திங்கள், 8 ஜூன், 2020

தேவையா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு?

தேர்வு என்பது அந்த ஒரு ஆண்டில் மாணவர் என்ன கற்றார்? எவ்வளவு ஆழமாக கற்றிருக்கிறார்? ஆசிரியர் தன் கற்றல் விளைவுகளை (LEARNING OUTCOMES) எவ்வளவில் அடைந்திருக்கிறார் என்பதை அளவிடும் கருவி என ஆசிரியர்ப் பயிற்சியில் படித்துவிட்டு ரொம்ப கறாரான ஆபிசராக வேலைக்கு சேர்ந்த புதிதில் பல மாணவர்களை ஃபெயிலாக்கியிருக்கிறேன். "எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?" நூலைப்படிக்கும் வரை.

அதன் பின் இந்த தேர்வு முறைகள், இதனை கையில் எடுத்து என்னால் மூன்று வருடம் தொடர்ந்து ஆறாவதில் பெயிலாக்கப்பட்ட அந்த மாணவன், இன்று கொத்தனாராக இருக்கும் அவர் என்னை கடக்கும் போதெல்லாம் வைக்கும் வணக்கம் என அந்த நூல் தந்த குற்ற உணர்வும், தரிசனமும் தான் ஆசிரியர் பணி கற்பித்தல் மட்டுமே சார்ந்ததன்று என செவுடில் அறைந்து ஆயிஷா நடராசன், மாடசாமி அய்யா, டோட்டோ சான் என சன்னல்களை திறந்து வைத்தது. கிடக்கட்டும்... எதுக்கு இப்போ அதெல்லாம்? சிம்பிள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை இந்த ஒரு ஆண்டு  ரத்து செய்யுங்கள் என்ற எனது பதிவைப்பார்த்துவிட்டு, படித்ததெல்லாம் மறந்துவிடாதா, இப்படி இழுத்தடிப்பதற்கு பதில் எழுதிட்டி தான் போகட்டுமே என்கிறார்கள் நட்புவட்டத்தில் சிலர். தேர்வு அத்தனை இன்றியமையாததில்லை என்பதற்கான விளக்கமாக தான் மேலே சொன்னது.
இங்கு நோய் கிளைவிடத் தொடங்கியபோது தப்ளிக் மாநாட்டுக்கு சென்றுவந்தோர் என பீலா மேடம் தினமும் தன் புள்ளிவிபரத்தில் குறிப்பிட்டார்.  ஆனால் இன்று எங்கள் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பலர் குறிப்பிடத் தகுந்த அளவில் சென்னையில் இருந்து சொந்த ஊர் வந்தவர்கள். அதை ஏன் குறிப்பிடுவதில்லை. ஏன்னென்றால் தொற்று இப்படித்தான் பரவுகிறது என வெளிப்படையாக கூறிவிட்டு பத்தாம் வகுப்புத்தேர்வு நடத்த முடியாதே.
ஒரு கிராமத்து உயர்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவர்கள் அதை சுற்றியிள்ள குறைந்தபட்சம் ஐந்து கிராமத்தில் இருந்து வருகிறார்கள். அரசு அனுப்பும் ஒரு வேன் இந்த ஐந்து கிராம மாணவர்களை அழைத்தவருகிறது என வைத்துக்கொள்வோம். அதில் ஒரு மாணவர் நல்ல ஆரோக்கியமானவர், ஆனால் கொரோனா கேரியர் என வைத்துக்கொள்வோம். அவர் வேனில் ஏறிவிடுவார். குறைந்தபட்சம் இருபதில் இருந்து நாற்பது பேரோடு பயணிப்பார். தேர்வறை வருவார். தெர்மல் ஸ்கேன் செய்யப்படுவார். பத்து பேர் உள்ள அறையில் தேர்வு எழுதுவார். அவர்கள் அவரோடு ஒரே பேருந்தில் பணியத்தவர்களாகவும் இருக்கலாம், அன்றியும் இருக்கலாம். மூன்றாம் பாடம் தேர்வெழுதும் போது அவருக்கு அறிகுறிகள் தெரியத் தொடங்கினால் மற்ற மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு?
அந்த மாணவர் தன் பள்ளியையும், தன் ஆசிரியரையும் நம்பி மட்டுமே தேர்வெழுத வருகிறார். எல்லா மாணவர்களும் அப்படித்தான். ஏற்கனவே பதினோராம் வகுப்புப் பொதுத்தேர்வை எண்பதாயிரம் மாணவர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். அவர்கள் நிலை என்ன? இப்போது இவர்களில் பெரும்பாலானோர் புறக்கணித்தாலும் மீதி இருப்பவர்களுக்கு தேர்வு நடத்துவார்கள் எனில் புறக்கணித்தோரின் எதிர்காலம் என்ன? 
ஒன்று மட்டும் புரிகிறது. கல்வி மனிதத்தையும், தெளிந்தாய்தலையும் வளர்க்க வேண்டும் இனிமேலாவது. இன்றேல் இப்படியான அறிவுஜீவிகளிடம் தான் நம் பிள்ளைகள் எதிர்காலம் ஊசலாடும்
#Cancel_board_exams

7 கருத்துகள்:

  1. கண்டிப்பாக தேவையே இல்லை... இன்றைய சூழல் தேர்வுக்கு தகுந்தது அல்ல...

    அநேகமாக பொதுத்தேர்வு நடக்காது... நடக்கக்கூடாது என்றே வேண்டுகிறேன்....

    பதிலளிநீக்கு
  2. ஏன் இப்படி இந்தப் பரிட்சை விசயத்தில் அரசு கொம்பேறி மூக்கணாய் இருக்கிறது என்பது அனைவருக்கும் புரியாதே இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  3. தேர்வு - இப்போது தேவை இல்லை என்பதே எனது எண்ணமும்.

    பதிலளிநீக்கு

  4. ***அதன் பின் இந்த தேர்வு முறைகள், இதனை கையில் எடுத்து என்னால் மூன்று வருடம் தொடர்ந்து ஆறாவதில் பெயிலாக்கப்பட்ட அந்த மாணவன், இன்று கொத்தனாராக இருக்கும் அவர் என்னை கடக்கும் போதெல்லாம் வைக்கும் வணக்கம் என அந்த நூல் தந்த குற்ற உணர்வும், தரிசனமும் தான் ஆசிரியர் பணி கற்பித்தல் மட்டுமே சார்ந்ததன்று என செவுடில் அறைந்து ஆயிஷா நடராசன், மாடசாமி அய்யா, டோட்டோ சான் என சன்னல்களை திறந்து வைத்தது. கிடக்கட்டும்.***

    நம்மால் கண்ட்ரோல் செய்ய முடியிற விசயங்கள் நம்முடைய தனிப்பட்ட விசயங்கள் மட்டுமே. மற்ற எதையும், யாரையும் நாம் மாற்றிவிட முடியாதுங்க. பாஸ், ஃபெயில்னு ஒரு சிஸ்டத்தை வச்சிருக்காங்க. அதை நீங்க ஃபாலோ பண்ண வேண்டிய கட்டாயத்தில் இருக்கீங்க. இதில் தனிப்பட்ட உங்க உணர்வுகளுக்கு இந்த சிஸ்டத்தில் மதிப்போ, மரியதையோ கிடையாது. நாம் வாழும் வரை பலவித குற்ற உணர்வுடந்தான் வாழனும். வேற வழி இல்லை.

    ***பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை இந்த ஒரு ஆண்டு ரத்து செய்யுங்கள் என்ற எனது பதிவைப்பார்த்துவிட்டு, படித்ததெல்லாம் மறந்துவிடாதா, இப்படி இழுத்தடிப்பதற்கு பதில் எழுதிட்டி தான் போகட்டுமே என்கிறார்கள் நட்புவட்டத்தில் சிலர். ***

    தேர்வு எழுதினால் மட்டும் படித்ததெல்லாம் காலங்காலமாக ஞாபகம் இருக்குமா? படித்ததெல்லாம் மறக்கத்தான் போறாங்க, பரிட்சை எழுதினாலும், எழுதாவிட்டாலும். படிப்பதும், தேர்வும் ரெண்டு வேற வேற விசயங்கள் இல்லையா? படித்துப் புரிந்து கொள்வது நம் பிரச்சினை.நாம் எப்படி படித்து இருக்கோம்னு யாரோ ஒருவர் நம்மை ஜட்ஜ் செய்வது பரீட்சை. புரிந்து எழுதியவன் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. I always believe studying and understanding is one thing. Scoring in exam is completely different thing. Most of the time these two issues would not go along.

    பதிலளிநீக்கு
  5. எப்படியோ, கடைசியில் உங்களைப் போன்ற நல்ல ஆசிரியர்களின் அக்கறை வென்று விட்டது. வாழ்க உயர்நீதிமன்றம்!

    பதிலளிநீக்கு
  6. இந்தத் தருணத்தில் தேர்வு நிச்சயமாகth தேவையில்லை என்பதே என் கருத்தும்.

    எப்படியோ இறுதியில் தமிழ்நாடு ரத்து செய்துவிட்டதாக அறிகிறேன்.

    இங்கு ஜூலையில் பள்ளிகள் திறப்பதாகச் சொன்னதற்கே பெற்றோர் அனைவரும் சேர்ந்து ஒரு வருடம் லேட்டனாலும் பரவாயில்லை மருந்து அல்லது வேக்சின் வரும் வரை குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று சொல்லி பெற்றோர் சங்கம் அறிவித்தது.

    கீதா

    இங்கு கேரளத்தில் பரீட்சை நடந்தது. கன்டெய்ன்மென்ட் ஜோன் என்று இல்லாத பகுதிகளில் சென்டர் அமைக்கப்பட்டு நடந்தது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நடந்தது. மாற்றப்பட்ட செண்டர்ஸ் மாணவ மாணவிகளுக்கு அறிவிக்கப்பட்டது. பல குழந்தைகள் பல கிலோமீட்டர் பயணம் செய்து பரீட்சையும் எழுதினர்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  7. தேவை இல்லை இன்றைய சூழலில்.அதே சமயத்தில் அடுத்த வகுப்பு செல்லும்போது எந்த பாடப்பிரிவு எடுப்பது எதில் சேர்த்துக்கொள்வார்கள் என்ற குழப்பமும் இருக்கின்றதே.

    பதிலளிநீக்கு