வெள்ளி, 19 டிசம்பர், 2014

அப்பிக்கிடக்கும் வர்க்க வாசனை


டகரப்பாதையில் சிப்பாய் தாண்டி
ராணியின் தலைவாங்கி
கனைப்பொலிஅடங்குகையில்
காணநேர்கிறது வெள்ளை ராஜா
சிறைபட்டு விட்டதைஉயர்த்திய முன்கால்
ஊன்றும் நொடிக்குள்
முடிந்திருக்கிறது ஆட்டம்

துளிர்க்கிற ஆண்மை செருக்கை
துடைத்த கைக்குட்டையை பத்திரப்படுத்திவிட்டு
நீட்டிய வெண்கரத்தை பற்றியஇருள்கரத்தான்
இடது கையில் வழித்தெறிகிறான்
யுகயுகமாய் கரிக்கும் செந்நிற வியர்வையை!

தோல்வி முகத்தை துடைக்கத்துடைக்க
துளிர்கிறது பிசுக்குபிடித்த
வர்க்க வாசனை!!

துவலையை தவறவிட்ட நொடியில்
முகம் நெருங்கிய உள்ளங்கையில்
அப்பிக்கிடக்கிற அடிமை மணம்
நினைவுறுத்துகிறது பற்றிக்குலுக்கிய
அந்த கரிய கைகளை!

41 கருத்துகள்:

 1. சதுரங்கத்தை மையமாக்கி, பலயுகங்களாய் நீடித்த, இன்றும் வேறுவிதமாய் நீடிக்கும் வர்க்கப்போரை இப்படியும் விவரிக்க முடியுமா ? அருமை

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அண்ணா! முதல் பின்னூட்டமே வெகு நேரம் கழிந்து வரவும் ரொம்ப கன்பியுஸ் பண்ணிடேனொன்னு நினைத்துகொண்டிருந்தேன்:) மிக மிக நன்றி!

   நீக்கு
 2. செஸ்ஸிற்கு இப்படி ஒரு "செக்"??!!!!! அருமை அருமை. உங்கள் அறிவு செம சகோதரி! பளிச்! தீர்க்கம்! கூர்மை! இப்படிப் பல சொல்லலாம்...உங்கள் கவிதை மொழி சொல்லுகின்றதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களை போன்றோரின் உற்சாகமூட்டலால் ஜஸ்ட் இப்போ தான் கற்றுகொள்கிறேன் சகாஸ்:)) நன்றி!

   நீக்கு
 3. செஸ் விளையாட்டச் சொல்லவில்லை சகோதரி..இது சொல்லும் அர்த்தத்தைத்தான்....

  பதிலளிநீக்கு
 4. உண்மையிலேயே மிக உயர்தரத்தில் இருக்கிறது இக்கவிதை! ஆனந்த விகடன், காலச்சுவடு போன்ற தரமான இதழ் எதற்காவது அனுப்பினீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதற்கெல்லாம் முன்பு அனுப்பி அனுப்பி நொந்திருக்கிறேன் சகா. கல்கி, குமுதம், யோசி இன்னும் சில உள்ளூர் சிற்றிதழ்களில் முன்பு சியா கவிதைகள் வந்துள்ளன. இப்போ எதற்கும் அனுப்பவதில்லை. அயர்ச்சி:)) நன்றி சகா பாராட்டிற்கும், பகிர்ந்தமைக்கும். உங்களை போன்ற நான் மதிக்கும் பலர் இங்கே படிப்பதும், பாராட்டுவதும் என் எழுத்துக்கு மரியாதையும், மகிழ்ச்சியை தருகிறது:) இப்போ ரீசார்ஜ் ஆகிக்கிட்டு இருக்கேன்:)

   நீக்கு
  2. இதே அனுபவம்தான் எனக்கும்! ஆனால், இப்பொழுது கவிதைகளை அவர்களுக்கு நான் அனுப்பாமலிருக்கும் காரணத்தில் மட்டும் மாறுபடுகிறேன்; அயர்ச்சி இல்லை; சோம்பேறித்தனம்! நான் வருவது உங்களுக்கு இவ்வளவு புத்துணர்ச்சியைத் தருமென்றால் கண்டிப்பாகத் தொடர்ந்து வருகிறேன்.

   நீக்கு
 5. //தோல்வி முகத்தை துடைக்கத்துடைக்க
  துளிர்கிறது பிசுக்குபிடித்த
  வர்க்க வாசனை!!
  துவலையை தவறவிட்ட நொடியில்
  முகம் நெருங்கிய உள்ளங்கையில்
  அப்பிக்கிடக்கிற அடிமை மணம்
  நினைவுறுத்துகிறது பற்றிக்குலுக்கிய
  அந்த கரிய கைகளை!
  //

  அருமையான வரிகள்

  பதிலளிநீக்கு
 6. இப்படி பிரமாதமா யோசிக்க எனக்குத் தெரியாது டியர்..வாழ்த்துகள்!
  எனக்கு இக்கவிதை புரிஞ்சுதுன்னு நினைக்கிறேன்... :))

  பதிலளிநீக்கு
 7. அன்புச்சகோ,
  வணக்கமும் மகிழ்ச்சியும்!
  கவிதைகக்கும் உரைநடைக்கும் உள்ள முக்கியமான வேறுபாடுகளில் ஒன்று சட்டென எளிதில் கடந்து போக முடியாமை.
  அது சரியான விகிதத்தில் இல்லாமல் கடினமாய் அமைகிறபோது இரண்டு சாத்தியங்கள் அமையும்.
  ஒன்று என்ன இருக்கிறது என்று நுணுகிக் கண்டறிந்து வாசகன் தங்கிவிடுவான். அந்த “உறைதல்“ ஒன்று. அது நல்லது.

  இன்னொன்று, புரியாத இருண்மையில் ஏதொ சொல்ல வருகிறார்கள். என்னன்னுதான் தெரியல. என்று நீங்குதல்.
  படைப்பாளி சொல்லலாம். வாசகனுக்கு என் எழுத்தைப் புரிந்து கொள்ளக் கூடிய தகுதி இல்லை என்று. இன்னொரு புறமிருக்கும் வாசகனின் எதிரொலிப்பு, புரியாதவற்றை எல்லாம் ஏன் இங்கு கொண்டுவந்து கொட்டுகிறாய் என்பதாய் இருக்கும்.
  கவிதையை எளிதாகக் கடக்கமுடிந்தால் அதில் உரைநடையில் வீச்சம் அடிக்கும்.
  நான் சொல்ல வருவது உங்கள் கவிதைச் சமநிலை குறித்தே!
  அது நல்ல கவிதைக்குரியதாய் இருக்கிறது.
  வெளுப்பும் கருப்பும் உலகளாவிய ஏற்றதாழ்வின் குறியீடுகள், சதுரங்கப் படிமம் அற்புதம்.
  மொத்தத்தில் நீங்கள் நெருங்குவது, தமிழ்க்கவிதையுலகின் மகுடத்தை என்பது தெரிகிறது.
  வாழ்த்துகள்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன செய்துகொண்டிருக்கிறேன் என பலநேரம் சிந்தித்ததுண்டு! கழிந்த காலத்தை (இனைய காலம்) கொஞ்சமேனும் பயனோடு கழித்திருப்பேன் என்று இப்போ கொஞ்சம் திருப்தியா இருக்கு அண்ணா! கவிதை நல்ல இருக்குனு நீங்க சொல்றதே போதும்:)) மகுடங்கள் கழுத்து வலிக்கச் செய்பவை (என்போன்ற வளர்பவர்களுக்கு):))) மிக்க நன்றி அண்ணா!

   நீக்கு
 8. என்னனமோ தோணுது ...
  வார்த்தைகளை விழுங்கிவிட்டேன்.....
  உங்கள் வார்த்தைகள் போதுமென்று...

  பதிலளிநீக்கு
 9. அன்புச் சகோதரி,

  அப்பிக்கிடக்கும் வர்க்க வாசனை
  துளிர்க்கிற ஆண்மை செருக்கை
  துடைத்த கைக்குட்டையை பத்திரப்படுத்திவிட்டு
  தோல்வி முகத்தை துடைக்கத்துடைக்க
  துளிர்கிறது பிசுக்குபிடித்த
  வர்க்க வாசனை!!

  அருமையான வரிகள்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம்
  விளையாட்டை வைத்து கருத்துள்ள கவிதை செதுக்கியதை கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
  த.ம3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 11. சதுரங்கத்துல வர்க்கப்போர் பார்க்குறீங்களா?

  Let me digress a bit..

  ஐ பேட் மற்றும் கார்களில் கூட கருப்பு மற்றும் வெள்ளையும் சமமான அளவு வெளியிடுறாங்க. ஆனால் நம்ம தமிழ் சினிமாலதான் கருப்பு கதாநாயகிகளைப் பார்ப்பது அரிது.

  வெள்ளையரை உயர்வாக நினைப்பதும் உயர்த்துவதும் கருப்பர்கள்தான். இது யார் தப்பு?னு நீங்கதான் சொல்லணும்.

  -----------

  அடிமை மணமா?

  தமிழறிஞர்கள் உதவி தேவை பின்னூட்டத்தில் தேவைப்படுகிறது எனக்கு. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கே வென்றிருக்கும் ஒரு கருப்பரை பற்றித் தான் நான் குறிபிடுகிறேன் வருண்:))

   அடிமை மணம்

   கறுப்பரின் கைப்பற்றி குலுக்கிய வெள்ளை கரம் அதையே நினைத்து வருந்துவதாய் அது ஒரு குறியீடு. விட்ருவோம் அதுக்குமேல இந்த தமிழறிஞருக்கு சொல்லதெரியல:)))) நன்றி வருண்

   நீக்கு
 12. அட அட அட என்னமா பொளந்து கட்டுது இந்தப் பொண்ணு இப்படி என்ன மூளைம்மா உனக்கு செஸ்சை வைத்து வேற விளையாடுதும்மா அடி ஆத்தி என் கண்ணே பட்டுடும் போல இருக்கே சுத்திப் போடும்மா அம்மு (சகோதரர் மதுக்கிட்ட தான் சொல்லனும் சுத்திப்போட சொல்லி ) செம ......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா,,,,ஹா....ஹா....ஒவ்வொரு முறையும் நீங்க வந்தவுடன் இடம் களைகட்டுது டா செல்லம்:)) மிக்க நன்றி:)

   நீக்கு
 13. இந்த சதுரங்க வேட்டை இன்னும் தொடர்வது வேதனைக்குரியதுதான்
  த ம 1

  பதிலளிநீக்கு
 14. ரொம்பவும் அடர்த்தியான வரிகள்..!.
  இந்த மரமண்டைக்கு மீண்டும் ,மீண்டும் படிக்கப் படிக்கத்தான் புரிகிறது தங்கையே..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மரமண்டை!! உங்களுக்கே இது ஓவரா இல்ல:)) அப்போ அவ்ளோ கஷ்டமா எழுதிட்டேனோ:(( நன்றி அண்ணா!

   நீக்கு
 15. படிமக்கவிதை பலதும் சொல்லி வியக்கவைக்கிறது. பாராட்டுகள் மைதிலி.

  பதிலளிநீக்கு