ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

ஆட்டோகிராப் பக்கங்கள்-ii நளபாகம் !

                          நளபாகம் என்றால் ஆண்கள் சமையல் அப்டின்னு அர்த்தம்.               சத்தியமா இது என்னோட சமையல் குறிப்பு இல்லை. நம்பி படிக்க ஆரம்பிக்கலாம். 80- 90 களில் நடந்தஎன் சிறுவயது நினைவுகள் . அப்பா வார இறுதியில்தான் வீட்டில் இருப்பார். தொழில் அப்படி. அந்த நாள் முழுக்க எங்களுக்கு டெடிகேட் பண்ணிடுவார்.க்வாலிட்டி டைம் பற்றிய சமீப கட்டுரைகளுக்கு என்  அப்பா முன்னுதாரணம் . கூட்டு குடும்பம் வேறு தெருவில் பாதிவீடுகள் எங்கள் உறவினர்கள் தான் இருக்கிறார்கள். குறைஞ்சது பத்து சகோதர சகோதரிகளோடு எங்கள் ஞாயிறு பொழுதுகள் தோட்டத்தில் தான் புலரும்.

                               அப்பாவிற்கு சில நண்பர்களுண்டு. வருத்தபடாத வலிபர்சங்க சத்யராஜ் போல் பெரிய துப்பாக்கி வைத்துக்கொண்டு வேட்டைக்கு போன்றேன், வேட்டைக்குபோறேன் என சொல்லிக்கொண்டு அந்த சித்தப்பாக்கள் முயல், காடை, கௌதாரி என பிடித்துவருவார்கள். (பாண்டியன் சகோவிற்கு ; நம்ம மில் ஸ்கூலுக்கு பின்னாடி பொய்யமலைன்னு சொல்வோமே.அங்க தான்)
                                           அப்படி பிடித்துவரும் உயிரினத்தை அந்த தோட்டத்தில் வைத்து அப்பாவின் சகாக்கள் சமைக்க, நாங்கள் களத்தில் அல்லது பம்பு செட்டில் விளையாடுவோம். மற்ற நேரத்தில் அப்பாவிற்கு கொடி பிடிக்கும், வாழ்க கோஷம் போடும் சித்தப்பாக்கள் தோட்டத்தில் காடைக்கும், கௌதாரிக்கும் அம்மியில் மசாலா அரைப்பதை பார்க்க காமெடியாய் இருக்கும். ஆனால் எத்தனையோ ஊரில் சாப்பிடிருக்கிறேன். எங்கள் தோட்டத்திலேயே விளைந்த தக்காளி, மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை பறித்த நொடியில் சமைத்த அந்த உணவின் ருசி ஈடுஇணை இல்லாமல் அப்பாவை போலவே நினைவிலேயே தங்கிவிட்டது.
                                            அப்பா மாநில கபடி சாம்பியன். அரசியலுக்கு வந்த பின்னும் தனக்கென ஒரு டீம் வைத்து ,தோட்டத்தில் பயிற்சி கொடுப்பார்.
தாட்டி தாட்டியான நண்பர்களை, சக வீரர்கள் கையை கோர்த்துக்கொண்டு கவிழ்த்து போட்டும் அப்பாவை பார்க்க பிரமிப்பாய் இருக்கும். அந்த நிமிடங்களில் கன்னத்தில் குழிவிழ அப்பா மீசை ஒதுக்குவதை பார்ப்பதே அலாதி! விட்டா பேசிட்டே இருப்பேன். அப்பா புராணம் இல்லையா? எந்த மகளுக்கு தான் சலிக்கும்! அதுவும் மைதிலிக்கு.
                                            பயிற்சி முடிந்ததும் சித்தப்பாக்கள் தென்னைமரங்களில் ஏறுவார்கள். முற்றிய முழு தேங்காயை உரிக்காமல் இளநி போல் சீவி உள்ளே பொட்டுகடலை என எங்கள் ஊரில் அழைக்கும் வருகடலைகளை போடுவார்கள். அதன் மேல் வெல்லத்தை நைத்துக்கொட்டி மறுபடி தேங்காயை மூடி, மூணு கல் அடுப்புகூட்டி நெருப்பில் அதனை முழுசாக சுடுவார்கள். அது வெந்த வாசம் வந்தவுடன், தேங்காயை உடைத்து, சூடு ஆறும்வரை பொறுக்க முடியாமல் ஊத்தி ஊத்தி தேங்காய்களை சாப்பிடுவோம்.அப்பா இறந்து ஒரு முன்று ஆண்டுகளுக்கு பின், ட்ரைனிங் முடிந்து முதல் முறையாய் வேலைக்கு சேர்ந்தபோது Kerala's treasure எனும் பாடத்தை வாசித்தபோது இந்த தேங்காய் சமையலை கேரளத்தின் பெருமையென வெகு விரிவாக சொல்லி இருந்தார்கள். அப்பாவின் நினைவில் என் லேசன் பிளான் நோட் நனைய தொடங்கியது! அப்பாக்கள் .................................I miss you dad.

39 கருத்துகள்:

  1. வணக்கம்

    சேரன் இயக்கிய (ஆட்டோகிராப்)படக்கதையை விட தங்களின் கதை மிக நன்றாக உள்ளது...(நம்மட சகோதரன் அரும்புகள் பாண்டியனா?) நல்ல விளையாட்டுக்கள் காட்டித்தான் இருக்கார்..... தங்களின் இளமைக்கால நினைவுகள் என்னுடைய உள்ளத்தையும் அள்ளிச்சென்றது...

    அப்பா செய்து காட்டிய உணவுமுறை என்று தங்களின் வாழ்க்கைக்கு உதவியாக உள்ளது.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாண்டியன் சகோ +2 படித்துக்கொண்டிருந்தபோது அதே பள்ளியில் நான் தற்காலிகமாக ஆசிரியராக பணியில் சேர்த்தேன். அப்போது பேசிக்கொண்டது கிடையாது. நான் எட்டாம் வகுப்புவரையிலும் எடுத்து வந்தேன். வலைபூவிற்கு பின்னால்தான் இப்போ குடும்ப நண்பர்களாகி இருக்கிறோம்! வருகைக்கும் , வாழ்த்துக்கும் நன்றி சகோ !

      நீக்கு
    2. வணக்கம்

      அப்படியா... மிக்க மகிழ்ச்சிதான்
      பாண்டியன் சகோதரன்... நல்ல மனிதன் அவரையும் என்னையும் கடலும் தூரம் இந்த இரண்டுந்தான் பிரித்து நிக்கிறது... இருந்தாலும் தொலைபேசி வழி சொந்த கதை... சோகக் கதை எல்லாம் பேசிக்கொள்வோம்.... அவரை வாழ்க்கையில் மறக்க முடியாது..


      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. அப்பாவிற்கு மகள் மீது தான் அதிகப்பாசம். அதே மாதிரி மகளுக்கும் அப்பாவிடம் தான் அதிகம் பாசம் என்பது முற்றிலும் உண்மை.

    சரி, நீங்கள் என்றைக்காவது இவ்வளவு கஷ்டப்பட்டு உங்கள் கணவருக்கு சமைத்திருக்கிறீர்களா சகோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாய் போச்சு போங்க. நான் எப்பவும் கஷ்டப்பட்டுதான் சமைக்கிறேன். ஆனால் என்னை விட கஷ்டப்பட்டு அதை கஸ்தூரி சாப்பிடவேண்டியதாய் இருகிறதே!? :)))))
      நண்பர்களுக்கு டீ கேட்கும் போதே "பார்மா ரொம்ப தொல்லை பண்றான்.ஒரே டீ தான் இனி நம்ம வீட்டு பக்கமே வரக்கூடாது. எங்கே கொண்டுவா" என கலாய்ப்பது உண்டு.ஹா ....ஹா ....
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

      நீக்கு
  3. ரசிக்க வைத்தது முடிவில் கலங்கிய கண்களுடன்....

    பதிலளிநீக்கு
  4. அப்பப்பா ஒரே அப்பா புராணம்......இந்த அப்பா புராணம் போராடிக்காது....காரணம் நானும் இப்படி ஒரு அப்பாவாக இருப்பதால் என்னவோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பிடியானால் உணல் பிள்ளைக்கள் கொடுத்துவைத்தவர்கள்!
      வருகைக்கு நன்றி சகோ!

      நீக்கு
  5. பாசத்தில் தந்தையின் நினைவுகள் அழகாய நினைவுப்பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நேசன் சகோ. வெகு நாட்களுக்கு பின் தங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது! நலம் தானே?

      நீக்கு
  6. அப்பாவின் அன்பு அணையாது நிலைக்கும் காக்கும் உம் நினைவில் நின்று!
    நெகிழ்வான பதிவு !
    கஷ்டப்பட்டு எல்லாம் சமைக்காதீர்கள் இஷ்டப்பட்டு சமையுங்கள் தோழி
    அப்போது தான் சாப்பிடக்கூடியதாக இருக்கும். ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா....ஹா....
      சமையலில் நான் மாமியார் மெச்சிய மருமகள்!
      சும்மா காமெடிக்கு சொன்னேன்!
      நன்றி தோழி ரொம்ப அன்யோன்யமாய் உணர்கிறேன்!

      நீக்கு
  7. ///சத்தியமா இது என்னோட சமையல் குறிப்பு இல்லை///

    சமைக்க தெரிஞ்சாதானே குறிப்பு எல்லாம் போட முடியும்... உண்மையை வெளிப்படையாய் சொன்ன உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..ஹீ.ஹீ

    பதிலளிநீக்கு
  8. பாசக்காரத் தந்தையின் நினைவில் ஒரு பாசக்காரப் பெண்ணின் எழுத்து அவருக்கு மாலை சூட்டியது போல அருமை!

    ரம்மியமான ஆட்டோக்ராஃப் பதிவு!

    மிகவும் ரசித்து வாசிக்கும் வகையில் எழுதியிருக்கின்றீர்கள்! ஆனால் இதை வாசித்து ரசிக்கத் தங்கள் பாசக்காரத் தந்தை இல்லையே என்பதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது!

    ஆம் இந்த வகைத் தேங்காய் கேரளாவிலும் பிரசித்தம்!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். பத்தாவது படிக்கும் போதே நான் எழுதியதெல்லாம் கவிதை என நம்பியவர் என் அப்பா, என்னையும் நம்பவைத்தவர் அண்ணா ரவி சார்!
      உணர்ந்து உள்ளத்தில் இருந்து வந்த கருத்துக்கு நன்றி அண்ணனுக்கும், அண்ணிக்கும் !

      நீக்கு
  9. அப்பாவின் நினைவுகளை இத்தனை வருடங்கள் பொக்கிஷம் போல் வைத்திருந்து பகிர்ந்திருக்கிறீர்கள்பா.. எழுதிய வரிகள் படித்தபோது நானும் அப்பா மீசை முறுக்கி கன்னக்குழி விழ சிரித்ததை காண முடிந்தது. தேங்காயை இளநீ போல் சீவி வெல்லம் வறுகடலை உள்ளடக்கி சுட்டு சாப்பிடும்போது அந்த சூடு என் கைகளிலும் தகித்ததை உணர்ந்தேன்பா... இங்கே பேசியது வரிகள் அல்ல.... உணர்வுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா, இனி நான் உங்களை அப்படி அழைக்கலாம் தானே ?
      நான் எழுதிய மனநிலையை தாங்களும் உணர்ந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. வாஞ்சையான தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா! உங்கள் முதல் கருத்து எனக்கு மிக்க மகிழ்ச்சி அக்கா.

      நீக்கு
  10. ரசிக்க வைத்தது முடிவில் கலங்கிய கண்களுடன்...

    பதிலளிநீக்கு
  11. மிகவும் அருமை படித்த போது உன் பாசத்தை அப்பாவின் மேல் நீ வைத்திருக்கும் அன்பை ,வியப்பை,மரியாதையை உணர்கின்றேன்.ஒவ்வொரு மகளுக்கும் அப்பாதானே ஹீரோ.மனம் கலங்கியதும்மா.ஈடில்லா இழப்பு.கவிதை பயிற்சிக்கு நீயும் வந்திருக்கலாம்.மிகவும் நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோதரி. ஒவ்வொரு அப்பாவும் ஹீரோ தான். விழாவை பற்றி தங்கள் சகோதரரிடம் கேட்டு தெரிந்துகொண்டேன் பிள்ளைகள் கொஞ்சம் வளரட்டும் சகோ. அப்புறம் தான் முடியும் ! என் மீது நீங்கள் கொண்டுள்ள அன்புக்கு மிகுந்த நன்றிகள் சகோ!

      நீக்கு
  12. அம்மா தன் இடுப்பின் மீது வைத்துக் குழந்தைக்குச் சோறூட்டுவார். அப்பாவோ தன் தோள்மீது வைத்து -தான் பார்க்க முடியாத உயரத்தையும்- தன் குழந்தைக்குக் காட்டுவாராம். ஆனால், பாசம் என்றால் தாய்ப்பாசம் தான் என்பதுபோலவே சொல்கிறார்கள் (அதுவம் ஒருவகையான பெண்ணடிமைச் சூழ்ச்சிதான் என்பது என் கருத்து) உன் அப்பா பெரிய அரசியல் தலைவர் எம்எல்ஏவாக இருந்தவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். உன் எழுத்தில் என் அப்பாவை நினைவுபடுத்திவிட்டார்!. நான் “அனைத்துககல்லூரிக் கவிதைப் போட்டியில் முதல்பரிசு, வாங்கப் போறேன் வாங்கப்பா” என்று அழைத்தேன் வேலையிருக்கு என்று என்னிடம் சொன்னவர் சத்தம் போடாமல் காரைக்குடித் திருக்குறள் கழகத்தில் (1975) நான் பரிசு வாங்கியதையும், முடியரசன் தலைமையில் கவிதை பாடியதையும் வந்து பார்த்துச் சென்றதைப் பின்னால் அறிந்தேன். உன் “ஐ மிஸ் யூ டாட்“ என்ற வரிகளில் என் அப்பாவுக்கான நெகிழ்வை உணர்ந்தேன். நன்றிப்பா. (அப்பாவைப் பற்றி அப்பப்ப எழுதிக்கிட்டே இரு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அப்பாவோ தன் தோள்மீது வைத்து -தான் பார்க்க முடியாத உயரத்தையும்- தன் குழந்தைக்குக் காட்டுவாராம். // அருமை அண்ணா.
      தங்களது யோசனைதான் செயல்படுத்தினேன். அப்பாவோடு பேசிக்கொண்டிருப்பது போல் உணர முடிந்தது. முதலில் அதற்காக நன்றி அண்ணா. எனக்கு அம்மாவை விட அப்பாவைத்தான் ரொம்ப பிடிக்கும். சொல்லிட்டே இருக்கலாம். பாருங்க காலேஜ் டேஸ் லே கலக்கிருக்கிங்க!

      நீக்கு
  13. ஓரமா உருட்டினா... “ஒருவாரமா இந்தப் படங்கள் தான் ஓடிக்கிட்டிருக்கு” - சூப்பர் பா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா....ஹா ...
      இந்த கிருத்திருவமும் அப்பாட்ட இருந்து வந்தது தான்!

      நீக்கு
  14. தந்தையைப் பற்றிய நினைவுகளை விரித்த விதம் அருமை. அந்த தேங்காய் மேட்டர் புதிது.
    பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. so, அது பயனுள்ள குறிப்புதான் போல!
      முதல் முறை வந்திருக்கிங்க, வந்ததுக்கும்
      பாராட்டினதுக்கும் ரொம்ப நன்றி சார்!

      நீக்கு
  15. அன்பு சகோதரிக்கு
    தங்கள் உணர்வுகளுக்கு உருவம் தந்தது போல் உள்ளது இப்பதிவு. அப்பாவி்ற்கு இன்று வரை மணப்பாறை மட்டுமல்ல நம்ம சுற்றுவட்டார ஊர்களில் மதிப்பும் மரியாதையும் அப்படியே இருப்பது கண்டு நான் வியந்தது உண்டு. அப்பாவின் கார் விபத்துக்குள்ளான சம்பவம், தேர்தல், ஊரே அப்பாவின் பெயரை மந்திரமாக உச்சரித்தது போன்ற நிகழ்வுகள் எனக்கும் வந்து போகிறது சகோதரி. தங்களின் உணர்வுகளை ஒரு சகோதரனாக நான் உணர்கிறேன். நிறைய பகிர இருக்கிறது சகோதரி ஆனால் பழைய நினைவுகளில் நீங்கள் மூழ்கி உங்கள் கண்ணில் நீர் வடிய நான் விரும்பவில்லை. என் உடன்பிறவா சகோதரியின் அன்பு கிடைக்க வாய்ப்பளித்த வலைப்பக்கத்திற்கும் இறைவனுக்கும் நன்றிகள். அன்புடன் சகோதரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ ரொம்ப ரொம்ப சந்தோசம். எவ்ளோ பாசமா சொல்றிங்க!
      அப்பா மற்ற அப்பாகளுக்கு சில விசயங்களில் முன்னுதாரணமாக இருப்பார் என்ற வகையில் எழுதத்தொடங்கினேன். இனி திடத்தோடு சொல்ல முயல்கிறேன். வருகை நன்றி சகோ!

      நீக்கு
  16. டீச்சர்.. தந்தயின் நினைவில்
    தனை வளர்த்து
    எந்தையின் நினைவு
    எனைததாக்க
    விழிநீர் வழிந்து
    என்னுடல் நனைந்தது.
    சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ,எங்க டீச்சர் முதல் கமென்ட் போட்டுடாங்க. நன்றி சகோ!
      அட்டகாசமா கருத்து(கவிதை)!

      நீக்கு
  17. அப்பாவின் நினைவை மீட்டிய பகிர்வுடன் நீங்கள் பகிர்ந்திருககும் புதிய பண்டத்தின் (தேங்காயின் உள்ளே வறுகடலை) சாப்பிட்டுப் பார்க்கும் ஆசையும் எழுந்துவிட்டது. ஐ மிஸ் யூ டாட் என்கிற இறுதி வரிகள் மானசீகமாய் என் தந்தையை நினைத்து நானும் சொல்வதாய் உணர்ந்தேன். இது உங்க எழுத்தின் மகிமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த பண்டத்தை வழக்கமான அடுப்பின் செய்யமுடியாது, கிராமங்களில் செய்வதுபோல் மூன்று கல் கூட்டிய அடுப்பில் கூட்டாஞ்சோறு போல் தான் செய்யமுடியும். உங்கள் தந்தை நினைவுக்குவந்திருந்தார் எனில் இதற்காக நான் செலவு செய்த நேரம் பயனுள்ளது தான். என்னை ஊக்கப்படுத்தும் சொற்களுக்கு நன்றி அண்ணா !

      நீக்கு
  18. அப்பாவின் நினைவுகளை அழகாய் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்......

    பாராட்டுகள்.

    பெண்களுக்கு அப்பாவின் நினைவு இனிமையானது தான்...... போலவே அப்பாவிற்கும்!

    பதிலளிநீக்கு
  19. எப்படி இந்தப் பதிவைப் பார்க்காமல் விட்டேன் என்று தெரியவில்லை..நல்லதொரு அன்பின் நினைவுகள்..இறுதியில் கண் கலங்கிவிட்டது மைதிலி.

    பதிலளிநீக்கு
  20. அன்புச் சகோதரி,
    உணர்வுகள் எல்லோர்க்கும் பொதுவானவைதான். மொழியைக் கையாளத் தெரிந்தவனால் அதைப் பகிர்ந்து எல்லோருக்கும் கொடுக்க முடிகிறது.
    வாங்கும் அனைவருக்கும் அதைச் சுவைக்கத் தெரிவதில்லை. உங்களுக்கு பகிரக் கைவந்திருக்கிறது.
    அதிகம் பேசாமல் சுவைத்துப் பின்னூட்டமிட்ட பெருமக்களோடு நானும் சேர்ந்து கொள்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  21. அன்பின் மைதிலி - தந்தையர் தினத்தன்று எனது மகள் ஒரு அழகிய கவிதையினை எழுதி அனுப்பி இருந்தார் - நேரமிருப்பின் பார்க்கவும்.

    http://cheenakay.blogspot.co.uk/2014/06/blog-post.html

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு