புதன், 18 செப்டம்பர், 2013

கூடுகளின்றி அலையும் சிட்டுக்குருவிகள்


        ஒரே தலைப்பில் ரெண்டு கவிதைகள்.

1.கூடு தொலைத்த குருவியொன்று
   கொத்திக்கொண்டிருந்தது என்
   சன்னல் விளிம்பை



   அழிந்து வரும் பெருவனத்தின்
   அவலத்திற்கு ஆறுதலாய்
   குருவியிடம் பேசக்குனிந்தேன்

   சிறகுலுக்கி ,சிரம் சாய்த்து
   சிட்டுக்குருவியும் செருமிக்கொண்டது
   சிலிர்ப்பான சில கேள்விகளுக்காய்

   கண் எட்டும் தூரம் வரை -உங்கள்
   கான்கிரீட் வனங்கள் -எனினும்
   நடை பாதை நிழல் தானே நாடோடிச்சிறுவனுக்கு

   வீட்டு வேலைக்காய் நேர்ந்து விடப்பட்ட
   விட்டில் பூச்சி சிறுமியர்-விடுமுறைவிட்டனரா ?
   விளையாட்டு ப்பருவத்திற்கு
 
   வளர்த்தெடுக்கத்தான் வார்க்கப்பட்டத்தாய்
   வாழ்நாளையெல்லாம்  கரைத்த பெற்றோருக்கு
   வாய்த்தது என்னவோ முதியோரில்லம்

  காய்ப்புக்காய்த்த கைகளோடும்
  கனவுகள் சுமந்த விழிகளோடும்
  கைவிடப்பட்ட உறவுகளால்

   கூடுகளின்றி அலையும் சிட்டுக்குருவிகளை
   என்றேனும் உணர்ந்தத்துண்டா -என்று
   இதயப்பாறையில் எச்சில் விதை
   தூவிப்பறந்து விட்டது சிட்டுக்குருவி -கஸ்தூரி




















தேசத்தை ஆண்ட இனம் -அன்று
மோசத்தால் மாண்ட இனமாய்
அகதியாய் போனது இன்று
நான் சிட்டுக்குருவி இனத்தை மட்டுமே சொல்கிறேன்
 

கதிரடித்த நெல்மணிகள் கழனியே தனதாக
வேண்டுமட்டும் கொண்ட இனம் -அன்று
கருணையின் பேரால் வீசப்படும் உணவால் வாழ்கிறது இன்று
நான் சிட்டுக்குருவி இனத்தை மட்டுமே சொல்கிறேன்
 

முற்றத்து வேப்பமர ஊஞ்சலிலே ஆடியதும்
முன்னறையில் சரவிளக்கில் கூடுகட்டி பாடியதும் -அன்று
முள்வேலி ,கண்ணாடி வேலி செல்பேசி த்தடங்களால்
சொந்த நாட்டில் அடிமையாய் ,ஆம் சிட்டுக்குருவிகள் மட்டும் தான்

எங்கள் வசதிக்காக ,வசதியாய் மறப்போம் அவ்வினத்தை
தீமைதான் என்றபோதும் பகட்டாய் பாதுக்காப்போம் வேலிகளை
எப்போதேனும் கூட்டம் போட்டு கொதித்து போவோம்
கூடுகளின்றி அலையும் சிட்டுக்குருவிகளுக்காகவும் -
   
                                                                                              கஸ்தூரி






7 கருத்துகள்:

  1. அரிய சிட்டுக் குரு்வி இன்ம்
    அழிந்து வருகுது -அந்தப்
    பெரிய காடும் அழிந்து பாலை
    வனங்கள் பெருகுது

    கொள்ளிக் கட்டை கொண்டு மனிதன்
    தலையைச் சொறிகிறான் - தானே
    அள்ளித் தலையில் வைத்த நெருப்பில்
    அவனே எரிகிறான்

    இதற்கு மேலும் என்ன சொல்ல
    இனிய கவிதை பற்றிநான்?
    இயற்கை வாழ்வை இழந்த மனிதன்
    இதோ முடிவை எட்டினான்!

    எச்சரிக்கைக் கவிதைக்கு -
    நன்றிகலந்த வாழ்த்தும் பாராட்டுகளும் என் தங்கைக்கு என்றும் உரியவை.



    பதிலளிநீக்கு
  2. கவிதைக்கு கவிதையால் பாராட்டா?மிக்க மகிழ்ச்சி அண்ணா ,நன்றி

    பதிலளிநீக்கு
  3. அருமையான வரிகள் சகோதரி. கருத்தாளம் யோசிக்க வைக்கிறது தவிக்கும் இனத்திற்கு எப்போது விடிவுக் காலம் என்று. நானும் சிட்டுக்குருவி இனத்தைத் தான் சொல்கிறேன்..சிறப்பான சிந்தனைக்கு வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகள் சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரரே !மிக சரியாய் பின்னுட்டத்தால் கொஞ்சம் தெளிவாகத்தான் சொல்லி இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது .நீங்களும் மணவை என்றறிந்தேன் .மகிழ்ச்சி!!!

      நீக்கு
  4. அவ்வப்போது உன் புதிய கவிதையைப் பார்க்கவே உன் தளத்தை எட்டிப் பார்ப்பேன்... ரெண்டுவாரமாக ஏதும் எழுதவில்லையா?
    “நாளும் கிழமையும் நலிந்தோர்க் கில்லை
    ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக் கில்லை” என்ற கந்தர்வன் கவிதை உன் விடுமுறை நாளிலும் எழுதமுடியாத நிலையை ஏற்கெனவே சொல்லிவிட்டது என்றாலும்... பேனா காய்ந்துவிடக் கூடாது தாயே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பிற்கு நன்றி அண்ணா.தாயை போன்ற என் அத்தைக்கு உடல் நலம் சிறிது சரியில்லாத நிலையில் அவர்களுக்கு பணிசெய்ய வேண்டி என்னால் தொடர்ந்து எழுதமுடியாமல் போனது .இதோ இன்று ரெண்டு பதிவுகள்.

      நீக்கு
  5. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு