வியாழன், 27 நவம்பர், 2014

இசையின் வாசனை.

           
       
 

                      பழுப்பேறிய ஒரு புகைப்படத்தை பார்ப்பது போல் இருக்கிறது இப்படி பின்னோக்குவது. கோணல் வகிடெடுத்து மெலிசாய் கண்மை தீட்டிய விழி மூடி, தேன்கிண்ணத்தை சொட்டுச்சொட்டாய் பருகிறபடி இருக்கும் அம்மாவின் முகத்தை தொட்டு விலகும் ஒளியை ரசித்த என் ஏழு வயதிற்குள்ளாக தான் துளிர்த்திருக்கவேண்டும் இசையின் மீதான காதல். அப்படி உருகி உருகி என் அம்மா இசை பருகிய அந்த கருவியை உங்களில் எத்தனை பேர் பார்திருபீர்களோ! அது ஒரு சைக்கிளில் பொருத்தக்கூடிய head லைட்டுடன் சேர்ந்த ரேடியோ! P.B.ஸ்ரீநிவாசும், ஜானகியும், சுசிலாவும் காற்றில் சுகந்தம் பரப்பிய இரவுகள் தொலைத்த விடுதி நாட்களை எட்டுவயதில் சபிக்க அந்த ஒரு காரணம் போதுமானதாக  இருந்தது. 

                      விடுதியில் இருந்து வீடு திரும்பிய நாளில் அப்பாவோடு காரில் பயணிக்கிறேன் என்பதை விட அதில் காஸெட் போட்டு S.P.B, மனோ, சித்ரா, ஜென்சி என கேட்டபடி பயணித்த அந்த நொடிகளில் இன்னும் கமழ்ந்த படி இருக்கிறது காரைக்குடியில் இருந்து மணவை திரும்பும் வழியில் திருமயம் கேட்டில் வாங்கி, கைகளுக்கு இடையே தேய்த்து,உதடு குவித்து ஊதி அப்பா எனக்கு ஊட்டிய வேர்கடலையின் மணம். அப்பா ரசனையில் அம்மாவிற்கு சற்றும் குறையாத இசைக்காதலர். அத்தைகளின் இசை விருப்பமோ இருவரை போலவே இரண்டு விதமாக இருந்தது. ஒரு அத்தை  இளையராஜாவின் சோககீதங்கள் மட்டுமே  கேட்பது என சத்தியம் செய்யாத குறையாய் கேட்க,  இன்னொரு அத்தையின் ரசனை இன்று வரை எனக்கு வியப்பாகவே இருக்கும். அவர் எப்போதும் ரேகா, ரேவதி, நதியா பாடல்களை மட்டும் விரும்பி கேட்பார். அப்படி கதாநாயகிகளை முன்னிறுத்தி பாடல் கேட்பது தான்  கற்பு நெறி என்றே கருதுவார். அத்தைகள் இருவரும் பாட்டுபுத்தகங்கள்  வைத்து  தனக்கு தெரிந்த ராகத்தில் எல்லாம் பாடி என்னிடம் கருத்து கேட்டபடி இருப்பார்கள். அந்த பாடல்களை இப்போது கேட்க நேர்கையில் நாசி உணர்கிறது அவர்கள் தாவணி வாசனை. ரேகாவை அத்தை என  அழைக்க என்னை பழக்கிய  சின்ன அத்தையின் கைபேசியில் தற்போது மாமாவின் அழைப்பு வந்தால் மட்டும் உருகுதே! மருகுதே!

                  எல்லா அம்மாக்களையும் போல கோடைவிடுமுறையின் சிலநாட்களை தன் அம்மா வீட்டிற்கு கிளம்பினால் ஏதேனும் இரண்டு புத்தகங்கள் மட்டும் எடுத்துச்செல்ல அனுமதி கிடைக்கும். எங்கள் ஊர் தெருக்களை போல் வெயிலில் குளித்து வியர்வை பூசிக்கொள்ளாமல், என் அம்மாவின் தாய் வீடு ஏதோ  ஊரடங்கு  உத்தரவு போட்டது போல் எப்போதும் அமைதியாக இருக்கும் ஒரு செட்டிநாட்டுப் பகுதி. அதிக பட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் மாமாவின் பாட்டரி போட்ட டு -இன்-ஒன் தான் ஒரே நண்பன் அல்லது தோழி! ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் பாடிய இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் என்ற நீண்ட பட்டியலுக்கு பின் பின்மதியங்களை மீட்டியதெல்லாம் கோடை பண்பலையும், திருச்சி வானொலி நிலையமும் தான். 

            காசெட் நாட்களில் நாங்கள் தொலைகாட்சியின் பிடியில் இருந்தோம். வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் மோகம் தீர்வதற்குள் பெப்சி உமா பேசிப்பேசி பாடல் ஒளிபரப்பத் தொடங்கி இருந்தார். பத்தாம், பன்னிரண்டாம் வகுப்புகளில் பாடல் கேட்க நேரமே இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்க ஹரிணி, உன்னிக்கிருஷ்ணன், ஹரிஸ் ராகவேந்திரா, உன்னிமேனன், நித்யஸ்ரீ என சிலர் கவனம் கலைக்கவே செய்தனர். பன்னிரண்டாம் வகுப்பு விடுமுறைக்கு பின் ஒரு நாள் வீட்டையே இருளில் ஆழ்த்தி அப்பா நீடு துயில் கொள்ள, அம்மாவின் விழிகள் ஒளியிழந்து போயின.

        இரண்டுவருடங்கள் இப்படியே கழிய, ஆசிரியர் பயிற்சி முடித்த கையோடு வீட்டில் பொழுதை நெட்டித்தள்ள முடியாமல் B.A முடிக்கும்வரை பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கு தற்கால பணியிடத்தில் வேலைக்கு சேர்ந்து முதல் மாத ஊதியத்தை அம்மாவிடம் கொடுத்தபோது ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். அடுத்த மாத ஊதியத்தின் ஒரு பகுதில் ஒரு C.D பிளேயர் உடன் இணைந்த F.M ரேடியோ மற்றும் சில ஹரிஹரன் பாடல் சி.டி களோடு தான் வீட்டுக்கு வந்தேன். அதன் பின்னான இரவுகளில் என் தங்கையின் படிப்புகாக இரவு ஒன்பது மணிவரை அமைதி காக்கும் வானொலி பதினோரு மணிவரை "இரவின் மடியில்" கிடத்தி எங்களை தாலாட்டி உறங்கவைக்கும். அம்மா கொஞ்சம் கொஞ்சமாக சகஜமாக, நான் திருமணம் முடித்து இரண்டு ஆண்டுகளில் அம்மாவும் அப்பாவை தேடிச்சென்ற சில நாட்களுக்குபின்னர்  என் அப்பத்தா அந்த சி.டி.ப்ளேயரை பார்க்கும் போதெல்லாம் கண்ணீர் மல்க தன் மருமகளை நினைத்துக்கொள்வார். என்ன ஒற்றுமை மாமியாருக்கும், அந்த மருமகளுக்கும் நான் பேச நினைப்பத்தெல்லாம் நீ பேசவேண்டும் தான் பிடித்த பாடல்.

      இதோ, இன்னும் என் இசை  நாட்கள் நகர்ந்த படியே இருக்கின்றன. ஸ்ரீநிவாஸ், ஜி.வீ  சைந்தவி, மதுஸ்ரீ, ஷக்திஸ்ரீ, என பலரும் பூங்கொத்துகள் நல்கி நகர்த்தும் என் பொழுதுகளில் P.B.Sக்கும், ஹரிஹரனுக்கும், ஜென்சிக்கும் ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்கள் மட்டுமே கோலோச்சி கொண்டே இருக்கிறார்கள்.


இசை பற்றிய என் கவிதை
(இதுக்கும் மேல தொடர்ந்து படிக்க முடிஞ்சா இதையும் பாருங்க.
                   

28 கருத்துகள்:

  1. மனம் கனக்கின்றது..
    ஏனோ - மிகவும் அமைதியாகி விட்டது.

    பதிலளிநீக்கு
  2. மெல்ல என்னையும்...இள்மைக்காலத்திற்கு அழைத்து சென்றுவிட்டாய்டா...பாட்டுக்குப்பாட்டு...கேட்பது எத்தனை சுகம்....அதிலும் நான் படித்துக்கொண்டு,எழுதிக்கொண்டே பாட்டுக்கேட்பேன்..உன் இசைப்பயணம் தொடரட்டும்மா...மனதில் வலி இசையாய் பதிவைப்படித்ததும்...மா

    பதிலளிநீக்கு
  3. பழைய நினைவுகள் அனைத்தும் டைரி குறிப்புகள் போலிருக்கிறதே...
    வானொலி இன்றைய தலைமுறையினர் அந்த சுகத்தை அனுபவிக்கவில்லை நாம் கொடுத்து வைத்தவர்களே.... சிறுவயதில் புதன்கிழமை இரவு திருச்சி வானொலியில் கேட்கும் நாடகம் ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே....
    கவிதையும் படித்தேன் அருமை.

    பதிலளிநீக்கு
  4. இழப்புகளில் இருந்தும் வலிகளிலிருந்தும் நம்மை மீட்டெடுப்பதில் இசைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நமது பதின்ம வயதில் எந்த இசையை ரசித்தோமோ அதுவே நம் இறுதி வரைக்கும் உடன் பயணிக்கிறது. நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு
  5. உங்களின் இசை நாட்கள் வசீகரமாய் பயணித்தது...
    அம்மா, அப்பா இழப்பைச் சொன்ன போது வலியோடு பயணித்தது...
    அப்பத்தா அம்மாவின் ரசனை இசையில் ஒத்துப் போனது சந்தோஷமான விஷயம்...
    நல்லா எழுதியிருக்கீங்க சகோதரி.

    பதிலளிநீக்கு
  6. இசையில்லா நாட்கள்
    வெற்று நாட்கள் அல்லவா
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  7. நானும் இரவின் மடியில் பித்தன் என்பதாலும்
    அதுபோல காஸெட்டுகள் வாங்கி
    இப்போது பயனில்லையென்றாலும் தூசு தட்டி
    அடுக்கிவைப்பவனாய் இருப்பதால் உங்கள்
    பதிவை முழுமையாக ரசிக்க முடிந்தது
    மனம் தொட்டப் பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. அன்புச் சகோதரி,

    தங்களின் இசையின் வாசனையை நுகர்ந்தேன். நல்ல சுகந்தமான அனுபவத்தை பகிர்ந்திருந்தீர்கள். மாத ஊதியத்தின் ஒரு பகுதில் ஒரு C.D பிளேயர் உடன் இணைந்த F.M ரேடியோ மற்றும் சில ஹரிஹரன் பாடல் சி.டி களோடு தான் வீட்டுக்கு வந்தேன்... இசைமீது...பாடல் மீது கொண்ட காதல் கண்டு கொள்ள முடிகிறது.

    அப்பா ரசனையில் அம்மாவிற்கு சற்றும் குறையாத இசைக்காதலர் என்ற பொழுது... தங்களின் தந்தையின் ஞாபகம் வந்தது. அவர் கபடி விளையாடுவதை நான் கண்டு களித்திருக்கின்றேன். அவருடைய அம்பாசடர் வெள்ளைக் காரில் டி.என்.45 999 அல்லது 777 என்று எண்ணுகிறேன்...சித்தாநத்தம் பாலத்தில் கார் விபத்துக்குள்ளாகி அவரின் ஆஸ்தான ஓட்டுநர் இறந்துவிட்டார். தந்தை அவர்கள் விபத்தில் தப்பிப்பிழைத்தார் என்பதை அறிவேன். பலருக்கும் வேலைவாங்கிக் கொடுத்து ... பிறகு நோயில் இறந்த பொழுது மணவை மாநகர் கண்டிராத அளவிற்கு ஒரு பெரிய மக்கள்கூட்டம் இறுதி அஞ்சலி செலுத்த கூடிய து இன்றைக்கும் மறக்கமுடியாததாக...சாதனையாக இருக்கிறது. அந்த இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டதில் நானும் ஒருவன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அன்புத்தங்கைக்கு,
    இசைப் பயணம் தொடரட்டும்..!
    இசையில்லா வாழ்க்கை...நரகம்..!

    பதிலளிநீக்கு
  10. அன்றைய வானொலி நேயரின் வேர்க்கடலை ருசியோடு
    இன்றைய மலரும் நினைவுகள்.
    த.ம.5

    பதிலளிநீக்கு
  11. பெரிய சைஸ் டிபன் தட்டு மாதிரி சுழலும் இசைத்தட்டில் ஊசி வைத்துப் பாட்டுக் கேட்ட என் பால்ய காலத்துக்கு அழைத்துப் போய் விட்டாய் மைதிலி. அதிலும் ஆரம்பகால கருவிகளில் கையால்தான் சுழற்ற வேண்டும். வேகமாய் சுழற்றினால் கீசுகீசென்றும், மெதுவாகச் சுழற்றினால் இழுவையாகவும் ஒரே பாடலை வித்தியாசமாகக் கேட்டு ரசிக்கலாம். சரியான வேகத்தில் சுற்றினால் சரியான இசை. பின்னாளில் கரண்டில் ஓடுகிறது வந்தது. ம்ஹும்... இன்னும் விரிவாக சொல்லிட்டே போனா உன் பதிவை விட கருத்து நீண்டுரும். தனியா என் நினைவலைகளை ஒரு தனிப் பதிவா எழுதிடறேன். டாங்ஸ் தங்கச்சி...

    பதிலளிநீக்கு
  12. அருமையான இசைப் பயணம் அழகான நடையில்! இசைப் பயணம் தாலாட்டியது...எங்களையும் எங்கள் இளமைக்கால சிலோன் ரேடியோ அடிமைகளான எங்களின் அந்த நினைவுகளை மீட்டி எடுத்தது.
    "ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
    காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே "

    பதிலளிநீக்கு
  13. இசையில்லா வாழ்வு இருள்சூழ்ந்த தன்றோ
    அசைத்தீர் எனையும் அணைத்து!

    உங்கள் நினைவலைகள் என்னையும் கடந்தபோனவைகளை நினைத்திட வைத்தது. கனக்கும் பதிவு ஆனலும் படித்திட வைத்தது உங்கள் எழுத்து!
    எனக்கும் இந்த இசைதான் உற்ற தோழமை இப்போதும்...!

    பதிலளிநீக்கு
  14. இப்பொழும் எப்பொழுதும் வாழ்க்கையை தாங்கிப்பிடிப்பதில் பீபிசீனிவாஸ்
    கண்ணதாசன்.,
    இவர்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம்

    பதிலளிநீக்கு
  15. என்னுடைய தந்தை நான் 11ஆம் வகுப்பு பரீட்சை முடித்த சில நாட்களில் தவறினார். அதற்கு பிறகு வந்த நாட்களில் எல்லாம் நான் நினைத்துக்கொள்வேன், என் எதிரி கூட, பள்ளிக்கூட வயதிலேயே தந்தையை இழக்கக் கூடாது என்று.
    ஏனோ, இந்த பதிவை படித்தவுடன் மனம் கனத்து விட்டது சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 8வது - பள்ளி திறந்த சமயம் எனது தகப்பனார் சாந்தி அடைந்து விட்டார். இப்போது கூட அந்த வலி ...

      அதற்கு பிறகு வந்த நாட்களில் எல்லாம் நான் நினைத்துக்கொள்வேன், என் எதிரி கூட, பள்ளிக்கூட வயதிலேயே தந்தையை இழக்கக் கூடாது என்று. //

      உண்மை தான் சகோ... நானும் நினைந்ததுண்டு

      நீக்கு
  16. இசை ஓவ்வொருவரின் வாழ்விலும் ஒரு மறக்க முடியாத நினைவுகளை தந்துவிடுகிறது! சிறப்பான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  17. மைதிலி மேடம்,

    முதல் பத்தியிலேயே ஒரு அழகான வரைபடம் போல எழுதத் தொடக்கி விடுகிறீர்கள். சுவையான எழுத்து. பாடல்கள் பற்றி நிறைய தகவல்கள் இருக்கும் என்று நினைத்தேன். துயரமான பொழுதுகளை அசைபோடும் ஒரு மனதைத் தொட்ட கட்டுரையாக மாறிவிடுகிறது. நல்ல முயற்சி. தொடர்ந்து இசை சம்பந்தப் பட்ட பதிவுகள் எழுதவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    இறுதியாக இசையின் வாசனை ஆஹா அற்புதமான தலைப்பு. நான் யோசிக்கும் முன் முந்திகொண்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  18. ஜென்சி என்றாலே என் காதுகளில் ...தந்தனதந்தன தாளம் வருகிறதே :)
    த ம 7

    பதிலளிநீக்கு
  19. மனம் கனத்து பழைய நினைவுகள் போய்...வந்தேன்.ஊமையாய் வலி..

    பதிலளிநீக்கு
  20. இசையின் வாசனை நுகர்பவரைப் பொறுத்து மாறுபடும்னு நினைக்கிறேன். :)
    -------------------
    ***அம்மா கொஞ்சம் கொஞ்சமாக சகஜமாக, நான் திருமணம் முடித்து இரண்டு ஆண்டுகளில் அம்மாவும் அப்பாவை தேடிச்சென்ற சில நாட்களுக்குபின்னர் என் அப்பத்தா அந்த சி.டி.ப்ளேயரை பார்க்கும் போதெல்லாம் கண்ணீர் மல்க தன் மருமகளை நினைத்துக்கொள்வார்.***

    இந்த இடத்தில் நீங்க ஒரு சிறுமி மைதிலியாகத்தான் தெரிகிறீங்க. இதை எழுதும்போது உங்களுக்குக் கண்ணீர் வந்ததுபோல் நான் உணருகிறேன். :(

    சாதாரணமாக இசை பற்றி எழுத ஆரம்பிச்சு இருப்பீங்க, somehow you got carried away with old memories such as these I believe! Hope sharing all these memories helps you somehow to deal with the situation better. Take care, mythily!








    பதிலளிநீக்கு
  21. அது என்னமோ தெரியல பா. நல்ல துள்ளல் இசைகேட்டு மகிழ்ந்த தருணங்களை விட, நாம் துடித்துக்கிடந்தபோது வந்து மயிலிறகால் தொட்டு மருந்து தடவிய பாடல்களைத்தான் மறக்க முடியவில்லை. அப்படி நான் “நினைந்து நினைந்து நெஞ்சம் உருகி“ய பாடலைப் பாடிப் பரிசு வாங்கிய நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. அதே போல “இசைகேட்டால் புவி அசைந்தாடும் அது இசையின அருளாகும்“ என்று ஒரு சொல்லை மாற்றிப் பாடியபோதும்... அன்றும் இன்றும் என் சாய்ஸ் “நான்பேச நினைப்பதெல்லாம்“ உனக்குள் பல கண்ணவாலி, ப.கோ.தாசன்கள் கிடக்கிறார்கள் பா. த.ம.(10)

    பதிலளிநீக்கு
  22. இசைக்கு அடிமையாகாதவர்கள் எவரும் இல்லை எனலாம். அதுவும் இளமைக்கால நினைவுகளோடு அவற்றைப் பகிர்ந்துகொள்ளும்போது மனதுக்கு சுகம் அதிகமாக கிடைக்கும் என்பதே உண்மை. உங்களது பதிவு எங்களை அந்நாட்களை நோக்கி அழைத்துச்சென்றுவிட்டது.

    பதிலளிநீக்கு
  23. இசையை வானொலியில் கேட்கும் இரவின் மடியில் தனிச்சுகம் அதுவும் ஜென்சி ராஜாவின் இசையில் பாடிய பாடல்கள் மீண்டும் நிழலாடுகின்றது உங்களின் பகிர்வு மூலம்.

    பதிலளிநீக்கு