல் ஆர்டர்ல போயி புதுப்படங்கள (குஷி எட்சட்ரா) வசந்த மாளிகையோட ஒப்பிடுவதுல இருந்து நீங்க ரொம்ப "சின்னப் பொண்ணு" (வசந்த மாளிகை முதல் அல்லது இரண்டாம் பதிப்பில் பார்த்த காலத்து மக்களுக்கு) னு காட்டிடுறீங்க. :)

  ப்ரேம் நகர்னு தெலுகுல வந்த படத்தை தமிழில் ரீமேக் பண்ணினாங்களாம். ரீமேக் என்றாலும் கண்ணதாசன் பாடல் வரிகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும். ப்ரேம் நகர்ல நாகேஸ்வர்ராவ் இறந்து போவதாகக் காட்டுவாங்களாம். தமிழ் ரசிகர்கள் அதை ஏத்துக்க மாட்டாங்கனு தமிழ்ல சின்ன துரையை பிழைக்க வச்சுட்டாங்களாம். தமிழர்களுக்கு மட்டும் கரடு முரடான இளகிய இதயம் போலும் :)

  இரண்டு மனம் வேண்டும்
  இறைவனிடம் கேட்பே(டே?)ன்
  நினைத்து வாட ஒன்று
  மறந்து வாழ ஒன்று

  ---
  நான் யார் உன்னை மீட்ட
  வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழிகாட்ட
  ஏனோ துடிக்கின்றேன், அதன் இனம் தெரியாமல் தவிக்கிறேன்.. (இப்படித்தான் லதா தன் காதலை ஆனந்துக்கு அழகாகச் சொல்லுவாள்). கலைமகள் கைப்பொருளே பாடலில்..

  ---------
  எனக்குத் தெரிய ஒரு இந்தக்காலத்துப் பொண்ணு.. உன்னை அல்லாதொரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன் வரியை (மயக்கமென்ன சாங்) கேலி செய்தாள். சிரித்தாள்.. இதெல்லாம் டூ மச்னு..அதுக்கப்புறம் என்ன ஆச்சுனா அந்த பொண்ணு ஃஃபெல் இன் லவ் வித் சம் ஒன்.. ஷி வாஸ் கோயிங் க்ரேஷி..கண்ணதாசனை விட பல மடங்கு உளற ஆரம்பித்துவிட்டாள். நெஜம்மாத்தான் சொல்றேங்க..
  அதாவது கவிஞர்களும் காதல் வயப்பட்டவர்களும் ராஷனலைஸ் செய்ய முடியாத மனநிலையில் இருப்பாங்க. இப்படித்தான் கண்ணதாசன் வரிகள் போல் "உளறுவாங்க" போலனு எனக்குத் தோணுச்சு. கொஞ்ச நாளைக்குத்தான்..

  உங்க தம்பிகூட ஏதோ "வம்பில்" மாட்டிக்கிட்டாருனு சொன்னீங்களா?!

  நான் சிவாஜியோட பரம ரசிகன். நடிப்பு என்பதே பக்கா செயற்கைதான். ஷூட்டிங் பார்த்தால் தெரியும்..இதில் "ஓவர் ஆக்டிங்" என்கிற க்ரிடிசிசம் எல்லாம் என்னை (சிவாஜி விசிறிகளை)ப் பொருத்தவரையில் அர்த்தமற்றது. கேமரா முன்னால செய்றது எல்லாமே ஓவர் ஆக்சன் தான்.

  பதிலளிநீக்கு
 7. சகா! பிய்த்து விட்டீர்கள்! நான் இந்தப் பதிவை இங்கு வந்து படிக்கக் கொடுத்து வைக்கவில்லை. இப்பொழுதுதான் உங்கள் பேசுபுக்கு பதிவில் படித்து விட்டு வருகிறேன். அங்கு நான் எழுதிய கருத்து அப்படியே இங்கு கீழே!

  சில பதிவுகளைப் படிக்கும்பொழுதுதான் தோன்றும், ஏன் ஒரு பதிவுக்கு ஒருவர் ஒரு விருப்பக்குறிதான் கொடுக்க முடியும் எனக் கட்டுப்பாடு வைத்திருக்கிறார்களோ என்று. இஃது அப்படி ஒரு பதிவு!

  நாங்களும் வெளியிட்டோமே வசந்தமாளிகைக்குத் திரைவிமர்சனம்! 🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️ சரி விடுங்கள்! "சாமிய பத்திப் பேசும்போது சனியன பத்திப் பேசாத" என்று ஒரு பெரிய மனிதர் சொல்லியிருக்கிறார்.

  சிவாஜி அவர்களின் நடிப்பைப் பார்க்கும் இன்றைய தலைமுறையினர் பலரும் கூறும் குற்றச்சாட்டு, அவருடையது மிகை நடிப்பு என்பது. அது தவறு என்பதற்கு நான் வழக்குரைஞன் போல (அல்லது வழக்கம் போல) வாதத்துக்கு மேல் வாதமாக அடுக்கி ’வெள்ளித்திரை’ படத்தில் வரும் பிரகாஷ்ராஜ் உரையாடலெல்லாம் அள்ளி விடுவேன் (அந்தப் படம் வருவதற்கு முன்பிருந்தே 😁😁).

  ஆனால் அதையே நீங்கள் எவ்வளவு அழகாகக் கலைநயத்தோடு சொல்லி விட்டீர்கள்! இதற்காக நீங்கள் அந்தக் கால வாழ்க்கைமுறையையெல்லாம் வம்புக்கு இழுக்கவில்லை. மாறாக, அவர் நடித்த படம் ஒன்றிலிருந்தே இயல்பான எடுத்துக்காட்டை முன்வைத்து அசத்தி விட்டீர்கள்!

  உங்களைப் போல் இயல்பாக எழுத நான் எப்பொழுது கற்றுக் கொள்வேனோ தெரியவில்லை. நன்றி சகா, இப்படி ஒரு பதிவுக்கு! இதை நான் நூற்குறியிட்டு வைத்துக் கொள்ளப் போகிறேன். இனி யாராவது சிவாஜியின் நடிப்பைப் பற்றித் தவறாகப் பேசினால் இதை அவர்களுக்கு அனுப்புவேன்.

  பதிலளிநீக்கு
 8. சிவாஜி படம் அந்த காலத்தில் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது இந்த காலத்தில் அந்த படங்களை பார்க்க வேண்டுமென்றால் சரக்கை நன்றாக அடித்துவிட்டுதான் பார்க்க வேண்டும் இல்லைன்னா தாங்க முடியாது..


  ஆமாம் இந்த படத்தை எல்லாம் எப்படி அதுவும் இந்த காலத்தில் தைரியமாக பார்த்தீர்கள் சகோ

  பதிலளிநீக்கு
 9. அட! இப்படி ஒரு தமிழ்ப்படமா? நான் இங்கிலிஷ் படம்னு நினைச்சேன்.

  மைது உங்க விமர்சனம் வழக்கம் போல நல்லாருக்கு. வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு