வெள்ளி, 31 ஜனவரி, 2014

அதீதத்தை ருசித்தவள்.

                    தோழி வனிதாவிற்கு திருமணம்.என் எவர் கிரீன் சாய்ஸ் அறிவுமதியின் "மழைப்பேச்சு"புத்தகம் தான். கொஞ்சம் ரசனைக்கார தோழிகள் என்றால் திருமணநாள் பரிசுக்காக நான் குழப்பி  கொள்வதில்லை. புத்தகம் கலர் தாளில் சுற்றப்படும் வரை கண்ணை புத்தகக்கடைக்குள் சுற்றவிட்டேன் விளைவு.கஸ்தூரி பர்ஸுக்கு  நூத்தம்பது ரூபா வேட்டு.2011 ஆண்டு விகடன் விருது பெற்ற மனுஷ்யபுத்திரன் "அதீதத்தின் ருசி "இப்போ இது  தான் என் பெட் டைம் டேல். என்ன ஒரு நகைமுரண் என்றால் பல நேரம் என் தூக்கத்தை இது களவாடி விடுகிறது!?  

                       பொதுவாக நான் கவிதை தொகுப்புகளை நாடுவதில்லை.அதற்கு ரெண்டு  காரணங்கள்.ஒன்றுபக்கவிளைவு - என்னையறியாமல் அதன் சாயல் என் கவிதைக்கு வந்து விடும் .ரெண்டு பின்விளைவு- எல்லா சந்தர்ப்பத்திலும் என்  சொற்கள் தொலைந்து போய், படித்த வரிகளே மனக்கண்ணில் வரும்.ஆனால் இந்த புத்தகத்தை புரட்டிய நொடியில் இழுத்துக்கொள்ள தொடங்கின வரிகள்.ஒப்பனைகள் இல்லை .உயர்ந்த தமிழ் நடையில்லை.மேதமை இல்லை.மெய் வருத்தங்கள் மட்டுமே ஒரு தொகுப்பாய்.
                        மனுஷின் டைரியை ஒரு தோழியாய் எனக்கு படிக்க கொடுத்துவிட்டரோ என்பது போல் பாசாங்கில்லாமல் விரிகிறது கவிதை. ஷேக்ஸ்பியரின்  "Midsummer night's dream"நினைவுக்கு வருகிறது. உக்கிரமான கோடையின் பின் இரவாய் மனதுக்குள் புழுக்கம் ஏற்பட்டு விடுகிறது.
வலி நிவாரணி என்றொரு கவிதை

உன்னிடம் நான் கேட்பதெல்லாம்
ஆறுதலோ
மன்னிப்பு வேண்டுதலோ
அல்ல
அவை என்னை ஒருபோதும்
வந்து சேர்வதே இல்லை

அடுத்த முறை
அடிக்கும்போதும்
இதே இடத்தில்
இதே அளவில்
இதே காயத்தை
ஏற்படுத்தினால் நல்லது

பழகிக்கொண்டுவிடுவேன்.
              சமகால நிகழ்வாக ஈழம் குறித்த கவிதைகள் குறிஈட்டு கவிதைகளாக கொடுக்க பட்டிருக்கிறது.கவிஞரை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனாலும் படைப்பாளியையும் படைப்பையும் ஏன் குழப்பிக்கொள்ளவேண்டும்?இந்த கவிதைகளை படிக்கும் எவரும் இந்த தொகுப்பில் ஏதேனும் ஓரிடத்தில் தன்னையே பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது.
சம்மதம் என்று சொல்.
கடைசியில் வருத்தமே மிஞ்சியது.
என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
கைவிடப்பட்ட இடம்.
என  என்பது ஐந்து கவிதைகள் எதார்த்தமான தலைப்புகளோடு.

 சொல்லவேண்டிய நேரத்தில்
 சொல்லமுடியாமல் போனவை
 சொல்லப்பட்ட எதையும் விட
 பிரகாசமாகிக்கொண்டே இருக்கிறது
 என்று முடிகிறது "சொல்லதவறியவை"என்றொரு கவிதை

அது கண்டெடுக்கிறது
உனக்கே தெரியாத
உன் ரகசியங்களை
என முடியும் "விரோதத்தின் முள்"கவிதை படித்து முடித்தபின் உறுத்திக்கொண்டே இருக்கிறது கவிதையின் முள்.

"முன்னுரைக்கு பதிலாக" எனும் கவிதையில்
ஒருபோதும் அறியவே இல்லை
இந்தக்கவிதைகளை எழுதுகிறவன்
ஒரு கவிஞனே அல்ல
ஒரு மகத்தான நடிகன் என்பதை

என்று கண்ணதாசன் போல் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் வேறு தருகிறார் மனுஷ்.கோடையை உங்களால்  ரசிக்கமுடியுமெனில்,கண்ணீரின் கரிப்பை ருசிக்கமுடியுமெனில்,
The lunatic, the lover, and the poet
 Are of imagination all compact.
(மனநிலை பாதிக்கப்பட்டவர் ,காதலில் இருப்பவர்,கவிஞர் மூவரின் சிந்தனையும் ஒன்று போலவே இருக்கும் )என  ஷேக்ஸ்பியர் "Midsummer night's dream"நாடகத்தில் பாடிய வரிகளில் உங்களுக்கும் சம்மதமெனில் .இந்த மூன்று பேரில் அல்லது என்னை போல் மூன்றுமாகவே இருப்பவர்கள் எனில் இந்த தொகுப்பை நீங்களும் ரசிக்க கூடும்.அதீதத்தின் ருசிhangoverதீரட்டும்.
அடுத்து கவிதையில் சந்திக்கிறேன்.
    

26 கருத்துகள்:

 1. அருமையாகப் புத்தகம் பற்றி சொல்லிவிட்டீர்கள் தோழி! எனக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்..
  .நன்றி

  பதிலளிநீக்கு
 2. “கவிஞரை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனாலும் படைப்பாளியையும் படைப்பையும் ஏன் குழப்பிக்கொள்ளவேண்டும்?” என்று நீ சொல்லியிருப்பது சரிதானா? உன் பாணியில் சொல்வதானால், ''DO WHAT I SAY BUT DONT WHAT I DID'' என்பது சரிதானா? யோசிக்கவும். மற்றபடி
  “இந்த கவிதைகளை படிக்கும் எவரும் இந்த தொகுப்பில் ஏதேனும் ஓரிடத்தில் தன்னையே பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது” என்பதில் எனக்கும் உடன்பாடே! இவரது முதல் கவிதைத் தொகுப்பு படித்திருக்கிறாயா? தலைப்பே விவகாரமா யிருக்கும். குட்டி ரேவதியின் தொகுப்புப் போல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணா தனி மனிதனின் கருத்து முரண்பாட்டின் காரணமாக அவர் படைப்பிற்கு உரிய அங்கிகாரத்தை தராமல் போகக்கூடாது என்கிற கருத்தில் சொல்லவந்தேன்.பார்பனியத்தை எதிர்க்கும் பலரும் கமலையும்,சுஜாதாவையும் ரசிக்காமல இருக்கிறார்கள்? எனும் நோக்கில் சொல்லவந்தேன்.கவிதை ஒரு குழந்தை போலவும் அதன் படைப்பாளி ஒரு பெற்றோர் எனும் போது.நம் ஊரில் சொல்வது போல் பாலை பார்க்காமல் பால் பானையை ஏன் பார்க்கவேண்டும் என்றே கருதி அவ்வாறு சொன்னேன்.என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றொரு கவிதை எப்பேர்பட்ட உதவியை செய்தவர்களையும் நாம் எப்படி பயன்படுத்திக்கொண்டோம் என்று விவரித்திருப்பார். அவர் தவறுகளை ஞாயப்படுத்த முயலவில்லை இந்த கவிதைகளில் ஒரு craziness இருக்கிறது. அது தங்களை போன்ற தீவிர வாசிப்பாளர்களுக்கும்,நெறியாளர்களுக்கும் பிடிக்காது தான். நான் ஓடாத படத்தையே அது ஏன் ஓடலைனு தெரிஞ்சுக்க பொருமையா பார்க்கிற டைப் மற்றபடி, தவறாக சொல்லிருந்தால் மன்னிக்கவும்.

   நீக்கு
 3. அன்பு சகோதரிக்கு வணக்கம்
  நலம் தானே? என்ன ஒரு எழுத்து நடை! மேகக்கூட்டங்களைக் கிழித்துக்கொண்டு மின்னல் கீற்று பளிச்சென்று நம் கண்களில் படுமே அதே பிரகாசம் தங்கள் எழுத்தில் கண்டேன் (புகழ்ச்சியில்லை உண்மை). கவிதை நூலின் ஈர்ப்பும் தங்களின் ரசிப்பும் பதிவில் பளிச்சிடுகிறது. அருமையான பகிர்வு நன்றி சகோதரி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ,வாயால பொழைக்கிற தொழிலுக்கு வந்துட்டோம்.அப்புறம் பேசத்தானே வேண்டும்.கருத்திட்டமைக்கு நன்றி.நாங்கள் நலம் நம் வீட்டில் எல்லோரும் நலம் தானே ?

   நீக்கு
 4. என்னடா புதிய பதிவாக இருக்கிறேதே என்று ஒடோடி ஆசையோடு படிக்க வந்த என்னை ஏமாத்திவீட்டிங்க. என் மனைவியிடம் கூட அடிவாங்கி உயிர் வாழ்ந்துடலாம் ஆனால் இப்படி கவிதையால் அடிக்கும் அடிதான் என்னால் தாங்க முடியலைடா சாமி,, நீங்க சொந்த கவிதை எழுதி இருந்தால் அந்த முயற்சிக்காக பாராட்டலாம் . எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரமுங்க... சரி உங்க பதிவை படித்திட்டோம் ஆனால் கருத்து போடாமல் போக மனமில்லாததால் இந்த கருத்தை போட்டுள்ளேன் அதில் தவறு ஏதும் இருந்தால் மன்னிக்கவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா ,இந்தமுறையும் சொதபிடுச்சா?விடுங்க ப்ரோ இங்க பெரும்பாலும் கவிதை எனும் பெயரிலான சரக்குகள் தான் இருக்கு.அடுத்த முறை வரும்போது (!?)மனதை திடபடுத்திகிட்டே வாங்க.வருகைக்கும், கருத்திட்டமைக்கும் நன்றி!

   நீக்கு
 5. நானும் அந்தத் தொகுப்பைப்
  படித்து மிக மகிழ்ந்துள்ளேன்
  இத்தனை அருமையாக என்னால்
  நிச்சயம் மதிப்புரை செய்ய முடியாது
  அருமை அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சார்,இதனை உங்கள் பெருந்தன்மை என்றே கருதுவேன்.கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!

   நீக்கு
 6. சொதப்பெல்லாம் இல்லைங்க....நீங்க நல்லாதான் எழுதி இருக்கீங்க. சிலருக்கு சில ஏரியா பிடிக்கும் பிடிக்காது. அட்லீஸ்ட் நீங்கள் எழுதி இருந்தீங்கன்னா அந்த முயற்சியை பாராட்டி இருக்கலாம் என்பதுதான் நான் சொல்ல வருவது... உங்களுக்கு என்னபிடிகிறதோ அதை நீங்கள் இங்கே எழுதுங்கள் என்னை மாதிரி கருத்து சொல்லுபவர்களை கருத்தில் கொள்ள வேண்டாம் எனக்கு கவிதை பிடிக்கவில்லை என்பேன் இனொருத்தர் அரசியல் பிடிக்கவில்லை என்பார் மற்றொருவர் நகைச்சுவை பிடிக்காது என்பார் இப்படி ஒவ்வொருத்தரின் கருத்துக்கு மதிப்பு அளித்தால் கடைசியில் உங்கள் கருத்தை சொல்ல இடமே இருக்காது. இது உங்கள் தளம் உங்கள் எண்ணம் உங்கள் எழுத்து என்று மட்டுமே இருக்கட்டும். இதை எதற்கு சொல்லுகிறேன் என்றால் நான் அப்படிதான் என் தளத்திலும் செய்கிறேன்.அதனால்தான் இன்றும் என் தளம் பல பேரால் பார்க்கப்படுகிறது வாசிக்கபடுகிறது... என்ன டீச்சர் நான் ரொம்பவே உங்களுக்கு பாடம் எடுத்து அறுத்துவிட்டேனோ? ஸாரிங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இத்தனை பயனுள்ள டிப்ஸ். அதுவும் ஒரு பிரபல பிளாக்கர் நமக்காக நேரம் ஒதுக்கி வழிகாட்டும் போது அதை அறுவைஎன்ற நினைப்பேன்?Thanks a lot 4 ur concern bro.

   நீக்கு
 7. நல்லதொரு அறிமுகம்... அருமையான பரிசு தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஆதி ,எப்படியிருகிறீர்கள்?குட்டீஸ் நலமா ?

   நீக்கு
 8. அழகிய நடையில் நல்லதொரு கவிதை நூலின் அறிமுகம்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 9. உங்கள் எழுத்து நடை பின்னுகின்றது! ஓ ஸாரி "பின்னவில்லை"நன்றாக இருக்கின்றது! இப்பலாம் பினிட்டீங்க போங்க அப்படினு பேசி பழகி விட்டதா....அதாங்க.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ..........
   நன்றி சார் தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும்!!

   நீக்கு
 10. பதில்கள்
  1. நன்றி டீச்சர் தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

   நீக்கு
 11. இவருடைய புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். பொதுவாக நான் எனக்கு பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்களை தான் நான் வாங்குவேன். மற்ற எழுத்தாளர்களின் படைப்பை வாங்கி, அது நமக்கு பிடிக்க வில்லை என்றால் எண்ணப் பண்ணுவது என்ற பயம் தான்.

  இவருடைய இந்த புத்தகத்தை நல்ல அறிமுகம் செய்து விட்டீர்கள். இந்தியா வரும்போது, இந்த புத்தகம் வாங்கிக்கொண்டு போகமுடியுமா என்று பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு முறைக்கு ரெண்டு முறை யோசித்துவிட்டு வாங்குங்கள்! தங்கள் வருகை சிறக்க வாழ்த்துக்கள் சகோ!

   நீக்கு
 12. \\பொதுவாக நான் கவிதை தொகுப்புகளை நாடுவதில்லை.அதற்கு ரெண்டு காரணங்கள்.ஒன்றுபக்கவிளைவு - என்னையறியாமல் அதன் சாயல் என் கவிதைக்கு வந்து விடும் .ரெண்டு பின்விளைவு- எல்லா சந்தர்ப்பத்திலும் என் சொற்கள் தொலைந்து போய், படித்த வரிகளே மனக்கண்ணில் வரும்.\\

  இந்த எண்ணமெழுந்த ஒரு நாளில் எனக்குள் ஓர் கவிதை உருவானது. ஒத்த எண்ணத்தை எண்ணி மகிழ்வும் வியப்பும்.

  மதிப்புரையை சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் மைதிலி. கடைசி பத்தி மதிப்புரைக்கு ஒரு மகுடம். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா வேவ் லெங்க்த் ஒத்துபோகுதே !
   mythily happy madam
   தங்கள் அளிக்கும் உற்சாகத்திற்கு நன்றி மேடம் !

   நீக்கு
 13. வணக்கம் தோழி.!
  பொதுவாக நான் கவிதை தொகுப்புகளை நாடுவதில்லை.அதற்கு ரெண்டு காரணங்கள்.ஒன்றுபக்கவிளைவு - என்னையறியாமல் அதன் சாயல் என் கவிதைக்கு வந்து விடும். உண்மை தான் நானும் அப்படி நினைப்பதுண்டு. தூக்கத்தை களவாடி விடுகிறதா அப்போ யோசிக்க வேண்டிய விடயம் தான்.
  படிக்கத் தூண்டும் வகையில் அழகிய நடையில் அமைந்தது விமர்சனம்.
  நன்றி தொடரவாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
 14. நல்லதொரு அறிமுகம். படிக்க முயல்கிறேன்.

  பதிலளிநீக்கு