சனி, 23 மே, 2015

தற்கொலை செய்துக்கப் போறீங்க! ஒரு நிமிடம் ப்ளீஸ்!           இது தன்னம்பிக்கைக்கட்டுரை இல்லை. மாறாக தற்கொலைக்கு உதவும் விதமாக வழிசொல்லும் பதிவும் இல்லை. தற்கொலை செய்து கொள்ள போகிறவர்களிடம் கேட்க நினைக்கும் ஒரு நியாயமான  கேள்வி. அதற்கு பதில் தேடித்தான் இந்த பதிவு.
              
                
                    சில நாட்களுக்கு முன் நான் படித்த செய்தி ஒன்று என்னை தூங்கவிடாமல் செய்தபடி இருந்தது. அது எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த இளம் மருத்துவர் ப்ரியா வேதியின் தற்கொலை. அவரது கணவர் கமல் வேதி (அவரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்)   ஒரு சுயபாலின நபர் என்பது உறவினர்களுக்கு தெரிய வந்ததால் ஏற்பட்ட அவமானத்தை தாங்கமுடியாத காரணத்தால் இந்த முடிவை எடுத்தார்  என்று  செய்தித்தாள் கூறியிருக்கிறது. சுயபால் உறவு என்பது ஒரு தேர்வு அன்றி அது ஒரு மனநோய் அல்ல என உலகம் முழுக்க மருத்துவர்கள் சொல்லத்தொடங்கியிருக்கும் இந்த காலத்தில் ஒரு மருத்துவர் இதை காரணம் காட்டி தற்கொலை செய்து கொள்வதா? மேலும் இதுபற்றி தன் கணவரிடம் கேள்வி கேட்டால் அவர் ப்ரியாவை மனரீதியாக  கொடுமைப்படுத்தினார் என்றும் தனது இறுதி(!?) முகநூல் பதிவில் தெரிவித்திருக்கிறார். ஆண்டாண்டு காலமாய் முதல் மதிப்பெண் பெற்ற பிள்ளைகள் முன்மொழியும் மருத்துவப்படிப்பை படித்தவர் இப்படி முடிவெடுத்திருக்கிறார் என்றால் அவர் கற்ற கல்வியின் பயன் தான் என்ன? தனித்து வாழவோ, வேறு வாழ்கை அமைத்துக்கொள்ளவோ துணிச்சலும், தன்னம்பிக்கையும் தராத கல்வி என்ன கல்வி. சக மனிதர்களை ஒருவரை கூட நம்பி வாழ்வை தொடர முடியாத சமூக பொருத்தப்பாடின்மையா அல்லது கணவனே துணை இல்லாத போது இனி என்ன வாழ்வு எனும் கல்லானாலும் கணவன் வகையை சேர்ந்த பழமைவாதமா? என கேள்விகள் கிளைவிட்ட வண்ணம் இருந்தன.
           
              இது எல்லாவற்றையும் விட எனக்கு அராஜகமாகத் தெரிந்தது, இப்படி பொசுக்குனு போகபோற திடமனம் இல்ல கோழை ஏன் மருத்துவம் படிக்கவேண்டும். ஒரு ஏழை விவசாயி வாங்குகிற தீப்பெட்டி முதல் வரி பெற்றுதான் நமது அரசாங்கம் நமக்கு கல்வி ஒதுக்கீடுகளை செய்கிறது. நாம் காசுகொடுத்து புத்தகம் வாங்கினாலும், கல்லூரி வரை ஒவ்வொரு இந்தியனின் படிப்புக்கும் இந்த வரிப் பணம் பயன்பட்டே வருகிறது. எனக்கென்ன போச்சுன்னு நீங்க பாட்டுக்கு தற்கொலை செய்துகொண்டால் உங்களை நம்பி அரசு செலவழித்த வரிப்பணத்திற்கு என்ன தான் பயன்? சரி விடுங்க யாருக்குதான் அதிலெல்லாம் அக்கறை தலைவர்களுக்கே இல்லாத தேசத்தில். அட, இந்த மேதாவி இந்த படிப்பை படிக்காமல் இருந்திருந்தால் காத்திருப்போர் பட்டியலில் யாருக்கேனும் அந்த படிப்பு வைத்திருக்கும் இல்லையா? 

            பள்ளி விடுமுறை தொடங்குவதற்கு முன் ஒரு நாள் எங்கள் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனின் அம்மா ஒரு கோரிக்கையோடு வந்தார். அதாவது தன் பிள்ளையின் இனிஷியலை மாற்றும்படி கேட்டுக்கொண்டார். அவர் அம்மா என்று சொல்லிகொண்ட போதும் அவரைப் பார்த்தால் அந்த பையனின் பாட்டி போல இருந்தது. அவரே தொடர்ந்து சொன்னார் "இவன் என் தத்து பிள்ளைங்க. என் வீட்டுகாரரை விட்டு பிரிஞ்ச பின்னால இவனை தத்தெடுத்துக்கிட்டேன். மனசு கேட்காம அந்தாளு பேரை இவனுக்கு இனிஷியலா கொடுத்தேன். ஆனா அந்த ஆள் இப்போ வேறொருத்திய சேர்த்துக்கிட்டார். இனி அந்த ஆள்  பேரு எனக்கெதுக்கு? செத்துப்போன இவங்க அப்பன் பேரே இனி இவனுக்கு இனிசியலா இருக்கட்டும்." வேகவேகமாய் கையைவீசி நடந்து மறைந்த அந்த கைநாட்டு அம்மாவின் முகம் மனதில் வந்துபோகிறது.

27 கருத்துகள்:

 1. வாழக் கற்றுத்தராத கல்வி என்ன கல்வி என்ற உங்கள் கேள்வி மிக முக்கியமான கேள்வி. அது மட்டுமல்லாது இந்தத் தற்கொலைகளால் நீங்கள் சொன்னபடி சமுதாயத்திற்கு இழப்பு மட்டுமல்லாது பெற்றோருக்கு மிகப் பெரும் இழப்பு. அவர்களது அத்துனை உழைப்பும் வீண். உண்மையிலேயே சிந்திக்கத் தக்க கேள்வி.

  God Bless You

  பதிலளிநீக்கு
 2. அருமையான பதிவு ..படிப்பு வாசமில்லா மக்களிடம் இருக்கும் தன்னம்பிக்கையில் சிறிதேனும் இந்த so called ரிச் எஜுகெடெட் மக்களிடம் கல்வி ஏற்படுத்த முடியவில்லையே :(
  நம் கல்விமுறையில் நிறைய மாற்றங்கள் வரணும்..ஒரு விஷயத்துக்கு தீர்வு காண முடியாத அளவுக்கா மூளை மழுங்கும் ?.அந்த டாக்டருக்கு .
  இன்னொர்ர் விஷயம் பெற்றோரும் எல்லா விஷயங்களையும் //அருவருப்பு அசிங்கம் எனும் மனப்பான்மையை பிள்ளைகளிடத்து வளர்க்ககூடாது ..எதையும் FACE செய்யும் மனப்பான்மை தைரியம் வளர்க்கனும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மைதிலிம்மா ..இன்னோர் விஷயத்தையும் கவனிக்கணும் ..அந்த லேடி டாக்டர் ஏதாவது anti depressant மெடிசன்ஸ் எடுத்துகொண்டிருந்தரானு விசாரணை செய்ததா போலிஸ் ?..தற்கொலை எண்ணங்களை சில மருந்துகளும் தூண்டும் உதாரணம் ..
   ஜெர்மன் விமானி (கோ பைலட் ) விபத்துக்கு உள்ளாக்கினது கூட .சில மருந்துகலால்னு வாசித்தேன்

   நீக்கு
 3. இந்த டாக்டர் ஸ்கூலில் நல்ல மார்க் எடுத்து பாஸானவங்களா இருப்பாங்க ஆனா வாழ்க்கை பாடங்களை ஸ்கூலில் கற்றுதாராதால் வாழ்க்கையில் தோற்று போய் சாகும் முடிவை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.அது மட்டுமல்ல இந்தகாலத்தில் மனம்விட்டு பேச சொந்த பந்தங்கள் இல்லை நல்ல நண்பர்களும் கிடைப்பதறிது. எங்கே நாம் மனம்விட்டு பேச ஆரம்பித்தால் அதை நாலுபேரிடம் பகிரிந்து நம்மை கேலி செய்யும் நிலைக்கு ஆக்கிவிடுவார்களோ என்ற பயம் வேற. ஆண் நபர்களிடம் மனம்விட்டு பேசினால் அதை தமக்கு சாதகமாக எடுத்து கொண்டு பல ஆண்கள் தன்னை தவறான நோக்கத்தில் அணுக ஆரம்பிப்பார்களோ என்ற பயம் வேற இம்மாதிரி பெண்களுக்கு வந்துவிடுகிறது..


  தற்கொலைக்கு முயலும் பல பேர் அதனை உடனடியாக செய்வதில்லை என்று பல ஆய்வுகள் சொல்லுகின்றன. தற்கொலைக்கு முயலும் பல பேர் மறைமுகமாக பல பேரிடம் தாங்கள் மனக் கஷ்டத்தில் இருப்பாதாக சொல்லியும் யாரும் அதை தங்கள் காதில் போட்டு அவர்களுக்கு ஆதரவு தாராததால் கடைசியில் அவர்கள் தற்கொலை முயற்சிக்கு போகிறார்கள்

  பதிலளிநீக்கு
 4. கற்ற கல்வியின் புரிதல் அவ்வாறு உள்ளது...

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  யாவரையும் ஒருதடவை சிந்திக்கவைக்கு கதை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. வாழ்க்கையை கற்றுத்தராத கல்வியே இத்தனைக்கும் காரணம் .மேலும் பிரச்சனைகளைச் சந்தித்து தீர்வு காணும் தன்மை இல்லாததும் மா

  பதிலளிநீக்கு
 7. இன்றைய கல்வி மதிப்பெண் பெறத்தான் கற்றுத் தருகிறதே தவிர
  வாழ்க் கற்றுக் கொடுப்பதில்லையே
  வாழ்வில் சிக்கல்களை விடுவிக்கக் கற்றுக் கொடுப்பதில்லையே
  பிரச்சினைகளைச் சந்திக்கும் மன வலிமையை கொடுப்பதில்லையே
  நன்றி சகோதரியாரே
  தம +1

  பதிலளிநீக்கு
 8. உளவியல் சிந்தனை. உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
  த.ம.5

  பதிலளிநீக்கு
 9. வசதி மிக்கவர்கள் தங்கள் பிள்ளைகளை பொத்திப் பொத்தி வளர்க்கிறார்கள். கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். தனது விருப்பம் படி எல்லாமே நடந்து வரும் வரை இந்த சொகுசான பிள்ளைகளுக்கு பிரச்சனை இல்லை. வாழ்க்கை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக மாறும் போது அதை ஏற்றுக்கொள்ள முடியாது வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள்.

  எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர் கொண்டு வாழும் திறனை பெற்றோர்களும் கல்வியும் கற்று தர வேண்டும்.

  நல்ல பதிவு. தொடர்கிறேன். த ம 6

  பதிலளிநீக்கு
 10. ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது என்று சும்மாவா சொன்னார்கள் அம்மு.
  பெற்றோரும் ஆசிரியரும் மட்டும் வாழ்க்கையை கற்றுத் தரமுடியாதும்மா. அதில பெரும் பங்கு சமூகத்துக்கும் உள்ளது.எம்மால் கற்றுத் தர முடியாதவற்றை சமூகம் கற்றுக் கொடுக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருந்து பற்றுப், பாசம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, இரக்கம், சமயோசிதபுத்தி,மற்றவர்களுடைய துன்பத்தை உணரும் தன்மை இவைகளைக் கற்றுக் கொள்ளலாம். தெருவில் விளையாடும் போதும் இக்கட்டான சூழ்நிலைகளை எப்படி கையாள்வது என்றெல்லாம் கற்றுக் கொள்ளலாம். இப்போ எல்லாம் பூட்டிய வீட்டுக்குள் இருந்து கொண்டு பள்ளிக்கு சென்று வந்தால் பயம் தான் வளரும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் வளராது தான். இருந்தாலும் நல்ல நட்பும் அன்பும் தான் மனவலிமையையும் நம்பிக்கையையும் கொடுக்கும். அது கிடைக்காதவிடத்து சிறிய துன்பமும் பெரிதாகவே தோன்றும். இருக்கிற பிரச்சினை இன்னும் பெரிதாகும் அடுத்தவரை நம்பி ஆறுதல் கிடைக்கும் என்று நம்பினால். எரிகிற வீட்டில் பிடுங்குவது போன்ற கதி தான். தற்கொலை செய்வது கோழைகள் என்று நாம் எளிதாக சொல்லிவிட்டு போய் விடுகிறோம். உண்மையில் அதை செய்வதற்குத் தான் தைரியம் தேவை என்று நான் நினைக்கிறேன். அதையும் தாண்டி தற்கொலை செய்கிறார்கள் என்றால் அவர்கள் மனநிலையை சொல்லி மாளாத துயர் கொண்டே அதை துணிந்து செய்கிறார்கள். அன்பு அரவணைப்பு இல்லாவிடத்து . கல்வி செல்வம் எல்லாம் நிறைய இருந்தாலும் கூட இல்லாதவனாகவே எண்ணத் தோன்றும். மனவலிமைகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை இரு வெவ்வேறு நபர்கள் ஒரே பிரச்சினையை வேறு வேறு விதமாக கையாள்வார்கள் தானே.ம்..ம்

  பத்துரூபாய் கடன் என்றால் பதறிடுவான் ஒருவன் பத்துலட்சம் பெற்றவனோ புன்முறுவல் புரிவான்.
  அம்முக்குட்டி அதிகமா எழுதிட்டன் போல இருக்கே எதோ மனதில பட்டதை எழுதிட்டேன் மா. bye டா. டீச்சர் அம்மா போனமுறையே question பேப்பர் திருத்திறது போலவே ரைட் wrong என்று மார்க் பண்ணினாங்க. ஐயோ..... இந்தடவை உண்டு இல்லைன்னு பண்ணினாலும் எஸ்கேப் ....

  பதிலளிநீக்கு
 11. சமீபத்தில் I Tயில் வேலை இழந்து தற்கொலை செய்து கொண்ட தம்பதிகளும் நினைவுக்கு வருகிறார்கள் .வாழ நினைத்தால் வாழலாம் ,இதை படித்தவர்களும் புரிந்து கொள்ளாதது வேதனைதான் !

  பதிலளிநீக்கு
 12. ப்ரியா வேதி சொல்ற முழுக்ககதையும் உண்மையா என்னனு தெரியவில்லை. அந்தாளை டைவோர்ஸ் பண்ணியிருக்கலாம். எதுக்கு சாகணும்னு தெரியலை. ஆனால், ஒரு சில இந்தியர்கள் அமெரிக்கா வந்து ஒரு வெள்ளைக்காரப் பெண்ணைக் கட்டிக்கிறாங்கனு வச்சுக்கோங்க. இந்தியா போகும்போது தன் மகனுக்கு அரேஞிட் (இன்னொர் பெண்ணை) செய்து வைக்க ட்ரை பண்ணுறாங்க. அதேபோல் மகன் ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் உள்ளவன்னு தெரிந்தாலும், இன்னொரு பெண்ணை கட்டி வைத்து விட்டு "எல்லாம் சரியாகி"விடும்னு நம்புறாங்க. அது மாதிரி பலியானவள்தான் இந்தப் ப்ரியா வேதி. They just dont know how to deal with homosexuality problems.

  பதிலளிநீக்கு
 13. அவர் கைநாட்டு அம்மா அல்ல, முன்னுதாரண அம்மா. மனதைத் தொட்ட பதிவு.

  பதிலளிநீக்கு
 14. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பார் என் தாத்தா. இவ்வளவு பெரிய மருத்துவ நிலையத்தில் பெரிய மருத்துவர்களாக இருந்தும் தனிப்பட்ட பொருளாதார சுதந்திரமும், சமூக வட்டமும் இருந்தும் இவர்கள் வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டுள்ளார்கள்.

  ஒரு மருத்துவ பெண்ணுக்கு தெரியாதா தற்பாலினம் என்பது மாற்ற முடியாத ஒரு விசயம் என. அதே போல அந்த மருத்துவ ஆண் ஏன் ஒரு பெண்ணின் வாழ்க்கையை சமூக கௌரவத்துக்காக நாசம் செய்துள்ளார். அந்த பெண் ஆரம்பத்திலேயே இவரை விவாகரத்துச் செய்துவிட்டு நல்ல மற்றதொரு வாழ்க்கையை உருவாக்கி இருக்கலாம். அதுவும் செய்யவில்லை. இறுதியில் தற்கொலையில் முடிந்துள்ளது, என்னத்த படித்து என்னத்த கிழித்து !

  இனியாவது மணமகன் நல்ல கல்வி, நல்ல வேலையில் இருக்கின்றார், சாதி, சமய என்பதை மட்டும் பாராமல் அவரது வாழ்வியல் போக்கு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அறிந்து பெற்றோர்கள் பெண் தர வேண்டும். முதலில் அவர் எதிர்பாலினமா சமபாலினமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 15. தற்கொலை நிகழ்வுகளுக்கு "கல்வி" மட்டுமே காரணமாக இருந்துவிட முடியாதென்றே கருதுகிறேன் . ஏனெனில் முற்றிலும் தொடர்பு நிலைகளுக்கு அப்பால் நாம் பழகிக்கொள்ளும் தன்மை சென்றுவிட்டது. தீர்வுகளை எடுத்துச் சொல்லவோ அல்லது மாற்றுவழிகளை பரிந்துரைக்கவோ இங்கே யாருமற்ற நிலையில், ஏன் நட்பு வட்டங்களையே சுருக்கிக்கொண்டுதான் வாழ்கிறது இந்தச் சமூகம் இதனடிப்படையில்தான் பொது அறிவையும் நன்னெறியையும் புகுத்தப்படா கல்வி தன் பிரித்தாளும் வேலையை சிறப்பாக செய்துவிடுகிறது இதன் விளைவு மருத்துவர்களே மனநோயாளியாக இங்கே வலம்வந்துக் கொண்டிருக்கிறார்கள். குடும்ப உறவுகளை முதலில் சீர்செய்வதன் மூலம் இதற்கான தீர்வை எளிதாக எட்டி விடலாம்.

  பதிலளிநீக்கு
 16. திடமனம் இல்லாத கோழை ஏன் மருத்துவம் படிக்கவேண்டும்?
  ஓர் உயிரைக் காப்பாற்ற வேண்டியவர்
  தன் உயிரை அழிக்கத் துணிந்தது ஏன்?
  சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 17. ஒரு நிமிடத்து பைத்தியக்கார செயலான தற்கொலையை தடுப்பதற்கு
  தங்களது "ஒரு நிமிடம் ப்ளீஸ்" தலைப்புடன் கூடிய பதிவு தலையானதாகவே
  எனக்கு படுகிறது. சகோ!
  மருத்துவம் படித்தவர் மடமை செயல் புரிவது
  வேதனையிலும் வேதனை!
  தற்கொலைக்கு முயல்பவரா?
  அறிவின் ஆற்றலை உணராத, செயல்படுத்த தெரியாமல்
  உளவியல் ரீதியாக உறுதி காண முடியாத ஏட்டுக் கல்வியை
  எடுத்தெறிந்து!
  தன்னம்பிக்கை தரும் முன்னேற்ற்க் கல்வி முறையை முன்னெடுத்து செல்ல வேண்டும்!
  நன்றி சகோ!
  நட்புடன்,
  புதுவை வேலு
  த ம + 1

  பதிலளிநீக்கு
 18. கற்ற கல்விக்கும் வாழ்க்கை சிக்கல்களை எதிர்கொள்ளும் திறனுக்கும் தொடர்பில்லை என்ற கசப்பான உண்மையை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.
  ஒரு ஏழைக் கிழவியின் மன உறுதியைக் கூட அவரது படிப்பு கொடுக்காதது வேதனைதான்.
  சிந்தனையை தூண்டும் கருத்துகள். வரவேற்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. முடிவில் அந்த அம்மாள் சொன்னது புதுமையாக இருக்கிறதே....

  பதிலளிநீக்கு
 20. எந்தவொரு செயலையும் சிந்தனையையும் கலை கற்றுக்கொடுப்பது போல் கல்வி கற்றுக்கொடுப்பதில்லை, மதிப்பெண்ணை அறுவடை செய்யும் இயந்திரத்தை உருவாக்குகிறது. கல்வி கலையாக மாற்றம்காண வேண்டும்.

  பாமரனுக்கு கிடைக்கும் கலை சார்ந்த அறிவு, கற்றவரிடத்தில் இருப்பதில்லை.

  பதிலளிநீக்கு
 21. மிகவும் நியாயமான கேள்விகள்! "சாவதுதான் சாகிறாய், இந்தக் கேள்விகளைப் படித்துவிட்டு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவு" என்பது போல் இருக்கிறது. [பதிவு நல்லாருக்குன்னு சொல்றாராமாம்! ;-)]

  நீங்கள் கூறுவது போலவே படித்தவர்களை விடப் படிக்காதவர்களிடம் வாழ்க்கையை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையும், அடுத்தவர்களைப் பற்றி அஞ்சாமல் தன் வாழ்க்கையைத் தன் விருப்பப்படி வாழும் துணிவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

  ஆக, இயல்பாக மனிதர்களிடம் இருக்கும் நல்லனவற்றையும் அழித்து... படிப்பதால் கிடைக்க வேண்டிய வேலை வெட்டி முதலியவையும் கிடைக்காமல்... இந்தக் கல்வியினால் என்னதான் இலாபம்? ஆனால், இதற்காகத்தான் வாழ்வில் நாம் மிகக் கூடுதலாகச் செலவும் செய்கிறோம்! எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் படிப்புக்காகச் செலவிடும் அந்தப் பணத்தைப் பேசாமல் வங்கியில் முதலீடாகப் போட்டுவிட்டு உட்கார்ந்தே தின்று, இப்படிப் பதிவு எழுதியே வாழ்க்கையை ஓட்டி விடலாம் எனச் சில சமயங்களில் வெறுப்பாக இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 22. மனப்பாடம் செய்து மதிப்பெண் பெற்றுத் தேர்ந்தவர்களுக்கு வாழ்க்கைப்பாடத்தையும் புரிந்துகொள்ளும் வகையில் வழிசெய்தால்தான் இந்த நிலை மாறும். அதுவரை இதுபோன்ற அபத்த நிகழ்வுகள் தொடர்கதையாகத்தான் தொடரும். ஆதங்கம் தெறிக்கும் பதிவு.

  பதிலளிநீக்கு
 23. வாழ்க்கையைக் கற்றுதரும் கல்வி அல்லவே நம்முடையது. மனம் பக்குவப்பட பலரும் உதவனும். கடைசியில் அந்தம்மா சொன்னது,,,,,,,,,,,,,
  அருமையான பதிவு. நன்றி.

  பதிலளிநீக்கு
 24. நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள்தான் எங்கள் மனதிலும் இந்தப் பெண் தற்கொலை செய்த போது எழுந்தது. தற்கொலை பற்றிச் சொல்லி எந்தப் பயனும் இல்லை. தற்கொலை பற்றி எழுதிவிட்டதால் இந்த நிகழ்வைப் பற்றி எழுத மனம் வரவில்லை. அந்தப் பெண் கோழை என்பதால்....வாழ்க்கையை எதிர்கொள்ள கற்றுத் தராத கல்வி அது எந்த வகைக் கல்வியாக இருந்தாலும் அது கல்வியே அல்ல.

  பெரும்பாலும் தற்கொலை எண்ணங்கள் எழுபவர்கள், மனதளவில் ஏதோ ஒரு அளவில் டிப்ரெஸ்டாகத்தான் இருப்பார்கள். அவர்கள் ஏதேனும் மருந்து எடுத்துக் கொண்டிருந்தார்களா என்பது மிகவும் முக்கியம். இல்லை என்றால் மன அழுத்தம் என்றால், மருத்துவர் அவர் அதற்கான கவுசலிங்க் சென்றிருக்கலாம். இல்லை என்றால் மருத்துவராக இருப்பதால் இன்னும் சிந்தித்து, கணவருக்கு ஏதேனும் தீர்வு கிடைக்குமா இல்லை என்றால், அவரிடமிருந்து பிரிந்தும் வாழ்ந்திருக்கலாம். இந்தத் தற்கொலைகளை (சிசோஃப்ரினியாவால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்பது நடக்கும் ஒன்றுதான் அதைத் தவிர்த்து) நியாயப்படுத்த முடியாது.

  உங்கள் பள்ளிக்கு வந்த படிப்பு வாசனை அறியாத அந்தப் பாமர பெண் உயர்ந்து நிற்கிறார்!

  பதிலளிநீக்கு
 25. தற்கொலை பற்றி நிறையவே பேசலாம், எழுதலாம் என்று தெரிகிறது.
  கணநேர மனவுறுதி என்று சொன்னாலும் கணநேர மன பலவீனம். புத்திசாலித்தனத்துக்கும் பைத்தியக்காரத்தனத்துக்கும் சின்ன கோடுதான் வித்தியாசம் என்று என் நண்பர் சொல்வார். அது நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு