செவ்வாய், 20 ஏப்ரல், 2021

அறிவை விரிவு செய்

 



உலகெல்லாம் ஒற்றை வானம்

உயிருக்கெல்லாம் ஒன்றே மாமழை

பசித்து பருகி வேர்விடும் விதைகள்

பரந்து விரிந்த பெருவனமாகும்

கைக்கெட்டும் தூரத்தில் அறிவுச்சுரங்கம்

கண்டடைய முயன்றால் வானாய் விரியும்


கொட்டிக்கிடக்கும் பலநூறு

விண்மீன்கூட்டம்

அதில் சுட்டுகிறேன் சில 

துருவ நட்சத்திரம்


தீநுண்மியை விடவும் கொடிது

தீண்டாமை என்றே உணர

அம்பேத்கரை படி


விளக்கேற்றி மணியடித்து

விரட்ட முடியுமா கொரோனாவை

பகுத்தறிவு பகலவனைப்படி


அரிச்சுவடியில் படித்த ஔவையை

மறந்திருப்பாய்

ஆண்டிராய்டு காலத்தில்

அடாவை மறந்திருப்பாய் 

பெண்கல்வி  சிறப்புணர

பாவேந்தனைப் படி


வலதுக்கு இசைவாக வங்கிகள் வளைய

வறுமைக்கு ஏன் வரி மேல் வரி

மார்க்ஸை படி


சரித்திரத்திற்கும் சாஸ்திரத்திற்கும் 

நூல் அளவே வேறுபாடு இருப்பதை 

நுணுக்கமாய் உணர அரசியல் படி


பருகிட தணியாத தாகம் அறிவு

பகிர்ந்திடக் குறையாத செல்வம் அறிவு

நீட்டு நீட்டு என்று

நீட்டியும் மடக்கியும்

பூட்ட முடியாத புதையல் அறிவு


அறிவை விரிவு செய்

ஒப்பனைகள் களையும்


ஒப்பிலா அறிவின் சிறகால்

வானம் வசப்படும்

வரலாறு சீர்பெறும்

 அறிவே பார்வை நல்கும்

அறிவே அறத்தைப்பேணும்

அறிவே மனிதம் காக்கும்

அறிவே மனத்தடைகள் போக்கும்


நாடுக எட்டுத்திக்கும்

சூடுக அறிவின் பேரொளி


நாடுகள் நடுவே ஓடும் 

கோடுகள் அழிந்து போகும்


நாளும் பொழுதும் பூசிய 

செருக்கின் பிடறியை உலுக்கும்


மதத்தின் பேரால் வெடிக்கும்

மரணத்தின் ஓலம் அடங்கும்


கண் எட்டும் தூரத்தில்

மருத்துவத்தின் மகத்துவம் புரியும்


விண்முட்டும் சின்னங்கள்

வீண் விரயமென அறியும்




கால் செருப்பு தேசம் ஆண்ட

காலங்கள் மறைந்து போகும்


தார் பூசி மறைத்த போதும்

தமிழ் என்றும் தரணி ஆளும்


நாளை கிழக்கில் மட்டுமல்ல

எட்டுத்திசையிலும் வெளுக்கும்


அறிவற்றங் காக்கும் கருவி

அகிலம் மேவும் புரவி

அறிவை விரிவு செய்

ஆற்றலால் உலகை வெல்



3 கருத்துகள்:

  1. கவிதை நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  2. பாவேந்தரின் ‘அறிவை விரிவு செய்’ எனும் ஒற்றை வரியை எடுத்துக் கொண்டு அதன் அத்தனை பரிமாணங்களிலும் புது வெளிச்சம் பாய்ச்சும் உங்கள் முயற்சி அருமை சகா! வாழ்த்துக்கள்
    ! 💐💐

    எனக்கு மிகவும் பிடித்த கருத்து
    ‘அறிவை விரிவு செய்
    ஒப்பனைகள் களையும்’ என்றது!

    நான் தொடர்ந்து என் தங்கையிடம் வலியுறுத்துவது. பெண்மணி எனும் முறையில் நீங்களும் இதை வழிமொழியக் கண்டு மகிழ்ச்சி!

    பிடித்த வரி
    ‘நாடுகள் நடுவே ஓடும்
    கோடுகள் அழிந்து போகும்!’ - 👌🏼👌🏼👌🏼

    இவை தவிர பொருட்செறிவு மிகுந்த வரிகளும் குறியீடுகளும் இதில் நிறைய. படிப்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்!

    பதிலளிநீக்கு