செவ்வாய், 29 ஜூலை, 2014

ஆறாவது படிக்கிற பையன் லவ் பண்ணினா தப்பா?

          
        அவன் அந்த சின்ன வயதில் எப்படி இவ்வளவு பெரிய மனுசத்தனத்தோடு இருக்கிறான் என வியப்பாய் இருக்கும். சத்துணவு உணமாட்டான். சீருடை தரமாட்டோம் என ஆசிரியர்கள் கோபம் கொண்டால் அமைதியாய் தலையை குனிந்து கொள்வான். மற்றவர்கள் போல நீயும் வாங்கி முடிந்த அளவு சாப்பிட்டுவிட்டு கொட்டவேண்டியது தானே? ஏன் திட்டு வாங்குற? என கேட்டால், சாப்பாட்டை வீணாக்குவது பெரிய பாவம். உணவை மதிக்காத வேலையை நான் செய்யமாட்டேன் என்று சொல்லாலே எனக்கும் ஒரு அறைகொடுத்தான். ஆனால் அவனது தோரணையே அவனுக்கு சில பிரச்சனைகளை தேடித்தந்தது. அவன் மீது சில டீச்சர்கள் மட்டும் எரிச்சலில் இருந்தார்கள்.
       
       கண்டிப்பாய் வேறு பின்னணி இருக்கும் என்ற எண்ணத்தில் கொஞ்சம் விசாரித்த போது தான் ஒரு சுவாரஸ்யமான விஷயம் கிடைத்தது. இது அந்த டீச்சரின் வாக்குமூலம் " கருமம் , அதெல்லாம் பிள்ளையா? ஆறாவது படிக்கும் போதே லவ் லெட்டர் கொடுத்துச்சு". மேலும் விசாரித்ததில் கிடைத்த தகவலில் நம் தங்கத்தமிழகத்தின் பள்ளி, சுற்றுப்புறம், பெரியதிரை மற்றும் சமுதாயத்தை ஒரு நொடிக்குள் குற்றவாளிக்கூண்டில் ஏற்றியிருந்தான் அவன். அந்த சம்பவத்தால் தானும் கைதிக்கூண்டில் நிற்பதரியாது பேச்சை தொடர்ந்துகொண்டிருந்த அவர் மகதலினை நோக்கிக் கல்லெறிந்த நகரவாசிகளின் எச்சமாய் இருந்தார்.

அந்த நிகழ்வில் வியப்பில் ஆழ்த்திய விஷயம்

1. அவன் கடிதம் கொடுத்ததை தயக்கமில்லாமல் ஒத்துக்கொண்டான்.
இதே நேர்மையை இன்றுவரை பின்பற்றுகிறான்.

2. அவன் கடிதம் கொடுத்த மூன்று பெண்களும் அவனது சிறுபான்மை இனப்பிரிவை சார்ந்த பெண்கள். இதில் சமுதாயத்திற்கு செய்தி இருப்பதாகத்தோன்றுகிறது. எப்போதும் போல உங்களுக்கு வசதிப்பட்ட கோணத்தில் இதை நியாயப்படுத்திக்கொள்ளுங்கள்!

3. ஒரே நேரத்தில் மூன்று பெண்களுக்கு கடிதம் கொடுக்கும் அந்த ஸ்டைல் தயங்காமல் சொல்வேன் தீராத விளையாட்டுப்பிள்ளை படத்தின் பாதிப்பு. கடைசியா நீங்க சொன்ன கருத்து படம் முழுக்க நீங்க விளையாடிய விளையாட்டு அளவுக்கு பரபரப்பா மனசுல ஓட்டலையே விஷால். (உங்க பதிவை விஷால் படிக்கிற மாதிரின்னு எல்லாம் சவுண்ட் கொடுக்க கூடாது. பல அரசியல்வாதிகள் ராஜபக்சே, ஒபாமா கிட்டலாம் இப்படிதான் பேசுறாங்கன்னு நான் சொல்லியா உங்களுக்கு தெரியனும்) (ஏற்கனவே துள்ளுவது இளமை படம் வந்தப்போ மாணவர்கள் வெளிப்படுத்திய தாறுமாறு ரியாக்சன்களை பார்க்கமுடிந்தது)

4. பள்ளி நேரத்தில் அவனை அப்படி வெட்டியாய் கனவு காண வைத்தது யார் குற்றம்? தினம் தினம் இட்லியே  சாப்பிட முடியுமா டீச்சர் என கேட்கும் இவர்கள் பாடப்பகுதிய சும்மா வைத்து விட்டு, இலக்கணத்தமிழ் இருக்கும் விளக்கங்களை நடைமுறை தமிழ் ஒரு எடுத்துக்காட்டு, கதை கூட சொல்லாமல் பாடம் நடத்துவது(?!) சட்னி, சாம்பார் கூட இல்லாமல் வெறும் இட்டிலியை மாணவன் தொண்டையில் வைத்து அடைப்பதற்கு சமம் என்பதை ஏன் உணரவதில்லை? இது பாட அறிவை புதுப்பித்துக் கொள்ளவேண்டிய தருணம் என்பதை இவர்களுக்கு யார் உணர்த்துவார்கள்?


5. அவர்கள் சொல்லவில்லை என்றால் முன்பு ஒரு காலத்தில் அப்படியோரு கவனச்சிதறலோடு அவன்இருந்தான் என யாராலும் கண்டுபிடிக்க முடியாத மாற்றத்தோடு இருக்கும் அவனை மூன்று வருடத்திற்கு முன் செய்த செயலுக்காக இன்னும் திட்டித்தீர்க்கும் மனநிலை சரிதானா? வளரிளம்பருவத்தில் மாணவன்எதிர்க்கொள்ளும்சிக்கல்களும், அதனை ஆசிரியர்கள் கையாளவேண்டிய  முறையும் என்ற பாடத்தை படிக்காமல் தான் பி.எட் அல்லது  எம்.எட் உளவியல் படித்தார்களா? அல்லது படித்ததை மறந்து விட்டார்களா?

 இறுதியாக அவன் கடிதம் கொடுத்தது குற்றம் தான். அவனது குற்றமல்ல நமது குற்றம். நான் இல்லை என யாரும் கழண்டு கொள்ளாதீர்கள். நீங்களும் சேர்ந்தது தான் சமூகம் என்றால் இதற்கு உங்களின் பங்கும் இருக்கவே செய்கிறது. ஏசு சொன்னதையே நானும் சொல்கிறேன் "உங்களின் மேல் குற்றம் இல்லாதவர்கள் அந்த ஆறாம்வகுப்பு மாணவன் மேல் கல்லெறியலாம்"பி.கு

  எல்லா பாடத்திற்கு பணியிடை பயிற்சி கொடுக்கும் கல்வித்துறை இந்த உளவியலுக்கும் பயிற்சி கொடுத்து மாணவர்களை எங்களிடம் இருந்து காப்பற்றுங்கள் என்பதை இங்கு வேண்டுகோளை வைக்கிறேன்.

58 கருத்துகள்:

 1. 6 ம் வயதிலேயே காதல் கடிதம் கொடுக்கும் அளவுக்கு போனதற்க்கு சமூகமே முதல் காரணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆறாம் வயதில் இல்லை. ஆறாம் வகுப்பு படிக்கும்போது:) நன்றி கில்லர் அண்ணா!

   நீக்கு
 2. கல்வி என்பது மார்க் எடுக்கிற யந்திரங்களாக பிள்ளைகளை உருவாக்குகிற நிலை மாறி உளவியலும் இன்னபிறவுமாய் பள்ளிகளில் கற்றுகொடுக்கிற நாள்வரும்வரை இங்கு இதுதான் பிரச்சனையாய்/இது போல இன்னமும் நிறைய உருவாகலாம்,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாய் சொல்லியிருகிறீர்கள் விமலன் சார்! நன்றி!

   நீக்கு
 3. *** இறுதியாக அவன் கடிதம் கொடுத்தது குற்றம் தான். அவனது குற்றமல்ல நமது குற்றம். நான் இல்லை என யாரும் கழண்டு கொள்ளாதீர்கள். நீங்களும் சேர்ந்தது தான் சமூகம் என்றால் இதற்கு உங்களின் பங்கும் இருக்கவே செய்கிறது. ஏசு சொன்னதையே நானும் சொல்கிறேன் "உங்களின் மேல் குற்றம் இல்லாதவர்கள் அந்த ஆறாம்வகுப்பு மாணவன் மேல் கல்லெறியலாம்"***

  ஏற்கனவே ஒரு பெண் பதிவர் இதேபோல், ஆம்பளைங்கள்ல யோக்கியன் எவனாவது இருந்தால் ரஞ்சிதா (நித்யாவுடைய காதலி) மேல் கல் எறியலாம்னு சொன்னாங்க.

  "நான் எறிகிறேன்" என்று பின்னூட்டதில் சொன்னால்.. அந்தப் பின்னூட்டம் வெளியவே வரவில்லை. மாடரேஷன் என்கிற பேரில் செய்கிற "அடாவடித்தனம்" அது!

  PLEASE WAIT!!!

  That has nothing to do with this issue here you brought up. This is a whole different story! You just reminded me of that unpublished response by a blogger few years ago! That's all.

  -------------------

  இதைப் பற்றிக் கொஞ்சம் கவனமாகவே அனுகுவோம். Let me get back to you soon to share my thoughts on this issue and the "mature boy" who is in "love". :)

  More later! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குற்றம் செய்யாதவர்கள் கல் எறியலாம் என்றால் ...
   ஒரு குற்றமற்றவன் எறியத்தயாராகும் வினாடியில் தகுதியிழக்கிறான்
   சரியா வருண்

   நீக்கு
  2. வாதம் சரிதான். ஆனால், அந்த நொடி வரையில், குற்றம் செய்தவர்கள் பட்டியலில் அவன் இல்லை. இருந்தாலும் எல்லோரையும் போல் அவனும் அயோக்கியந்தான் என்ற அனுமானம் தவறு என்பதையும் நீங்க கவனிங்க. குற்றமற்ற ஒரு சிலரையும் குற்றவாளியாக கை காட்டி, குற்றம் செய்ய துண்டிவிடுபவரை விட்டுடுறீங்க. அந்தக் குற்றத்தை (கல் எறிய முற்பட) செய்யத்தூண்டியது யார்?" நீங்க எல்லாருமே அயோக்கியர்கள்தான்"னு அன்றுவரை அயோக்கியத்தனம் செய்யாதவனை குற்றவாளியாக கை காட்டுவது யார் தப்பு?

   அதாவது அதே வயதில் உள்ள மாணவர்களனைவருமே யாருக்காவது லெட்டர் கொடுத்துதான் இருப்பான். இதில் எந்த மாணவன் யோக்கியன்? என்பது சரியா?

   தவறு செய்தவனை என்ன செய்யணும் என்பது வேறு. அவனைக் காப்பாத்த எல்லா மாணவர்களுமே அப்படித்தான் என்று சொல்வது நிச்சயம் வேறுதான்.

   அந்த மாணவனை மன்னித்து, காப்பாத்த முயல்வதில் தவறில்லை. அதுக்காக எல்லா மாணவர்களையும் குற்றவாளியாக்கித்தான் அவனைக் காப்பாத்த வேண்டுமா? :)

   நீக்கு
  3. welcome varun:) இந்த ஆரோக்கியமான விவாதத்தை நான் உங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன்:) *** the "mature boy" who is in "love".**** it should be "who was on love:) கடிதம் கொடுத்து அயோக்கியத்தனம் என்பது என் வாதமே இல்லையே, பின் எப்படி கொடுக்காதவனையும் இதில் சேர்க்க முடியும். அப்போ இனி அவன் காதலிக்கவே மாட்டானா என்பது உங்கள் ஐயமாக இருந்தால் அவன் காதலிக்கலாம் அது அவன் மனதிற்கு தவறில்லை என்று தோன்றும் வயதில். அவன் என்ன ஆனான். அவனை எப்படி மீட்பது என்கிற உங்கள் அக்கறை மகிழ்ச்சியளிக்கிறது:) அதற்கான விடையை உங்கள் அடுத்த கருத்தில் சொல்கிறேன்.

   நீக்கு
 4. ஆசிரியர்களுக்கு உளவியலுக்கான பயிற்சி கொடுக்க நான் தயார்,மகளே உன் ஆதங்கம் புரிகிறது,பயிற்சியைவிட முயற்சி ஆசிரியர்களுக்கு நாள்தோறும் வேண்டும்,ஆசிரியர் தேர்வு?????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. **ஆசிரியர்களுக்கு உளவியலுக்கான பயிற்சி கொடுக்க நான் தயார்** இந்த பதிவிற்கே அர்த்தம் கிடைத்ததாய் உணர்கிறேன் அம்மா :))
   ****பயிற்சியைவிட முயற்சி ஆசிரியர்களுக்கு நாள்தோறும் வேண்டும்,**
   சரிதான் ஆனால் நாம் மட்டும் முயன்றால் போதாதே:(
   ***ஆசிரியர் தேர்வு?????** கொக்கி போட்டு நீங்க நிறுத்தியிருக்கிற விஷயம் தானே பலர் வாழ்வை கொக்கி போட்டுயிருக்கு:) மிக்க நன்றி அம்மா!

   நீக்கு
 5. அறியாத மனசு ,புரியாத வயசு ...போக போக சரியா போகும் ! இதுகூட செய்யவில்லை என்றால் அதென்ன வளரிளம் பருவம் ?
  த ம 2

  பதிலளிநீக்கு
 6. எனக்கு ..இப்போ அந்த மூனு பேரும், "அக்சப்ட்" பண்ணி, "அன்பே! ஐ லவ் யு டூ!"னு சொல்லியிருந்தால் நம்ம பையன் நிலைமையை நெனச்சுப் பார்க்கவே கஷ்டமா இருக்கு..

  இந்த இள வயதில் கொஞ்சமாவது "முன் யோசனை" "பின் யோசனை" எல்லாம் வேணாம்! :)))

  I think the boy is "short-sighted"! :(

  பதிலளிநீக்கு
 7. சரி, இப்போ

  * அவன் செய்தது தப்பா? இல்லையா?

  * தப்புனா, ஏன் தப்பு?

  * அவன் செய்தது தவறுனு எப்படி எடுத்துச் சொல்லி... அவனுக்கு என்ன அட்வைஸ் பண்ணனும்?

  * ஏதாவது பனிஷ்மெண்ட்? அதெல்லாம் வேணாம். அவன் என்ன கொலையா பண்ணிட்டான்? இல்லை யாரையும் கெடுத்துட்டானா? எதுக்கு பனிஷ்மெண்ட் எல்லாம்?

  * ப்ராக்டிக்கலா பார்த்தா அவனை சுத்தியுள்ள சொசைட்டிய "ப்ளேம்" பண்ணலாம். ஆனால் சொசைட்டியையோ, விஷாலையோ, அல்லது தனுஷையோ பனிஷ் பண்ண முடியாது.

  * அவனோட அறியாமைனு மன்னிச்சு விட்டுவிட்டால் இதோட காதல் கடிதம் எழுதறை நிறுத்திட்டு பீரியாடிக் டேபில், எலக்ட்ரான் காண்ஃபிகுரேஷன் படிக்க ஆரம்பிச்சுடுவானா?இதோட நிறுத்துவானா? இல்லை காதல் சொட்டும் அவன் கடிதங்கள் இன்னும் சில பொண்ணுங்களைத் தொடருமா?

  * சப்போஸ் அந்தப் பொண்ணுங்க. "அண்ணா! உங்களைப் பார்த்தால் எனக்கு காதலும் வரலை மண்ணாங்கட்டியும் வரலை! என்னை விட்டுடுங்க!" னு நாகரிகமாக நிராகரித்தால் "தலைவர்" புரிஞ்சுக்குவாரா?

  யாராவது சிரத்தையுடன் என் கேள்விக்கு பதில் சொன்னால் நல்லாயிருக்கும்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு ஒருமுறை செய்த தவறை மீண்டும் மீண்டும் சொல்லி அவனை நிரந்தரக் குற்ற உணர்விலும் தாழ்வு மனப்பான்மையிலும் தள்ளுவது சரியா என்பது குறித்தது...

   நீக்கு
  2. மது: அவனை அவமானப்படுத்துவது, தாழ்வு மனப்பான்மையில் தள்ளுவது, எல்லாம் முற்றிலும் தவறு என்பது என் கருத்து. இதில் எனக்கு மாற்ருக் கருத்து எதுவும் இல்லை! இன்னொரு மனநோயாளியை உருவாக்க எனக்கு இஷ்டமில்லை. ஆனால் அதோடு இப்பிரச்சினை முடியவில்லை என்பதுதான் என் பிரச்சினை.

   We saved him from the dirty society, fine. ஆனால், இதோட இந்தப் பிரச்சினை முற்றுப்பெற வில்லை. மாணவனைக் காப்பாத்தியாச்சு- சுத்தியுள்ள முட்டாள் சொசைட்ட்டியிடம் இருந்து மட்டும்தான் . சரியா?

   He is saved today. How am I going to save him in the future? இப்போ அந்த மாணவனுக்கு நான் என்ன அறிவுரை சொல்லப் போறேன்???

   * அவன் செய்தது தப்பா?

   * ஏன் தப்பு?

   * அந்தப்பொண்ணுக அவனை நாகரிகமாக நிராகரித்தால் அதைப்புரிந்து கொள்ளுவானா?

   * இல்லைனா இதை மற்ற பொண்ணுங்களிடம் தொடருவானா?

   * அந்தப் பொண்ணுங்க இவன் கடிதத்தால் பாதிக்கப் பட்டு இருக்கலாம்? அவர்களையும் மனக்குழப்பத்தில் ஆளாக்கிய இவன் செயல் சரியா? (நான் அந்தப் பொண்ணுங்க நிலையில் இருந்து இப்போ யோசிக்கிறேன்)

   * "இனிமேல் இப்படிச் செய்யாதே!" என்றால் "நான் என்ன பெரிய தப்புப்பண்ணீட்டேன்?" என்று அவன் என்னைத் திருப்பிக்கேட்டால், அவனுக்கு "என் பதில் என்ன?"

   சரியான வழியில் அவனை இனிமேல் வழி நடத்த நான் அல்லது நாம் என்ன செய்ய வேண்டும்?, மது!

   நீக்கு
  3. அந்த விசயத்தில் அவனது உணர்வுகள் வெள்ளமென கரைபுரண்டு ஓடியிருக்கிறது. அதனை கையாள அந்த வெள்ளத்தை மடைமாற்றம் என்ற முறையை பின்பற்றி சரிசெய்ய வேண்டும் என்கிறது நாங்கள் படித்த உளவியல். அது ஒன்னும் கம்பசூத்திரம் இல்லை காலகாலமாய் அதை அம்மாக்களும், அக்காக்களும், சகவயது நண்பர்களும் செய்து வரும் விஷயம்.இனியா அதை எளிமையாய் எடுத்துரைத்திருக்கிறார்.
   அப்புறம் ஒரு விஷயம் அவனுக்கு வாய்த்த டீச்சர் முன்னபின்ன இருந்தாலும் அவனது அம்மா கிரேட்!! அவர் அவனிடம் இது தான் உங்கள் வளர்ப்பா என நாலு பேர் முன்னால கேட்கவச்சுடியே என்ற கேள்விக்குப்பின் இரண்டு வேளை சாப்பிடாமல் இருந்திருக்கிறார். சில நாட்கள் ஹாஸ்டல் வாசத்தால் பாதை மாறிய மகன் இன்றுவரை இதை செய்தால் என் அம்மாவிற்கு பிடிக்காது என்று எல்லாவற்றையும் யோசித்து செயல் படுவதால் இப்போ அவன் பெரியமனிதத் தனத்தோடு இருப்பதை குறிப்பிட்டேன். என் ஆதங்கம் எட்டாம் வகுப்பு தாண்டாத அந்த அம்மாவிற்கு இருந்த தெளிவு கூட இல்லாமல் நடந்துகொண்ட வகுப்பு ஆசிரியர் அதற்கு பிறகு அவன் செய்த ப்ராஜெக்ட் உட்பட எல்லா விசயங்களிலும் அவனிடம் வன்மம் சரிதானா என்பதே:(
   **
   * "இனிமேல் இப்படிச் செய்யாதே!" என்றால் "நான் என்ன பெரிய தப்புப்பண்ணீட்டேன்?" என்று அவன் என்னைத் திருப்பிக்கேட்டால், அவனுக்கு "என் பதில் என்ன?"** அவன் இனி கேட்கமாட்டான். அவனை போன்றவர்கள் கேட்டால் கடிதம் கொடுத்தது தவறல்ல அதற்கான வயது தான் தவறு என புரிய வையுங்கள். சரியான வயது வந்தால் அவன் அப்படி மூன்று பேருக்கு ஒரே நேரத்தில் கடிதம் கொடுத்து மாட்டிக்கொள்ளமாட்டான்:)) வாழ்கையே ட்ரயல் அண்ட் error மெத்தடில்(முயன்று தவறிக்கற்றல்) தானே பல விசயங்களை நமக்கு கற்று தருகிறது:)

   நீக்கு
  4. நேரம் கிடைத்தால் மது மற்றும் தில்லையகம் துளசி அண்ணாவின் பின்னூட்டம் பார்க்கவும்:)

   நீக்கு
 8. சகோதரி,

  தைரியமான பதிவு ! இந்த பதிவின் கடைசி வரிகள் சமூகத்தின் மீதான சாட்டையடி ! உணர்ச்சிவசப்படாத உங்களின் யதார்த்த பார்வை அனைவருக்கும் வாய்த்தால் பிரச்சனைகள் இருக்காது !

  சினிமாவினால் நம் சமூகம் சீரழியும் அளவுக்கு வேறு எந்த சமூகமும் சீரழிவதாக எனக்கு தெரியவில்லை ! அலைகள் ஓய்வதில்லை படம் வெளிவந்த நேரத்தில் காதல் ஜோடிகளின் தற்கொலைகள் அதிகமானதாக ஒரு பத்திரிக்கையில் படித்தேன் ! தமிழன் எந்த அளவுக்கு பட்டை காவியமான ( தமிழ் சினிமாவில் காவியங்களைவிட கழிவுகள்தான் அதிகம் ! ) சினிமாவை நம்புகிறான் பாருங்கள் !

  உங்களை போன்றவர்களின் தொடர் பதிவுகள் இந்த சமூகத்தை நிச்சயமாய் சீர்திருத்தும்.

  நன்றி
  சாமானியன்

  முடிந்தால் என் புதிய பதிவை படியுங்களேன் சகோ !

  http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post_22.html

  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சாமானியன் சகோ! உங்க பதிவை கண்டிப்பா பார்க்கிறேன்:)

   நீக்கு
 9. அந்நாளில் அலைகள் ஓய்வதில்லை, டார்லிங் டார்லிங்கில் இருந்து இந்நாள் படங்கள் வரை பிஞ்சுக் காதலைக் கன்னாபின்னாவென்று சொல்லத் தயங்குவதே இல்லை. அப்புறம் பசங்க இப்படி நடந்துக்காம வேற எப்படி நடந்துக்குமாம்? உளவியல் பாடம் வெச்சு மனசை சீர்படுத்தணும்ங்கற கருத்து ரொம்பச் சரியானதும்மா. ஐ அப்ரிசியேட் யூ.

  பதிலளிநீக்கு
 10. அம்மு தெரிந்தோ தெரியாமலோ மனிதர்கள் தவறு செய்வது இயல்பு தான். இருந்தாலும் அதற்கு தானே ஆசிரியர்களும் பெற்றோரும் இருக்கிறோம் நல் வழிப்படுத்த இல்லையா இதையும் மீறி தவறுகள் நடக்கும் போது எடுக்கும் முயற்சி எண்ணெய் ஊற்றி வளர்ப்பது போல் ஆகாமல் பார்க்க வேண்டும். 6 வயது பையன் கடிதம் கொடுப்பது தவறு தான். ஆனால் தண்டிப்பதும் மற்றவர்கள் அறியும் வண்ணம் அவமானப் படுத்துவதும். அவனை மேலும் தவறு செய்யத் தூண்டும் என்றே நான் எண்ணுகிறேன் . முதலில் புத்தி மதி சொல்லிப் பார்க்கலாம் வேறு ஏதாவது கல்வியில் அல்லது எதோ அவனிடம் உள்ள திறமையை கண்டு அறிந்து ஊக்குவித்து திசை திருப்பி விடலாம். இவற்றை எல்லாம் அலட்சியம் செய்தால் பின்னர் தண்டனை வழங்கலாம்.
  அவன் குற்ற உணர்ச்சியில் கூனி குறுகும் போது குத்திப் பேசுதல் எள்ளி நகையாடுதலும் தவிர்த்தல் அன்பான பேச்சும் நம்பிக்கையான ஆதரவும் தந்தால் திருத்தலாம் ஆனால் எல்லோருக்கும் எல்லா முறையும் எப்பவும் பொருந்தாது. அல்லவா அம்மு. மனவேதனை யான விடயம்.

  ஆமா அம்மு வலைச்சர பதிவின் முடிவு பார்த்தீர்களா ?
  நன்றி தொடர வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்துட்டேன் செல்லம் அதைவிட வேறென்ன வேலை. :)) ஆனா ப்ளைட்ல தனியா வந்து இறங்கியப்பவே எனக்கு டவுட் தான்:))) அட்டகாசமான கருத்து இனியாச்செல்லம் !! நன்றி டா!

   நீக்கு
 11. வணக்கம்

  தண்டனைகள் தவறுகளை அறிவியல் பூர்வமாக பிடிபடா வண்ணம் செய்யவே தூண்டும்.. இது எனது நேரடி அனுபவம். எனது தண்டனைகள் வெகு சில வேளைகளில் மட்டுமே வேலை செய்திருகின்றன பெரும்பாலும் எதிர்மறை விளைவுகள்தான்.

  கட்டுரையில் குறிப்பிட்ட தவறை நானும் செய்பவன்தான் 2007இல் ஒருவன் தாமிரக் கம்பிகளைத் திருட கிராமத்தார் பள்ளிக்கு வந்து பஞ்சாயத்து செய்தனர். அன்றில் இருந்து அவனுக்க காப்பர் வயர் என்று பெயராகிப் போனது. இது தவறு என்று தெரியும். ஆசிரிய அறங்ளுக்கு எதிரானது என்று நன்கு தெரியும். இருந்தும் எனக்குள் இருக்கும் சாமான்யன் படுத்தும் பாடு. ஆசிரியர்கள் சாமானியர்களாக இருக்கமுடியாது என்றே தோன்றுகிறது.

  சமீபத்தில் மு.க.அ மெதட் ரொம்ப நல்லா வொர்க்அவுட் ஆகிறது. எனவே நான் வேறு பரிணாமத்தில் பணியைத் தொடர்கிறேன்.

  சில வேளைகளில் உள்ளே இருக்கும் சாமான்யன் ஆசிரியரை மிதித்துக் கொண்டு வெளிவருவதும் பின்னர் நான் அதை சரிசெய்வதும் தொடர்கிறது.

  நீங்கள் பதிவில் மேலே குறிப்பிட்ட மாணவன் ஒரு நல்ல தாய்க்கு கட்டுப்பட்டவன் என்பதை குறிப்பிடவில்லை. (தாயார் பங்களிப்பு எத்துனை அருமையானது என்பதை வெளிப்டுத்வதும் அவசியம். )

  எத்துனை பயிற்சிகள் வந்தாலும் நான் விரும்பினால் தான் மாற்றங்கள் சாத்தியம். வெகு சிலர் மட்டுமே பயிற்சிகளால் மேம்படுவதை நான் உணர்ந்திருக்கிறேன்.

  எனது சக ஆசிரியர் பயிற்சிக்கு வைத்திருக்கும் பெயர் அன்னதானத்திட்டம் ..

  தன்முனைப்பும் சுயமேம்பாடும் தேவை என்று உணரும் ஆசிரியர்கள் அவர்களாகவே வழிகளைக் கண்டறிவார்கள்.

  துறைக்கு வழிகாட்டும் வேலைகளைத் தவிர்க்கவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இத்தனை நீளமான பின்னோட்டம் மைதிலி கொஞ்சம் பிரயோஜனமாய் எழுதியிருக்கிறாள் போல என்று உணரவைக்கிறது:)
   உண்மைதான் அவன் தாய்க்கு கட்டுபட்டவன் என்பதை நான் காட்டியிருக்க வேண்டும். வருண் சகாவின் பதிலில் குறிப்பிட்டிருக்கிறேன். நம் ஸ்மார்ட் வாசகர்கள் இனி தெரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்;)
   **வெகு சிலர் மட்டுமே பயிற்சிகளால் மேம்படுவதை நான் உணர்ந்திருக்கிறேன்.*
   சரிதான் அந்த வேகுசிலராவது மாறட்டுமே என்பதே என் சிறிய ஆசை!
   **துறைக்கு வழிகாட்டும் வேலைகளைத் தவிர்க்கவும் **
   அது வேண்டுகோள் தான் வழிக்காட்டல் அல்ல என்பது தங்களின் மேலான கவனத்திற்கு:)
   **மு.க.அ மெதட்** சாத்தியமா தெரியலை மாஸ்டர்:( கொஞ்சம் விளக்குங்கள்:)
   மிக்க நன்றி!!

   நீக்கு
  2. எந்த வகைப் பயிற்சிகள் அளித்தாலும் அந்த மாணவன் தன் நிலை உணர வேண்டும் என்பது மிகவும் சரியான கருத்துதான். அந்தத் தன் நிலை உணர்வதற்கு பயிற்சிகள் உதவக் கூடும் இல்லையா?! சிறிதளவேனும்!

   அம்மாவிற்குக் கட்டுப்பட்டவன் என்றால் மிகவும் எளிது பையனை உணர வைப்பது! அந்த அம்மாவிடம் பேசி அவருக்கும் சில கருத்துக்கள் அவனைக் கையாளும் முறைகளைச் சொன்னாலே போதும்......

   நீக்கு
 12. நல்ல பதிவு! இன்றைய கால கட்டத்திற்கு இன்றியமையாத பதிவு! பி.கு நல்ல கேள்வி ஆனால் அதைச் செய்வார்களா என்பது மிகப் பெரிய கேள்வி!

  இதில் எங்கள் கருத்து! பொதுவாக எல்லோரும் ஊடகங்களைத் தான் குறை சொல்லுவார்கள்! ஊடகங்கள் ஒரு காரணமாக இருந்தாலும் அது பிரதான காரணமல்ல. ஏனென்றால் இப்போது கிராமங்களிலும், மண் சுவர் வீட்டிலும் அடுப்பு எரிகின்றந்தோ இல்லையோ எல்லோர் வீடுகளிலும் டிஷ் இருக்கின்றது கூரையில். அது மழையில் விழும் ஓலைக் கூரையாக இருந்தாலும். அந்த அளவு ஊடகம் மூலை முடுக்குகளில் பரவி உள்ளது.

  ஒரு நோய் பரவுகின்றது என்றால் அதை முற்றிலும் அழிக்க முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் தடுக்கவாவது, முறையான வழியில் அதை எதிர்கொள்ளவாவது பயில வேண்டும். யாராலும் ஊடகங்களை தடை செய்ய முடியாது. எனவே தீர்வு பெற்றோர்களிடமும், பள்ளியிலும் தான் உள்ளது. உளவியல் முறைப்படி குழந்தைகளைக் கையாள்தல் மிக மிக அவசியமாகிறது. முளைய்லேயே கிள்ளி எறியப்பட வேண்டும் பல விஷயங்கள். பெற்றோரின் வளர்ப்பு முறையும், பள்ளியில் ஆசிரியர்களின் அணுகு முறையும், ஆசிரியர், பெற்றோர் கலந்துரையாடலும்...இதில் பங்குபெறுகின்றன. கலந்துரையாடல் என்பது மதிப்பெண் சம்பந்தப்பட்டது அல்ல. ஒரு குழந்தையின் உளவியல், நடத்தை, எப்படிக் கையாள்வது என்ற பிற ஒரு நல்ல மனிதனாக உருவாக்குவது பற்றிய கலந்துரையாடல்.

  நீங்கள் குறிபிட்டுள்ள விதத்தில் பார்த்தால்.....அந்தப் பையன் attention seeking syndrome......Emotional maturity, Emotional Intelligence, Emotional Quotient சம்பந்தப்பட்டது எனத் தோன்றுகின்றது. அந்தப் பையனை அவனுக்கு ஆர்வமுள்ள Sports, திறமைகளை வெளிக் கொண்டுவரும் வகையில் பயைற்சிகள் அளிக்கப்பட்டால்....கண்டிப்பாகத் தீர்வு கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்லைகிற அளவு பெஸ்ட் பின்னோட்டம்:) மிக்க நன்றி சகா! இது உங்கள் துறையில் கொண்ட ஆர்வத்தை கண்ணாடியை காட்டுகிறது:))

   நீக்கு
 13. கேடு கெட்ட திரைப்படங்களை பார்ப்பதன் விளைவு தான் இது.
  பிஞ்சு மனங்களில் விஷத்தை கலக்கின்றனர்.

  முத்தாய்ப்பாக, தங்களின் வேண்டுகோள் இன்றைக்கு கண்டிப்பாக தேவையான ஒன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகா! உங்க வலைச்சர அட்வைஸ் தமிழன் சகா பின்பற்றுகிறார் பார்த்தீர்களா?

   நீக்கு
 14. கொஞ்சம் ஹெவியான மேட்டர் , அதனால் இந்த பதிவை கலாய்க்காமல் விட்டுவிட்டு யோசிச்சு பதில் சொல்லுறேன் டீச்சர்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. good BOY! யோசித்து கருத்துச்சொல்ல டைம் எடுத்துங்க சகா!

   நீக்கு
 15. டீச்சரம்மா எனது தளத்தில் ஒரு புதிய ஸ்டுடெண்டை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். அந்த மாணவி உங்களைப் போல இங்கிலீஷில்தான் கதைக்கிறாள் அவள் பதிவை படித்து மார்க் போடவும் http://lightitupgirls.blogspot.com/2014/07/dont-change.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எதாவது கலாட்டாவோ என்று பயந்தேன்:)) நல்ல முயற்சி சகா! நீங்க அடிக்கடி சொல்லிக்கிற மாதிரி நல்ல அப்பா தான்:))

   நீக்கு
 16. நல்லதொரு உளவியற் பதிவு!

  சுருக்கமாகச் சொல்வதெனில் இதற்குச் சுற்றியுள்ள சமூகத்தின் பங்களிப்பு
  அபரிமிதமானது.
  தண்டனையால் விபரீதங்களே வளரும். திருந்துவதற்குச் சிந்திக்கவும் முடியாமல் போகும்.

  வாழ்த்துக்கள் தோழி!

  பதிலளிநீக்கு
 17. வயசுக் கோளாறால் செய்த தவறு..வயதுக்கு தகுந்தமாதிரி ஏற்படும் உளவியல் மாற்றங்களையும் எதிர்பாலின் மீது ஏற்படும் ஈர்ப்பும் இயற்கையே, அதை எப்படி கட்டுக்குள் வைத்து படிப்பின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று ஒவ்வொரு மாணவனுக்கும் மாணவிக்கும் சொல்லிக்கொடுத்து வழிநடத்த வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கடமை..அது நம் சமூகத்தில் இல்லை என்று நினைக்கிறேன்.
  தவறு செய்தவனை திருந்தினாலும் விடாமல் முத்திரை குத்துவது தவறே! நல்ல பதிவு தோழி...ஆசிரியையாய் இருந்தும் இந்த கோணத்தில் பயிற்சி வேண்டும் என்று சொல்லும் உங்கள் தைரியமும் நேர்மையும் பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள் தோழி

  பதிலளிநீக்கு
 18. சிறந்த உளநல வழிகாட்டல்
  பொறுப்புள்ளவர்கள்
  எல்லோரும் சிந்திக்க வேண்டும்!

  பதிலளிநீக்கு
 19. இது ஏதோ இப்போது மட்டும் நடப்பது அல்ல! பல வருடங்களுக்கு முன்பு நான் படிக்கும் காலத்திலும் நடந்தது. இனக்கவர்ச்சியும், சமூகமும், பழகும் சூழலும் இதற்கு காரணம்! பக்குவமாய் எடுத்து சொன்னால் மாறுவான். கல்லெறிந்தால் மரம் கன்றிப்போகும்! மாணவனும் வெம்பிப்போவான்!

  பதிலளிநீக்கு
 20. இன்றைய திரைப்படங்கள்
  தொலைக் காட்சி நிகழ்ச்சிகள்
  இன்றைய கல்வி முறை
  அனைத்துமே காரணம்
  தாங்கள் சொல்வதும் முழுக்க முழுக்க சரிதான் சகோதரியாரே
  நமக்கும் உளவில் பயிற்சி வேண்டும்

  பதிலளிநீக்கு
 21. ஆசிரியர்களிடம் உளவியல் நோக்கு குறைந்து,கடமைக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர் கூட்டம் அதிகமானதன் விளைவே காரணம்மா.நல்ல பதிவு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அக்கா! கொடுமைதான்.
   வாழ்த்துக்கு நன்றி அக்கா!

   நீக்கு
 22. நீங்கள் சொல்லியவை அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை சகோதரி !! இன்னமும் பல பள்ளிகளில் இது நடந்து கொண்டே தான் இருக்கிறது.இதற்கு முழுபொறுப்பு நமது சமூகப்பண்பாடு தான்.(மாறிவரும்)

  பதிலளிநீக்கு
 23. என்னிடம் கோவிச்சுக்காதீங்க..

  இங்கே கருத்துச் சொல்றவங்க எல்லாரும் அந்தப் பையன்மேலே அனுதாபப் படுறீங்க, காரணம், அவனுடைய இச்செயலுக்காக, அவனை இஷ்டத்துக்கு அவமானப்படுத்தி விட்டார்கள் அவனுடைய ஆசிரியர் ஆசிரியைகள். அவன் இளமனது எப்படி இதையெல்லாம் தாங்கும்னு நெனைக்கிறீங்க.

  இன்னொரு கோணத்தில் இந்தப் பிரச்சினையைப்பார்ப்போம். இப்போ நீங்க அந்த பொண்ணுங்களுடைய (லவ் லெட்டர் கொடுக்கப்பட்ட) தந்தையாகவோ, தாயாகவோ இருக்கீங்கனு வச்சுக்குவோம். இதே கருத்தைத்தான் சொல்லுவீங்களா? இல்லைனா அந்தப் பையன்மேலே உங்களுக்கு எரிச்சலும் கோபமும் வருமா?

  அதாவது 11 வயதான உங்க மகளுக்கு ஒரு பையன் லவ் லெட்டர் கொடுத்தால், அச்சூழலில் இதுபோல் சமுதாயம் கெட்டுவிட்டது, பாவம் அந்தப் பையன்னுதான் நெனைப்பீங்களா? இல்லைனா உங்க பொண்ணுனு வந்தால் வேற மாதிரி "ரியாக்ட்" பண்ணுவீங்களா?

  இப்படியெல்லாம் ஏன் வருண் யோசிக்கிற? நீ என்ன லூசா? அது உன் பொண்ணு இல்லை. பேசாமல் மூனாவது மனிதானா இருந்து அறிவுரை சொல்லீட்டு அமெரிக்காவில் குப்பை கொட்டாமல்? எதுக்கு உனக்கு இதெல்லாம்? னு முறைக்காதீங்க! நன்றி. :)

  பதிலளிநீக்கு
 24. இல்லை வருண் .மற்ற துறையில் இருப்போர்க்கு தான் தன் பிள்ளை அடுத்தவர் பிள்ளை என்ற கணக்கெல்லாம். என்னைபோன்ற ஆசிரியர்க்கு என் வகுப்பு மாணவன் வயதில் உள்ள எல்லோரும் எங்கள் பிள்ளைகள் தான். இதய சுத்தியோடு சொல்கிறேன் என் மகளுக்கு இது நடந்தாலும் நான் கடிதம் கொடுத்த அவனுக்காக வருந்தவே செய்வேன். என் மகளை மடைமாற்ற கொஞ்சமேனும் உளவியல் கற்ற நான் இருக்கிறேனே,எனவே அவனது அம்மாவிடம் நட்போடு இதை பகிர்ந்து கொள்ள விரும்புவேன். அவர்களது அனுமதி பெற்று அவனிடமும் நட்போடு கவுன்சிலிங் கொடுக்க முயல்வேன். கண்டிப்பாய் கண்மூடித்தனமாய் கூப்பாடு போட்டு அந்த சிறுவர்களை சிந்தனை குழப்பத்திற்கு ஆளாக்க மாட்டேன்:))) நல்ல மனதிடமும் சொன்ன சொல்லில் நம்பிக்கையும் கொண்டவர்கள் எதிர்க்கருத்தை ஆவலோடு எதிர்கொள்வார்கள், எதிர்பார்ப்பார்கள். மேலும் ஒரு அரசியல்வாதியாய் என் அப்பா எனக்கு முன்னுதாரணமாய் காட்டியதும் இந்த பண்பைத்தான் வருண்:)) dont mind. cheers!

  பதிலளிநீக்கு
 25. மைதிலி: நான் பொதுவாகத்தான் இதை முன் வைத்தேன். I appreciate that you place your own wonderful daughter in this place and answered the question, positively. Thanks.

  நான் என்னுடைய அம்மாவிடமே இதுபோல் அவர்கள் இருக்கும் இடத்தை மாற்றி, அவர்கள் என்னிடம் யாரைக்குறை சொல்லுகிறார்களோ அவர்களாக அம்மாவை (என் தாயைச் சொல்லுகிறேன்! :) ) நிறுத்திப் பார்க்கச் சொல்லுவேன்.

  ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தைப் பொறுத்து நியாயங்கள் மாறலாம். படிப்பில் முதல் மாணவர்கள் பலருக்கு கடைசி மாணவனின் தவிப்பு புரிவதில்லை- they just dont care! You may have seen that as a teacher! :)

  Anyway thanks for your response! Take it easy! :)

  பதிலளிநீக்கு
 26. வணக்கம்
  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்... பார்வையிட முகவரி இதோ.
  http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_16.html?showComment=1410829864457#c3775928799328011888

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 27. ஆசிரியர் எனும் முறையில், உங்களுடைய இந்தப் பதிவு சமூக அளவில் மிகப் பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. மிக அருமையான பார்வை உங்களுக்கு! பின் குறிப்பில் நீங்கள் கூறியிருப்பது கல்வித்துறையின் முதன்மையான கவனத்துக்கு உரியது. இதை வெறும் பதிவாக எழுதியதோடு நில்லாமல், ஆசிரியர் எனும் முறையில் கல்வித்துறைக்கோ, முதலமைச்சருக்கோ நீங்கள் இது பற்றி ஒரு கடிதம் எழுதினால் என்ன? உங்களுக்கு அதனால் எந்தச் சிக்கலும் வராது எனில்.

  பதிலளிநீக்கு