திங்கள், 4 நவம்பர், 2013

பெருந(ர)கர வாழ்க்கை(ஒரு ஒப்புதல் வாக்குமூலம் )


பெருநகர வாழ்வில்
அழகற்றுப் போய்விடுகிறது
மழைகூட!

உலர்த்தப் படும் ஆடைகளை கொண்டு
அறிய முடிகிறது அண்டைவீட்டில்
குழந்தை பிறந்துள்ளதை!

பல காலமாய் அதே தெருவில் குடியிருப்பவரைகூட
பிரபலப்படுத்த தேவைப் படுகிறது
கொலை கொள்ளை களவு முயற்சி!

பத்துநாளாய் பூட்டிக்கிடக்கிற நான்காம் வீட்டில்
உறவில் திருமணமா? ஊரில் மரணமா?
அண்டை வீட்டில் விசாரித்தல் புறம் பேசுதல் எனப்படும்!


எத்தனை டெசிபலிலும் சிரிக்கலாம்
எப்போது வேண்டுமானாலும்  இசை கேட்கலாம்
சத்தம் போட்டு அழுதால் தான் அநாகரிகம்!

தேசத்தின் மீதான எனது நேசத்தையும்
என் பாசத்தின் பரப்பையும்
நீங்கள் அறிதிருக்கவில்லையெனில்
என் அண்டை வீட்டில் கூட நீங்கள் இருக்கலாம்
என் முகநூல்வட்டத்தில்
நீங்கள் இல்லை என்று அறிகிறேன்.!

இருந்துமென்ன பெருநகர வாழ்வில் நள்ளிரவில்கூட
என் துயரம்  போக்க துடிப்புடன் இயங்கும்
750 பேர் கொண்ட முகநூல் நட்பு வட்டம்!!!!
                                                                              -கஸ்தூரி 





12 கருத்துகள்:

  1. unmaithaan.manitha neyam mikka vaakkumulam.kavithai nandraka ullathu.valthukal

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி.பல நேரம் கவிதை நமக்கு ஒரு வடிகாலாக அமைகிறது.மனிதர்கள் !மனிதரிகள் !

      நீக்கு
  2. முதல் சொல்லிலிருந்து படிப்பவரைக் கவ்விக்கொண்டால் அது கவிதை.
    இது கடைசிச் சொல்வரை கவ்விக்கொள்கிறது... ஆனாலும் இன்னும் சொல்ல ஏராளமுள்ள இடம்,பொருள்...
    அவ்வப்போதும் சொல்லலாம். சொல்லிக்கொண்டே இரு-இதுபோல அருமையாக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா ஊக்கமூட்டும் உங்கள் சொற்களுக்கு நன்றி அண்ணா .
      ஆனாலும் எதோ சொல்லவருகிறீர் என்று மட்டும் புரிகிறது.
      நேரங்களில் இப்படி சுய பரிசோதனைகளும் தேவை படுகிறது !!
      எல்லா நேரமும் எல்லோரும் தனை நல்லவரா மட்டுமே ஏன் சித்தரித்துக்கொள்ள வேண்டும் !
      அதிகம் பேசிவிட்டேனா ?(அண்ணன் பொறுத்தருள்வாராக !)

      நீக்கு
  3. அருமையான வரிகள் சகோதரி. வித்தியாசமான பார்வை. வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் உற்று நோக்கி ரசித்தவற்றை அல்லது சகித்தவற்றை கவியால் அலங்காரம் செய்தமை சிறப்பு. தொடருங்கள் உங்கள் கவிப்பயணத்தை தங்கள் ரசனையான பார்வையோடு. அழகான பகிர்வுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும். நன்றி சகோதரி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகித்தவை என்று சுருக்கி ஏன் பிறரை பலி சொல்வோம்
      பல நேரம் நானும் அப்படித்தான் இருக்கிறேன் !
      என்னை சகித்தவர்களுக்கும் ,இப்படி சகிப்பவர்களும்
      நன்றி !தங்கள் கருத்துகளுக்கும் நன்றி !

      நீக்கு
  4. நச்..நச்! நாம் அனைவரும் இப்படித்தான் ஆகிக்கொண்டிருக்கிறோம்...எங்கோ இருப்பவர்க்கெல்லாம் முகநூலில் வணக்கம் சொல்லிவிடுவோம்...அருகில் இருப்பவரைப் பார்த்து சிரிக்க மாட்டோம்...இன்றைய நிலை...அழகாய்ச் சொல்லிட்டீங்க மகிவதனா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கிரேஸ் !பல நேரம் நாமும் இயந்திரமாகிவிட்ட வருத்தம் தான்.

      நீக்கு
  5. பெருநகர வாழ்வின் துய்ரங்கள் இங்கே சொல்லி மாளாததாய்/சிறு நகரங்களும்,கிராமங்களும் கூட அடையாளம் பூண ஆரம்பித்துவிட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாய் சொன்னீர்கள் !!தங்கள் வருகையும் ,கருத்துக்களும் மகிழ்ச்சி அளிக்கிறது .மிக்க நன்றி

      நீக்கு
  6. வணக்கம்
    அருமையான கருத்து நிறைந்த சிறப்புக் கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்.தங்கள் வருகையும் ,கருத்துக்களும் மகிழ்ச்சி அளிக்கிறது .மிக்க நன்றி

    பதிலளிநீக்கு