வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

விட்டுவிடு நான் வீழ்ந்துவிட்டேன்..............பாகம் 1
சொற்களைத் துடைத்துவிட்டு
மௌனம் பூட்டிக் கொண்ட என் தனிமைகளில்
கள்ளச்சாவிஎன உன் நினைவுகள்....இழுத்துச்சென்ற பின் இரக்கமின்றி
கரைக்கத்தொடங்கும் உன் நினைவலைகளில்
தப்பிப்பிழைக்க வழிதெரியாது தத்தளிக்கிறேன் நான் !!

என் சொற்களைத் தேடுகின்றேன்
உன் கற்பனைக்காட்டுக்குள் -அவை
விரும்பியே சிறையிருக்கின்றன

போ என்கிறாய் நீ_அதை பொய்யென்றும்
உன் நினைவுகள் மட்டுமே மெய்யென்றும்
என்னையே நம்பவைத்து விடுகிறது என் மனம்.....

வெற்றுத் தூரிகையாய் கத்தும் என் மௌனங்கள்
உன் செவிப்ப(பா)றை மோதி
சிதிலமைடைகின்றன......

உன் காலடி சேரும் வழியற்று
கசங்கிக் கிடக்கின்றன நான் கொய்யாத
நீ சூடாத என் மலர்கள்......

உன் நினைவெனும் புதைகுழியில்
சிக்கிய என்னை மீட்க
பரிவோடு நீட்டுகிறாய் ஒரு புன்னகையை
 
பற்றிக்கரைசேரும் முன்
படுத்துகிறதுன் விழியசைவும்
பாடிடும் உன் கொலுசுகளும்

ஆயுதம் தொலைத்து, ஆகவும் கலைத்து
மிஞ்சிய வலுதிரட்டி வெள்ளை கொடி அசைக்கிறேன்
விட்டு விடு நான் வீழ்ந்துவிட்டேன்..............

பி.கு
விஜு அண்ணா எழுதிய விட்டுவிடு நான் வீழ்ந்துவிட்டேன் எனும் சந்தகவி தொடரை படிமக்கவிதைகள் ஆக்கும் என் முயற்சி இது. படித்துவிட்டு தொடரலாமா என்பதை விஜு அண்ணாவும், நண்பர்களும் தான் சொல்லவேண்டும்....

24 கருத்துகள்:

 1. தொடரலாமே/நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. நிலைவலைகளில் - நினைவலைகளில், வளுதிரட்டி - வலுதிரட்டி இப்படி வந்திருக்கணும் மைதிலிம்மா. மத்தபடி கவிதா ரசனைலயோ, வார்த்தைகளைக் கையாண்ட விதத்துலேயோ குறை இல்ல. சூப்பர்ன்னுதான் சொல்லணும். நிச்சயம் இதை நீ தொடரணும் சிஸ்.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  அழகான மொழி நடையில் கவிதை ஆலவட்டம் காட்டுது... பகிர்வுக்கு நன்றி
  த.ம2வது வாக்கு

  என்பக்கம்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. அன்புச் சகோதரி,
  வணக்கமும் வாழ்த்தும்!
  முதலில் எனது சந்தக்கவித் தொடரைப் படிமமாக்கும் முயற்சியிது என்று நீங்கள் குறிப்பிட வேண்டியதில்லை. ஒரு படைப்பைப் படித்தபின் நமக்குள் அது ஏற்படுத்தும் தாக்கம், அதன் தொடர்ச்சியான படைப்புகள் “மறுவுருவாக்கம் ” எனப்பட வேண்டியதில்லை. அவை தனித்த ஆக்கங்களே! கம்பருக்கு முன்பே இராமாயணம் தமிழில் இருந்திருக்கிறது. அதனுடைய பாதிப்பு கம்பனில் இருக்கிறது.( நிறுவச் சான்றுண்டு) முந்தைய காப்பியமான சீவக சிந்தாமணியின் பாதிப்பும் கம்பனின் படைப்பில் உண்டு. ( “சிந்தாமணிக் கடலில் சிறிது மொண்டு கொண்டேன்“ எனக் கம்பன் கூறியதாக மரபுண்டு) அதற்காகக் கம்ப ராமாயணம் இவற்றின் மறுவுருவாக்கம் என்றோ, அதன் சாயலுடைய தென்றோ கூறப்படுவதில்லை. இன்னும் சொல்லப் போனால், கம்பருக்கு முந்தைய இராமாயணங்கள் கம்பன் காவியம் எழுந்த பின் அதன் முன் நிற்க முடியாமல் அழிந்தே போயின. சீவகசிந்தாமணியோ கம்பராமாயணம் அளவிற்கு இன்று கவனம் பெறவில்லை. என் பாடல்களோடு உங்கள் கவிதைகளுக்கான ஒப்பீட்டை இவ்வளவாய்க் காண்கிறேன் நான். கவனிக்க ! பாடல்களுக்கும் கவிதைகளுக்கும் வேறுபாடுள்ளது.
  அடுத்து உங்களின் கவிதைகள்.
  படிமங்கள் வார்த்தைகளின் பொருளைக் கட்டுடைத்து அதன் வெளியை விசாலப்படுத்த, வாசகரின் மனப்பாங்கிற்கேற்ற வெவ்வேறு அனுபவத்தை அவர்களுக்கு அளிக்க அமைக்கப் படுகின்றன எனக் கருதுகிறேன். இது என் கருத்துத் தான். மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். உரைநடைக்கும் கவிதைக்குமான பெரு வேறுபாடு படிமத்தில் நிகழ்கிறது. மரபிலக்கியங்களில் உவமை உள்ளுறை இறைச்சி எனப்படுவது போன்றதே புதுக் கவிதைகளில் படிமமும்! மரபுக்கவிதைகளில் இவை இல்லாத போதும் அவற்றை ஓசை காப்பாற்றி விடுகிறது. புதுக் கவிதைகளுக்குப் படிமம் அத்தியாவசியமாய் இருக்கிறது.
  தங்களின் கவிதைகள் கவிதைகளாய் இருக்கின்றன.
  சில வரிகளில் பொட்டில் அறையும் நிதர்சனம்,
  “உருகி உடல் கருகி உள்ளீரல் பற்றி
  எரிவது அவியாது என்செய்வேன்?“
  என அம்பிகாபதி பாடுவானே அது மாதிரி......!
  சில வரிகளில் “ நான் கலந்து பாடும்“ அனுபவம் எனக்குச் சாத்தியப்பட்டது.
  உங்களுடைய நடையும் கவிதையும் என் அனுபவத்தின் உச்சம் தொடுகின்றன. என் நினைவில் பதிந்து கிடக்கும் எனக்குப் பிடித்த பாடல்களின்,
  இலக்கண நூற்பாக்களின் தொகையோடு உங்களின் கவிதையையும் சேர்த்துவிட்டேன். வீழ்ந்துவிடாமல் அவை இனி என்றும் நினைவிருக்கும்.
  விட்டுவிடாமல் தொடருங்கள்! பாராட்டுக்கள்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 5. ”ஆயுதம் தொலைத்து, ஆகவும் கலைத்து
  மிஞ்சிய வளுதிரட்டி வெள்ளை கோடி அசைக்கிறேன்
  விட்டு விடு நான் வீழ்ந்துவிட்டேன்”..............நல்ல முயற்சி...தொடருங்கள் மா

  பதிலளிநீக்கு
 6. இதில் எங்கள் கருத்தை விட 'மூலவரின் 'கருத்துதான் முக்கியம் !
  த ம 3

  பதிலளிநீக்கு
 7. ஆஹா! அற்புதம் சகோதரி! தொடருங்கள்! விஜு அவர்கள் ஐயோ! செந்தமிழில் பின்னுகின்றவர்....அவரது பின்னலைப் பிரித்துப் பிரித்து படிக்கும் அனுபவம் சுவையானது....மொழியும், உணர்வும் சேர்ந்து கதகளி ஆடும்......அதைத் தாங்கள் எங்களைப் போன்ற பாமரர்கள் புரியும் படி எளிதாகப் பிரித்து...கோனார் கைடாக இருந்தால் நல்லது தானே!

  விஜு அவர்களே அதற்காக உங்கள் பதிவுகளைப் படிக்காமல் இருக்க மாட்டோம்....டீச்சர் இவங்க கோனார் மாதிரி க்ளாஸ் எடுக்கும்போது ஈசிதானே....ஹஹாஹஹ்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோனார் கைடாக இதைக் கருதவில்லை ஆசானே!
   என் தமிழாசிரியரால் அதை வைத்திருந்ததற்காகத் தண்டிக்கப்பட்டிருக்கிறேன்.
   ஏதேனும் ஒரு விஷயம் நம்மைப் பாதித்திருந்தால் அதை எழுதுகிறோம் தானே! அதைப் போலத்தான் சகோதரியின் இக் கவிதைகளைக் காண்கிறேன். பாதித்த விஷயங்களல்ல. படைப்பின் கனமே பேசப்பட வேண்டும். சந்தங்கள் பாடல்கள் என்பன மொழியின் நான்கு சொற்களை அதிகம் தெரிந்து வைத்திருக்கும் யாருக்கும் சாத்தியப்படும் என நான் நினைக்கிறேன்.
   ஆனால் கவிதை அதனின் வேறானது. அதன் சுவை சொற்களின் ஓசைகளில் மட்டும் கட்டுண்டிருப்பதல்ல.
   என்னால் முடியாததை சகோதரி சாதித்திருக்கிறார் என்று சொல்வேன்.
   நன்றிகள்!

   நீக்கு
 8. படிமக்கவிதைகள் என்றால் என்ன சகோ?

  எனக்கே இந்த கவிதை புரியுதே அதனால நீங்க தைரியமாக தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 9. ஆஹா ஆஹா இப்படி எல்லாம் கூட எழுதமுடியுமா அம்முக் குட்டி பல பல தடவை வாசித்து மகிழ்ந்தேன்.
  ”ஆயுதம் தொலைத்து, ஆகவும் கலைத்து
  மிஞ்சிய வளுதிரட்டி வெள்ளை கோடி அசைக்கிறேன் இது மட்டும் இந்த மரமண்டைக்கு புரியவில்லையம்மா சகோ சொக்கன் அவர்களது கேள்வி எனக்கும் உண்டு. டீச்சர் அம்மா தான் புரியவைக்கணும்.
  எனக்கு அம்முக் குட்டி உங்க முகத்தை சுத்தி என் தலையில சொடக்கு போடணும் போல இருக்குடா. தொடருங்கள் தொடருங்கள் வாழ்த்துக்கள் அம்மு ....!

  பதிலளிநீக்கு
 10. கவிதை படிக்க நன்றாக உள்ளது. ஆனால் பெரியவங்க இங்கே சந்தகவி படிமக்கவிதை என்று ஏதேதோ பேசுறீங்க. அதுதான் புரிய மாட்டீங்குது...

  பதிலளிநீக்கு
 11. ****இங்கே சந்தகவி படிமக்கவிதை என்று ஏதேதோ பேசுறீங்க. அதுதான் புரிய மாட்டீங்குது...****

  தல: உங்ககிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சது உங்க நேர்மைதான். புரியாததை புரியலைனு எத்தனை பேரு சொல்றாங்க? விக்கிலபோயி தேடி தெரிந்துகொண்டு எப்போவுமே தெரிந்ததா நடிப்பதுதான் உலகம்! உங்க மிகுந்த தன்னம்பிக்கைதான் உங்களை இந்தளவுக்கு நேர்மையுடன் உங்க கருத்தைச் சொல்ல வைக்கிறது. உங்க நேர்மையால் மதுரைக்கும் பெருமைதான் (சீரியஸா சொல்றேன். சிரிச்சு அர்த்தத்தை மாத்திடாதீங்கப்பா)!
  -------------------------

  ***ஆயுதம் தொலைத்து, ஆகவும் கலைத்து
  மிஞ்சிய வலுதிரட்டி வெள்ளை கொடி அசைக்கிறேன் ***

  எழுத்துப் பிழையை கண்டுபிடிச்சு எனக்கும் தமிழ்ப் புலமை இருக்குனு நடிக்கலாம்னு வந்தால், மைதிலி அதை சரி செய்துவிட்டாங்க! :( இப்போ என்ன செய்றது? :))

  ----------------------

  மொதல்ல, இது ஒரு கவிஞையுடைய படைப்பு என்பதால், அடடா ஒரு பெண் வீழ்ந்துவிட்டாளா?னு யோசிச்சேன்.

  அப்புறம்தான் புரிகிறது விழ்ந்தது ஒரு ஆண் என்று. வீழ்வது ஆண், வீழ்த்துவது பெண் என்பதுதானே காதலில் என்றும் உண்மை?

  கண்ணதாசன் பல கவிதைகளில் பெண்களின் உணர்வுகளையும் அழகா வெளிப்படுத்தி இருப்பார்.
  இங்கே மைதிலி, ஒரு ஆணின் வீழ்ச்சியை அழகாக சொல்லியிருக்காங்க. என்னைப் பொறுத்தவரையில் அதுதான் இக்கவிதையின் சிறப்பு! ஆணின் உணர்வுகளை பெண்களும், பெண் உணர்வுகளை ஆண்களும் புரிந்துகொண்டால் நம் பிரச்சினைகளைத் தீர்க்க கடவுளெல்லாம் எதுக்கு?
  (இந்தக் கடவுளை நிம்மதியா இருக்க விடமாட்டானே இந்த பாழாப்போன வருண்!!! :) )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருண்! மதுரைத் தமிழனைப் போலவே நீங்களும் சரியாய் சொல்லி இருக்கிறீர்கள்.
   கவிதையை நன்றாகவே ரசித்திருக்கிறீர்கள்

   //நீ சூடாத என் மலர்கள்....//..
   // உன் கொலுசுகளும்//
   இந்த வார்த்தைகள் வீழ்ந்தது ஆண் என்பதை சொல்லி விடுகிறது.இதை தவிர்த்து விட்டுப் பார்த்தால் கவிதை இருபாலருக்கும் பொருந்துவதாகவே அமையும்
   பெண்கள் கவிதை எழுதினாலும் ஆண்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவே எழுதுகிறார்கள்.
   மைதிலி நல்ல கவிஞர்

   நீக்கு
 12. பிறகென்ன ,மூலவரே அருள்பாளித்துவிட்டார் , உற்சவ மூர்த்தியாய் தொடருங்கள் ,ரசிக்கிறோம் !

  பதிலளிநீக்கு
 13. சிறந்த பாவரிகள்
  தொடருங்கள்

  படியுங்கள் இணையுங்கள்
  தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
  http://eluththugal.blogspot.com/2014/08/2014.html

  பதிலளிநீக்கு
 14. படிமக் கவிதைக்கும் ஏதாவது இலக்கணம் இருக்கிறதோ ... புதியவனுக்கு விளக்கம் கொடுக்கலாம் தானே..

  கவிதை நல்ல இருக்கு .. நிச்சயம் தொடருங்கள்..

  பதிலளிநீக்கு
 15. பாடிடும் என் கொலுசுகளும் என்ற தொடர் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. நன்றி.

  பதிலளிநீக்கு
 16. அன்புத் தோழி!...

  அசலே இரண்டும்! அளவுகோல் இங்கேன்?
  வசமாக்கிற் றேதான் வளைத்து!

  உங்கள் கவித்துவங் காட்டும் நயம்.. அப்பப்பா
  சொல்ல ஏது வார்த்தை! சிறப்பு!

  தொடருங்கள் மேலும்!...
  வாழ்த்துக்கள் தோழி!

  பதிலளிநீக்கு
 17. உங்கள் பாணியினாலான கவிதைப்படிமங்கள் ரசிக்கவைக்கின்றன மைதிலி. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள். ரசிக்கக் காத்திருக்கிறோம். ஊமைக்கனவுகள் குறிப்பிடுவது போல் அவருடைய சந்தகவித்தொடரை படிமக்கவிதையாக்கும் முயற்சி என்பதை விடவும் அவற்றால் எழுந்த தாக்கம் என்று சொல்வதுதான் சரியெனப் படுகிறது எனக்கும்.

  பதிலளிநீக்கு
 18. விஜூ அவர்களின் கவிதையையும் படித்தேன். அருமையான சந்தக் கவிதை .
  அவரது கவிதையின் பொருளை உள்வாங்கிக் கொண்டு புதுக் கவிதையில் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். அதில் முதல் மூன்று பாடல்களின் சாரம் மட்டுமே இக் கவிதையில் உள்ளது. விஜூ அவர்கள் சொன்னது போல இது தனிப் படைப்பாகவே தெரிகிறது அந்தக் கவிதையின் மறு உருவாக்கம் என்பதை இரண்டு கவிதைகளையும் உடனே படித்தால்கூட நீங்கள் சொன்னபின்தான் ஒற்றுமையை அறிய முடிகிறது.
  பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 19. ஆஹா ..அருமை தோழி! படிமம், சந்தக்கவி இதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் கவிதையும் உணர்வுகளும் சூப்பர். விஜூ சகோவின் படைப்பையும் படித்து படிமம், சந்தக்கவி அறிந்துகொள்கிறேன் :)

  பதிலளிநீக்கு