புதன், 2 ஏப்ரல், 2014

தீராத கதை சொல்லும் இரவு-ஆட்டோகிராப் பக்கங்கள் iii

ஒரு பெண்ணுக்கு இரவுப்பயணம் சாத்தியமா ?அதுவும் பதினெட்டு வயதில்! எல்லா பெண்களுக்கும் இதுகுறித்து சிறு ஏக்கமாவது இருக்கும். ஆனால் எனக்கு வாய்த்தது!
                                           பள்ளி சுற்றுலா போறதுனா  ரொம்ப பிடிக்கும். ஆனா அப்பா அனுமதிச்சதே இல்லை. எனக்கும்  ரெண்டாம் முறை கேட்க சுயமரியாதை(நாங்கல்லாம் அப்பவே அப்டி!) தடுக்கும். ஆனால் ட்ரைனிங் காலத்தில் கட்டாய சுற்றுலாவாக டெல்லி செல்லும் வாய்ப்பு கிடைத்தது! டெல்லி போறோம், ஆக்ரா போறோம் கிரதவிட முதன்முறையாக தோழிகளோட ஒருவாரம் ஔடிங் !!! எங்கள் இன்ஸ்டிட்யுட் நடத்திய அமைப்பு ஒரு தொடர்வண்டியையே வாடகைக்கு எடுத்திருந்தது! so, ஸ்டேஷன்க்கு ஸ்டேஷன் ட்ரைன் நின்றாலும் வேறு புது நபர் ஏறவோ, இறங்கவோ  போவதில்லை என்ற கூடுதல் பாதுகாப்பு வேறு. அந்த ஏழு நாட்களை மறக்கவே முடியாது.
                                          அதுவொரு அழகான நவம்பர் மாதம். எனக்கு ரொம்ப பிடித்தமாதம், மழை மாதமல்லவா! தொடர்வண்டி காவிரிக்கு மேல நகர்ந்து கொண்டிருந்தது, ஹெட் போனை எடுத்து காதுக்கு கொடுத்தேன். உன்னிமேனன் நதியே !நதியே! என தாலாட்ட தொடங்க, கண் சொருகவிடாமல் மென்சாரல் முகத்தில் மோதிக்கொண்டிருக்க இறக்காமல் சொர்க்கம் செல்லும் வரம்! அதுதான் நான் அந்த பாடலை கேட்ட முதன்முறை. இப்போ அந்த பாடலை கேட்டாலும் கண்கள் மூடிக்கொள்ள, காவிரி மீது பயணித்த அந்த காலைப்பொழுதுக்கு டைம் மெசின் இல்லாமல் சென்று திரும்புவேன்.
                                     பயணித்த இரவெல்லாம் இரவோடு விழித்திருக்கும் பந்தயம் வைத்துவைத்து த் தோற்று போவேன். உதயத்தில் சிறு அரவத்திலும் விழித்துக்கொள்ளும் என்னை பார்த்து பரிகாசம் செய்தபடி  புலரும் வானம்!  தனக்காக விழித்திருக்கும் எனக்காய் தீராத கதை சொல்லும் இரவு. அள்ளி அள்ளி பருகிய பின்னும் தாகம் அடங்காத விழிகள் இரவோடு உறவாடிய படியே இருக்கும்! மெள்ள மெள்ள என் தலை கோதி உறங்கவைத்துவிடும் ஒரு அன்னையை போல். ஒரு தொடர்வண்டியின் சன்னல் இருக்கையைவிட ரசனையான ஒன்று இருக்கமுடியுமா என்ன? அதுவும் மௌனம் மட்டுமே பேசு இரவில்!! இரவுக்கு ஒரு தனிமொழி உண்டு. இரவுக்கு  தனி வாசனை உண்டு. இரவுக்கென ஒரு இசை உண்டு. இரவுக்காக மட்டுமே விழித்திருந்து பார்ப்போருக்கு ஒரு விருந்தோடு காத்திருந்து காத்திருந்து ஓய்கிறது இரவு! பல நேரம் அர்த்தமற்ற  அக, புறகூச்சல்களில் அடங்கிபோய்விடுகிறது விசும்பும் இரவின் மௌனம்! இன்றும் அந்த சுற்றலா புகைப்படங்களில் புன்னகைக்கும் தோழிகள் எவரையும் விட வசீகரமான புன்னகையை சுமந்து நினைவுகளிலேயே தங்கிவிட்ட தோழி இரவு ! எப்போதும் அவளை நேசித்துக்கொண்டே இருக்கிறேன்!
  பி.கு:சில நாட்களுக்கு முன் விகடனில் என்போலவே எண்ணம்கொண்ட ஒரு பெண்ணின்(பாதுகாப்பற்ற) இரவுப்பயனத்தின் கதை(சபீதா)  மனக்குளத்தில் வீசிய கல்லால் மேலெழுந்த நினைவலைகள்!                     
 இசை கேட்க     
இதை படிச்சுட்டு இதுக்கு முந்தினபதிவை தேடும் தைரியசாலிகளுக்கு     

36 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரி
  இது நீங்கள் நடந்த நிகழ்வைச் சொல்கிறீர்களா! கவிதை சொல்கிறீர்களா! எனும் வியக்கும் வகையில் அமைந்த அழகான பதிவு. இரவுக்கு இப்படியொரு இலக்கணமும், தோழமையும் நான் படித்ததில்லை சகோதரி. தங்கள் ரசிப்பும் ரசனை குணமும் பதிவில் தலைதூக்கி எட்டிப்பார்த்து காட்சியாய் நிற்கிறது. என் அன்பு சகோதரிக்கு எனது வாழ்த்துகளும் நன்றிகளும்.
  --------------------
  நீங்க அப்பவே அப்படி கலக்கிட்டீங்க போங்க! நாங்களும் அப்பவே அப்படி தன்மானத்துல இல்லை சகோதரி அழுது பிடிச்சு சன்னலோரம் உட்காருவதில். இன்று வரை அது தொடர்கிறது. சன்னலோரம் பயணம் என்று ஒரு பதிவு போட வேண்டும் என்பது எனது வெகுநாள் ஆசை இதை உங்கள் பதிவு தூண்டிவிட்டுள்ளது. நன்றீங்க சகோதரி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த இரவு பயணம் எவ்ளோ அழகா இருந்தது சகோ!
   அதான் கவிதை போல இருந்திருக்கு!
   // சன்னலோரம் பயணம் என்று ஒரு பதிவு போட வேண்டும் என்பது எனது வெகுநாள் ஆசை இதை உங்கள் பதிவு தூண்டிவிட்டுள்ளது. //
   சீக்கிரம் போடுங்க சகோ ஆவலா காத்திருக்கேன்!
   நன்றி சகோ!

   நீக்கு
 2. அசத்தலான நடை மைதிலி... என் சிறுவயதில் வாய்த்த தனிமைப் பயணம் ஒன்றுக்கு மனஸ் போய்த் திரும்பியது. இரவு பற்றிய வர்ணனை அடங்கிய கடைசிப் பாராவை மடக்கி மடக்கிப் போட்டால்... கவிதை... கவிதை...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி பாலா அண்ணா தங்கள் ரசித்து தெரிவித்த கருத்திற்கு!

   நீக்கு
 3. உங்களுக்கும் இரவுக்கும் இருக்கின்ற பந்தத்தை மிகவும் அழகாக சொல்லிவிட்டீர்கள் சகோ!.

  "//ஒரு தொடர்வண்டியின் சன்னல் இருக்கையைவிட ரசனையான ஒன்று இருக்கமுடியுமா என்ன? அதுவும் மௌனம் மட்டுமே பேசு இரவில்!! //" - உண்மை தான்.

  உங்களுடைய அந்த டில்லி அனுபவங்களை சொல்வீர்கள் என்று பார்த்தால், ஏமாற்றி விட்டீர்களே சகோ, பிறிதொரு பதிவில் கண்டிப்பாக சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயண அனுபவம் தானே கண்டிப்பா சொல்றேன் சகோ( நமக்கு வாய்த்த அடிமைகள் ரொம்ப நல்லவர்கள்) சும்மா fun :)))))))))))))))
   நன்றி சகோ என்னையெல்லாம் எழுத ச் சொல்றதுக்கு.

   நீக்கு
 4. #இரவுக்கு ஒரு தனிமொழி உண்டு. இரவுக்கு தனி வாசனை உண்டு. இரவுக்கென ஒரு இசை உண்டு. இரவுக்காக மட்டுமே விழித்திருந்து பார்ப்போருக்கு ஒரு விருந்தோடு காத்திருந்து காத்திருந்து ஓய்கிறது இரவு#
  இரவு ஷிப்ட்டில் பணிபுரிவோருக்கு ,இது சாத்தியமில்லை என நினைக்கிறேன் !

  பதிலளிநீக்கு
 5. இரவுப்பயணம் பற்றிய கவிதை என்றே தலைப்புத் தந்திருக்கலாம் போல அப்புடி ஒரு நடை! சின்னப் பிள்ளைகள் கதை சொல்லும்போது உருட்டிவிழித்தபடி, கையைக் காலை ஆட்டியபடி பலவித பாவங்களோடு கதைசொல்லுமே (கதையை விட அதுவே ரசிப்பதற்குரியதாக இருப்பது வேறு) அப்படி இருந்தது உன் பயணக் கதை! எனக்கு நம்ம பாண்டியன் மாதிரி ஜன்னல் சீட்டுக் கிடைக்காத பயணங்களில் பாதிமனசு விட்டுப் போயிரும்...அது ஒரு காலம்பா இப்ப எங்க ரசிக்கிறது? அவசர அவசரமா அடிச்சுப் பிடிச்சு பஸ்ல எடம் புடிச்சி...உக்காந்தா... காதைக் கிழிக்கும் குத்துப்பாட்டுகள் கொன்றுவிடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /காதைக் கிழிக்கும் குத்துப்பாட்டுகள் கொன்றுவிடும்./ பயண அனுபவமே வீணாகிவிடும் இல்லையா அண்ணா.
   //சின்னப் பிள்ளைகள் கதை சொல்லும்போது உருட்டிவிழித்தபடி, கையைக் காலை ஆட்டியபடி பலவித பாவங்களோடு கதைசொல்லுமே // ரொம்ப ரசித்திருக்கீர்கள். நன்றி அண்ணா!

   நீக்கு
 6. இரவையே தோழியாக்கி அதை முழுமையாய் ரசித்து, ரசிக்கும் படியாய் வார்த்தைகளை கோத்து வர்ணஜாலமாய் எம் முன் படைத்தது அருமை! எனக்கு அது எல்லாம் கிட்டவே இல்லை தோழி! தங்களுக்கு கிடைத்ததில் சந்தோஷமே!
  வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனியா பாவம் தான் நீங்க !
   //தங்களுக்கு கிடைத்ததில் சந்தோஷமே//அது தான் இனியா
   நன்றி தோழி!

   நீக்கு
 7. சகோதாரர் சொன்னது போல என்னவொரு ரசனை. அழகாக சொல்லியிருக்கிறீங்க தோழி. எனக்கும் இரவுப்பயணம் ரெம்ப பிடிக்கும். அப்போ சாத்தியப்படலை. இப்போ இரவில்தான் பயணம்,விமானத்தில்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப மகிழ்ச்சி தோழி !
   உங்கள் படங்களும் , பதிவும் அருமை தோழி!

   நீக்கு
 8. இரவின் வர்ணணை மிக அருமை! ரசிக்க வைத்த எழுத்து நடை! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. அழகிய உரைவீச்சு ....உங்களூடன் நானும் பயணித்த உணர்வு .தொடருங்கள்மா

  பதிலளிநீக்கு
 10. இரவுப் பயணம் எனக்கும் பிடித்தமான ஒன்று. பெரும்பாலும் பேருந்தில் இரவு நேரம் பயணம் செய்யும்போது தூங்காது விழித்திருப்பேன்..... அந்த அமைதி.... இரவு நேரத்தில் ஊரே தூங்கும்போது நாம் ஊரில் விழித்திருப்பதில் ஒரு ஆனந்தம்!

  பெரும்பாலான இரவு நேரப் பயணங்களில் - தில்லி வரும்போது - இரவில் நடுவில் வரும் சின்னச் சின்ன ஊர்களை இப்படி சன்னல் வழியே பார்த்தபடியே படுத்திருப்பேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இரவில் நடுவில் வரும் சின்னச் சின்ன ஊர்களை இப்படி சன்னல் வழியே பார்த்தபடியே படுத்திருப்பேன்! // என்ன ஒரு அனுபவம் இல்லையா சகோ !

   நீக்கு
 11. ஆகா... இன்னா ஒரு நடை... அசத்திக்கினிங்க டீச்சர்...!

  இரவும் மனதும் இரட்டைப் பிள்ளைகள்...
  முடிவிலா ஆழமும் அளவிலா அதிசயங்களும் நிரம்பியவை...
  அகழ்ந்தெடுக்கும் அரிய வாய்ப்பு அனைவருக்கும் கிட்டாது...
  அது வாய்த்திருக்கிறது உங்களுக்கு... அருமை... மிக அருமை...!
  வாழ்த்துக்கள்...!

  நாங்களும் எழுதுவமுல்ல... :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நாங்களும் எழுதுவமுல்ல//
   சும்மா ஆக்ட்டு குடுத்துகிரியே நைனா!
   பலவேசம் மாறிக்க நான்கூட்ட பீல் பண்ணிக்கினேபா !
   எண்டு சோக்கா போட்டுகினாமா!-நாங்களும் எழுதுவமுல்ல... :-)

   நீக்கு
 12. மலரும் நினைவுகள்
  இரவுப் பயண நினைவுகள்
  அருமை சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 13. இறக்காமல் சொர்க்கம் செல்லும் வரம்! ரசிக்கவைத்தது..!

  பதிலளிநீக்கு
 14. பி.கு வை எதிர்பார்த்தேன் :) .

  முதல் பத்தி கட்டுரை , இரண்டாம் பத்தி கவிதை இரண்டையும் வேணும்னே சேர்த்து புதுசா முயற்சி செய்திருப்பீர்கள் போல .

  இரண்டாம் பத்தியை கவிதையாகவே போட்டிருக்கலாம் ...


  // ஔடிங் !!! // ஆசம் - //

  மேற்படி தமிங்கிலீஸ் வார்த்தைள் ரெம்பவே நெருடலா இருக்கு . Please English லேயே எழுதிடுங்கோ.. முடியல :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இரண்டாம் பத்தியை கவிதையாகவே போட்டிருக்கலாம் ...//
   சிரம் தாழ்ந்த வணக்கங்கள் சகோ!
   //முடியல :(// அம்புட்டு கொடுமையாவா இருக்கு! ok இனி சரி பண்ணிகிறேன் bro!

   நீக்கு
 15. தமிழ் தாய் அழகாக நடந்திருக்கிறாள்! கவிதை மிக்க சொற்கள் அவளுக்கு அழகு சேர்த்துள்ளன! இரவின் அருமையான வர்ணனை! எப்போதுமே ரயில் பிரயாணம் சுகம்தான் அதுவும் ஜன்னலின் அருகே சீட் கிடைத்தால்! இரவுப் பயணமும், அதன் சுகமே சுகம்தான்! மனம் விரிந்து எண்ணங்கள் அலைகளாகப் பொங்கி வரும் வேளையும் கூட...அதுவும் கடந்து போகும் ஊர்களையும், னிலவின் ஒளியில் தகதகக்கும் சிறு சிறு ஓடைகளையும், மின்மினிப் பூச்சிகளையும், விளக்குக் கம்பங்களையும், கறுப்பாக கம்பீரமாக நிற்கும் மலைகளையும், வானுயர னிற்கும் மரங்களையும் சுகித்துக் கொண்டு செல்லும் பயணம்...ஆஹா ...தான்....

  நல்ல ஆட்டோகிராஃப், சகோதரி!

  பதிலளிநீக்கு
 16. அடடா..இரவுப்பயணத்தின் உங்கள் அனுபவம் அருமை..'//சிறு அரவத்திலும் கண் விழிக்கும்..// அட, என் கட்சி. சன்னலோர இருக்கையில் அமர்ந்து வெளியே ரசிப்பதில் தனி சுகம்தான். வேலைக்குச் சேர்ந்தபின்னர், முதன் முதலில் பெங்களூருவிலிருந்து மதுரைக்கு இரயிலில் இரவுப்பயணம், தோழிகளுடன் சென்ற நினைவுகளைத் தட்டிவிட்டீர்கள். அப்படிதான் சென்றது சிலகாலம். அந்த இரயில் பயணங்களை மிஸ் பண்ணவே செய்கிறேன். இப்போ இரயிலில் டிக்கெட் எடுப்பதே பெரும்பாடாக மாறிவிட்டதே..

  பதிலளிநீக்கு
 17. "Thamizhukkum Amudhendru Paer" is what comes to my mind after reading this beautiful narration. Best wishes

  பதிலளிநீக்கு
 18. மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

  நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
  Happy Friendship Day 2014 Images

  பதிலளிநீக்கு
 19. நான் நீங்கள் கூறும் அந்தச் சிறுகதையையும் படித்திருக்கிறேன், இந்தக் கவிதைநடைக் கதையையும் இதோ படித்துவிட்டேன். :-)

  பதிலளிநீக்கு