திங்கள், 26 ஜனவரி, 2015

ஒரு அழகான பெண்ணும், சில அடாவடி பசங்களும்.....

      சென்ற வாரம் ஒரு youtube பகிர்வை காண நேர்ந்தது. முதலில் துறுதுறு குட்டி பசங்க ஆறு பேர் அறிமுகம் செய்யப்படுகிறார்கள். அவர்கள் பெயர், வயது, வாழ்க்கை லட்சியம் எல்லாம் கேட்படுகிறது. அவ்ளோ அழகாய் அதற்கு பதில் அளிக்கிறார்கள். பின் ஒரு அழகான பெண் அவர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறாள்.
               


       அந்த பெண்ணை பிடித்திருக்கிறதா என கேட்கிறார்கள். அவர்கள் பிடித்திருக்கிறது என்கிறாள். அவளிடம் என்ன பிடித்திருக்கிறது என கேட்கபடுகிறது. தொடர்ந்து அவளிடம் தன் அன்பை தெரிவிக்க சொல்கிறார்கள். இப்படியெல்லாம் அந்த பெண்ணிடம் அந்த சிறுவர்களை சிறிது நேரம் இயல்பாக பழகச்செய்தபின், அவளை அறையும் படி சொல்கிறார்கள். அந்த சிறுவர்களில் ஒருவர்கூட அறைய முற்படவில்லை. அவர்கள் அறையாததற்கு சில காரணங்கள் சொல்கிறார்கள். இறுதியில் சிறுவர்கள் உலகில் பெண்கள் தாக்கப்படுவது இல்லை என முடிக்கிறார்கள். அப்போ பெரிய பசங்ககிட்ட செய்ய சொன்ன என்ன பண்ணுவாங்க ??? பொண்ணுங்ககிட்ட இதே போல பையனை அறையச்சொன்ன செய்வாங்களா?? என ஏகப்பட்ட கேள்வி எழுந்தது என்னுள். நம்மைப்போல ஆர்வகோளாறுகள் உலகம் எல்லாம் உண்டுபோல!! அதையும் ஆய்வு செய்து இன்னும் இரண்டு விழியங்களை youtube உருளியில் கண்டேன். 

இது இளைஞர்கள் முயற்சி!





 இது நம் இந்திய முயற்சி!









            முன்றையும் பாருங்க. உங்க கருத்தையும் சொல்லுங்க. பத்து வருடம் இந்த விழியத்தில் காட்டியுள்ளது போன்ற வயது குழந்தைகளுடன் நேரடியாக, நெருக்கமாக பழகிவருகிறேன். என் அளவில் ஒரு ஆண் குழந்தை பெண்ணிடம் பழகும் போது தன் அப்பா தான் அதற்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள்.  ஆனாலும் நம்மூர் அம்மாக்கள் இன்னும் "அவன் ஆம்பளைபிள்ள டீ! நீ அவனுக்கு சமமா பேசுவியா ?" என கேட்டு சின்ன பையன்களுக்கு கொம்பு சீவிக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஒரு சக ஆசிரியை கொதித்துப் போய் சொல்கிறார். "டீச்சர் ! என் பையன் ஸ்கூலில் பரீட்சை நேரத்தில் பெண்களை பெஞ்சிலும், பசங்களை கீழேயும் உட்கார வைக்கிறார்களாம்" உண்மையில் இது குறித்து அந்த பையன் குறை[பட்டுகொள்ளவில்லை. நாள் தவறாது பரீட்சை அட்டை எடுத்துபோயிருக்கிறான். அவனது புதிய வழக்கத்திருக்கு அவன் இதை ஜஸ்ட் ஒரு காரணமாக சொல்லிவிட்டு, வெகு இயல்பாய் கடந்துவிட்டதாகவும், தனக்குத்தான் ஆறவில்லை என கொதித்துகொண்டிருந்தார் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஒற்றை மகனை வைத்திருக்கும் ஆசிரியத் தாய். வேறென்ன சொல்ல:(((

குடியரசுதின வாழ்த்துகள்:)

49 கருத்துகள்:

  1. நான்னெல்லாம் துணிகளை மட்டும் அடித்து துவைப்பேன்....அப்புறம் பெண்களை அடிக்கிற பழக்கம் எல்லாம் இல்லை காரணம் நான் அவங்கிட்ட அடிவாங்குற சோனாங்கி பயபுள்ளைங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா....ஹா....ஹா...
      உங்ககிட்ட அடிவாங்குற சாரு, மோடி மற்றும் ஸ்டாலின் எல்லாம் பல்லை கடிப்பதாக கேள்வி:)

      நீக்கு
  2. வாழ்க நலம்!..
    குடியரசு தின நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அய்யா! தங்களுக்கும் என் வாழ்த்துகள்!

      நீக்கு
  3. வீ டியோவுக்கு விழியமா? ஆடியோவுக்கு என்னவென்று யோசிக்கிறேன் :)
    ஒரு தாயின் மனதை இன்னொரு தாய் புரிஞ்சுக்க வேண்டாமா :)
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருங்க இ.பு.ஞானபிரகாசன் சகாவை கேட்டு சொல்கிறேன். ஏன்னா இந்த வாரத்தையை அவர்கிட்ட தான் கத்துகிட்டேன்:)

      நீக்கு
    2. என் பெயரைக் குறிப்பிட்டதற்கு நன்றி மைதிலி அவர்களே!

      வீடியோவுக்கு 'விழியம்' எனும் பெயரைப் பரிந்துரைத்தவர், தமிழ் அறிஞர் உலகம் போற்றும் பெருந்தகை உயர்திரு.இராம.கி ஐயா அவர்கள். ஆடியோவுக்கு 'அடுகு'. அவருடைய அரும்பெரும் தமிழ்ப் பதிவுகளைப் படிக்க http://valavu.blogspot.com செல்லுங்கள்! இது வலைப்பூ இல்லை, தமிழின் அருங்கருவூலம்!

      நீக்கு
  4. **** "டீச்சர் ! என் பையன் ஸ்கூலில் பரீட்சை நேரத்தில் பெண்களை பெஞ்சிலும், பசங்களை கீழேயும் உட்கார வைக்கிறார்களாம்"***

    நான் இந்தியா விசிட் பண்ணும்போது எங்கவீட்டில் தரையில்தான் விரும்பி உக்காருவேன். பையன்கள் எல்லாரும் என்னை மாதிரினு நெனச்சுட்டாங்கபோல அந்த க்ளாஸ் டீச்சர். :)

    லேடிஸ் ஃபர்ஸ்ட்னு சொல்லுவாங்களே? இதுக்குப் போயி அந்தப் பையன் அம்மா அலட்டிக்கலாமா? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் இங்கே ஆண் மேலானவன் என்ற கருத்தை அவனுக்கு விதைப்பதே பெண் தான்:) அவள் விரும்பியே அடிமை படுகிறாள் இன்றேல் அடிமையாக்குகிறாள். சமம் எனும் வார்த்தை பலநேரம் இருவருக்குமே மறந்து போகிறது வருண்:)

      நீக்கு
    2. நான் இங்கே நண்பர்கள் வீட்டிற்கு போகும் போது அங்கே சேர் தேவையான அளவு இல்லையென்றால் தரையில் உட்கார்ந்துவிடுவேன் நான் உட்கார்ந்தை பார்த்ததும் மற்றவர்களும் கிழே உட்காரத் தொடங்கிவிடுவார்கள் என்ன தரையில் உட்காரும் போது சுவர் ஓரமாக இடம் பிடித்துவிடுவே அப்பதான் சாஞ்சு உட்கார முடியும்

      நீக்கு
    3. ///உண்மையில் இங்கே ஆண் மேலானவன் என்ற கருத்தை அவனுக்கு விதைப்பதே பெண் தான்:) அவள் விரும்பியே அடிமை படுகிறாள் இன்றேல் அடிமையாக்குகிறாள். சமம் எனும் வார்த்தை பலநேரம் இருவருக்குமே மறந்து போகிறது வருண்:) ///

      மிக உண்மை.. பல சமயங்களில் உங்களின் பதிவுகளை விட அதற்கு நீங்கள் இடும் கருத்து மிக அருமையாக பாராட்டுகுரியதாக அமைகிறது.

      நீக்கு
    4. சரியாச் சொன்னீங்க மைதிலி.. சமம் என்று சொன்னால் ஏதோ நாம தப்பு செய்றமாதிரி பாப்பாங்க..

      நீக்கு
    5. பெண்கள் சோபாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்பொழுது ஆண்கள் வந்தவுடன், எழுந்து அவர்களுக்கு இடம் கொடுத்துவிட்டுத் தரையில் அமர்கின்றனர்..நான் மட்டும் அப்படியே உட்கார்ந்திருந்தேன்..ஆனால் வித்தியாசமாக உணர்ந்தேன்.. நான் திமிர் பிடித்தவளோ? :)

      நீக்கு
    6. ஏன் கிரேஸ் ஒரு வேளை உங்க பசங்க வந்தால், அவர்களுக்கு ஷோபாவில் இடம் கொடுத்துவிட்டு தரையில் உக்காரமாட்டீங்களா? மகன் என்று வரும்போது நாம் "ஆண்" என்று பார்ப்பதில்லைதானே? அதேபோல் அம்மாவைத் தரையில் உக்காரவைத்து என்னை மாதிரி மகன் எல்லாம் சோஃபாவில் உட்காருவதில்லை!

      When it comes to friends or colleagues we should go by "first come first served" basis. There is no need to give your seat to a "late comer" whether that is a male or female. :-)

      We can complicate it further by bringing up other scenarios too . :)

      Anyway, the lesson Madurai Tamil learned today is...

      He will never ever sit on the sofa when he meets Grace in Atlanta or NJ. He will rather sit on the dirty carpet or hardwood floor even if there is plenty of room on the sofa. I can guarantee that! lol

      நீக்கு
    7. @கிரேஸ்
      டியர்! ஒருவர் வந்தவுடன் எழுந்து இடம் தருவது என்பது அப்போதைய சூழ்நிலையின் தேவைப் பொறுத்தது. சரியான தேவை ஏற்படின் நீங்களும் அப்படி செய்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். சமயத்தில் அப்படி வருகிற ஆண், நம் ஈகோவை டிஸ்ட்ரப் செய்துவிட்டால், அவசியம் இந்தாளுக்கு எழுந்து இடம் தரணுமா? என தோன்றவே செய்யும். அந்த நேரத்தில் அந்த நபர் ஆண், பெண் என்றெல்லாம் நான் பார்ப்பத்தில்லை. எனக்கு ஈவெல்லா நீ உட்காரலாமா என அவர்கள் நினைப்பதாய் எனக்கு தொன்றினால், நான் கண்டிப்பாக எழுந்து இடம் தரமாட்டேன். முடிஞ்சா உட்கார், புடிக்கலைன்னா போய்ட்டே இரு என்பது போல தான் நடந்துகொள்வேன். என்றால் எதைவிடவும் பெரியது, என்ன விலை கொடுத்தேன் காப்பாற்ற வேண்டியது சுயமரியாதையை தான் என்கிறார் பெரியார்:))) dont mind:) சுயமரியாதையோடு இருப்பது திமிர் என்றால், நாம அப்படியே இருப்போம் கிரேஸ்:))))

      நீக்கு
    8. @வருண்
      கிரேசுக்கு இந்த ரிப்ளை யை தட்ட நினைத்து பணிசுமை காரணமாக தாமதித்தேன். நீங்க இதை உங்க ஸ்டைல சொல்லீடிங்க வருண். அப்புறம் ஒருவிஷயம் தெரியுமா வருண்? கிரேஸ் விருந்தோம்பலிலும், நட்பு பாராட்டுவதிலும் great. so, மதுரை தமிழன் அப்படி தரையில் உட்காருவதை விரும்புவார் என தெரிந்துகொண்டபின், அவர் கிரேஸ் வீட்டுக்கு செல்ல நேர்ந்தால், hosting போது கார்பெட் மற்றும் floorஇல் கிரேஸ் அதிக கவனம் செலுத்துவார் என்றே நம்புகிறேன்:)) என்னம்மா கிரேஸ் ரைட்டா??

      நீக்கு
    9. @வருண்
      ஆண்களுக்கு இடம் கொடுப்பது பற்றி ஒரு பிரச்சினையுமில்லை. "ஆம்பளைங்க மேல உக்காரட்டும், நாம கீழ உட்காரலாம்" என்பதுதான் நான் ஏற்க முடியாதது. :)
      I will offer my seat out of courtesy, love or respect happily. But when that's demanded or offered by women based on sex I do not like it.
      மதுரைத் தமிழன் அவர்களுக்கு எது வசதியோ அங்கு அமரட்டும்..ஆனா கண்டிப்பா தரை சுத்தமா இருக்கும்.. :))

      நீக்கு
    10. @மைதிலி
      சரியாச் சொன்னீங்க டியர்.. :))
      விருந்தோம்பலையும் நட்பு பாராட்டுவதையும் நீங்க பாராட்டியதற்கு நன்றி டியர்..
      கண்டிப்பா! நீங்க சொன்னா கரெக்ட் தான்!
      கார்பெட், தரை இரண்டும் பளிச் தான்..எப்பொழுதும்..சொல்லாமல் வரலாம்..
      (அதனால் தான் என் இணைய வருகை குறைகிறது என்பது வேறு விசயம் :( )

      நீக்கு
    11. மதுரைத்தமிழன் தப்பிச்சு ஓடிட்டாரு! ஒரு வேளை அட்லாண்டாவில் வந்து கிரேஸ் வீட்டில் நடக்கவிருக்கும் "சூப்பர் பவ்ல்" (mythily is wondering அப்படினா?? ) பார்ட்டிக்கு ரெடியாகிக்கொண்டு இருக்காரோ என்னவோ!

      Well, mythily, இதைப்பத்தி நெறையவே பேசலாம். இப்போதைக்கு as a "reasonable man" I plead guilty as "charged" and keep a period for the discussion now! Our culture is men dominated one. It is impossible to defend men. :-) கொஞ்ச நஞ்ச பாவமா செஞ்நசிருக்கோம் நாங்க? :(

      நீக்கு
    12. why should I wonder!! இன்னொரு tab தட்டி பார்த்துட்டேனே:) இத்தனை நாள் வாசிப்பு அனுபவத்தில் சொல்றேன், உங்களுக்கும், விசு அண்ணாவுக்கும் இருக்கிற அளவு football match craze, நம்ம தமிழனுக்கோ, கிரேசுக்கோ இருக்கிறதா தெரியல:)))

      நீக்கு
    13. ஹாஹா சரியாச் சொன்னீங்க மைதிலி..ஏதோ இன்றைக்கு ரொம்ப ஆர்வமா இருந்த என் மகன்கிட்ட கொஞ்சம் கேட்டு தெரிந்து கொண்டேன்..அவ்ளோதான்.. :))

      நீக்கு
  5. ஆண், பெண் ஏற்றத்தாழ்வு பற்றிய தவறான கருத்துகள் இந்தியர்களுக்கு ரத்தத்தில்லே ஊறியுள்ள ஒரு விஷயம் . இதெல்லாம் மாறவேண்டுமெனில் சிறுவயதிலிருந்து தத்தம் குழந்தைகளுக்கு புரியவைக்கவேண்டும் . வழவழ கல்விமுறையை கொஞ்சம் மாற்றியமைத்தாலே , ஓரளவு இப்பிரச்சனைகளை சரிகட்டிவிடலாம் அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மெக்னேஷ்! முதல் முறை கருத்திட்டிருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி:) தோழர் கஸ்தூரியின் தளத்தில்(மது) உங்கள் கருத்துக்களை கண்டதுண்டு. ஆங்கிலபடங்களை வெகு நேர்த்தியாக நீங்க விமர்சிப்பதாக மது கூறுவார். கல்விமுறை மாறத்தான் வேண்டும் என்பது எனது விருப்பமும் தான் தம்பி:)

      நீக்கு
    2. நா ஏற்கனவே சிலமுறை கருத்திட்டிருக்கிறேன் அக்கா ! பெரும்பாலும் வெறுமனே சூப்பர், அருமைனு வந்ததற்கு அட்டனன்ட்ஸ் கொடுக்ற மாதிரி கமெண்ட் போடமாட்டேன் . நன்றிங்கா !!

      நீக்கு
    3. ஒ! மன்னிக்கவேண்டும் சகோ! நான் அதை கவனிக்கத் தவறிவிட்டேன்:) உங்க சின்சியர் ரிப்ளைக்கு மீண்டும் நன்றி:)

      நீக்கு
  6. நம் மன ஓட்டத்தில் சில மாற்றங்கள் தேவையாக உள்ளன என்பதை இதுபோன்ற பதிவுகள் நினைவுபடுத்துகின்றன.

    பதிலளிநீக்கு
  7. " நாள் தவறாது பரீட்சை அட்டை எடுத்துபோயிருக்கிறான். அவனது புதிய வழக்கத்திருக்கு அவன் இதை ஜஸ்ட் ஒரு காரணமாக சொல்லிவிட்டு, வெகு இயல்பாய் கடந்துவிட்டதாகவும், தனக்குத்தான் ஆறவில்லை என கொதித்துகொண்டிருந்தார் "

    நான் சமீபகாலமாக அதிகம் சிந்திப்பது சிறுவர் உலகம்பற்றி ?!

    பால்யத்தில் எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது... சிறுவர்களின் முடிவுகள்தான் யதார்த்தம் சார்ந்ததாக அமைகிறதோ என எண்ண தோன்றுகிறது ! காரணம் அந்த வயதில் எதிர்ப்பார்ப்புகளும், எதிர்வினைகளும் தெரியாது ! என்பதற்க்கான உதாரணம் சிறுவர் உலகம்தானோ எனத்தோன்றுகிறது !

    சமூக கட்டாயங்களும், ஒப்பிட்டுப்பார்க்கும் குணமும், நிகழ்காலத்தை தவிர்த்து கடந்ததையும் எதிர்வர இருப்பதையும் மட்டுமே மனதில் கொள்ளும் குணாதிசயங்களெல்லாம் குடியேற குடியேறத்தான் பால்யம் விலகுகிறது!

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பால்யத்தை இழக்கும் நொடி பட்டாம்பூச்சி சிறகுதிர்க்கும் கொடிய நொடி இல்லையா அண்ணா:( அப்படி குழந்தை மனதோடு இருப்பவர்கள் நாமும் பாவம் அவர் ரொம்ப நல்லவர் என்றே சொல்கிறோம்:)) அந்த பையன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இளைஞன். அவன் தெளிவா தான் இருக்கிறான். அவனது தாய்குலம் தான் இப்படி:)

      நீக்கு
    2. அது சரிதான் டியர்...ஆனால் ஏன் ஆண்களை கீழே உட்காரச் சொல்ல வேண்டும்? இடம் பற்றாக்குறை என்றால் சுழற்சி முறை பின்பற்றலாம்..
      பொம்பிளப்பிள்ளைய மேல உட்கார வச்சுட்டு பையனை கீழே உட்காரவைக்கிறார்களே என்று ஆணாதிக்க மனநிலையில் யோசித்தால் தப்பு..ஆனால் தன் பிள்ளை வசதியின்றி எழுத நேரிடுகிறதே என்று ஆதங்கப்பட்டால் புரிந்து கொள்ளலாம்..
      :)

      நீக்கு
  8. சிறந்த மனஓட்டமான பதிவு.
    குடியரசு தின நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    இரசித்தேன்... பகிர்வுக்கு நன்றி...த.ம6
    இனிய குடியரசு தினவாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்!

    "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
    ஜெய் ஹிந்த்!

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)

    பதிலளிநீக்கு
  11. அருமையான விழியங்கள்..'விழியம்' வார்த்தை கற்றுக்கொண்டேன் டியர், நன்றி

    பதிலளிநீக்கு
  12. மதுரைத் தமிழர் சொன்னது போல்தான் நானும்...
    சோ... வீடியோ அருமை... அதிலும் அந்த குட்டீஸ் அடிக்கமாட்டேன்னு சொன்ன வீடியோ அருமை....
    பகிர்வுக்கு நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
  13. கருத்துள்ள காணொளிகள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.....

    விழியம் - புதியதாய் ஒரு வார்த்தை தெரிந்து கொண்டேன்.....

    பதிலளிநீக்கு
  14. கீழே உட்காரவைக்கப்படுவதில் இவ்வளவு சிக்கலா? மேலானாவன் கீழானவன் பிரச்னை எல்லாம் இதில் வருமா? ஆச்சர்யம்.

    கீழே உட்கார்ந்தாலும் அவன் Male தானே? ஹிஹிஹி....!

    பதிலளிநீக்கு
  15. ஆமாம்! சகோதரி/தோழி...சரியே...ஆண் குழந்தை என்றால்....அதுவும் பெண் குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பம் ஒரு ஆண் வேண்டும் என்று விழைந்து மெனக்கிடுவது ரொம்ப காமெடிங்க.....

    கீதா: தோழி எங்கள் வீட்டில் அப்படித்தான் ஆம்பளைதான் உசத்தி....பிறந்த வீட்டிலும் சரி புகுந்த வீட்டிலும் சரி...அதிலும் பு.வீ ல ஆம்பளைங்களுக்கு முதல்ல சாப்பாடு போட்டு மிஞ்சி இருந்தாத்தான் வீட்டு மரும்கள்களுக்கு என்று மணமாகி வந்து பல வருடங்கள் அப்படித்தான்....எனக்கு வருத்தமாக இருக்கும்...நம் வயிறு என்ன வேஸ்ட் பின்னா என்று? பரவாயில்லை....இப்ப மாறிடுச்சு.....அதுவும் என் பையன் என் குணம் ஸோ எனக்கு சப்போர்ட் பண்ணி மாத்திட்டான்...

    ஆனா பாண்டிச்சேரில மகனோடு இருந்தப்ப....அங்க கிராமங்கள் ல பெண் குழந்தைகள் தான் உயர்வா மதிக்கப்பட்டாங்க. ஆண் பிள்ளைங்கள யாருமே கண்டுக்கல.. பெண் பிள்ளைங்கனா பாப்பா பாப்பானு......ரொம்ப செல்லம்.......அதுவும் சரி யில்லைதான்.

    நல்ல வீடியோஸ்...

    பதிலளிநீக்கு
  16. குழந்தைகள் உலகமே தனிதான். இன்னொசென்ட் உலகம்...

    பதிலளிநீக்கு
  17. ஆமாம், இதையெல்லாம் எப்படி தேடித் தேடி கண்டுப்பிடிக்கிறீங்க?. நிறைய பேர் வீட்டுல சீரியல் பார்த்துகிட்டு இருக்கிறதுனால வீட்டு வேலை செய்யுறது இல்லையாம், அதுபோல நீங்களும் இந்த மாதிரி புதுசு புதுசா வலைப்பூவுல எழுதுறதுக்காக மணிக்கணக்கா கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து இருக்கீங்களாம்.
    இதை நான் சொல்லலை சகோ, உங்கள் வீட்டிலிருந்து தான் எனக்கு வைபர்ல மெசேஜ் வந்திருக்கு.

    பதிலளிநீக்கு
  18. பெரியவர்கல் மாறினால்தானெ சிறுவர்கல் புரிந்து கொள்வர்!
    தம+1

    பதிலளிநீக்கு
  19. உங்கள் எல்லா பதிவுகளும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. இன்றுதான் உங்கள் வலைப்பதிவை பார்க்க நேரிட்டது. வருன் அவர்களின் பதிவில் உள்ள பின்னூட்டம் வழியாக வந்தேன். தொடர்கிறேன்..........

    பதிலளிநீக்கு
  20. இரண்டாவது விழியம், எனக்கென்னவோ நம்பகமானதாகத் தோன்றவில்லை. இருக்கிற மூன்று இளைஞர்களில் இருவர் கறுப்பர். வெள்ளையர்கள் அனைவருமே அடிக்க மறுக்க, கறுப்பர்களில் ஒருவர் உடனே கை ஓங்குவதும், இன்னொருவர் படப்பிடிப்பானுக்கு முன்னிலையில் அடிக்க மாட்டேன் என்று கூறுவதும் எனக்கு இயல்பானதாகத் தோன்றவில்லை. இதைப் பார்க்கும் வெள்ளையர்களுக்கு என்ன தோன்றும்? கறுப்பர்களைப் பற்றிக் கீழ்த்தரமாகவும், வெள்ளையர்கள் பற்றி உயர்வாகவும்தானே? பட ஆக்குநரின் நோக்கமும் அதுதானோ என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

    மற்றபடி, சிறுவர்கள் பெரும்பாலும் இரக்கமுள்ளவர்களாகவோ அச்சமுள்ளவர்களாகவோவே இருப்பதால் பிற இரண்டு விழியங்களைப் பொறுத்த வரை, அதில் வியக்க ஒன்றுமில்லை. ஆனால், இப்படிப்பட்ட ஒரு விழியங்கள் பெரிய ஆண்கள் மனதில் குற்றவுணர்வை ஏற்படுத்தி அவர்கள் திருந்த ஒரு காரணியாக இருக்கக்கூடும் என்பதால் இப்படி ஒரு கோணத்தைச் சிந்தித்துப் படமாக்கியதற்காகப் படக்குழுவினரை, ஆக்குநரை, இயக்குநரைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும்!

    ஆனால் சகா, ஒரே வகுப்பில் படிப்பவர்களில் சிலரைக் கீழேயும் சிலரை மேலேயும் அமர வைப்பது தவறுதானே? அதே நேரம், அதைத் தவறாக எடுத்துக் கொள்ளாதது அந்த இளைஞனின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.

    பதிலளிநீக்கு