சனி, 6 டிசம்பர், 2014

படிச்சு பணக்காரனாக முடியுமா?

 ரொம்ப காலமா social மீடியாக்களில் சுற்றி வருகிற கதை!


                  ஒரு மிகப்பெரிய பள்ளியில் புதிய தலைமையாசிரியர் ஒருவர் பதவிஏற்கிறார். அன்று ஊதியம் வழங்கும் தினம். எல்லோரும் ஊதியம் பெற்று கையெழுத்தும் போட்டுவிட்டு நகர, அந்த பள்ளியின் பியூன் கடைசியாக தனது ஊதியத்தை பெற்றுக்கொண்டு கைநாட்டு வைக்கிறார். கையெழுத்துக் கூட போடதெரியாத ஒருவர் பள்ளியில் பணிபுரிவதா என சிந்தித்த தலைமையாசிரியர், அந்த பணிக்கு பத்தாம் வகுப்பாவது முடித்திருக்கவேண்டும் என புதிய ஆணை ஒன்றை பிறப்பித்து, பியூன் வேலையை காலி செய்கிறார். இனி என்ன செய்வது என தவித்தபடி பள்ளியை விட்டு வெளியே வந்த பியூன் ஒரு டீகுடிக்கலாம் என நினைத்த போதுதான் பள்ளியை சுற்றி டீ க்கடையே இல்லை என்பது நினைவுக்கு வருகிறது. பின் பள்ளிக்கு அருகே ஒரு டீ கடை போடுகிறார். சில ஆண்டுகளில் கடையை விரிவுசெய்கிறார். நல்ல லாபம் கிடைக்கிறது. அதில் ஒரு பகுதியை சேமிக்க விரும்பி வங்கிக்கு செல்கிறார். வங்கிக் கணக்குத் துவங்கும் பத்திரத்தில் வங்கி மேலாளர் கையெழுத்துக் கேட்கிறார். இவரோ கைநாட்டு இடுகிறார். வங்கி அலுவலர் நீங்க படிக்காத போதே இவ்வளவு சம்பாரிக்க முடிகிறதே, நீங்க ஒரு பத்தாவதாவது படிச்சிருந்தா எவ்ளோ நல்ல சம்பாதித்திருக்கலாம் என கேட்கிறார். நம்ம டீ கடை ஓனர் சொல்லுறார் "நான் பத்தாவது வரை படித்திருந்தா இந்நேரம் பள்ளிகூடத்தில் மணியடித்துக் கொண்டிருப்பேன்.
                       குளத்தில் வீசிய கல்லென இந்த கதை மனதில் பல எண்ண வளையங்களை எழுப்புகிறது. ஒரு மாணவனை   வெற்றிகரமான தொழிலதிபராய் உருவாக்கும் பணியில் இன்றைய ஆசிரியர்கள் பங்கு எள்முனை அளவும் இல்லை என்றே தோன்றுகிறது, கணிதப்பிரிவு ஆசிரியர்கள் விதிவிலக்கு. உன் எதிர்கால லட்சியம் என்ன என ஆசிரியர் கேட்கும்போது மாணவரிடம் இருந்து வருகிற எதிர்பார்க்கக்கூடிய பதில்கள் டாக்டர், இன்ஜினியர், லாயர் போன்றவை தான். நானும் கூட நீங்க யாருமே நல்ல அரசியல்வாதியாக மாட்டிங்களா என கேட்டிருக்கிறேனே தவிர, இந்த கதையை படிக்கும் நொடிவரை நானும் என் மாணாக்கரை தொழிலதிபராய் கற்பனைகூட செய்ததில்லை. பணத்தின் ருசியை அறிந்தவர்களால் தான் அதன் மீது காதலை ஏற்படுத்த முடிகிறது. ஒரு போதும் புத்தகத்தின் ருசியே சிறந்தது, பணம் வாழ்க்கைக்கு எத்தனை அவசியம் இல்லை என நினைக்கும் அறிவாளிக் கூட்டம் பணக்காரர்கள் ஆவதில்லை,பணக்காரர்களை உருவாக்குவதும் இல்லை.  சில ஆண்டுகளுக்கு முன் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகச்சந்தையில் ஒரு பரபரப்பாய் ஏற்படுத்திய  Robert Kiyosaki எழுதிய Rich dad,Poor dad  புத்தகத்தின் caption இது தான் "பணக்காரர்கள், ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் இருந்து வேறுபட்டு, தங்கள் குழந்தைகளுக்கு பணத்தை பற்றி என்ன சொல்லித்தருகிறார்கள்". படித்து பாருங்கள். பணத்தின் ருசி ஒன்றும் பாவபட்டதில்லை. விகடனில் கூட சில வருடங்களுக்கு முன் வந்த வெற்றிகரமான தொழிலதிபர்கள் தொடரில் பலரும் பட்டம் வாங்கியவர்களாக இல்லை.ஒரு விஷயம் தெளிவா தெரியுது.நம்ம கல்விமுறை ஏடுகளை பராமரிக்கிற, அல்லது பிறர் தரும் வேலையைப் பிசிரில்லாமல் செய்து முடிக்கிற திறமைசாலிகளை தான் உருவாக்குகிறது. நல்ல பணம்சம்பாதிக்கும் திறமையான தொழிலதிபர்கள் ஒன்று பள்ளியை கைவிட்டிருகிறார்கள் அல்லது பள்ளி தன் பல்சக்கரத்தில் இருந்து உமிழ அவர்கள் தப்பியோடி இருக்கிறார்கள்!!!!    


இதற்கு முந்தய கதையும் காரணமும்


டிஸ்கி
ஒரு வாரமாய் எனக்கும் m.t.s க்கும் வாய்க்கா வரப்பு தகராறு. ஏற்கனவே ஸ்பை (ஸ்கூல் பையன்) சகோ இதே பிரச்சனையை பதிவாக்க நானும் அங்க புலம்பி இருந்தேன். ஒருவார மென் முயற்சிகளுக்கு பின், கஸ்தூரி தன் ஆங்கிலப்புலமையை காட்டி, மானே தேனேன்னு காட்டமாக ஒரு மெயில் அனுப்ப, இப்போ ஜீரோ பாலன்ஸ் காட்டி ஆனாலும் பெரிய மனது பண்ணி என் பக்கத்தை இயக்க விட்டிருகிறார்கள் m.t.s பெருமக்கள். எல்லோரும் நலம் தானே:))

18 கருத்துகள்:

 1. மார்க் வாங்குவதைத்தவிர்த்து வேறெதையும் யோசிக்காத போது இப்படித்தான்/

  பதிலளிநீக்கு
 2. ஆங்கிலேயர்களுக்கு எழுத்தர் உத்தியோகர் பார்ப்பதற்காக உருவாக்கப் பட்ட கல்வி முறை, நமது இன்றைய கல்வி முறை. ஆங்கிலயர்களைஅனுப்பி விட்டு, அவர்கள் கொடுத்த கல்வி முறையினை ம்ட்டும் விடாப்பிடியாக பிடித்து வைத்திருக்கின்றோம்

  பதிலளிநீக்கு
 3. //ஒரு மாணவனை வெற்றிகரமான தொழிலதிபராய் உருவாக்கும் பணியில் இன்றைய ஆசிரியர்கள் பங்கு எள்முனை அளவும் இல்லை..//

  நயமான கருத்து.. பதிவின் தாக்கத்தினால் - நெஞ்சின் அலைகள் நெடுநேரம் புரள இருக்கின்றன..

  பதிலளிநீக்கு
 4. இப்ப என்ன சொல்ல வரீங்க படிங்கன்னு சொல்ல வரீங்களா அல்லது படிக்காதேன்னு சொல்லீரீங்களா?

  பதிலளிநீக்கு
 5. பியூன் சமாச்சாரம் ரசிக்கும்படி இருந்தது இதே சூழலில் அபுதாபி நிலவரத்தை சொல்கிறேன் எம்.ஏ படித்தவர் கிளீனிங் கம்பெனியில் (கழிவறை கழுவுதல் உள்பட) வேலை செய்கிறார் அதேநேரம் பத்தாவது முடிக்காதவன் கூட வங்கிகளில் மெஜேஞ்சராக வேலை செய்கிறான் எனது அலுவலகத்தில் என்னையே எடுத்துக்கொள்ளுங்கள் எனது சம்பளத்தைவிட புதிதாக வந்தவன் கூடுதல் சம்பளம் பெற்று மேலே போய்க்கொண்டு இருக்கிறான் காரணம் அவன் படித்தவனாம், நான் படிக்காதவனாம் இதில் வேடிக்கை என்ன தெரியுமா ? அவனுக்கு நான்தான் வேலை சொல்லிக் கொடுக்கவேண்டும் காரணம் நான் அனுபவசாலியாம், அவன் அனுபவமில்லாதவனாம் இங்கு படித்தவனைவிட அனுபவசாலி மேலோங்கி நிற்கிறான் நான் கதை சொல்லவில்லை எனது நடைமுறை வாழ்க்கையை. உண்மையை விளக்குகிறேன் அவ்வளவுதான்.
  குறிப்பு எனது படிப்பு லெட்சணத்துக்கு இந்த சம்பளம் ஓவருதான் அப்படினு நினைத்துக்கிட்டு மனம் சமாதானப்பட்டு போய்க்கொண்டும்... எம.ஏ. படித்த நண்பனை நினைத்துப்பார்த்து உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடிக்கொண்டு வாழ்கிறேன்....

  பதிலளிநீக்கு
 6. பாதிரியாரும் கோயிலில் மணியடிப்பவனுமாக இந்தக் கதையை இன்னொரு பிரதியாய்க் கேட்டிருக்கிறேன்.
  கல்வி பணம் சம்பாதிக்க என்கிற நோக்கமே பிரதானம்.
  டாக்டர் ....எல்லாம் பிறகுதான்!
  இன்னொரு கோணத்தில் பார்த்தால்,

  தொழிலதிபர்கள் நடத்தும் கல்வித் தொழிற்சாலைகள்தான் இது போல் டாக்டர், என்ஜினியர்... எனப்பட்டதாரிகளை உருவாக்கப் பெருமுனைப்புக் காட்டி விளம்பரங்களும் செய்து முன்நிற்கிறது.

  அரசு , அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதற்கான வாய்ப்பு வணிகப் பள்ளிகளை ஒப்பிடும் போது பெருமளவு குறைவுதான்!
  அவ்வணிகப் பள்ளிகள் தொழில் அதிபர்களை உருவாக்காததன் காரணம் வேறொன்றுமில்லை.
  எங்குதான் தமக்குப் போட்டியாளர்கள் உருவாக அனுமதிப்பார்கள்?

  நன்றி

  பதிலளிநீக்கு
 7. உண்மைதான் மா..பத்தாவது முடித்த மாணவன் தானே சுயமாய் தொழில் செய்வது போல பாடத்திட்டம் இல்லை..மா

  பதிலளிநீக்கு
 8. 'படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு ,கல்வி கற்காத மேதைகளும் பாரினில் உண்டு ' பாடலை நினைவு படுத்தியது உங்கள் பதிவு !
  த ம 1

  பதிலளிநீக்கு
 9. படிப்பு வெறும் அறிவை வளர்க்கவே... ஆனால் கல்வி - கற்பது என்றும் தொடர வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வழி மொழிகின்றோம் டிடியின் கருத்தை இதை ஒட்டிய ஒரு பதிவு நாளை!

   நீக்கு

 10. அம்மு நலம் தானே அனைவரும் ம்..ம்..ம்.
  ஆகா பணகாரர் ஆவது எப்படி என்று கற்றுக் கொடுக்கப் போகிறீர்கள் என்றல்லவா என்ணினேன் அம்மு ஹா ஹா ... உண்மை தான் அம்மு நீங்கள் சொல்வது. சிந்திக்க வைக்கும் கதை ரசித்தேன். படிப்பு வராதவர்களுக்கும் விருப்பம் இல்லாதவர்களுக்கும் கூட தொழில் முறைக் கல்விகள் கை கொடுக்கும். இங்கெல்லாம் அதற்கு காலேஜ்கள் உண்டு. இதே போன்று அங்கும் தோன்றினால் பயிற்சிகள் வழங்கும் படி இருந்தால் எதோ ஒரு வகையில் பலரும் விரும்பியபடி விரும்பிய துறையில் பிழைத்துக் கொள்வார்கள் இல்லையா. திறமை இருந்தால் படித்தவர்களை விடவும் பணக்காரர்கள் ஆகவும் ஆகலாம். அம்மு நல்ல தலைப்பும்மா. தொடர வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
 11. மதுரைத் தமிழனுக்கு ஏற்பட்ட் சந்தேகம் தான் எனக்கும்.

  அந்த பியூன் கதை சூப்பர்.

  பதிலளிநீக்கு
 12. உண்மைதான் டியர்..கல்வி வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பதில்லை.. இதை நாம் உணர்ந்தாலும் இந்த கல்வி முறையிலேயே உழன்றுக் கொண்டிருக்கிறோம் என்பது வருத்தமே!
  பிறருக்காக உழைப்பதைவிட சொந்தமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நாம் சிந்திப்பதில்லை..

  பதிலளிநீக்கு
 13. சகோதரி,

  நிறைய யோசிக்க வைக்கிறது இந்த பதிவு. நிறைய எழுதலாம் என்றாலும்... பொட்டில் அறைந்த உங்கள் வரி...

  " பிறர் தரும் வேலையைப் பிசிரில்லாமல் செய்து முடிக்கிற திறமைசாலிகளை தான் உருவாக்குகிறது. "

  மிக உண்மை சகோதரி. இதற்கு வரலாற்று காரணம் கூட உண்டு !... ஆங்கிலேயர்கள் தங்களுக்கான குமாஸ்த்தாக்களை தயார் செய்வதற்க்காக உருவாக்கியது அல்லவா இந்திய கல்விமுறை ?!!!

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 14. பணத்தின் ருசியை அறிந்தவர்களால் தான் அதன் மீது காதலை ஏற்படுத்த முடிகிறது. ஒரு போதும் புத்தகத்தின் ருசியே சிறந்தது, பணம் வாழ்க்கைக்கு எத்தனை அவசியம் இல்லை என நினைக்கும் அறிவாளிக் கூட்டம் பணக்காரர்கள் ஆவதில்லை,பணக்காரர்களை உருவாக்குவதும் இல்லை.//

  உண்மைதான். நல்ல பதிவுதான் என்றாலும், சகோதரி, தொழிலதிபர் ஆவதற்கான பயிற்சிகள், படிப்புகள் எல்லாம் எம் பி ஏ படிப்புகளில் கற்பிக்கப்பட்டாலும், அதற்கான தனித் திறமை வேண்டும் அதாவது ஆய கலைகள் 64 ல் வருகின்றதா என்று தெரியவில்லை....ஆனால் அதற்குத் தனித் திறமை வேண்டும்..அது பள்ளிகளில் பாடத்திட்டத்தில் வர வாய்ப்பில்லை, வேண்டுமென்றால் அடித்தளம் ஹையர் செசண்டரியில் பாடத் திட்டத்தில் வரச் செய்யலாம். கேரளாவில், ஹையர் செகண்டரியில் படம் எடுப்பது எப்படி என்று பாடதிட்டத்தில் உள்ளது போல். ஆசிரியர்களால் மாணவர்களிடையே இந்தத் திறமையைக் கொண்டுவர முடியுமா என்பதும் சந்தேகமே. ம்ம் மிகவும் யோசிக்க வேண்டிய விசயம்.

  பதிலளிநீக்கு
 15. மெக்காலே என்ன முட்டாளா? போகிற போக்கில் அவர்களின் ஆட்சி நீடிக்கவும், அதிகாரிகளுக்கான அடிமை -கைப்புள்ள- எழுத்தர்களை உருவாக்கவும்தான் அவன் கல்விமுறையைத் திட்டமிட்டான். அதை, அவர்கள் போனபின்னும் கட்டி அழும் இவர்களின் நோக்கமும் அப்படியே இருந்தால்... அதிகாரியாகக்கூட வரலாம், ஆனால் அடிமைத்தனமிருந்தால் மட்டுமே நீடிக்கலாம். இதுதானே இன்றைய கல்விமுறை? அந்தப் பியூன் அப்படியே ஒரு கடைவைத்து, பெருகி, வெற்றிகரமாக ஒரு பள்ளிக்கூடம்-கல்லூரி-பல்கலைக்கழகம் என்று வைத்து, அந்தத் தலைமை ஆசிரியரின் மகன் கைநாட்டு-இணை வேந்தரிடமே முதல்வர் பணிக்கு விண்ணப்பித்தால்... எப்புடீ?

  பதிலளிநீக்கு