புதன், 29 ஜூலை, 2020

காலத்தின் ஊஞ்சல்- வேள்பாரி

மனம் மயக்கும் ஏழிலைப்பாலை, மின்னி ஒளிரும் கார்த்திகை நட்சத்திரம், அசுமனா, ஆலா என நிகழ்வு உலகிற்கும், பறம்புலகிற்கும் இடையே சோமப்பூண்டு அருந்திய தாக்கத்தில் வாழ்ந்த, வாசித்த அந்த நாட்களின் நீட்சி வினையாய் இன்றும் பல நிகழ்வுகளின் வேள்பாரியை பொருத்திப் பார்க்கிறது மனம்.
அமெரிக்கா ஜார்ஜ் ஃபிளாயிட் என்ற கருப்பு நெருப்பால்  கனன்று கொண்டிருக்கும் இந்நேரம் கொற்றவைத்திருவிழாவை  வாசித்த அந்த இரவு நினைவுக்கு வருகிறது. அன்றெல்லாம் சீஃப் சியாட்டல் வேள்பாரியை சந்தித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? அவர் இனத்துக்கு எந்த கனியை தேவ வாக்கு விலங்கு எடுத்துக் கொடுத்திருக்கும் என்றெல்லாம் எண்ணங்கள் அலைக்கழித்தபடி இருந்தன.
யாரிந்த சீஃப் சியாட்டல்? மூவேந்தர்களால் சிதைந்து போன எண்ணற்ற இனக்குழுக்கள் பற்றி நாம் வாசித்தோம் அல்லவா, அதே போல அமெரிக்கா எனும் பெரும் கண்டத்தில் அதன் ஆதிகுடிகள் பலவற்றையும் அடித்து நொறுக்கி அடிமைப்படுத்தியது அதிகார பலம் படைத்த வெள்ளை இனம். அவர்கள் நிலத்தில் அவர்களை அடிமையாய் போன அவலம். 
சியாட்டல் தந்தை வழி ஸ்க்வாமிஸ் இனம், தாய் டுவாமிஸ் இனம். பாரியின் மூதாய்  கொடிக்குலமும்,  வேளிர் குலமும் போல. வெள்ளை இனத்தவர்கள் கறுப்பின பழங்குடிகளை நசுக்கி முன்னேறிக் கொண்டிருந்த கால கட்டத்தில் சியாட்டல் தனது வடகிழக்கு நிலப்பகுதியை ஒப்படைத்துவிடுமாறு மிரட்டிய அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் பியர்ஸ்க்கு எழுதிய திறந்த மடல் கொறறவைக்கூத்தில் திரையருக்குப்பின் வரும் இரவில் பாடத் தகுதியானது.
அந்த கடிதத்துக்கு இப்படித்தலைப்கிட்டிருப்பார் சியாட்டல் “ வானத்தை எப்படி வாங்கவோ, விற்கவோ முடியும்?” அந்த கடிதம் இப்படி நீளும். எங்களுக்கு பூமியை விற்பதும் அதுபோல விந்தையாகத் தான் இருக்கிறது. பூமியால் நாம் வாழ்கிறோம், பசியாறுகிறோம் அதற்கு நாம் தானே கடமைப்பட்டிருக்கிறோம்!  அது எப்படி நம் சொத்தாகும்? இரைந்தோடும் இந்த நதியில் என் தாத்தனின் குரல் கேட்கிறது. உயர்ந்து நிற்கும் இம்மலைகளில் என் தந்தையின் உரு காட்சிகொள்கிறது. இம்மலர்கள் என் சகோதர, சகோதரிகள். 
நீங்கள் விரட்டினீர்கள் நாங்கள் ஓடினோம். ஒழிந்தோம். இனி ஓட இடமில்லை . கடல் வந்துவிட்டது. இனி எங்கள் நிலங்களை உங்களிடம் ஒப்படைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்த மண்ணை மதிக்க எம் குழந்தைகளுக்கு கற்றுத்தந்திருக்கிறோம். உங்கள் குழந்தைகளையும் எம் நிலத்தை மதிக்கக் கற்றுக்கொடுங்கள். எம் நிலத்தில் எச்சில் துப்ப அனுமதிக்காதீர்கள் என அவரது கடைசி ஆசையிலும் மண்ணள்ளிப்போட்டு , சொந்த மண்ணில் கழுத்து நெறிபட்டு இறந்து போன ஜியார்ஜ் ஃபிளாட் இன்னொரு காலம்பன் தானே! தன் நகர் ஒன்றுக்கு சியாடல் என்ற பெயர் வைத்ததோடு முடித்துவிட்டது அமேரிக்கா. 
உலகெங்கும் ஈழம் தொடங்கி  இப்படித்தான் ஆதிகுடிகள் மேட்டுக்குடிகளால் நசுக்கப்படுகிறார்கள். ஆள்வோரும் இப்படித்தான் புத்தனை வணங்கிவிட்டு போதிமரங்களை தகர்க்கும் , பைபிளோடு காட்சி தரும் ட்ரம்பாய் இருக்கிறார்கள். அமேரிக்காவில் தான் இப்படி என்றால் பறம்பிற்கு அருகே இருந்த சேரநாட்டில் மற்றொரு அதிர்ச்சி செய்தி. அன்னாசிக்குள் குண்டை வைத்து கர்ப்பிணி யானையை கொன்றிருக்கிறது ஒரு மனிதமிருகம் என சொல்லமாட்டேன். கர்ப்பிணி மானைக் கொல்லாத புலி பற்றிய செய்தியை நான் வாசித்திருக்கிறேன். எது அஃறிணை என ஐயம் கிளை விடுகிறது.
வேள்பாரியில் மூன்று யானைகள் முக்கியப்பங்காற்றுகின்றன. மூலிகைக்கு வசப்பட்டு பறம்பு மகள் பின் சென்றது ஒரு யானை, பாண்டியநாட்டில் கொல்லப்பட்டு தங்கள் சுலநலனுக்காக எந்த கொலைபாதகத்துக்கும் அஞ்சாத சர்வாதிகாரத்தை படம் பிடிக்கிறது மற்றொரு யானை. களம் காணாமலே நெஞ்சை வெல்கிறது கடைசியாக பறம்பின் யானை. இப்படியாக வேள்பாரி நாவல் ஒரு ஊஞ்சலென என் நிகழ்கால உலகிற்கும், பாரியின் பறம்புக்கும் இடையே எனை ஆட்டிவிளையாடுகிறது.

பி,கு: பறம்பு வாசகர் வட்டம் நடத்தி கட்டுரைப்போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற கட்டுரை இது.

12 கருத்துகள்:

  1. பரிசை வெல்ல முற்றிலும் தகுதியானதுதான்.  வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் சகோதரி! அம்சமாக எழுதியிருக்கிறீர்கள்.

    துளசிதரன்

    அழகாக ஒப்பீடு செய்து எழுதியிருக்கீங்க மைத்து. மகிழ்ச்சி இரண்டாம் பரிசு பெற்றதற்கு. வாழ்த்துகள்!

    //மனிதமிருகம் // இல்லை . மிருகம் என்ற சொல்லிர்குக் கூடத் தகுதி இல்லை. அஃறிணை இல்லை அவை எல்லாமே உயர்திணை. உயர்திணைக்கள்தான் படு கேவலமாகப் பல சமயங்களிலும் நடந்து கொள்கின்றன. அந்த நிகழ்வைத் தலைப்பு பார்த்ததுமே புரிந்துவிட்டதால் வாசிக்கக் கூட இல்லை... நான் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மிக நன்றி அண்ணா!
      கீத்து டியர்! என்னை மன்னியுங்கள்! என்னால் இங்கு தொடர் செயல்பட முடியவில்லை,ஆனால் நீங்கள் எல்லாம் அன்பு மாறாமல் தொடர்ந்து ஆதரவு தருகிறீர்கள். மிக்க நன்றி டா!

      நீக்கு
  3. அருமை.வலிமையுடையவன் எல்லாமே தன்னுடையது என்று கருதுகிறான். கல்வியும், தொழில்நுட்பமும் அதற்கே பயன்படுவ்து வேத்னை.
    தென் ஆப்பிரிக்க அணியின் சிறந்த கருப்பரின வேகப்பந்து வீச்சாளரான மகாயா நிடினி தான் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆடிய காலத்தில் தான் ஒதுக்கப்பட்ட விதம் குறித்து வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.அவர் இப்படிக் கூறுகிறார்”“நான் அணிக்கு ஆடியக் காலக்கட்டத்தில் தனிமையில் தான் எப்போதுமே இருந்தேன்.

    டின்னருக்குச் செல்லலாம் வா என்று என் அறைக்கதவை யாரும் தட்டியதில்லை. அணியில் சகவீரர்கள் என் முன்னாலேயே திட்டம் எல்லாம் போடுவார்கள் ஆனால் என்னை ஒதுக்கி விடுவார்கள். காலை உணவுக்குச் செல்லும்போது கூட என் மேஜையில் என்னுடன் யாரும் உணவருந்த வர மாட்டார்கள், நான் ஒதுக்கப்பட்டவனாகவே இருந்தேன்.

    நாங்கள் அணிவதென்னவோ ஒரே சீருடை, ஒரே தேசிய கீதத்தைத்தான் பாடுவோம் ஆனால் எப்போதும் நான் மட்டும் தனிமையில்தான்.

    இதனாலேயே அணி வீரர்கள் செல்லும் பேருந்தில் செல்ல மாட்டேன், டீம் பஸ் டிரைவரிடம் என் கிட் பேகை கொடுத்து விட்டு நான் ஓடியே தான் கிரிக்கெட் மைதானத்துக்கு வருவேன். திரும்ப வரும்போதும் அப்படியேதான் ஓடி வருவேன்.

    அவர்களுக்கு நான் ஏன் அப்படிச் செய்கிறேன் என்பது புரியவில்லை. நான் எதைத் தவிர்ப்பதற்காக இப்படி ஓடியே வருகிறேன் என்பதை அவர்களுக்கு நான் கூறியதும் இல்லை, இதில் சிக்கல் இல்லை, நான் எதையும் எதிர்கொள்ள வேண்டியதில்லாமல் போனது.

    நான் உண்மையில் என் தனிமையிலிருந்துதான் ஓடினேன், டீம் பஸ்சில் நான் கடைசி சீட்டில் அமர்ந்தால் அவர்கள் அனைவரும் என்னைத் தனியாக விடுத்து முதல் இருக்கைகளில் அமர்வார்கள். நாங்கள் வெற்றி பெறும்போதெல்லாம் ஏகக்குஷிதான், ஆனால் தோல்வியடைந்தால் என்னை சுட்டிக்காட்டிக் குற்றம் சுமத்துவார்கள்.

    எனக்கு மட்டுமல்ல என் மகன் தாண்டோவுக்கு இதே நிறவெறி ட்ரீட்மெண்ட்தான். யு-19 கேம்புக்கு செல்வதையே அவன் நிறுத்தி விட்டான், ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி அதிலிருந்து தப்பித்ததன் பின்னணி, அவனுக்கும் ஏற்பட்ட இழிவுதான் காரணம்” இவ்வாறு வேதனையுடன் கூறுகிறார் மகாயா நிடினி”

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகாயாவின் சாதனைகளை அந்த நாட்டின் சாதனை என கூற மட்டும் வெட்கப்படுவதில்லை, இல்லையா அண்ணா! இன்னும் பல கூலிகளையும், அடிமை வம்சத்தையும் ஏற்படுத்த EIA.L,NEP என இரண்டு புதிய வழிகளும் கொண்டுவரப்பட்டிருக்கிறதே!

      நீக்கு
  4. வாழ்த்துகள்ங்க, மைதிலி! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanx a lot Varun. Hope u r hale and healthy. Afterall other friends who have commented above r in direct touch thru
      about you and your health😃

      நீக்கு
  5. சிறந்த படைப்பு
    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. வாவ்! வாழ்த்துகள் டியர்! மேலும் பல வெற்றிகள் குவிக்க வாழ்த்துகள்! அருமையான ஒப்பீடுகள்! பிளாய்ட் மட்டும் தான் இடிக்கிறது எனக்கு.. ஒடுக்கபப்ட்டவர், அநியாயமாகக் கொல்லப்பட்டவர் என்றாலும் காலம்பன் இல்லை என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு