சனி, 22 பிப்ரவரி, 2014

நகரத்து நரித்தனங்களும் கிராமத்து நாய்களும்

       சைலென்ட் மோடில் இருந்த செல்பேசி அதிர்ந்தது. ஒரு வியப்போடு பார்த்தேன். கஸ்தூரி காலிங். வகுப்பு நேரத்தில் தொலைபேசும் பழக்கம் இல்லையே ?! "ஏ! மந்திரி மாமா தவறிப்போய்டாராம்". கோலங்கள் பதிவில் குறிப்பிட்ட தோழி கற்பகத்தின் அப்பா! மற்றுமொரு மணப்பாறை பயணம்.

மறுநாள் உள்ளூரில் பிறந்து பல ஊர்களுக்கும் மணமாகி சென்ற எல்லோரும் மகள் முறை கோடி எடுத்து சித்தப்பாவின் வீட்டில் பரப்பினோம்! சித்தப்பாவின் உறவுகள் எல்லாம் சிவகாசி பக்கம். என்ன அப்போ நாங்க எந்தபக்க உறவு என குழப்பமா இருக்கா? கோடி எடுத்துவந்த அந்த கூட்டத்தில் யார் யார் உண்மையா மந்திரி சித்தப்பாவின் ரத்த உறவு என்பது புதிய மனிதர்களால் கண்டுகொள்ளவே முடியாது.


           உங்களுக்கு புரியணும்னா ஒரு சின்ன முன்னுரை தேவை. மணப்பாறை ஊரின் வரலாறு எனக்கு தெரியாது. ஆனால் பத்து பதினைத்து தலைமுறைக்கு முன் வந்தேறியவர்கள் எங்கள் பாட்டன்கள். ஊர் முழுக்க ஒரு இனம் இருக்க, புதிதாய் குடியேறிய சிறுபான்மை வேற்று இனத்தவரை அடையாளப்பட்டுத்தும் நோக்கில் எங்கள் தெருவுக்கு இனத்தின் பெயர் குறிக்கும் தெரு என்று அழைக்கத்தொடங்க (அதனை குறிப்பிட என் கொள்கை இடம் தரவில்லை) இன்றும் பல இனத்தை சேர்ந்தோர் குடியிருந்தாலும் எங்கள் தெரு சாதியின் பெயராலேயே அழைக்கபடுகிறது!

         பத்தாம் வகுப்பில் ஒரு நாள் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தபோது அனுப்புனர் முகவரியில் என் பெயரை எழுதிவிட்டு ஜீவா தெரு என்று எழுதிகொண்டிருந்தேன் ராஜி(பெயர் மாற்றம்) நக்கலாய் சிரித்தாள்.:" உங்க தெருவுக்கு இப்படி ஒரு பெயர் இருப்பது போஸ்ட்மேனுக்காவது தெரியுமா?" தொடர்ந்தாள் ராஜி "சரி, இதே மாதிரி உன் சித்தப்பா பெரியப்பாக்களை சொல்லவைக்கமுடியுமா உன்னால? எனக்கு அறை வாங்கியதை போல் இருந்தது. அவள் மற்ற மாணவர்களை போல் மணவையின் படித்த, அரசாங்க பணியாளர்கள் குடியிருக்கும் நகரை சேர்ந்தவள். நான் இதுபற்றி வீட்டில் பேச முடியுமா? நானோ எங்கள் தெருவில் இருந்து இங்கிலீஷ் மீடியம் படிக்கவந்த ஒரு மாணவி.

                 ராஜி கல்லூரி சென்று கொண்டிருந்தாள். நான் ட்ரைனிங் முடித்துவிட்டு பக்கத்துக்கு மில் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியில் இருந்தேன். ஊரே முன்னேறியிருக்க என் தெரு மட்டும் அப்படியே இருந்தது. அதே மில் பள்ளியில் என் தம்பிகளும், தங்கைகளும் படித்து கொண்டிருந்தனர் (அவனுங்க எங்க படிச்சானுக).  ராஜியின் தெருவில் இருந்த ஒரு அழகான பெண்ணை(ஜாஸ்மின்) பக்கத்து ஊரின் வெட்டி ஆபிசர் ஒருவன் ரொம்ப நாளாய் தொல்லை செய்திருக்கிறான். ஜாஸ்மினிடமிருந்து   எந்த பதிலும் வராமல் போகவே தன் நண்பர்களுடன் வீடு புகுந்து ஜாஸ்மினின்   வீட்டை ரெண்டு பண்ணிவிட்டார்கள். நாகரிகம் பயின்ற அந்த நகர் மக்கள் யாருமே உதவிக்கு வரவில்லை. அடுத்த நாள் இது செய்திதாள்களில் வந்தவரை மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால் அந்த நாளில் தன் சொந்தவீட்டை வாடகைக்கு விட்டு விட்டு ஜாஸ்மினின்  தந்தை தன் குடும்பத்திற்கு பாதுகாப்பு கருதி எங்கள் தெருவுக்கு வாடகைக்கு வந்தார். ஜாஸ்மினின்  திருமணம் முடியும் வரை எங்கள் தெருவில் தான் குடியிருந்தார்கள்.

             மந்திரி சித்தப்பாவின் குடும்பம் கூட மூன்று தலைமுறைக்கு முன் எங்கள் தெருவுக்கு வாழ வந்து தாயாய் பிள்ளையாய் பழகத்தொடங்கியவர்கள் தான். அந்த சித்தப்பாவின் மரணம் என்னுள் சில புரிதல்களை ஏற்படுத்தியது. இன்றும் பெரிதும் நகரமயமாகாத எங்கள் தெரு குறித்து நாகரிகம் அடைந்ததாய் சொல்லிக்கொள்ளும் மக்களிடையே ஒரு பார்வை இருக்கிறது.

         அண்ணாவையும் பெரியாரையும் படங்களில் போட்டுகொண்டு கொள்கையை காற்றில் பறக்கவிடும் நகரத்து நரித்தனத்தை இன்னும் பழகவில்லை எம்மக்கள்.

         என் தெரு ஒரு காரணப்பெயரை சுமந்து கொண்டிருக்கிறது. காலம் அதை மாற்றும்.

        நகரத்தில் நாய்கள் கூட தன் வீட்டுக்கு மட்டுமே காவல் காக்கும் சுயநலத்தோடு வளர்க்கபடுகின்றன. ஆனால் எங்கள் தெருவில் எந்த புதியநபர் வந்தாலும் குரைக்கும், வீடு வேறுபாடில்லாமல் நாங்கள் சோறு போட்டு வளர்க்கும் நாய்கள்.

        என் முன்னோரின் விரல்களுக்கு பயிர் செய்யவும், பால் கறக்கவும், கொளுத்து வேலை செய்யவும் மட்டுமே தெரியும்.  இதுவரை அவர்களை காட்டுமிராண்டிகள் என்றவர்களுக்கு அவர்களின்  நாகரீகங்களை விளக்க இப்போதுதான் எங்கள் கைகளுக்கு பேனா கிடைத்திருக்கிறது.

நகரவாசிகளே இந்தத் தலைமுறையில் எங்கள்  சகோதரர்கள் உங்கள் கல்லூரிகளில் படிக்க வந்திருகிறார்கள். உங்கள் புத்தகபாடங்களை மட்டும் அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். முடித்தால் அவர்களிடம் ஈரத்தையும் மனிதத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.

27 கருத்துகள்:

 1. //சகோதரர்கள் உங்கள் கல்லூரிகளில் படிக்க வந்திருகிறார்கள். உங்கள் புத்தகபாடங்களை மட்டும் அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். முடித்தால் அவர்களிடம் ஈரத்தையும் மனிதத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். ///

  மிக அருமையான வரிகள்......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தமிழன் சகோ தங்களது உடனடி உற்சாகமூட்டலுக்கு !

   நீக்கு
 2. நகரவாசிகளுக்கு சரியான... மிகச்சரியான யோசனைகள்...

  பதிலளிநீக்கு
 3. வலியைக் கூறிய பதிவு.பெயரை விட மனதில் உள்ளது சகோதரி.காலம் மாறும் ,மாற்றும்,வாழ்த்துக்கள்மா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ தாங்கள் சொன்னதுபோல் நிலை மாறத்தான் வேண்டும்

   நீக்கு
 4. அண்ணாவையும் பெரியாரையும் படங்களில் போட்டுகொண்டு கொள்கையை காற்றில் பறக்கவிடும் நகரத்து நரித்தனத்தை இன்னும் பழகவில்லை எம்மக்கள். இதை கேட்க சந்தோஷமாக இருக்கிறது.

  நகரத்தில் நாய்கள் கூட தன் வீட்டுக்கு மட்டுமே காவல் காக்கும் சுயநலத்தோடு வளர்க்கபடுகின்றன. ஆனால் எங்கள் தெருவில் எந்த புதியநபர் வந்தாலும் குரைக்கும், வீடு வேறுபாடில்லாமல் நாங்கள் சோறு போட்டு வளர்க்கும் நாய்கள்.இவை பெருமையாக இருக்கிறதுதோழி !
  பேனாவை நன்றாக பயன் படுத்துங்கள் தோழி வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 5. அருமையான கதைநேர்த்தியுடன் கூடிய கட்டுரைத்தனமான கவிதை போ! இதில் என் சிக்கல் என்னவென்றால், நான் பாராட்ட நினைத்த பத்தியில் முதல் பத்தியை “அவர்கள் உண்மைகள்“ முதலிலேயே பாராட்டிவிட்டார். இரண்டாவது பத்தியை இனியா பாராட்டிவிட்டார். என்றாலும் என்ன? “எங்கள் தெருவுக்கு இனத்தின் பெயர் குறிக்கும் தெரு என்று அழைக்கத்தொடங்க (அதனை குறிப்பிட என் கொள்கை இடம் தரவில்லை) இன்றும் பல இனத்தை சேர்ந்தோர் குடியிருந்தாலும் எங்கள் தெரு சாதியின் பெயராலேயே அழைக்கபடுகிறது!“ என்னும் வலிநிறைந்த வரிகள் மிஞ்சியதற்காக மகிழ்கிறேன். அண்மையில் நடந்த சென்னைப் புத்தகக் காட்சியில் அதிகம் விற்ற “சாதியும் நானும்” என்னும் பேராசிரியர் பெருமாள் முருகன் அவர்கள் தொகுத்த புத்தகத்தைப் படித்தாயா? சாதிஆதிக்கக்காரர்களும் அடிபட்டவர்களும் தந்திருக்கும் வாக்குமூலங்கள் நிச்சயம் இந்த நிலை மாறும்.. அப்பறம் நீ,நான் இன்னும் நம்மைப் போன்றவர்கள் எதற்கு எழுதுகிறோம்? நம்பிக்கையோடு எழுது! வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணா, எம் தெரு மக்களின் பிரச்சனை என்வென்றால் அவர்களை யாரும் அடிமை செய்யவில்லை. மாறாக அவர்களது கட்டுகடங்காத குணத்தை கொம்பு சீவி வளர்த்து பயன்படுத்திக்கொண்டு, அவர்கள் காதுக்கு கேட்காத தொலைவில் போய் அவர்களை காட்டி தான் நாகரிகம் பயின்றதாய் முன்னிறுத்தி கொள்கிறார்கள்! இப்போ நம்ம பசங்க கொஞ்சம் விழித்துக்கொள்ள தொடங்கிருக்கிறார்கள். நாமும் எழுதுவோம்!

   நீக்கு
 6. //அவர்களின் நாகரீகங்களை விளக்க இப்போதுதான் எங்கள் கைகளுக்கு பேனா கிடைத்திருக்கிறது.// பேனாவைப் போல சக்தியுடைய ஆயுதம் ஒன்றில்லை தோழி...எழுதுங்கள்!
  // முடித்தால் அவர்களிடம் ஈரத்தையும் மனிதத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். // நல்ல ஆலோசனை..நடந்தால் நலமே..
  இதுபோல பல ஊர்களில் இருக்கிறது. அருமையான பதிவு...

  பதிலளிநீக்கு
 7. //அண்ணாவையும் பெரியாரையும் படங்களில் போட்டுகொண்டு கொள்கையை காற்றில் பறக்கவிடும் நகரத்து நரித்தனத்தை இன்னும் பழகவில்லை எம்மக்கள்.// நறுக்ஸ்!

  //நகரத்தில் நாய்கள் கூட தன் வீட்டுக்கு மட்டுமே காவல் காக்கும் சுயநலத்தோடு வளர்க்கபடுகின்றன. ஆனால் எங்கள் தெருவில் எந்த புதியநபர் வந்தாலும் குரைக்கும், வீடு வேறுபாடில்லாமல் நாங்கள் சோறு போட்டு வளர்க்கும் நாய்கள்.// லொள் லொள்......எங்கள் இருவர் வீட்டு பைரவர், பைரவிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

  //நகரவாசிகளே இந்தத் தலைமுறையில் எங்கள் சகோதரர்கள் உங்கள் கல்லூரிகளில் படிக்க வந்திருகிறார்கள். உங்கள் புத்தகபாடங்களை மட்டும் அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். முடித்தால் அவர்களிடம் ஈரத்தையும் மனிதத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.// பளிச்! சத்தியமான வார்த்தைகள்!

  Feather on your Cap!

  வலிகளுடன்....அருமையான பதிவு!

  துளசிதரன், கீதா


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர்களுக்கு நன்றி ! ரசித்து வாசித்திருக்கிறீர்கள் !
   நாம் மொழி பயின்றதே இதற்காகத்தானே !

   நீக்கு
 8. தெருககளின் பெயர்களில் சாதியை நீக்கிவிட்டு சாதியை ஒழித்து விட்டதாய் நகரத்து மனிதர்கள் மார்தட்டிக் கொள்ளலாம். உண்மையில் மனங்களிலிருந்து அவற்றை ஒழிக்க வேண்டும். படிக்கும் பருவத்திலும், நட்புத் தேடுகையில் நீ இன்ன மதமா, இன்ன இனமா, இன்ன சாதியா என்று கேட்டு ஒருநாளும் நட்புக் கொள்வதில்லை நாம். கிராமத்து ஜனங்கள் இன்னும் மாறவில்லை என்பதும், கிராமத்து நாய்களைப் பற்றிக் குறிப்பிட்டதும் மனதைத் தொட்டது. இப்போது உங்கள் கரங்களில் கிடைத்திருக்கும் பேனா(யுதம்) கூர்மையாய் கொடுமைகளைக் கருவறுக்க வீறுகொண்டெழட்டும்! வாழ்த்துகள் சிஸ்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையில் எம் மக்கள் ஈரம் நிறைந்தவர்கள் !
   அவர்களை பயன்பட்டுத்திகொண்டவர்கள் ,கொம்புசீவியவர்கள் மெத்த படித்தவர்கள்! சுப்ப்ரமணிபுரம் படத்தில் வருவது போல் காசுக்காக இல்லாமல் பழக்கத்திற்காக பஞ்சாயத்து பண்ணி நேரில் கும்பிடும் ,முதுகுக்கு பின் திட்டும் வாங்கும் ஜனங்கள்! இப்போ என் சகோதரர்கள் படிக்கதொடங்கிருக்கிரார்கள்!

   நீக்கு
 9. சகோதரிக்கு வணக்கம்
  தலைப்பும் பதிவும் மிகவும் அருமை. சொல்ல வந்த செய்தியை மிக சிறப்பாக அழுத்தமாக சொல்லி விட்டீர்கள் சகோதரி. இப்போது தான் எங்கள் கைகளுக்கு பேனா கிடைத்திருப்பதாக எழுதியுள்ளீர்கள். அப்போதே அப்பாவின் காலடிகளும் குரலும் சட்டமன்றத்தில் அழுத்தமாக பதிந்துள்ளது. தங்கள் தெரு மீதான ஒரு பார்வையை அப்பா அப்பவே தகர்த்து விட்டார் என்று தான் சொல்வேன். இன்று ஏதோ ஒரு நிகழ்வு உங்களைப் பாதித்துள்ளதை உணர முடிகிறது. மூடர்களின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் வேண்டாம் சகோதரி. நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ,
   அப்பாவின் மீது தாங்கள் கொண்டுள்ள மரியாதைக்கு நன்றி. ஆனால் ஒரு விஷயம் உங்களுக்கு தெளிவுபடுத்தவேண்டியுள்ளது. அதாவது அப்பா எங்கள் தெருவில் இருந்த நாட்களை விட மருங்காபுரியிலும்,சென்னையிலும் இருந்த நாட்கள் தான் அதிகம். தொகுதி மக்கள் அப்பாவிடம் பெற்ற பயன்களும் அதிகம்.அது தான் அவருக்கு வாக்களித்தவர்களுக்கு அவர் செய்யவேண்டிய கடமை என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். எனவே அவரது சாதனை எம் தெருவை பொருத்தமட்டும் இந்த தேருவில் இப்படியொரு மனிதர் என பெயர் பெற்றது தான்(தொகுதிசார் சாதனைகள் தனி). உண்மையில் என் சித்தப்பாக்கள் மற்றும் அண்ணன்களை பயன்படுத்திகொண்டவர்கள் நம் ஊர் செல்வாக்கு பெற்ற பல நாகரிகம் பயின்றோர் தங்கள் வீடுகளில் இவர்களை பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என அவர்கள் வீட்டுப்பிள்ளைகள் மூலம் நான் நேரடியாவே அறிந்திருக்கிறேன்.அப்படி ஒரு கருத்து உங்கள் காதுகளில் விழுந்ததில்லை என்றால் அது நீங்கள் எம் மக்களை பயன்பட்டிகொள்ளவில்லை என்றும் இவர்களோடு உண்மையான நட்போடும் இருந்திருகிரீகள் என்பதை காட்டுகிறது. அதற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் சகோ!

   நீக்கு
  2. சகோதரிக்கு வணக்கம்
   நான் சிறு குழந்தையாக இருந்த போது எனக்கு உணவை ஊட்டி வளர்த்தவர்கள் அவர்கள். இன்று வரை நாங்கள் நட்போடு நடை போட்டுக்கொண்டிருக்கிறோம் சகோ. நிறைய இருக்கிறது. நேரில் பேசுவோம். நன்றி சகோதரி.

   நீக்கு
 10. "// அண்ணாவையும் பெரியாரையும் படங்களில் போட்டுகொண்டு கொள்கையை காற்றில் பறக்கவிடும் நகரத்து நரித்தனத்தை இன்னும் பழகவில்லை எம்மக்கள்.//"

  உண்மை சகோதரி. கிராமத்தில் இருக்கும் அந்த ஈரமனதை, நகரங்களில் காண முடியாது தான்.

  இறுதியில், நகர வாசிகளுக்கு சரியான ஒரு சாட்டையடியை கொடுத்து விட்டீர்கள்.
  வாழ்த்துக்கள் சகோதரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ! தங்கள் வருகையும் கருத்தும் என் எழுத்துக்கு வலுவூட்டும். நன்றி !

   நீக்கு
 11. //முடித்தால் அவர்களிடம் ஈரத்தையும் மனிதத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.///
  அருமை சகோதரியாரே
  அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அண்ணா,இதோ இப்போ உங்க blog குக்கு தான் வரப்போறேன்.

   நீக்கு
 12. சிறு வயதில் நான் பார்த்த மணப்பாறை தற்போது நிறைய மாறி இருக்கிறது... இருப்பினும் அதன் அந்த கிராமத்தன்மை இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது... தங்கள் வரிகள் அதை உறுதிப் படுத்துகின்றன... அருமையான பதிவு...!

  பதிலளிநீக்கு
 13. மனிதர்களின் மனதில் அழுக்கு......

  என்னதான் நாகரிகமாக மாறிவிட்டாலும் மனிதர்களுக்குள் இப்படி ஒரு அழுக்கு....

  வேதனையைச் சொன்ன பகிர்வு....

  பதிலளிநீக்கு
 14. கவிதைகளை விட உங்கள் கட்டுரைகளின் ஆழம் அதிகம். இந்தப் பாதையிலேயே நீங்க செல்லலாம் மைதிலி.

  பதிலளிநீக்கு
 15. அன்பின் மைதிலி - ஜோதிஜியின் மறுமொழியினை வழி மொழிகிறேன் - கவிதையும் எழுதுக - ஆனால் கட்டுரைகள் அதிகம் எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு