திங்கள், 18 ஜனவரி, 2016

நமக்கு அணு உலை அவசியமா காம்ரேட்ஸ்?

                        எரிமலை எப்படி பொறுக்கும்........... அந்த நெருப்புக்கு இன்னுமா உறக்கம் ......என அந்த பாடல்வரிகளை கேட்ட நொடி ஒரு சிலிர்ப்பு ஓடி அடங்கும். இது என்ன பாட்டு அப்பத்தா? என்பேன். மில்லுல ஏதோ கம்யுனிஸ்ட் கட்சி கூட்டம் போல என்பார் அப்பத்தா. எங்கள் தெரு ஆண்கள் கொஞ்சம் கேலியாய் கடந்துவிடும் அந்த பாடல் என்னுள் சில தேடல்களை விதைத்தது. 


                             தேடியவர் கண்டடைவர் இல்லையா? பஞ்சாலை நாகரிகம் தழைத்த எங்கள் தெரு, முன்பு சிவப்பில் இருந்து எம்.ஜி.யார் எனும் காந்த சக்தியால் இழுக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாய் அ.தி.மு.கவுக்கு மாறியிருக்கிறது தெரியவந்தது. கழக கட்சிகள் அளவு கம்யுனிசம் பரிட்சயம் இல்லை என்றாலும், சிறிது வாசிப்புக்கு பின்  அதன் பால் அதிக மரியாதை உண்டாயிற்று. தொட்டதுக்கெல்லாம் உண்டியல் குலுக்குகிற கட்சி எனும் என் சித்தப்பாவின்  கேலிகளை குறுக்குவெட்டில் ஆராய்ந்துபார்த்தபோது மதிப்பு கூடியபடியே இருந்தது. எந்த பிரச்சனை என்றாலும் குரல் கொடுக்கும் கம்யுனிஸ்ட்கள் ஏன் இந்த அணு உலைக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என நான் என் சின்ன மூளையை கசக்கி  யோசித்த வேளை, தோழர் ஒருவர் கேட்டார் "ரஷ்யா ஆதரிக்குது என்பற்காக மட்டுமே  நீங்கள் அணு உலையை எதிர்க்கிறீர்களா?'" . அவர் என்னை கழகக்கண்மணி என நினைத்திருக்கவேண்டும். அப்புறமா தான் விசயமே புரியுது எனக்கு.
                          என்னிடம் அது போன்ற சார்பு நிலை எல்லாம் இல்லை. அணு உலை பற்றிய என் வாசிப்பு இந்த புரிதலை தந்திருக்கிறது என்றேன். எதனால் நான் அணு உலையை எதிர்க்கிறேன். (கொஞ்சம் நீளமா இருக்கும், சயின்ஸ் புரியாது என ஓடிவிடாதீர்கள், இது வரலாறு.....ரத்த வரலாறு) 

ஏப்ரல்26, 1986

     சோவியத் யூனியனில் உள்ள உக்கரைனின் ஒரு நகரமான ப்ரிப்யட். அது செர்நோபில் அணு உலையில் பணியாற்றும் வல்லுனர்கள், பணியாளர்கள் அவர்களுக்கான பாதுகாப்பு படையினர் தங்கியிருக்கும் குடியிருப்புப் பகுதி. சோவியத் யூனியனின் மிகத் திறமை வாய்ந்தவர்களும், மெத்தப்படித்தவர்களும் வாழும் முற்போக்கு சிந்தனையோடு அமைக்கப்பட்ட, புதுமையான நகரம். அதற்கு மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த செர்நோபில் அணு உலையின் ஒரு ரியாக்டரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய போதிய தொழிநுட்பத்திறன் இல்லாத ஒரு பணியாளர் முயல்கிறார். அணு உலை வெடித்துச் சிதறுகிறது. தொடர்ந்து மற்றொரு ரியாக்டரும் வெடிக்கிறது. கதிரியக்கம் ஐரோப்பா வரை பரவுகிறது. விளைவு ஐயாயிரத்து எழுநூற்றி இருபத்தி இரண்டு துப்புரவு பணியாளர்கள் அவசரசிகிச்சைக்கு அனுப்பப்பட்டதாக தேசிய கதிரியக்க கட்டுப்பாட்டுக்குழு கூறிக்கொண்டிருக்க, அரசோ நூற்றி ஐம்பது பேர் தான் பாதிக்கப்பட்டதாக கூறியது. விபத்து நடந்த இருபத்திநான்கு மணிநேரத்துக்குள் முப்பத்தியோரு பணியாளர்கள் இறந்திருக்கிறார்கள்.  அவர்களில் பெரும்பாலானோர் தீயணைப்பு வீரர்கள் என்பது கொடுமை. மூன்றே மணி நேரத்தில் ஐம்பதாயிரம் மக்கள் அந்த நரகத்தை (எழுத்துப்பிழை அல்ல) விட்டு வெளியேறுகிறார்கள் இனி இங்கு திரும்பப்போவதே இல்லை என்றறியாமலே. மனித உயிர், பொருட்சேதம், சூழல் மாசுபாடு என மிகமிக அதிகமான பாதிப்பு. சேதத்தில் இதற்கு அடுத்ததாகத் தான் புகுஷிமாவை சொல்கிறார்கள்.

கதிரியக்கம் நேரடியாக மனிதனை பாதித்தது போக, அதனால் பாதிக்கப்பட்ட விலங்குகள், அந்த விலங்கிடம் இருந்து பெறப்படும் உணவு, நீர்நிலை மாசுபாடு,  நீர் உயிர்கள் மாசுபாடு, நிலமாசுபாடு, காற்று மாசுபாடு என ஒரு குரங்கு ஊரெல்லாம் பற்றவைத்த தீயாய் செர்நோபில் நகரமே நாசமாய் போனது. நான்கு சதுர கிலோமீட்டர் பரப்புள்ள  பைன் மரக்காடு அப்படியே எரிந்து செம்பழுப்பு நிறத்தில் கருகி நிற்கிறது, இன்று அதனை சிவப்பு காடு (!?) என்கிறார்கள். அங்கிருந்த விலங்குகள் பல இறந்தன, சில இனபெருக்க சக்தி இழந்தன, மேலும் பல தைராய்டு பிரச்சனைகளை சந்தித்தன. காற்றில் கலந்த கதிரியக்க ஆற்றலை குறைக்க அங்கே செயற்கை மழையை விதைத்திருக்கிறார்கள். அது குடிநீர் மட்டுமின்றி, நிலத்தடி நீரையும் மாசுபடுத்திவிட்டது.

ஆனாலும் மனித இழப்பை கணக்கிட்டுச்சொல்ல முடியாதவில்லை. அதீத கதிரியக்கத்தின் காரணமாக ரோபோக்கள் செயலிழக்க, அங்கு மீட்புப் பணியாற்றிய ஐந்து லட்சத்துக்கும் அதிகமான துப்புரவு பணியாளர்களில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பயோ-ரோபோகளாக கவச உடை அணிந்து பணியாற்றவேண்டிய நிலை. பெல்ராஸ் நகரை சேர்ந்த இவர்கள்,  துரிதமாக மூப்படைந்த தேகத்தோடு அல்லது இரத்தபுற்று நோயால் பாதிக்கபட்டோ இறந்துகொண்டே இருந்தார்கள். ப்ரிப்யாட் நகரத்துக்கு அருகே இருந்த பெல்ராஸ் நகரத்து மனிதர் சொல்கிறார் " அந்த ஆண்டு எங்கள் ஊரில் ஒவ்வொரு தினமும் ஒரு இறப்பு ஏதாவது ஒரு வீட்டில் நிகழ்ந்து கொண்டே இருந்தது, அதற்கு இந்த அணு உலைவெடிப்பு  தான் காரணமா?.


இது ஒரு புறம் என்றால், அந்த அணு உலை தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறந்த குழந்தைகள் விவரிக்க  முடியாத கோர வடிவத்தில்  இருந்தன. அதுவரை கருக்கலைப்பு குற்றம் என்று சொன்ன ஐரோப்பிய நகரங்கள் பல அந்த சட்டத்தை திரும்பப் பெற்றன. கருக்கலைப்பின் எண்ணிக்கை அதிகரித்து. பிள்ளை பெற்றுக்கொள்ளவே மக்கள் பயந்தனர். இங்கே  பொருட்சேதம், பணச்சேதம் பற்றி நான் சொல்லவே இல்லை. ஆனால் அந்த கணக்கு, உயிரிழப்பின் கணக்கை போலன்றி இம்மி பிசகாமல்  ரசிய அரசாங்கத்துக்கு மிக தெளிவாகவே தெரியும். அதனால் தான் அவர்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டுவிட்டு இங்கே, இந்தியாவில் அணு உலை தொடங்க கரம் நீட்டுகிறார்கள்(!?)

அது போலும் விபத்துக்கள் நிகழா வண்ணம் இந்திய மேதைகள் காப்பற்றிவிடுவார்கள் என்றே வையுங்கள், தப்பித்தவறி நிகழ்ந்து விட்டால் என்ன ஆகும்? ஒரு இந்திய உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். மதிய பிரதேசத்தின் தலைநகர் போபால். அங்கே அமைந்திருந்தது யூனின் கார்பைட் எனும் ஒரு பூச்சிகொல்லி ஆலை. 1984 ளில் அங்கு ஏற்பட விபத்து தான் உலகத் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளிலேயே மிக பெரியது என சொல்கிறார்கள். அதில் இருந்து வெளியேறிய நாற்பத்திரண்டு டன் மெத்தில் ஐசோசையனைடு வாயு தாக்கி ஐந்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்து போனார்கள். இன்றும் அங்கே குழந்தைகள் குறைபாடோடு பிறக்கிறார்கள். விபத்தின் போது ஆலையின் சி.இ,ஒ வாரன் ஆண்டர்சன் அந்த மாநிலத்தின் ஆளுநரின் ஹெலிகாப்டர் உதவியோடு தலைமறைவாகிவிட்டார். அமெரிக்கா அவர் மீது வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்டது, பின் சொற்பத்தொகை ஒன்றை நஷ்டஈடாய் பெற்று அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்தது இந்தியா. அந்த ஆண்டர்சன் சோனியாகாந்தியின் உறவினர் என்று எங்கோ படித்த நினைவு.

இந்த தேசத்துக்கு அணு உலை தேவையா? நமக்கு விபத்து ஏற்படாமல்  தற்காத்துகொள்ளவும் தெரியாது, வந்தபின் தப்பிக்கவும் தெரியாது. செத்த பாம்பை மிதிப்பது போல அண்டர்சன் 2014லில் இறந்த போது அந்த ஆலைக்கு வெளியே அவர் படத்தை வைத்து, அங்கு மிச்சம் இருக்கும் மக்கள் வரிசையில் நின்று நம்ம விஜயகாந்த் அய்யா போல காரித்துப்பி விட்டு வந்தார்களாம். எனக்கு இந்த தகவல்களை எல்லாம் எந்த உள்துறையும், உளவுத்துறையும் தரவில்லை. கூகுளில் chernobyl என்றோ Bhopal disaster என்றோ தட்டுங்கள், அது கொட்டுகொட்டுன்னு கொட்டும். படித்துவிட்டு உண்மையான கம்யுனிஸ்டுகள் அப்புறமும் ரசியா என்ற ஒரே காரணத்துக்காக அணு உலையை ஆதரித்தீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு மைக்கூ
புதைத்து விட்டு, வழிபடும் மரபினர் நாம்
அதனால்தான் கொள்கைகளை புதைத்துவிட்டு
வகுத்தவர்களை வழிபடுகிறோம் !

referance
https://en.wikipedia.org/wiki/Chernobyl_disaster
http://www.world-nuclear.org/info/safety-and-security/safety-of-plants/chernobyl-accident/
http://business-humanrights.org/en/union-carbidedow-lawsuit-re-bhopal

29 கருத்துகள்:

 1. >>> நமக்கு விபத்து ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளவும் தெரியாது., வந்தபின் தப்பித்துக் கொள்ளவும் தெரியாது.<<<

  நிதர்சனமான வார்த்தைகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான், ஆனால் கசப்பான உண்மை. இல்லையா அய்யா :(

   நீக்கு
 2. அணு உலை பற்றிய பதிவு இடவேண்டும் என்று அதற்கான வாசித்தலை செய்து கொண்டிருக்கிறேன் டியர். விபத்துகளின் கோரம் நெஞ்சை அறுப்பது உண்மைதான்.,
  என் கருத்து சற்று மாறுபடுகிறது டியர், பதிவிட்டுச் சொல்கிறேன்.
  திமிங்கலங்கள் ஒதுங்கியதற்கும் பல காரணங்கள் இருக்கலாம்,, அதிலும் அணு உலையை இணைப்பது பார்த்தே நான் பதிவிட நினைத்தேன். சென்சிடிவ் விடயம் என்பதால் தீர வாசித்துப் பிறகே பதிவிடுவேன். போபால் விபத்தும் தவிர்க்கப்பட்டிருக்கலாம், அரசியல் தான் காரணம். அரசியல் சீரானால் நாம் அஞ்சத்தேவையில்லை. ஆனால் அது நடக்குமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரசியல் என்பது தப்பு நடந்தபின் யோசிக்க வேண்டியது. சிபாரிசு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர், அலட்சிய கட்டமைப்பும், மேலாண்மையும். முறையற்ற கழிவு மேலாண்மை இன்னும் எவ்வளவோ இருக்கு. நீங்கள் எப்போதேனும் G.H பக்கம் சென்றிருக்கிறீர்களா டியர்? அந்த கழிப்பறைகளை பயன்படுத்தினாலே வராத நோய் கூட வந்து விடும். கம்பிகளில் வீணாகும் மின்சாரத்தை எழுபது சதவீதத்தில் இருந்து ஐம்பது சதவீதமாகக் குறைத்தாலே பாதி மின்தேவை குறைந்துவிடும். மாற்று மின்சாரம் பற்றி ஒரு பதிவே போடலாம். சரி விடுங்க. இந்த சென்னை மழைக்கு பின்னுமா உங்களுக்கு நம்பிக்கை!!!!! உலக இனைய வரலாற்றில் முதன்முறையாக நாம் எதிரெதிர் துருவத்தில் இருக்கிறோம் டியர் :)

   நீக்கு
  2. தப்பு நடப்பதற்கு முன்னும் யோசித்துச் செயல்பட வேண்டியது என்பது என் கருத்து. G.H போயிருக்கிறேன் டியர், நீங்கள் சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன். நம்பிக்கை இல்லை, ஆனாலும் வேறு ஒரு கோணம்..
   ஹாஹா ஆனாலும் நம் நட்பு புனிதமானது புனிதமானது :-)

   நீக்கு
 3. இந்த தேசத்துக்கு அணு உலை தேவையா? நமக்கு விபத்து ஏற்படாமல் தற்காத்துகொள்ளவும் தெரியாது, வந்தபின் தப்பிக்கவும் தெரியாது.// இதுதான் நிதர்சனமான உண்மை. ஏற்கனவே பொதுச்சுகாதாரத்தைப் புறம்தள்ளி வாழும் நமக்கு, ஏழை பாழைகளைப் பற்றிக் கவலைஇல்லாத நமக்கு, டாஸ்மாக்கைச் செல்வம் கொழிக்கும் இடமாக்கிய நம் அரசிற்கு மக்களுக்கு இதெல்லாமா உரைக்கப் போகின்றது? போதையில செத்தா என்ன, கதிரியக்கத்துல செத்தா என்ன...ஹும்..//அதனால்தான் கொள்கைகளை புதைத்துவிட்டு
  வகுத்தவர்களை வழிபடுகிறோம் !// யெஸ் இதுதான் நாட்டு நடப்பு..சரி கூடங்குளம் என்னாச்சு??!! மூடிட்டாங்களா இல்லை என்னைக்காவது அது கசியப் போகுதா..கோடிக் கோடியா கொட்டினாங்களே

  செம பதிவு சகோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூடங்குளம் சகசோதியா ஒரு முறை இயக்கப்பட்டு விட்டது கீத்து. ஆனா இறந்த டால்பின்களுக்கும் அதுக்கும் ஏதோ தொடர்பு இருக்கா ன்னு நீங்க நினைத்தால், அதுக்கு நான் பொருப்பில்லைப்பா :)))

   நீக்கு
 4. இது சம்மந்தமாக அந்தக் காலத்திலேயே ஒரு பதிவெழுதியாச்சு, மைதிலி. "தேவை இல்லை" என்பதே என் கருத்து. ஆனால் படித்த பலர் இது தேவையானதுனு சொல்றாங்க. It is true, dealing with the radio-chemical waste is something we dont do it right. சாதாரண வேதிக் கழிவுகளையே ஒழுங்காக நம்மளால் டிஸ்போஸ் பண்ணப் படுவதில்லை. இதுபோல் ராடியோ கழிவுகளை கேக்கவே வேணாம்.

  "நான் சொன்னா எவன் கேக்கிறான்? நாந்தேன் என் பேரு கோபால கிருஷ்ணன் னு சொல்லிக்கிட்டு அலையிறேன்" னு 16 வயதினிலே கமல் சொல்வது இப்போ ஞாபகம் வந்துருச்சு எனக்கு :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மெத்தில் ஐசோசயனைடு என தட்டச்சும்போது நினைத்தேன் இந்நேரம் வருணா இருந்தா, அதோட structure எல்லாம் போட்டு தெளிவா விளக்கியிருப்பாரே ன்னு. (பாடம் புரிகிற மாதிரி நடந்துற சந்தோசம் பற்றிய உங்க பதிவு ஒன்று நினைவு வருகிறது) so,நீங்களும் எதிர்கிறீர்கள்.again in same boat. Happy! என்னது கமல் மேற்கோளை வருணா!!!!!!:))))

   நீக்கு
  2. உங்க கெமிஸ்ட்ரி ஆசையை திருப்தி செய்திடலாம்..

   H3C-N=C=0 இதுதான் மெத்தில் ஐசோ சையனேட், மைதிலி. ஃபோப்பால் ட்ராஜெடிக்கு காரணமான விஷ வாயு. தமிழ்ல எழுதுவதைவிட இந்த மூலக்கூறுக்கு "ஸ்ட்ரக்ட்ச்சர்" கொடுப்பது எளிதாத்தான் இருக்கு.

   Things you need to keep in mind, when you are drawing the structure are.. C has a 4 valence . So there must be 4 bonds around C. You should also know in the methyl (CH3) group, there are three hydrogens attached to C forming three bonds to carbon which you dont see it "obvious". N should have 3 bonds around it as it is trivalent. Oxygen should have two bonds around it as it is divalent element.

   So, my structure is correct! :)

   நீக்கு
 5. சமீபத்தில் ஒரு தீபாவளி மலரில் இந்த நிகழ்வு பற்றிப் படித்தேன். இந்தத் தீயை சாதாரணத் தீ என்று நினைத்து (ஆபத்து என்பதை சம்பந்தப் பட்டவர்கள் வெளியில் சொல்லவில்லையாம்) அணைக்கச் சென்ற முதல் குழு வீரர்கள் எப்படி பாதிக்கப் பட்டார்கள் என்பதை அந்தக் குழுவில் இருந்த - அப்போதுதான் மணமாகியிருந்த - வீரரின் மனைவி சொல்வதாக வந்துள்ள, நோபல் பரிசு பெற்ற புத்தகம் பற்றிய கட்டுரை அது. மனம் கலங்கிப் போனது.

  நம் நாட்டிலும் சூரிய சக்தியை, காற்றாலையை முழுமையாக உபயோகப் படுத்திக் கொள்ள முடியும் என்கிற நிலையில் அவற்றை எல்லாம் நாடுவதை விட்டு ஏன் இப்படிச் செய்கிறார்களோ என்று தோன்றும்.
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்ல ஸ்ரீராம் சகா. நான் தீபாவளி மலர் படிக்கவில்லை. அந்த சூரிய மின்சாரத்தில் இந்த அளவு அரசியல்வாதிகள் லாபம் சம்பாதிக்க முடியாதே:(( கருத்துச்சொன்னதுக்கு நன்றி சகோ.

   நீக்கு
 6. ஒவ்வொரு நிகழ்வும் மனதை உலுக்குகின்றன...

  கண்டிப்பா தேவையே இல்லை...

  பதிலளிநீக்கு
 7. இந்தியாவில் நாளுக்கு நாள் Hydro Power Plant மின் உற்பத்தி குறைந்து வருகிறது. Thermal Power Plant க்கு தேவைப்படும் நிலக்கரி இப்போது கிடைப்பது போல் கிடைத்துக்கொண்டே இருக்கப்போவது கிடையாது.
  ஆனால்,Atomic Power Plant மூலம் தடையில்லா மின்சாரம் கிடைக்கும். (பதிவில் ப்ரிப்யட், புகுஷிமா சம்பவங்கள் படிக்க படிக்க மனம் கனக்க வைத்தது).
  அதனால் நமக்கு அணு உலை தேவை இல்லை என்பதே என்அது கருத்தும் மேடம்.

  ஆனால் மாற்று மின்சாரம் இயற்கைக்கும்-யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் தொடர்ச்சியாக மின்சாரத்தை கொடுக்கும்
  சூரிய ஒளி மின்சாரம்தான் நமக்கான ஒரே மின் சக்தி என்பதை உணர்ந்த மோடி அரசு மிகப் பெரிய அளவில் project செயல்படுத்தி வருகிறது.
  உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் எவ்வளவு தூரம் வெற்றி பெறும்
  என்பதில் சந்தேகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிரேசுக்கு சொன்னதே தான் சகோ. எவ்வளவு வாய்ப்பு இருக்கு. ஆனால் தலைவர்களுக்குத்தான் மனம் இல்லை.

   நீக்கு
 8. அணு உலைகள் குறித்து தவறான புரிதல் கொண்டு ஆதரித்து சில பதிவுகள் ஆரம்பகாலத்தில் எழுதினேன்( பகிர்ந்தேன்) உண்மை நிலை அறிந்ததும் விதிர்விதித்து போனேன். போபால் விஷவாயு சம்பவம் நடந்தபோது பள்ளிச்சிறுவனாக இருந்தேன். அப்போதைய செய்திதாள்கள் இதைப்பற்றி விரிவாக எழுதின. அதே சமயத்தில் எங்கள் ஊர் அருகே ஓர் ஆலையிலும் விஷவாயு கசிந்து சிலர் மரணித்தார்கள். கோரமான நாட்கள் அவை. வேண்டாம் இந்த உயிரோடுவிளையாடும் அணு உலைகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதோ இப்போது இயங்கத் தொடங்கிவிட்டனவே சுரேஷ் சார் :((

   நீக்கு
 9. கூடுதல் தகவலுக்கு
  எஸ்.ரா வின் உரை
  rtsp://r6---sn-a5m7zu7z.googlevideo.com/Ck0LENy73wIaRAmHYHcxghTDqxMYDSANFC1TnZ5WMOCoAUIJbXYtZ29vZ2xlSARSBXdhdGNoYPKltcbUq5vPVooBC0FXeFdLbklLMVU4DA==/D5ED3184944A3E3B4B6CA6556179B00BAD55D22E.C8692E3BF072DCFFD5917F2D8F7C9388D5F99ADE/yt6/1/video.3gp

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் காம்ரேட் என்று நினைத்தேன். கருத்து ஏதும் சொல்லவில்லையே சகோ.

   நீக்கு
 10. நல்ல கட்டுரை! ஆனால், இதில் ஏதாவது ஒரே ஒரு விதயமாவது பொதுவுடைமையாளர்களுக்குத் தெரியாமல் இருக்கும் என நினைக்கிறீர்களா சகோ!

  மெத்தப் படித்தவர்கள் அவர்கள்! உலகத்தின் அரசியல் - பொருளியல் - சமூக வரலாறுகளைக் கரைத்துக் குடித்தவர்கள் அவர்கள்! இந்த வரலாறு, அதுவும் இரசிய வரலாறு அவர்களுக்குத் தெரியாததா என்ன? ஆனால், அவர்களுக்கு அது பற்றியெல்லாம் கவலையில்லை. அறிவியலோ ஆறாம் அறிவோ எது குறுக்கே விழுந்து தடுத்தாலும் சரி, இரசியமும் சீனமும் சொன்னால் அவர்கள் எதையும் தாண்டிச் செல்வார்கள்.

  பொதுவுடைமையாளர்களிடம் எனக்கும் மதிப்பு உண்டு. அவர்களுடைய நேர்மைக்காகவும் வாய்மைக்காகவும். ஆனால், அரசியலில் இருக்க அது மட்டும் போதாது. உண்மையான அரசியல் கட்சி என்பது முதலில் தன் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருத்தல் வேண்டும்! தன் மக்களின் மனக்குரலாக அது முழங்க வேண்டும்! அல்லது, தன் மக்களின் நிலைப்பாட்டுக்கு எதிரானதாக இருந்தாலும் மக்களின் நன்மைக்கானதாக அதன் நிலைப்பாடுகளும் முடிவுகளும் அமைய வேண்டும்! அதை விட்டுவிட்டு எங்கோ இருக்கும் இரசியமும் சீனமும் எடுக்கும் நிலைப்பாடுகளையும் முடிவுகளையும் உலகின் வேறு ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு அப்படிக்கு அப்படியே நகலெடுப்பதற்குப் பெயர் பொதுவுடைமையும் இல்லை, அறிவுடைமையும் இல்லை! மொத்தத்தில் இங்கு இருப்பவை பொதுவுடைமைக் கட்சிகளும் இல்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்தின் இறுதி வரிகள் தான் நானும் சந்தேகத்தோடு நினைத்துக்கொண்டே இருந்தேன். நீங்க விளக்கிடீங்க:)

   நீக்கு
 11. சிறப்பான விழிப்புணர்வுப் பகிர்வு

  பதிலளிநீக்கு
 12. //இந்த தேசத்துக்கு அணு உலை தேவையா? நமக்கு விபத்து ஏற்படாமல் தற்காத்துகொள்ளவும் தெரியாது, வந்தபின் தப்பிக்கவும் தெரியாது//
  மிக சரி அலட்சியம் நம் ரத்தத்தில் ஊறியுள்ள ஒன்று.நமக்கு இது வாகானது அல்ல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா அண்ணா, ஆனால் இப்போ மறுபடி இயங்கத் தொடங்கிடுச்சே:((

   நீக்கு